இது, ஜெயலலிதா, முற்றிலுமாக எம்.ஜி.ஆர். -ஐ சார்ந்திருந்த காலத்தில் நடந்தது … !!!

…………………………………………………………….

……………………………………………………

…………………………………………………………………

கடந்த காலங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட போயஸ் கார்டன் …. இப்போது … ??? சற்றே பின்னோக்கிப் பார்த்தால் –

………………………………..

1967- ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா வாங்கியபோது, இந்த இடத்தை வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மையாரின் சகோதரரான மணியும்.

துவக்கத்தில் அந்த இடம் போஸ் என்ற ஆங்கிலேயர் வசம் இருந்தது. அதுவே பிறகு மாறி -‘போயஸ்’ என்றானது.

ஜெயலலிதா அந்த இடத்தில் வீடு கட்டத் துவங்குவதற்கு முன்பே அவருடைய தாயார் சந்தியா மறைந்து விட்டார்.

அதன் பிறகு நிதானமாக வீடு கட்டும் முயற்சிகள் நடந்தன. ஜெயலலிதாவின் ரசனைக்கேற்றபடி தயாரானது வீடு.

எல்லாம் முடிந்து கிரகப் பிரவேசம் நடந்தது 1972 மே மாதம் 15 ஆம் தேதியில்.

வேதா நிலையம் – புதுமனை புகுவிழா அழைப்பிதழில் மாலை 7 மணிக்கு டின்னர், சிட்டிபாபுவின் வீணைக் கச்சேரி. நிறைய திரைக் கலைஞர்கள் வந்திருந்து வாழ்த்தினார்கள்.

அந்த இல்லத்தைப் பற்றி ஜெயலலிதாவே அப்போது எழுதியிருக்கிறார்…. கீழே அவரது வார்த்தைகளிலேயே –

……………………………………………………………………..

“என் வீட்டு டிராயிங் ரூமில் உட்கார்ந்திருக்கிறேன்.

என் வீட்டின் பெயர் ‘வேதா நிலையம்’. என் அம்மாவுடைய உண்மையான பெயர் வேதா. திரையுலகத்திற்காக வைத்துக் கொண்ட பெயர் தான் சந்தியா. அவங்க பேரையே வீட்டுக்கு வைச்சிருக்கேன்.

இங்கிருந்து கடற்கரை, தியேட்டர்கள், மவுண்ட்ரோடு, ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன் எல்லாமே கிட்டே இருக்கு. இவ்வளவு ஸென்டராக இருக்கே தவிர, இங்கே போக்குவரத்து எல்லாம் ஜாஸ்தி கிடையாது.

பஸ், லாரிச் சத்தங்களே கிடையாது. அமைதியா இருக்கு. எங்கேயோ ஊட்டியிலோ, கொடைக்கானலிலோ இருக்கிற மாதிரி உணர்வு ஏற்படுகிறது.

இந்த டிராயிங் ரூமிலே நான் இப்போ தனியாத் தான் உட்கார்ந்திருக்கேன். இரண்டரை வருடத்திற்கு முன்னாலே என் மனது போகிறது.

அப்போ நினைச்சுப் பார்க்கிறேன். இந்த மாதிரி என்னிக்காவது என்னைத் தனியா உட்கார விட்டிருப்பாங்களா?

எப்போதுமே இருபது, இருத்தைந்து பேர் என்னைச் சுற்றி உட்கார்ந்திருப்பாங்க. இப்போ, நான் தனியா உட்கார்ந்திருக்கேன்னா, யாரும் என்னை இப்போ தேடி வரலைன்னு அர்த்தமில்லை.

இப்போதெல்லாம், அதாவது இரண்டு, இரண்டரை வருடங்களாகவே என்னைத் தேடி யாரையும் நான் இங்கே வர விடறதில்லை. அனுமதிக்கிறதில்லை.

அதுதான் காரணம்.

எனக்கு நானாக விதிச்சுக்கிட்ட வனவாசம்னு சொல்லலாம். வனவாசம் என்றால் வனம் இல்லை. எல்லா மாடர்ன் வசதியும் இருக்கிற விசாலமான பங்களாவிலே தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். ஆனால், தனிமையில் வாழ்ந்துக்கிட்டிருக்கேன்.

இந்த ரூமிலே இருக்கும்போது, என் கண், என் எதிரிலே இருக்கிற ஜன்னலிலே இருக்கிற கர்ட்டனிலே தான் படர்கிறது. அந்தக் கர்ட்டன் மஞ்சள் கலர்.

என்னுடைய டிராயிங் ரூமிலே இருக்கிற மெயின் கலர் ஸ்கீம் பச்சை, மஞ்சள், பிரௌன். இந்த ரூமிலே இருக்கிற ஒவ்வொரு பொருளையும், ஒவ்வொரு டெக்கரேஷனையும் அம்மாவும், நானும் சேர்ந்து உட்கார்ந்து பேசி டிஸ்கஸ் பண்ணித்தான் வாங்கினோம்.

அப்போ இந்த ரூமுக்குப் பச்சை கர்ட்டன் போடணும்கிறது என்னுடைய வாதம். அம்மா ‘வேண்டாம். பச்சை போட்டால் ரொம்ப பளீரென்று இருக்கும். நல்லா இருக்காது. மஞ்சள் போட்டால் கண்ணியமா, கண்ணுக்குக் குளுமையாக இருக்கும்’னாங்க.

கிட்டத்தட்ட ஒருமணி நேரம் சண்டை போட்டோம். எப்போதும் அம்மாவும், நானும் சண்டை போடுவோம். கடைசியிலே எப்போதும் நான் தான் விட்டுக் கொடுப்பேன். ஒரு சில விஷயங்களைத் தவிர, எப்போதுமே அம்மாவுக்கு நான் விட்டுக் கொடுக்கிறது தான் வழக்கம்.

அதுபோல அந்த கர்ட்டன் விஷயத்திலும் நான் விட்டுக் கொடுத்தேன். இப்போ பார்க்கிறேன். உண்மையில் இந்த மஞ்சள் ரொம்ப நல்லாத் தான் இருக்கு. நான் சொன்ன மாதிரிப் போட்டிருந்தால், நல்லா இருந்திருக்காது.

அதே போல, இந்த ஸோபா, ஸோபா மேலே தைக்கப்பட்டிருக்கிற துணி. எதிரே இருக்கிற காஷ்மீர் லாம்ப். அதற்கு மேலே ஸில்கிலை ஷேட்.

இந்த ரூமிலே இருக்கிற ஒவ்வொரு துணி, ஒவ்வொரு பொருள், ஒவ்வொரு கார்பெட், அலங்காரப் பொருள் எல்லாமே எங்க அம்மா செலக்ட் பண்ணினது தான்.

இந்த ஸோபாவுக்கு டிஸைன் கொடுத்து, ஆர்டர் கொடுத்து வாங்கினது எல்லாம் எங்க அம்மா தான். ஆனால் ஒரு நாள் கூட அவங்க இந்த ஸோபாவில் உட்காரலையே!

ஏன்னா அம்மா போகும்போது, இந்த வீடு கட்டி முடியவில்லை.

இந்த ஸோபாவைப் பார்க்கும்போது, என்னுடைய வாழ்க்கையிலே ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவம் நினைவுக்கு வருகிறது.

என் உடல்நிலை அப்போ சரியாக இல்லை. இரண்டு, மூன்று நாளாய் உடம்பு சரியா இல்லை. என்னமோ பலவீனம், சோர்வுன்னு நினைச்சுட்டு, நானும் யார் கிட்டேயும் போகலை.

அன்னிக்கு காலையிலே யாரோ என்னைப் பார்க்க வந்திருந்தாங்க. அதுக்காகத் தான் கீழே இறங்கி வந்து, இங்கே உட்காந்தேன்.

பேசும்போதே தலை சுற்றிச்சு. உடல் தள்ளுகிற மாதிரி இருந்தது.

ஒருவழியாகப் பேசி முடிஞ்சதும், அவர் போனதும், ஒருமாதிரியான சோர்வு. மயக்கம் போட்டு இங்கேயே ஸோபாவிலே விழுந்துட்டேன்.

வீட்டிலே எல்லோரும் பதறிப் போயிட்டாங்க. வேலைக்காரங்க எல்லாரையும் கூப்பிட்டாங்க.

சித்திமார்கள் ஓடி வந்தாங்க. அப்போ என் கூட இரண்டு சித்திகள் இருந்தாங்க.

அப்போ இருந்த மானேஜர், உடனே திரு.எம்.ஜி.ஆருக்கு டெலிபோனில் தகவல் சொன்னார்.

எம்.ஜி.ஆர் உடனே டாக்டருக்குப் போன் பண்ணி, வரச் சொல்லிவிட்டு, அவரும் வந்தார்.

“நிலைமை ரொம்ப மோசமாயிருக்கு… ஆஸ்பத்திரியிலே தான் அட்மிட் பண்ணனும்… இது வீட்டிலே பார்க்கிற கேஸ் இல்லை”ன்னு டாக்டர் சொல்லியிருக்கார்.

திரு.எம்.ஜி.ஆர் எல்லோரையும் தயார்ப்படுத்தச் சொன்னார். இதே ஸோபாவில் தான் படுத்திக்கிட்டிருந்தேன். அவர் பக்கத்திலே இருந்தார். டாக்டர் இருந்தார். மானேஜர், வேலைக்காரர்கள் எல்லோரும்.

ஆஸ்பத்திரிக்குப் போகத் தயாராக இருந்தாங்க. ஆனால் என்னோட இரண்டு சித்திமார்கள் மாடியில் என்னமோ பண்ணிட்டிருந்தாங்க. அவங்க கிழேயே வரலை,

டாக்டர் வாட்சைப் பார்த்தார்.

“என்னங்க.. சீக்கிரம் கூட்டிட்டுப் போகணும்.. இல்லைன்னா கேஸ் இன்னும் சீரியஸ் ஆகிடும்”னு சொன்னார்.

உடனே எல்லோரும் ஆஸ்பத்திரிக்குப் போனோம். மயக்கம் தெளியுறதுக்கு எனக்கு எத்தனையோ மணி நேரம் ஆச்சு. அத்தனை மணி நேரமும் எம்.ஜி.ஆர் பொறுமையா அங்கேயே இருந்தார்.

நான் மயக்கம் தெளிஞ்சு பார்த்த முதல் முகம், அவர் முகம் தான்’’

இப்படி எத்தனை நினைவுகள் போயஸ் கார்டனைச் சுற்றி…..!!! … ( நன்றி – தாய் – தளம்)

……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.