………………………………………

…………………………………………..
சாட்டிலைட் தொலைக்காட்சிகள் எதுவும் கிடையாத காலம் ….
வெளிவேலை எதற்கும் போகாமல், குடும்பப் பிரசினைகளிலேயே
உழன்று கொண்டிருந்த அப்போதைய தலைமுறை பெண்களின்
ஒரே பொழுதுபோக்காக இருந்தது சினிமா மட்டும் தான்.
சினிமாவை பார்க்கப் போவதற்கு முன்னரும்,
பார்த்து விட்டு வந்த பின்னரும், அதைப்பற்றிய அரட்டையே
அவர்களுக்கு பெரும் சுவாரஸ்யமாக இருந்தது…..
அந்தக் காலத்துப் பெண்களின் மன உணர்வுகளை,
மிக அழகாக எடுத்துச் சொல்கிறார் – ஜெ.தீபா அவர்கள்.
திரையெல்லாம் செண்பகப்பூ என்கிற அவரது தொடர்
கட்டுரையிலிருந்து ஒரு சாம்பிள் மட்டும் இங்கே –
……………………………..
பல வீடுகளில் மாட்டப்பட்டிருக்கும் முன்னோர்களின் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களைப் பார்ப்பதில் எனக்கு அப்படியோர் இஷ்டம். அந்தப் புகைப்படங்களில் பெண்களைப் பார்ப்பதென்பது ஒரு அலாதி அனுபவம்
எங்கள் ஊரான திருநெல்வேலியில் சென்ட்ரல் என்றொரு தியேட்டர் உண்டு. அதை வெறும் தியேட்டர் என்பதற்கு பதிலாக பிரமாண்டமான என்கிற வார்த்தையையும் சேர்த்துச் சொல்வதே சரியாக இருக்கும். இப்போது அந்தத் திரையரங்கம் கடந்த காலத்தின் ஒரு பகுதியாக நின்றுகொண்டிருக்கிறது. அந்தத் திரையரங்குக்கு நான் செல்லும்போதெல்லாம் மூலவரைப் பார்க்கப் போன இடத்தில் உற்சவரிடம் காட்டும் மரியாதை போல மற்ற ஒன்றையும் பார்த்துவிட்டே வந்திருக்கிறேன்.
அந்தத் திரையரங்கின் கீழ்த்தளத்தில் யார் கைக்கும் எட்டாத தூரத்தில் சில நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்கும். கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள். அனைத்துமே இயல்பான முகபாவத்துடன் கூடிய படங்கள் என்பது விசேஷம். எல்லாருமே அந்தக் காலத்து கதாநாயக, நாயகிகள். குணச்சித்திரக் கலைஞர்களும் இருந்தார்கள்.
அவர்களில் பெண் கலைஞர்களின் புகைப்படங்களைப் பார்ப்பதில் எப்போதுமே ஓர் ஈடுபாடு இருந்தது. நான் மட்டுமல்ல, அங்கு வரும் பெண்களுமேகூட அதையே பார்த்தபடி இருந்ததற்குக் காரணம், நடிகையரின் முக லட்சணங்கள் மட்டுமல்ல, அந்தத் தொங்காட்டான்களும், சிகையலங்காரங்களும், கழுத்து அட்டிகைகளும்தான். அதிசயமாக, ஊட்டியில் போய் டூயட் பாடினாலும் ஸ்வெட்டர், டைட்ஸ், ஹை ஹீல்ஸ் அணிந்து கூடவே கல் தோடு அணியும் கே.ஆர்.விஜயாகூட அதில் முத்துத் தோடு அணிந்திருப்பார். அத்தனை வித்தியாசமான புகைப்படங்கள்.
நமக்கு மனதில் அதிகம் பதிந்தது என்னவோ நதியா கொண்டையும், கம்மலும்தான். ஆனால், பெண்களின் மனம் சூட்சுமமானது. அதில் என்னவெல்லாம் பதிந்திருக்கின்றன என்பது கடலின் உப்புப் போன்றது.
…………..
“ஒரு சீன்ல அவ கோபமா பேசிக்கிட்டே கட்டிப்பிடிச்சு அழுவால்ல…”
“எதுட்டீ?”
“அதான் பச்சக் கலருல ரோஸ் பார்டர் போட்ட சேலைகூட கட்டியிருப்பாள்லா” என்றதும், “ஆமாமா… அதுல அவ போட்டிருந்த அட்டியலப் பாத்தியா..?” என்ற கேள்வி எழும்.
எவ்வளவு உணர்ச்சிமயமான காட்சியாக இருக்கட்டுமே, அது இப்படி எல்லாமுமாகத்தான் மனதில் பதியும்.
பல வீடுகளில் மாட்டப்பட்டிருக்கும் முன்னோர்களின் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களைப் பார்ப்பதில் எனக்கு அப்படியோர் இஷ்டம். அந்தப் புகைப்படங்களில் பெண்களைப் பார்ப்பதென்பது ஒரு அலாதி அனுபவம். நடுநெற்றியில் திலகம் அல்லது வட்டப்பொட்டு, தலை வாரியிருக்கும் விதம், அட்டிகைகள், நிற்கும் விதம் இவற்றில் எல்லாம் அந்தக் காலத்து நடிகைகள் எவருடைய சாயலையாவது நிச்சயம் கண்டுகொள்ள முடியும். நேர்நிமிர்ந்து பார்த்து குழந்தைத்தனத்தோடு சிரிக்கும் பெண்களின் புகைப்படங்கள் எனக்கு சாவித்திரியை நினைவுபடுத்தும்.
நான் அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, படத்தில் இருக்கும் யுவதி இன்று சுருக்கம் கொண்ட முகத்துடன் என்னருகில் வந்து நின்று, “அப்பல்லாம் என்னைப் பாக்கறவங்க தேவிகா சாயல்ல இருந்ததா சொல்லுவாங்க… இதுல போட்டிருக்கறதுகூட ‘ஆனந்த ஜோதி’ படத்துல தேவிகா போட்டிருந்தது மாதிரி மாங்கா மாலைதான்” என்பார். எத்தனையோ நாயகிகளும், காலங்களும் கடந்தபின்பும் காலத்தில் அவரும் தேவிகாவும் உறைந்து நிற்பதை நம்மால் அந்தக் கணத்தில் உணரமுடியும்.
நீண்ட கோபிப் பொட்டு என்பது சாவித்திரியின் ட்ரேடு மார்க், முழங்கைக்கும் கீழ் ரவிக்கை அணிந்தால் அது பாரதியின் பாணி, முடியினைக் காதோரம் கொஞ்சம் விடுத்து பின்னலிட்டால் அது பத்மினியின் ஒரு சாயல், சர்வ அலங்காரமும் செய்துகொண்டு நெற்றியில் பொட்டு இல்லையென்றால் அது ஜெயலலிதாவின் அம்சம்…
இப்படி ஒரு புள்ளிவிவரக் கணக்கே எங்களுக்கு உண்டு. ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் கொண்டாட்டமாக ஆடும் பல பாடல்களில் அவர் பொட்டிட்டுக்கொள்ளவில்லை என்கிற அரிய உண்மையை, பல வருடங்களுக்கு முன்பே எங்களது ஆய்வில் கண்டுபிடித்திருந்தோம். இறுக்கிக் கட்டிய கொண்டையும், ஹேண்ட் பேக்குமாக விரிந்த குடையுடன் எவர் போனாலும் எங்களுக்கு அவர் டீச்சர் தான். ‘கடலோரக் கவிதைகள்’ ரேகாவின் பாதிப்பு இது. காட்டன் புடவையைக் கொஞ்சம் ‘அசால்ட்டாக’ கட்டி, தலையை வகிடெடுத்து விரித்து, பெரிய பொட்டும், சன்னமான மையும் இட்டால்… வேறு யார்! எங்களுக்கு அவர்கள் பாலுமகேந்திராவின் நாயகிகள்.
பெண்களுக்கான தையற்கடைகள், அழகு நிலையங்கள், பேன்சி ஸ்டோர்கள் இங்கெல்லாம் அந்தக் காலகட்டத்தின் முன்னணி நடிகைகளின் படங்கள் மாட்டப்பட்டிருக்கும். அங்கு போய் வருவதே உற்சாகத்தையும் தன்னம்பிக்கையும் ஏற்படுத்தும். அங்கு வரும் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும், ‘நாம் வாங்கும் பொருள்கள் தன்னை அந்தப் புகைப்படங்களில் இருக்கும் நாயகியாகக் காட்டப்போகிறது’ என்கிற நீடித்த எண்ணம் உருவாகும்.
‘ஜீன்ஸ்’ படத்தைத் தோழிகளாகச் சென்று பார்த்தோம். எங்களை ஐஸ்வர்யா ராய் அவ்வளவு ஈர்த்திருந்தார். உலக அதிசயங்களை சுற்றிச்சுற்றித் திரையில் காட்டிக்கொண்டிருக்க, நாங்கள் பார்த்ததெல்லாம் எங்கள் ஐஸைத்தான். இப்படி ஐஸ்வர்யா ராயைப் பார்த்துப் பரவசமான மறுநாள், பாளையங்கோட்டை பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ள அழகு நிலையத்தில் ஐஸ்வர்யா ராயின் படம் வரையப்பட்டிருப்பதைப் பார்த்ததும், நாங்கள் சபதம் ஏற்றுக்கொண்டோம் ‘எப்படியும் காசு சேர்த்து ஒரு தடவையாவது இந்த பியூட்டி பார்லருக்குப் போயிரணும்’ என்று. கடைசி வரை, நாங்கள் ஐஸ்வர்யா ராயாக மாறும் எந்த விரும்பத்தகாத அதிசயமும் நடைபெறவில்லை.
ஆனால், நாங்களேதான் ரஜினியைப் போல தலைமுடியைச் சிலுப்புவர்களையும், டி. ராஜேந்தர் போல ‘நீதான் என் ராணி… இதயத்துக்குள் வா நீ’ என்று காதல் கடிதங்கள் எழுதுபவர்களையும் கிண்டலும் நக்கலும் செய்தோம்.
எம்.ஜி.ஆரின் ரசிகர்களை எந்தக் கூட்டத்திலும் கண்டுபிடித்துவிடலாம். அவர்கள் செய்கிற தொழில் எதுவாக இருந்தாலும் முகத்தில் சோர்வு தெரியாத அளவுக்குப் பளிச்செனத் தங்களைக் காட்டிக்கொள்வார்கள். எம்.ஜி.ஆரின் நடை உடை பாவனை மூன்றில் ஏதோ ஒன்றை அவர்கள் அறிந்தும் அறியாமலே பின்பற்றுவார்கள். அவர்களின் ஆழ்மனது அவர்கள் விரும்புகிற எம்.ஜி.ஆரைப் போல தானும் ஓர் உயர்ந்த லட்சியவாதி என்று நம்பத் தொடங்குவதன் அடையாளம் அது. அதன்பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்களை நகலெடுப்பவர்கள் அவர்கள் படங்களின் கெட் அப்புகளையே அதிகம் வெளிக்கொண்டு வந்தார்கள். திரையில் தான் ரசிக்கும் ஒரு நாயகனின் தனிப்பட்ட பிம்பமாகவே ரசிகர்கள் மாறியது எம்.ஜி.ஆருக்கு வெகுவாக நிகழ்ந்தது.
இப்படியான ஒட்டுமொத்த பாதிப்பினை எந்தக் கதாநாயகியும் பெண்களுக்கு ஏற்படுத்தவில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கு இஷ்டமான நாயகிகளைத் தங்களது உடைத் தேர்வுக்காகவும், சிகை அலங்காரத்துக்காகவும் ஏற்றுக்கொண்டனர். விதிவிலக்காகவும் சிலர் உண்டு. எனக்குத் தெரிந்த செவிலியர் ஒருவர் இருந்தார். அவர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில் பல வருட காலம் பணி செய்தவர். என் உறவினர் பெண்மணி ஒருவரும் அங்கு வேலை செய்ததால், அவ்வப்போது அங்கு போவது வழக்கம். அதனால் அந்தச் செவிலியரை பழக்கத்தில் ‘அத்தை’ என்றே அழைத்தேன்.
அவர் குழந்தைகளிடமும், அவர்களது பெற்றோரிடமும், குழைந்த குரலில் பேசுவது எனக்கு அப்போது வித்தியாசமாக இருக்கும். பளிச்சென்ற நிறத்தில் புடவையோடு எப்போதும் பவுடர்ப் பூச்சுடன், கொண்டையின் ஓரத்தில் ஒரு பூவோடு வருவார். மெதுவாக நடப்பார். அவர் சிரித்தால், நம்மையறியாமல் ‘யாருப்பா அது’ என்று திரும்பிப் பார்ப்போம். அப்படியான வெண்கலச் சிரிப்பு. கண் மைக்கு நடுவே மிதக்கும் கண்கள்… வழுவழுப்பான ஷிபான் சேலையை மட்டுமே உடுத்துவார். பெண்கள் அப்போதெல்லாம் கைக்கடிகாரத்தின் டயல் உள்ளங்கைக்குக் கீழே இருக்கும்படி கட்டுவார்கள். இவர் ஆண்களைப் போல கட்டுவார்.
மருத்துவமனையில் என் உறவினர் ஒருநாள் மற்றொருவரிடம், “இன்னும் சரோஜா தேவியக் காணோம்” என்று கேட்டுக்கொண்டிருந்தார். யாரைச் சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தச் செவிலியர் வந்ததும் மெதுவாக என் உறவினர் “வந்தாச்சு… ஆளு” என்றார் ‘சரோஜா தேவி’யைக் காட்டி. செவிலியரின் பேர் சரோஜா தேவி அல்ல என்பது தெரியும். நான் அவரிடமே போய் “உங்க பேரு சங்கரிதானே… உங்களுக்கு சரோஜா தேவின்னு வேற பேர் இருக்கா?” என்று கேட்க, என் உறவினர் அவசரமாக என்னை “நீ இங்க வா” என்று அழைக்கத் தொடங்கினார்.
‘சரோஜா தேவி’ என்னைப் பிடித்து, “யார் சொன்னது என் பேர் சரோஜா தேவின்னு” என்றார். எனக்கு ஏதோ விபரீதம் என்று புரிந்தது. முழித்துக்கொண்டு நின்றேன். என்னவோ நடக்கப்போகிறது என்கிற முகாந்திரம் தெரிந்தது. அவர் என்னருகில் அமர்ந்து என் தாடையைப் பிடித்து, “ஆமா…நான் சரோஜா தேவிதான். நான் பார்க்க அப்படித்தானே இருக்கேன்” என்று சிரித்தார். கலகலவென சிரிப்பு. இன்று வரை எனக்கு நினைவில் தங்கியிருக்கிற ஒரு சிரிப்பு அது.
‘சங்கரி அத்தை’ என்று நான் அன்பாக அழைக்கிற அந்தச் செவிலியரைப் பற்றி அடிக்கடி யோசிக்கிறேன். என் உறவினர் பெண்மணியும் அவரும் சேர்ந்து ஒரு ஸ்டுடியோவில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எப்போது அவர்கள் வீட்டுக்குப் போனாலும் பார்ப்பேன். யோசிக்கும் போதெல்லாம் அவர் முகம் மறந்து சரோஜா தேவியே நினைவுக்கு வருகிறார்.
இன்னும் நிதானமாய் யோசிக்கும் தருணத்தில், அரசு மருத்துவமனைக்குத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் குழந்தைகளையும் அவர்களது பெற்றோரையும் அவர் மற்ற பணியாளர்கள் போலக் கடிந்துகொண்டு பார்த்ததே இல்லை. அவருக்கு அப்போது நாற்பது வயதைத் தாண்டியிருக்கும். கணவன் அவரை விட்டுப் பிரிந்து போயிருந்தார் என்று பின்னாள்களில் தெரிந்துகொண்டேன். இப்போது அவர் சரோஜாதேவியாகத் தன்னை உருமாற்றிக் கொண்டதன் அர்த்தம் புரிந்தது.
சங்கரி அத்தையின் கணவர் சரோஜா தேவியின் தீவிர விசிறி. சரோஜா தேவிக்கு எழுதிய கடிதங்கள் மீண்டும் அவருக்கே திரும்பி வந்தபோது அதைக்கூட எடுத்துக்கொள்ளாமல் அவர் சங்கரி அத்தையை விட்டுச் சென்றிருந்தார்.
எம்.ஜி.ஆர் போல தன்னை ஒருவர் மாற்றிக் கொள்வதற்கும், சரோஜா தேவி போன்ற நடிகையாக ஒரு பெண் தன்னை உணர்வதற்குமுள்ள வேறுபாடென்பது அகலமானது. தன் ஆளுமையை மேம்படுத்திக்கொள்ள ஒருவர் தன்னை ரஜினியாகவும், எம்.ஜி.ஆராகவும் காட்டிக் கொள்கிறார். ஒரு பெண் தன்னை ஒரு நாயகியாகவே உருவகித்து அப்படியே வாழ்ந்து கொண்டிருப்பதும் அரியது. ஆழமான உணர்வென்பது இல்லை எனில் ஒரு பெண்ணால் மற்றொரு பெண்ணாகத் தன்னை நினைத்துப் பார்க்கவே முடியாது.
அப்படியே காலத்தை முன்னகர்த்தினால் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அபாரமானது. திரைப்படக் கலந்துரையாடலின்போது நாயகிகள் உடைகளுக்கான தேர்வை சமூக வலைதளங்களில் இளம்பெண்கள் அணிந்திருக்கும் உடைகளில் இருந்து பெறுகிறார்கள். இன்றைக்குப் பெண்கள் அநேகமாக எந்த நாயகியையும் தங்களின் உடைத் தேர்வுக்காகப் பின்பற்றுவதில்லை. அவரவருக்கு ஒரு பாணியை உருவாக்கிக்கொள்கிறார்கள்.
தங்கள் உடையும் பாவனையும் தங்களுடைய ஆளுமையின் வெளிப்பாடு என்று உறுதி செய்து கொண்டே இருக்கிறார்கள். ‘நம்ம படத்துல வர்ற ஹீரோயின் காஸ்ட்யூம் இப்படி இருக்கணும்…இந்த மாதிரியான பொண்ணுதான் என் ஹீரோயின்’ என்று இன்ஸ்டாவில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக் காட்டுகிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய், ‘இந்தப் பொண்ணு ஓகேன்னா ஹீரோயினா கூட நடிக்கக் கேட்கலாம்’ என்கிற அளவுக்கு மாறியிருக்கிறது.
ஆனபோதும், சென்ட்ரல் தியேட்டரின் கீழ் தளத்தில் புகைப்படங்களாக பத்மினியையும், ராஜஸ்ரீயையும் பார்த்துவிட்டு, படம் பார்க்கப் படியேறும்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஆளுயரக் கண்ணாடியை ஓரக்கண்ணால் பார்த்து, கூந்தலைக் காதுக்கு முன் இழுத்துவிடும் அந்த லாகவமும், படம் பார்த்த பின் அதே கண்ணாடியில் ஜெயலலிதா போல சிரித்துப் பார்ப்பதும்… அது ஒரு ரகசிய நினைவுப் பொக்கிஷமின்றி வேறு என்ன… !!! (நன்றி – ஜெ.தீபா அவர்களுக்கு …!!!)
………………………………………………………………………………………………………………………………………………………………………………………



நிஜமான சாமியாரா இல்லை ….