…………………………………………………….

…………………………………………………..
இந்த கட்டுரையை எழுதியுள்ள ஜா.தீபா அவர்களின் எழுத்துக்கள்
என்னை வியக்க வைக்கின்றன. சின்ன வயதில் திரைப்படங்கள்
என் மனதில் ஏற்படுத்திய பல உணர்வுகளை இவை மீண்டும் எனக்கு
நினைவூட்டுகின்றன… விகடனில் திரையெல்லாம் செண்பகப்பூ என்கிற
தலைப்பில் இவர் எழுதியவை அனைத்தும் உணர்வுபூர்வமான
உண்மைகளைச் சொல்லும் அற்புதமான படைப்புகள்… அவற்றிலிருந்து
ஒரு சாம்பிள் கீழே –
……………………
ராமராஜனும் கனகாவும் நெருப்பில் இறங்க இருக்கிறார்கள். பூக்குழி இறங்குதல் என்றால் என்னவென்று என்னுடைய வாசுதேவநல்லூர் கிராமம் சொல்லிக் கொடுத்திருந்தது. மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் அருகில் இருந்து பலரும் பூக்குழி இறங்குவதைப் பார்த்திருக்கிறேன். விறகுகளைச் சிறு குன்று போல அடுக்கி, அவற்றில் நெருப்பிட்டு, சாம்பலும் தணலுமாகப் பரப்புவார்கள். அருகில் போனாலே அனலடிக்கும். இந்த எல்லாமே தெரியும் என்பதால், அதில் இறங்கப்போகும் கரகாட்டக்காரர்கள் ராமராஜனுக்கும் கனகாவுக்கும் எவ்வளவு கஷ்டம் என்கிற வேதனையோடு விரல்களால் கண்களை மூடி விரலிடுக்கு வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
எனக்கு முன் வரிசையில் பட்டென்று ஒரு பெண் எழுந்து குலவையிட்டார். திரையில் உச்சஸ்தாயியில் ‘மாரியம்மா… மாரியம்மா…’ ஒலித்துக்கொண்டிருக்க, அந்தப் பெண் ஆடத் தொடங்கினார். அப்போது எனக்கு ஆறு வயது. அந்தப் பெண்ணுக்கு ஐம்பது இருக்கலாம். இரண்டு பேருக்கும் அப்போதிருந்தது ஒரே உணர்வு. ராமராஜனும் கனகாவும் பூக்குழிக்குள் இறங்குகையில் அவர் சாமியாடினார், நான் அழுதுகொண்டிருந்தேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இந்த நினைவு என்னுடன் இருப்பதற்குக் காரணம், அது திரையரங்கில் எனக்குக் கிடைத்த முதல் அனுபவம் என்பதால்.
திரைப்படம் பார்ப்பதைக் காட்டிலும் ஆர்வமானது அதுகுறித்து மற்றவர்களும் நாமும் உரையாடுவது. ஒரு படத்தின் வெற்றி அதைப் பார்க்கும்போது மட்டும் தீர்மானிக்கப்படுவதல்ல, பார்த்து முடித்து அதுகுறித்து எப்படிப்பட்ட உரையாடல் நிகழ்கிறது என்பதிலும் உள்ளது. கூட்டமாகப் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு நடந்துவரும்போது அம்மாவும் பக்கத்து வீட்டுப் பெண்களும் பேசுவதைக் கேட்டிருப்போம். அப்படியே சற்று முன்னே போய்க் கொண்டிருக்கும் ஆண்கள் பேசுவதைக் கேட்டால், இரண்டுக்குமான வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். ஆண்கள் காட்சிகளைப் பேசுவார்கள், பெண்கள் கதையின் அகத்துக்கும் புறத்துக்குமாகப் போய்வருவார்கள். பெண்களின் பார்வையில் சினிமா உலகம் எப்படியானதாக இருக்கிறது என்பதை யோசிக்கும்போதெல்லாம் புன்னகையும் நமட்டுச் சிரிப்பும், ஆச்சரியமும் நிராசையும் ஏற்பட்டுவிடும்.
சினிமா அவர்களுக்கு வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருந்ததில்லை. எல்லாக் கட்டுகளில் இருந்தும் ஆசுவாசம் தரக்கூடிய தற்காலிக விடுதலையாக இருக்கிறது.
யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய தேவையின்றிச் சிரிக்கவும், அழவும் தூண்டுகிற ஓர் இடமே திரையரங்கம் அவர்களுக்கு! பூஜையறையிலும், கோயில் பிரார்த்தனையிலும் பகிர்ந்துகொள்கிற ரகசியங்களுக்கு அடுத்து திரையரங்கமே அவர்களின் நம்பிக்கைக்கான இடமாக இருந்திருக்கும்.
பெண்கள் படம் பார்க்க வரும்போது அவர்களுக்குள் எழும் உணர்வுகளும் உரையாடல்களும் என்னென்ன, ஒரு சினிமா அவர்களுக்குள் எப்படி விரிகிறது, சினிமாவுக்குள் பெண்கள், உலகத்தின் மற்ற பகுதிகளில் பெண்களுக்கும் சினிமாவுக்குமான தொடர்பு என்பதெல்லாம் பேசப் பேச விரியும் படச்சுருள். அதன் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனையை நோக்கி இந்தப் பக்கங்களில் நாம் பயணிக்கலாம்.
மேடை நாடகங்கள் உருவான காலத்தில், நாடகங்களில் நடிக்கப் பெண்களுக்குத் தடை இருந்தது. ஆண்களே பெண் வேடமிட்டு ‘ஸ்த்ரீபார்ட்’ ஆக இருந்தனர். நடிக்கத்தான் தடையென்றால், பெண்கள் நாடகம் பார்க்க வருவதே ‘குடும்பத்துக்கு’ ஆகாததாக இருந்தது. பிரிட்டனில்கூட பதினேழாம் நூற்றாண்டு வரை பெண்களை நாடகங்களில் நடிக்கவும் பார்க்கவும் அனுமதி தந்ததில்லை. இந்த நிலை மாறுவதற்குப் பல காலங்கள் ஆகின. இதே போல்தான் சினிமாவில் நடிப்பதற்கு பெண்களுக்கு வாய்ப்புகள் இருந்தபோதும் சினிமா கொட்டகைக்குப் பெண்கள் வருவதற்கு கட்டுப்பாடுகள் இருந்தன. அந்தக் கட்டுப்பாடுகள் இன்று வரையிலும கூடத் தொடர்கின்றன.
பெருநகரங்களை விடுவோம். இன்றும் கிராமப்புறங்களிலும், நடுத்தர நகரங்களிலும் திரையரங்குக்கு ஒரு பெண், யாருடைய துணையுமில்லாமல் வந்து படம் பார்ப்பதென்பது அவ்வளவு சாதாரணமாக நிகழ்ந்துவிடுவதில்லை.
எனது வாழ்நாள் சாதனைகளில் ஒன்றாக எப்போதும் நினைப்பது, கல்லூரி படிக்கும்போது திருநெல்வேலியில் தனியாகச் சென்று திரையரங்கில் படம் பார்த்ததைத்தான். என் அம்மாவுக்கு நான் தனியாகப் படம் பார்ப்பதில் பெரிய சிக்கல் இல்லை. ஆனால் அந்த நாலு பேர் என்ன சொல்வார்களோ என்கிற கவலை இருந்தது. ‘‘யாராவது எங்க போறேன்னு கேட்டா, ‘அத்தை வீட்டுக்கு’ன்னு சொல்லணும்’’ என்று சொல்லியனுப்புவார். இப்படி ஐந்து முறை நான் ‘அத்தை வீட்டுக்கு’ப் போன சாதனையை இப்போது வரை யாரேனும் எங்களுடைய ஊரில் முறியடித்திருப்பார்களா எனத் தெரியவில்லை.
2018-ம் ஆண்டு வரை சவுதி அரேபியாவில் பெண்கள் திரையரங்குக்குச் செல்வதற்குத் தடை இருந்தது. உண்மையிலேயே ஒரு சினிமா ஒரு பெண்ணை என்னதான் செய்துவிடும் என்ற கேள்விக்கான பதிலாகச் சொல்லப்படுவது, ‘அது கலாசார சீர்கேட்டைத் தந்துவிடும்’ என்பதாக இருக்கிறது. அடுத்ததாக, நூறு வருடங்களுக்கு முன்பு கலாசார சீர்கேட்டினைத் தரும் அளவுக்கு சினிமாவில் என்னதான் இருந்தது என்றால், அதில் பெண்கள் ஆடினார்கள், பாடினார்கள், ‘வெட்கமில்லாமல்’ ஐந்தடி தூரத்தில் இருந்து காதல் செய்தார்கள் என்பதான பதில்கள் கிடைக்கும். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி, ஒரு பெண் ‘திரையில் சொல்லப்படுகிற வாழ்க்கைக்குள் ஈர்க்கப்பட்டுவிடக் கூடாது’ என்பதுதான் காரணமாக இருந்திருக்க முடியும்.
அதற்கு ஒரு உதாரணத்தை சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தில் இருந்து சொல்லிவிட முடியும். கடந்த ஆண்டு ‘Barbie’ படம் வெளிவந்தபோது சில நாடுகளில் அந்தப் படத்தை வெளியிடுவதற்குத் தடை விதித்தார்கள். இது கலாசாரக் காவலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. Barbie படத்தில் ‘குடும்ப மதிப்பீடுகளை உடைக்கும்’ காட்சிகள் காட்டப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புக்குப் பின் வெளியிட்ட நாடுகளில், வரிசையில் வெகுநேரம் நின்று டிக்கெட் வாங்கிப் படம் பார்த்தவர்கள் பெண்கள். அவர்கள் அந்தப் படத்தினைப் பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில் உடை, பிங்க் நிறத்தில் ஹேர் கலரிங் செய்து வந்து தங்கள் ஆதரவினைத் தெரிவித்திருந்தனர். இந்தப் பெண்கள் சொல்ல விழைவது, “நாங்களே படம் பார்த்து எது சரி, எது தவறு என்று சுயமாகத் தெரிந்துகொள்கிறோம், நீங்கள் எங்களுக்காக முடிவு எடுக்க வேண்டாம்’ என்பதைத்தான்.
திரையரங்கைப் போல ஜனநாயகமான பொது இடம் வேறு ஒன்று இருப்பதில்லை. ஆனாலும் ஆண்கள் திரைப்படம் பார்க்கும்போது வந்திராத கலாசார, பண்பாட்டு, நாகரிக, இன்னும் பல சீர்கேடுகள், பெண்கள் பார்ப்பதால் மட்டுமே வரும் என இப்போதும் நம்புபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
என் தோழியின் அத்தைக்கு, தனக்கு நடக்கப்போகும் திருமணத்தின் மீது ஒரே ஆசை. கேபிள் டி.வி-கள்கூட வந்திராத காலகட்டத்தில், அவர் தியேட்டருக்குப் போய்ப் படம் பார்க்கும் ஒரு சாதாரண ஆசையைக் கொண்டிருந்தார். அவருக்கு ஒவ்வொரு முறையும், ‘கல்யாணம் கட்டிக்கிட்டு புருஷனோட போ’ என்றே சொல்லப்பட்டதால், தன்னை சினிமா பார்க்க அழைத்துச் செல்லும் ஒருவருக்காகக் காத்திருந்தார். போன தலைமுறைகளில் திருமணமானதும் கணவருடன் பார்க்கப்போகிற முதல் திரைப்படத்துக்காகக் காத்திருந்தவர்கள் வாழ்க்கை வரலாறுகளில் அந்த சினிமாக்கள் நிரந்த இடத்தைப் பிடித்திருக்கின்றன. திரையரங்கம் என்பது அநேக பெண்களுக்கான கனவுக்கோட்டை.
‘முந்தானை முடிச்சு’ படத்தில் ஒரு காட்சி. ஊர்வசியை பாக்யராஜ் சினிமாவுக்கு அழைத்துப் போகிறேன் என்பார். ஊர்வசிக்கு நம்பவே முடியாது. கையும் ஓடாது, காலும் ஓடாது. நடந்து கொண்டே புடவையை மாற்றுவார். நகைகளை அள்ளிப் போட்டுக்கொள்வார். முகத்தில் அப்படியொரு பரவசம்… இந்தப் பரவசம் ஊருக்கே தெரியவில்லை என்றால் அதில் என்ன பிரயோசனம்? பக்கத்து வீட்டு அக்கா தொடங்கி தெருவில் சண்டை போடும் ஒரு கணவன் மனைவி வரை நிறுத்தி எல்லோரிடமும் ‘சினிமாக்குப் போறேன்கா’ என்று சொல்லியபடியே வருவார். குறிப்பாகத் தான் சினிமாவுக்குப் போவது தன் அப்பா அம்மாவுக்குத் தெரிய வேண்டும் என்றும் நினைப்பார். ‘என் வீட்டுக்காரரோட சந்தோஷமா இருக்கேன்’ என்று காட்டுவதற்கான முயற்சி அது. ஊர்வசி முகத்தில் அப்போது தெரியும் பெருமையை எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் தொட்டுவிட்ட ஒருவரின் முகத்தில் வேண்டுமானால் பார்க்கலாம்.
பாக்யராஜ் காட்டிய ஊர்வசிக்கு அத்தனை பெருமை என்றால், இயக்குநர் மகேந்திரன் ‘உதிரிப்பூக்க’ளில் காட்டிய அஸ்வினிக்கு ஒரு அமரிக்கையான உணர்வு. சினிமாவுக்குப் போகலாம் என்று மகன் மூலமாக கணவர் அஸ்வினி தெரிந்துகொண்டபின் வரும் அடுத்த காட்சியை அதிகம் ரசித்திருக்கிறேன். பல வார்த்தைகளைக் கோத்துச் சொல்ல முடியாத ஓர் உணர்வு அது. அஸ்வினி எழுந்து நின்று வானத்தைப் பார்ப்பார், ‘மழை வந்துவிடுமோ’ என்கிற அச்சமா, ‘இப்போதாவது வெளிச்சம் வந்துவிட்டதோ’ என்கிற எண்ணமா, ஏதோ ஒன்று… அது நம்மையும் அஸ்வினியின் உணர்வையும் இணைக்கிற காட்சி. வாசலில் குழந்தைகளுடன அமர்ந்து சினிமாவுக்குப் போகலாம் என்ற கணவரை எதிர்பார்த்துக் காத்திருப்பார் அஸ்வினி. அந்தத் தெரு வழியாகப் போகும் கதாபாத்திரம் ஒருவர் “என்னம்மா வாசல்ல உக்காந்திருக்கீங்க?” என்று கேட்பார்.
“நாங்க சினிமாவுக்குப் போறோம்… அவர் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லியிருக்காரு” என்பார் சிரிப்புடன்.
“நீங்க இவ்வளவு சந்தோஷமா இருந்து இன்னைக்குத்தான்மா பாக்கறேன்!” என்று பதில் வரும்.
அந்த மொத்தத் திரைப்படத்திலும் அவர் முகம் பூரிக்கும் காட்சி அது மட்டும்தான்!
சினிமாவுக்குப் போவதென்பது காதலின், அதன் அங்கீகாரத்தின் ஓர் அங்கம். சினிமாவுக்கு அழைத்துப் போய் முழுப் படத்திற்கும் தூங்கியே கழித்த கணவரை வாழ்நாள் முழுவதும் மன்னிக்காத பெண்களும் உண்டு.
எனது சிறுவயதில் நான் தெரிந்துகொண்ட ஒரு புள்ளிவிவரம், எந்தத் தெருவில் மல்லிகைப்பூவும், கனகாம்பரமும் பெண்களால் அதிகம் வாங்கப்படுகிறதோ அன்று அவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து சினிமாவுக்குப் போகிறார்கள் என்பது. எதிர் வீட்டிற்குத் தந்த கைமாத்து ஐந்து ரூபாய் திரும்பி வராமல் இருந்திருக்கலாம், பக்கத்து வீட்டில் வாங்கிப் போன ராசியான பாத்திரம் நெளிந்து வளைந்து திரும்பியிருக்கலாம், அந்தக் குற்றங்களை எல்லாம் மன்னித்து ‘ஏட்டி… ஒனக்கும் சேர்த்து தான் கனாம்பரம் வாங்கியிருக்கேன்’ என்று ஆசையோடு தந்து சமாதானம் ஆகிறார்கள் என்றால், அதற்குப் பின்னணிக் காரணமும் சினிமாவாகத்தான் இருக்கும்.
திரைப்படங்கள் பார்ப்பதென்பது ஒரு சமூக நிகழ்வு. அது அந்தரங்கமான அனுபவமும்கூட. என் தோழியின் அம்மா மாதவிடாய் நாள்களுக்காகக் காத்திருப்பார். அந்த நாள்களில் வீட்டுக்கு வெளியே பெண்களை ஒதுக்கி வைக்கும் வழக்கம் கொண்ட குடும்பம் அது. அவர் அன்றைய தினங்களில் மிக சந்தோஷமாக இருப்பார். அந்த மூன்று நாள்களும் அவர் தனக்குத் தானே மகாராணி. மூன்று நாள்கள், மூன்று படங்கள் என்பது அவரது கணக்கு. மற்றொரு தோழி தனக்குக் குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்தில் இருந்து அதனைத் தூக்கிக் கொண்டு படத்திற்குப் போனவள். அவளுக்குப் படம் பார்ப்பது என்பது அவ்வளவு விருப்பமானது. குழந்தையை வீட்டில் விட்டுச் செல்ல முடியாது என்பது மட்டுமல்ல காரணம், குழந்தையை சினிமா பார்க்கும் தனது ஆர்வத்துக்கு ஏற்றபடி பழக்குவதற்கும்தான் என்றாள். இப்போது அந்தக் குழந்தைக்கு வயது பதினாறு. இருவருமாகச் சேர்ந்து கணக்கில்லாத படங்களைப் பார்த்துவிட்டார்கள்.
வீட்டில் அழ வழியில்லாதவர்கள், சத்தமாய் சிரிக்கவும் அழவும் வெளி மறுக்கப்பட்டவர்கள், தன்னுடைய ஆளுமையைத் திரை நாயகிகளுடன் பொருத்திப் பார்ப்பவர்கள், ‘எல்லாத்தையும் விட்டுட்டு சிவனே என்று எங்கேயும் போய் உட்கார்ந்து கொள்ள’ முடியாதவர்கள், கோபம் வந்தால் புடவையை இழுத்துச் செருகிக்கொண்டு தெருமுனை வரைக்கும்கூட செல்ல முடியாதவர்கள் எனத் திரையரங்கம் ஒவ்வொரு பெண்ணின் மனதுக்கும் அந்தரங்கமானது.
…………………………………………………………………………………………………………………………………………..



[…] […]