டயாபட்டீஸ் – வருமுன் காக்க… வந்தபின் கலங்காதிருக்க… ஒரு கம்ப்ளீட் கைடு!

…………………………………………….

……………………………………………….

விகடன் தளத்தில், டயாபடீஸ் பற்றி மிக விவரமான, தெளிவான கட்டுரையொன்று பார்த்தேன்… இந்த விவரங்கள் டயாபடீஸ் வந்தவர்கள், வராதவர்கள் என்று அனைவருமே அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை.

எனவே இந்த கட்டுரையை, சற்று நீளமாக இருந்தாலும்கூட – அனைத்து வாசக நண்பர்களும் அவசியம் படியுங்கள்….(நன்றி – ஜி.ஸ்ரீவித்யா மற்றும் விகடன் தளம்….)

……………………………………………………….

நீங்கள் சர்க்கரை நோயாளி என்றால் முதலில் கை கொடுங்கள்… வாழ்த்துகள்!

என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா…? கட்டுரையை பொறுமையாக வாசியுங்கள்…

நீரிழிவுதான் வாழ்க்கைமுறையைப் பலருக்கும் ஒழுங்குபடுத்துகிறது.

உணவு, உடற்பயிற்சி, உறக்கம் என எல்லா தளங்களிலும் நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைத் திட்டவட்டமாகக் கற்றுக் கொடுக்கிறது. எல்லாவற்றிலும் எச்சரிக்கையான நகர்வை உணர்த்திக் கொண்டே இருக்கிறது. எனவே, நீரிழிவு வந்துவிட்டால் அதை சங்கடமாக நினைக்க வேண்டாம். அது நம் வாழ்க்கையை சரியான முறையில் வாழ வழிகாட்டும் நல்ல நண்பன் மட்டுமே.

‘‘உண்மையில் சர்க்கரை நோயாளிகள் மேற்கொள்ளும் வாழ்க்கைமுறையே ஆரோக்கியமான நல்வாழ்வுக்காக அனைவரும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கைமுறை” என்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிறப்பு மருத்துவரான சண்முகம். சர்க்கரை நோய் தொடர்பாக பலருக்கும் இருக்கும் சந்தேகங்கள், குழப்பங்களுக்கான விளக்கங்களை இங்கே எளிமையாகவும் விளக்குகிறார் அவர்.

 சண்முகம்
சண்முகம்

நோயும் அதிகம்… சந்தேகமும் அதிகம்…

‘`ஆண்டுதோறும் நீரிழிவாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிக்கிறது. நீரிழிவின் தலைநகராக இந்தியா மாறுகிறது என்றும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன. ஆனாலும், நீரிழிவு நோய் எப்படி சமூகத்தில் அதிகமாகிக் கொண்டே போகிறதோ அதேபோல நீரிழிவு பற்றிய சந்தேகங்களும் அதிகமாகிக் கொண்டேதான் உள்ளன. டயாபட்டீஸ் பற்றி பொதுவாக பலருக்கும் இருக்கும் குழப்பங்கள், கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்வது நீரிழிவாளர்களைத் தாண்டி மற்றவர்களுக்கும் நல்லது.

சர்க்கரையால் வரும் நோயல்ல!

சர்க்கரை நோய் என்கிற பெயரை முதன்முதலில் கேள்விப்படுகிற இளையதலைமுறையினரோ அல்லது மருத்துவ விழிப்பு உணர்வு இல்லாதவர்களோ அது சர்க்கரையால் வரும் நோய் என்றே நினைக்கும் வாய்ப்பு உண்டு.

உண்மையில் சர்க்கரை நோய் என்றால் ‘சர்க்கரை சார்ந்த இனிப்பான உணவுகளால் வரும் நோய்’ என்று அர்த்தம் அல்ல. நாம் சாப்பிடுவது இட்லியாக இருந்தாலும் சரி, சப்பாத்தியாக இருந்தாலும் சரி, ஆப்பிளாக இருந்தாலும் சரி… அது எந்த உணவாக இருந்தாலும் உடலுக்குள் சென்று சர்க்கரைச்சத்தாகவே மாற்றமடைகிறது.

உணவு அப்படி சர்க்கரையாக மாற்றமடைந்தால்தான் நாம் செயல்படுவதற்கான எனர்ஜி கிடைக்கும். இந்தச் சரக்கரையையே டெக்னிக்கலாக குளுக்கோஸ் என்று குறிப்பிடுகிறோம். இந்த குளுக்கோஸின் ஏற்றத்தாழ்வு நிலையினாலேயே சர்க்கரை நோய் வருகிறது.

நீரிழிவு எப்போது உருவாகிறது?

ரத்தத்தில் கலந்து பயணிக்கும் இந்த குளுக்கோஸானது திசுக்களுக்குச் சென்றால்தான் நாம் இயங்க முடியும். கை, கால்களை அசைக்கவே முடியும். இதுபோல் திசுக்களுக்கு உள்ளே சர்க்கரையைச் செலுத்துகிற வேலையை இன்சுலின் என்கிற ஹார்மோன் செய்கிறது.

இந்த இன்சுலின் ஹார்மோனானது கணையத்திலிருந்து சுரக்கிறது. உடலில் சர்க்கரை அளவைப் பராமரிக்கிற இந்த இன்சுலின் ஹார்மோன் சுரப்பு பாதிக்கப்படுவதாலோ அல்லது சுரக்கிற இன்சுலின் சரியாக வேலை செய்யாதபட்சத்திலோ ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்.

இதனால் தசைகளுக்கு சர்க்கரை போய்ச்சேராது. அதாவது, சென்று சேர வேண்டிய தசைகளுக்கு சர்க்கரை போய்ச் சேராது. சேரக்கூடாத ரத்தத்தில் சர்க்கரை சேரும். `அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்கிற பழமொழி நமக்குத் தெரியும். உடலில் இருக்கிற சர்க்கரை அமிர்தம்தான். ஆனாலும், அந்த அமிர்தம் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாக மாறிவிடும்.

அதாவது இன்சுலின் ஹார்மோனின் செயல்திறனைத் தாண்டி உடலில் அதிகமாக சர்க்கரைச்சத்து உருவாவது அல்லது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை ஆற்றலாக மாற்ற இயலாத அளவு இன்சுலின் தனது செயல்திறனை இழப்பதையே நிரீழிவு நிலை என்கிறோம்.

தோராயமான சர்க்கரை அளவு!

ஆரோக்கியமான ஒரு நபரின் சர்க்கரை அளவானது 120 mg/dL என்கிற அளவில் இருக்கலாம். அதிலும் சாப்பிடுவதற்கு முன்பு வெறும் வயிற்றில் 100 mg/dL என்பதை நார்மல் என்று சொல்கிறோம். சாப்பிட்ட பிறகு 140 mg/dL என்கிற அளவில் கூடலாம்.

அதுவே நீரிழிவு நோயாளிகளாக இருந்தால் உணவுக்குப் பிறகு 160 mg/dL என்கிற அளவில் இருக்கலாம். உணவுக்குப் பிறகு அல்லது குளுக்கோஸ் பரிசோதனையின் 2 மணி நேரத்துக்குப் பிறகு சர்க்கரையின் அளவு 200 mg/dL என்று இருந்தால் அவருக்கு நீரிழிவு இருக்கிறது என்று அர்த்தம்.

வெறும் வயிற்றில் 100 முதல் 120க்குள்ளும், குளுக்கோஸ் குடித்து 2 மணி நேரத்துக்குப் பிறகு 140-200 என்கிற அளவில் இருந்தால் அதை நீரிழிவுக்கு முந்தைய நிலையான ப்ரீ டயாபட்டீஸ் (Pre diabetes) என்று குறிப்பிடுகிறோம்.

முன்கூட்டியே கண்டறிவதன் அவசியம்!

சர்க்கரை நோயை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறீர்களோ அவ்வளவு நல்லது என்று அறிவுறுத்துகிறோம். கண்டுபிடிக்கப்பட்ட டயாபட்டீஸை எவ்வளவு அழகாகக் கட்டுப்படுத்துகிறீர்களோ அந்தளவுக்கு நன்மையும் கிடைக்கும். ‘சர்க்கரை நோய் இருந்தாலும் எனக்கு ஒன்றும் இல்லை. நான் நன்றாகவே இருக்கிறேன்’ என்று சிலர் சொல்வார்கள். ‘சர்க்கரை என்பது ஒரு நோயே கிடையாது’ என்றும் சிலர் சொல்கிறார்கள். இதெல்லாம் தவறான, ஆபத்தை வரவழைக்கும் வாதங்கள்.

இதேபோல ‘புகைபிடிக்கிற சிலர் நன்றாக இருக்கிறார்கள், மதுப்பழக்கமுள்ள சிலர் நன்றாகத்தான் இருக்கிறார்கள்’ என்கிற உதாரணத்தை சிலர் சொல்வதைப் பார்த்திருக்கலாம். உடல்நிலை பாதிப்பு என்பது ஒரு தனிநபரின் உடல் ஆரோக்கியம், மரபியல் காரணிகள் என பலவற்றை அடிப்படையாகக் கொண்டது. சிலருக்கு உடனே அதன் பாதிப்புகள் வெளிவரும். சிலரது உடலமைப்புக்குத் தாமதமாகலாம். அதற்காக குடிக்கிறவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள் என்று பொதுமைப்படுத்துவது எப்படி தவறோ அதேபோல்தான் சர்க்கரை இருக்கிறவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள் என்று பொதுமைப்படுத்துவதும் தவறு.

முதல் 5 வருடங்கள் முக்கியம்!

சர்க்கரை கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் சிலருக்கு அதன் பாதிப்பு தெரியாமல் இருப்பதற்கு மருத்துவரீதியாக காரணம் உள்ளது. பொதுவாக நீரிழிவு ஏற்பட்டு முதல் 5 வருடங்களுக்கு உடலின் உறுப்புகள் பெரிதாக பாதிக்கப்படாது.

நாளடைவில் சர்க்கரை சிறிது சிறிதாகப் படிந்து 6-ம் வருடத்திலிருந்து 10-ம் வருடத்துக்குள் அதன் வீரியம் புரியும். கண், இதயம், நரம்பு போன்றவற்றில் அதன் பாதிப்புகள் எதிரொலிக்கும். எனவே, முதல் 5 வருடங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ‘நான் நன்றாகத்தான் இருக்கிறேன். களைப்பெல்லாம் இல்லை’ என்று சொல்வார்கள். இந்த முதல் 5 வருடங்கள் என்பது நமக்குக் கொடுக்கப்படுகிற வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

வரும்முன் காப்போம்!

நீரிழிவை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தினால்தான் எதிர்காலத்தில் வரும் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். முதல் 5 வருடங்களில் அலட்சியமாக விட்டுவிட்டு, அதன்பிறகு மிகுந்த கவனமாக இருந்தாலும் அந்த ஆரம்பகால தவறுகளின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால்தான் முதல் 5 வருடங்கள் மிக முக்கியம் என்கிறோம்.

சர்க்கரை நோய்க்கு முந்தைய காலம்!

நீரிழிவு பற்றிய விழிப்பு உணர்வு ஏன் அவசியம் என்பதற்கான காரணம் சற்று அதிர்ச்சியூட்டக்கூடியது. தற்போது நீரிழிவால் எந்தளவு பலர் பாதிக்கப்பட்டுள்ளனரோ அதே அளவுக்கு நீரிழிவுக்கு முந்தைய நிலையுடன் பலர் வரிசையில் காத்துக் கொண்டுள்ளனர். இதை ப்ரீ டயாபட்டீஸ் என்று சொல்கிறோம். இவர்களை ‘மதில் மேல் பூனை’ என்று அழைக்கலாம்.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, கட்டுப்பாடான உணவுப்பழக்கம் என்று முன் எச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால் நீரிழிவு அபாயத்திலிருந்து தப்பிப்பார்கள். அலட்சியப்படுத்தினால் டயாபட்டீஸ் க்ளப்பில் ப்ரீமியம் மெம்பராக உள்ளே நுழைய வேண்டியிருக்கும்.

ப்ரீ டயாபட்டீஸ் நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால், அப்போதே அலர்ட்டாகிவிட்டால் நீரிழிவு வராமலேயே தடுத்துவிடலாம். இந்தியாவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் 8 முதல் 12 சதவிகிதம் பேர் உள்ளனர். இதே சதவிகிதம் அளவு ப்ரீ டயாபட்டீஸ் கொண்டவர்களும் காத்திருக் கிறார்கள். தற்போது ப்ரீ டயாபட்டீஸில் இருப்பவர்களைக் காப்பாற்றா விட்டால் இந்தியாவில் நீரிழிவாளர்களின் எண்ணிக்கை அப்படியே இரு மடங்காகிவிடும் அபாயம் உள்ளது.

இந்தியர்களுக்கு ஏன் ரிஸ்க் அதிகம்?

அப்பா, அம்மா இருவருக்கும் சர்க்கரை நோய் இருக்கும்பட்சத்தில் குழந்தைக்கும் நீரிழிவு வரும் வாய்ப்பு 90 சதவிகிதம் அதிகம். பெற்றோரில் ஒருவருக்கு டயாபட்டீஸ் இருந்தாலும் குழந்தைக்கு சர்க்கரை நோய் பாதிக்கும் சாத்தியம் 60 சதவிகிதம் உண்டு.

வாழ்க்கைமுறை தவறுகள்!

தற்போது நாம் பசித்து சாப்பிடுவதில்லை. நேரத்துக்கு சாப்பிடுகிறோம். அதிலும் தேவைக்கும் அதிகமான உணவு உடலில் சென்று சேர்கிறது. அந்த கலோரிகள் முறையாக எரிக்கப்படாததால் கொழுப்பாகவும் மாற்றமடைகின்றன. இதனால்தான் இந்தியர்களுக்கு நீரிழிவு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகியிருக்கின்றன. இதேபோல காலை உணவைத் தவிர்ப்பது, நைட் ஷிஃப்ட் வேலைகள், இரவு உணவை மிகவும் தாமதமாக உண்பது, தூங்கச் செல்கிற நேரத்தில் அதிகமாகச் சாப்பிடுவது போன்ற தவறான வழக்கங்கள் நம்மிடம் வந்துவிட்டன.

அதிகாலையில் எழுவது, சூரிய உதயத்துக்குப் பின்பு உணவு உண்ணாதது, சீக்கிரம் தூங்கச் செல்வது போன்ற காரணங்களே உயிர்க்கடிகாரத்தை (Circardian rhythm) இயல்பாக வைத்திருக்கும். பூமியின் இயக்கத்துக்கு எதிராக நாம் தாமதமாக எழுவதும், நேரம் கழித்து உறங்குவதும், உடல் ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் சாப்பிடுவதும் நோயை வரவழைப்பதை அதிகமாக்கிவிடும்.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தபோது மனிதன் ஆரோக்கியமாக இருந்தான். மனிதன் ஆரம்பத்தில் வேட்டை சமூகமாக இருந்தான். அப்போது பசித்தபோது கிடைத்த உணவுகளை உண்டு வந்தான். இன்று மிகவும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை வந்துவிட்டது. இலக்குகளைக் குறிவைத்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த இலக்குகள் அலுவலகத்தில், வேலையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஏதாவது இலக்கை வைத்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற காரணங்களாலும் நீரிழிவு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகிவருகிறது.

ஆங்கில மருத்துவம்தான் ஒரே சாய்ஸா?

சர்க்கரை நோய் உறுதியாகிவிட்டால் அதற்கு ஆங்கில மருத்துவம்தான் ஒரே வழியா, ஏன் மாற்று வழிகளை முயன்று பார்த்து சர்க்கரை நோயை வெல்ல முடியாதா என்று சிலர் நினைக்கலாம். நீரிழிவு வந்துவிட்டாலே மாத்திரைகளை நம் கைகளில் திணித்து விடுவார்கள், இன்சுலின் போட்டுவிடுவார்கள் என்ற பயம் சிலருக்கு உண்டு.

இந்த பயமும், குழப்பமும் தேவையற்றது. சித்தா, ஆயுர்வேதா போன்ற வழிமுறைகளைப் பின்பற்றுவதில் தவறு இல்லை. உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என்று இருப்பதும் அவசியம். ஆனால், நீங்கள் முயற்சி செய்கிற வழிகள் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவ வேண்டும் என்பது அவசியம். மூன்று மாத சர்க்கரை அளவான `ஹெச்பிஏ1சி’ (HbA1c) அளவை சீராகப் பராமரிக்க வேண்டும். இதனால் சர்க்கரையினால் ஏற்படுகிற பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

இணை நோய்களிலும் கவனம் தேவை!

சர்க்கரை அளவை மட்டும் கட்டுப்படுத்தினால் போதாது. நீரிழிவின் இணை நோய்களான ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்றவற்றையும் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்திப் பராமரிக்க வேண்டும்.

ப்ரீ டயாபட்டீஸ் கொண்டவர்கள் செய்ய வேண்டியது என்ன?

நீரிழிவு கொண்டவர்கள் எத்தகைய வாழ்க்கைமுறையை கட்டுப்பாட்டுடன் பின்பற்றுகிறார்களோ அதே விதிகளை ப்ரீ டயாபட்டீஸ் நிலையில் இருப்பவர்களும் மேற்கொள்ள வேண்டும். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று ஆரம்பநிலையிலேயே கட்டுப்படுத்தும்போது நல்ல பலனை எதிர்பார்க்க முடியும். ப்ரீ டயாபட்டீஸ் கொண்டவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், 3 முதல் 5 ஆண்டுகளில் இவர்கள் நீரிழிவாளர்களாக மாறுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அதாவது 30 சதவிகிதம் பேர் நீரிழிவாளர்களாக மாறுகிறார்கள். 30 சதவிகிதம் பேர் ப்ரீ டயாபட்டீஸ் நிலையிலேயே தொடர்கிறார்கள். மீதமுள்ள 40 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் ஆரோக்கியமான நிலைக்குத் திரும்புகிறார்கள்.

நீங்கள் எந்தப் பிரிவில் வரப்போகிறீர்கள் என்பது உங்களது நடவடிக்கையைப் பொறுத்தே மாறும். உண்மையை ஒப்புக்கொள்வதே இதில் முக்கியமான விஷயம். ஆமாம்… ‘எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் வந்துவிட்டது. நான் அதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும்’ என்று அதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.

இதில் ப்ரீ டயாபட்டீஸுக்கு முந்தைய நிலையும் உண்டு. இதை `ப்ரீ ப்ரீ டயாபட்டீஸ்’ (Pre Pre Diabetes) என்று சொல்கிறோம். ஏதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற தூண்டுதல் இருக்கும், தாமதமாகச் சாப்பிட்டால் மயக்கம் வருவது போல் தோன்றும். இந்த நிலையில் எச்சரிக்கையாகிவிட்டால் ப்ரீ ப்ரீ டயாபட்டீஸ் நிலையானது, ப்ரீ டயாபட்டீஸாக மாறாமலும் தடுத்துவிடலாம். வருடாந்தர மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்வது பற்றி பலரும் அறிவுறுத்தி வருகிறார்கள். அதுபோல் சாதாரணமாகப் பரிசோதிக்கும்போதே நீரிழிவின் நிலையும் தெரிந்துவிடும்.

ப்ரீ டயாபட்டீஸ் நிலையில் 33 சதவிகிதம் பேர் மாத்திரை எடுத்துக் கொள்ளும் அவசியம் இல்லாமலேயே நார்மல் நிலைக்குத் திரும்பிவிடலாம். மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் 30 சதவிகிதம் பேர் இயல்பு நிலைக்குத் திரும்பலாம். எனவே, முறையான உணவுக்கட்டுப்பாட்டையும் உடற்பயிற்சிகளையும் பின்பற்றத் தயாராக இருப்பவர்களுக்கு மாத்திரை அவசியம் இருக்காது.

செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்!

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நீரிழிவு பரிசோதனையை மட்டுமே தொடர்ச்சியாகச் செய்துகொண்டால் போதுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். நீரிழிவாளர்கள் என்னென்ன பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.

நிரீழிவு நோயை உண்டாக்கும் இன்சுலின் ஹார்மோனே கொலஸ்ட்ராலை உண்டாக்குவதற்கும் காரணமாக உள்ளது. இன்சுலின் ஹார்மோனே ரத்த அழுத்தத்துடனும் தொடர்பு கொண்டிருக்கிறது. அதனால்தான் நீரிழிவு உறுதியான சில ஆண்டுகளிலேயே கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தப் பிரச்னைகளும் உண்டாகின்றன. அதை பரிசோதனைகளிலும் கண்டுபிடிக்கிறோம்.

நீரிழிவாளர்களில் 30 முதல் 50 சதவிகிதம் பேருக்கு கொலஸ்ட்ராலோ, ரத்த அழுத்தமோ வரும் சாத்தியம் அதிகம். இதை அப்படியே ரிவர்ஸிலும் எடுத்துக் கொள்ளலாம். கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளில் 30 முதல் 50 சதவிகிதம் பேருக்கு நீரிழிவு வரும் சாத்தியமும் அதிகம். அதனால்தான் இவற்றை இணை நோய்கள் என்கிறோம்.

எனவே, நீரிழிவு பாதிப்பு கொண்டவர் சர்க்கரை அளவை மட்டுமே கட்டுப்படுத்திக் கொண்டு, சர்க்கரை நோயை மட்டுமே பராமரித்துக் கொண்டிருப்பது ஒட்டுமொத்த உடல்நலனுக்கான முயற்சி அல்ல. இணை நோய்களையும் கட்டுப்படுத்தினால்தான் எதிர்காலத்தில் இதயம் தொடர்பான நோய்கள், சிறுநீரக பாதிப்பு போன்றவை வராமல் தடுக்க முடியும்.

டயாபட்டீஸ்... வருமுன் காக்க... வந்தபின் கலங்காதிருக்க... கம்ப்ளீட் கைடு!

தொடர் கண்காணிப்பு அவசியம்!

நீரிழிவாளர்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது குளுக்கோ மீட்டரில் சர்க்கரை அளவை அறிந்துகொள்வது அவசியம். அவ்வப்போது மாதம் ஒருமுறையாவது பரிசோதித்துக் கொள்வது பாதுகாப்பானது. சர்க்கரை நோயை சரியாகப் பராமரிக்கிறீர்களா என்பதை இதன்மூலம் நீங்களே அறிந்துகொள்ளலாம்.

3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்தால் எப்போது உங்கள் ரத்தச்சர்க்கரை அளவு ஏறியது என்பது தெரியாது. அதனால் சர்க்கரை நோயாளிகள் வீட்டில் குளுக்கோமீட்டர் வைத்துக் கொள்வது நல்லது. அப்போதுதான் நீரிழிவில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். அதேபோல் உடல்பருமன் வராமல் தடுப்பதும் இந்தக் கூட்டு முயற்சியில் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

வீட்டில் பரிசோதனை செய்யும்போது பரிசோதனைகளுக்கிடையில் 10 சதவிகிதம் அளவில் சிறிய மாறுபாடு வருவது இயல்புதான். அதனால் கவலைகொள்ளத் தேவையில்லை. ஒரே நேரத்தில் 2 விரல்களை சோதித்தால் கூட மாறுபாடு வரும். எனவே, அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. சர்க்கரை அளவை தொடர்ச்சியாக கவனிக்கிறீர்களா என்பதுதான் முக்கியம். தொடர்ச்சியான வீட்டுப் பரிசோதனையுடன் 3 மாதங்களுக்கு ஒருமுறை HbA1c பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும். அந்தப் பரிசோதனையில்தான் சர்க்கரை அளவை நீங்கள் எப்படி பராமரித்து வருகிறீர்கள் என்பதற்கான காலாண்டு திட்ட அறிக்கை கிடைக்கும்.

மருத்துவரை சந்திக்கச் செல்லும்போதெல்லாம் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கொலஸ்ட்ரால் பரிசோதனை மற்றும் சிறுநீரகப் பரிசோதனையை 6 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். வருடம் ஒருமுறை கண்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அதிகபட்சம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது கண் பரிசோதனை நீரிழிவாளர்களுக்குக் கட்டாயம். அதேபோல் நீரிழிவால் வரும் கால்களின் பாதிப்பையும் வருடம் ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இதயத்துக்கான பரிசோதனையை ஆண்டுக்கு ஒருமுறை செய்ய வேண்டும்.

எதற்காகப் பரிசோதனை செய்ய வேண்டும்?

‘நான் சர்க்கரை அளவை சரியாகப் பராமரிக்கிறேன். ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். பின்பு எதற்காக இதயத்தையும், கண்களையும், சிறுநீரகத்தையும் பரிசோதிக்க வேண்டும்’ என்கிற கேள்வி எழலாம். ஆரம்ப நிலையிலேயே பாதிப்பைக் கண்டறிந்து விட்டால் எளிதாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிடலாம். தாமதமாகும்பட்சத்தில் சிகிச்சையளிப்பது சிரமமாகிவிடும். குணமடைவதற்கான வாய்ப்பு விகிதமும் குறையும். ஒருவேளை பாதிப்பு தீவிரமாகிவிட்டால் அதன் வேகத்தைச் சற்று குறைக்க முடியுமே தவிர, குணப்படுத்த முடியாது. நீரிழிவைக் கையாள்வதில் இருக்கும் புத்திசாலித்தனம் என்பது எந்த அளவு ஆரம்ப நிலையிலேயே கண்டறிகிறோம் என்பதிலேயே அடங்கியுள்ளது. எனவேதான், உரிய இடைவெளியில் பரிசோதனைகள் செய்வது புத்திசாலித்தனமான நடவடிக்கையாக உள்ளது.

பழங்கள் சாப்பிடலாமா?

நீரிழிவு நோயாளிகளுக்கு பழங்கள் சாப்பிடுவது குறித்து நிறைய சந்தேகமும், பயமும் உண்டு. பழங்களே சாப்பிடக் கூடாது என்றும் சிலர் அறிவுரை சொல்கிறார்கள். முதலில் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், எல்லா பழங்களிலுமே சர்க்கரை அளவு அதிகம். ஒரு காய், பழமாக மாறும்போது அதில் சர்க்கரைச்சத்து அதிகமாகிவிடும். வாழைக்காயில் சர்க்கரை குறைவு; வாழைப்பழத்தில் அதிகம். மாங்காயில் குறைவு; மாம்பழத்தில் சர்க்கரை அதிகம்.

பழங்களில் இருக்கும் முக்கிய சத்தே நார்ச்சத்தும் சர்க்கரையும்தான். ஜூஸாக மாறும்போது நார்ச்சத்து போய்விடுகிறது. அது வெறுமனே சுகர் சிரப்தான். அதனால் ஜூஸாக குடிக்கவே கூடாது. சர்க்கரை குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள பழங்கள் என்றால் ஆப்பிள், கொய்யா அளவோடு சாப்பிடலாம். சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாதபட்சத்தில் பழங்களைத் தவிர்ப்பதே நல்லது.

மாம்பழம், வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகம். பலாப்பழத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகம். அதற்காக வாழ்க்கை முழுவதும் பழங்களே சாப்பிடக் கூடாதா என்று சிலர் கேட்பார்கள். மாம்பழ சீசனில் ஊரே மாம்பழம் சாப்பிடும்போது நாம் மட்டும் சாப்பிடாமல் ஏக்கத்துடன் இருப்பது கஷ்டமாகவே இருக்கும்.

4 இட்லி சாப்பிடுகிறீர்கள் என்றால் 2 இட்லியுடன் 2 மாம்பழத்துண்டுகள் சாப்பிடலாம். உணவின் மூலம் 20 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம். ஆனால், உணவுக்கட்டுப்பாடு மட்டுமே போதாது. இவையெல்லாம் ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு நன்றாகவே உதவி செய்யும். நேரத்துக்குச் சாப்பிடுவது, சரியான உணவுமுறையைப் பின்பற்றுவது, போதுமான உடற்பயிற்சிகள், மருந்து மற்றும் மாத்திரைகளை உட்கொள்வது போன்ற கூட்டு நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே நீரிழிவை சரியாகப் பராமரிக்க முடியும்.

ஆறு வேளை உணவு!

நீரிழிவு நோயாளிகளை ஆறு வேளையாக உணவைப் பிரித்துக் கொள்ளச் சொல்வது பொதுவான அறிவுரை. அதற்காக ஆறு வேளையும் இட்லி, தோசை, சாதம் என்று சாப்பிடக் கூடாது. காலை, மதியம், இரவு என்பது பிரதான உணவு நேரம்.

மீதி மூன்று வேளைகளுக்கு சுண்டல், முளைகட்டிய தானியங்கள், சாலட், நட்ஸ் போன்றவற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே அளவோடு பழங்கள் சாப்பிடலாம். எனவே, உணவில் அளவு முக்கியம். எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். உங்களுடைய நீரிழிவு பாதிப்பு எந்த அளவு இருக்கிறது என்பதை வைத்தே மருத்துவர் உங்கள் உணவுத் திட்டத்தையும் வகுப்பார்.

திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தால்…

சர்க்கரை நோயாளிகள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் ‘லோ சுகர்’ (Low sugar) என்கிற தாழ் சர்க்கரை நிலை. மருத்துவரீதியாக இதனை ‘ஹைப்போகிளைசீமியா’ (Hypoglycemia) என்கிறோம்.

அதாவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 mg அளவுக்கும் கீழே குறைந்தால் அதை தாழ் சர்க்கரை நிலையாகப் புரிந்துகொள்ளலாம். சர்க்கரை அளவு அதிகமாவது மட்டுமே பிரச்னை என்று நினைக்கக் கூடாது. லோ சுகர் ஏற்படுவதை உடனடியாகக் கவனிக்காவிட்டால் அதுவும் மருத்துவ அவசரநிலையில் (Medical emergency) கொண்டு சென்றுவிட்டுவிடும்.

தாழ் சர்க்கரை நிலையின் அறிகுறிகளை உணர்ந்தால் குளுக்கோமீட்டர் உதவியுடன் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை குளுக்கோமீட்டர் வீட்டில் இல்லாதபட்சத்தில் ஒரு டம்ளரில் ஒன்றிரண்டு டீஸ்பூன் சர்க்கரையைக் கலந்து குடித்துவிட்டால் சர்க்கரை அளவு ஏறி நார்மலாகிவிடும்.

பேருந்திலோ, பைக்கிலோ, காரிலோ சென்றுகொண்டிருக்கிறீர்கள். ஆனால், லோ சுகர் அறிகுறிகளை மயக்கமாகவோ படபடப்பாகவோ உணரும்பட்சத்தில், ‘இன்னும் கொஞ்ச நேரம்தானே வீட்டுக்குச் சென்றுவிடலாம்’ என்று காலத்தைத் தள்ளிப் போடக் கூடாது. 5 நிமிடங்களில் எதுவும் நடக்கலாம் என்பதுதான் யதார்த்தம்.

விமான ஓட்டிக்கு லோ சுகர் வந்து விமானம் கீழே விழுந்த வரலாறெல்லாம் உண்டு. எனவே, உயிருக்கே ஆபத்தான நிலைமையைக் கூட லோ சுகர் உண்டாக்கலாம். சர்க்கரை அளவு ரத்தத்தில் குறையும்போது நம் உடல் சில அறிகுறிகளைக் காட்டும். கை, கால் நடுக்கம், படபடப்பு ஏற்படும். இதயம் வேகமாகத் துடிப்பதை உணர முடியும். குளித்தது போல் வியர்த்துக் கொட்டும். வாய் குளறும். கண்கள் இருட்டிக் கொண்டு வரும். தெளிவாகப் பேச முடியாது. இதை உணர்ந்து அதற்கேற்றாற்போல் துரிதமாகச் செயல்பட வேண்டும்.

தாழ் சர்க்கரை நிலையை எப்படித் தவிர்ப்பது?

மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, இன்சுலின் போட்டுக் கொள்வதுடன் சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதன் மூலமே தாழ் சர்க்கரை நிலை வராமல் தவிர்க்க முடியும். மாத்திரை போட்டு விட்டோமே என்று சாப்பிடாமல் இருப்பது அல்லது மாத்திரை சாப்பிட்ட அலட்சியத்தில் தாமதமாகச் சாப்பிடுவது இரண்டுமே தவறு. மாத்திரையும், இன்சுலினும் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மட்டுமே செய்யும். நீங்கள் சாப்பிடாமல் பட்டினி கிடப்பதையெல்லாம் மாத்திரை சமன்படுத்தாது.

இதேபோல், ‘ஒரு ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு மாத்திரை போட்டுக் கொள்கிறேன்’ என்றுகூட சிலர் சொல்வார்கள். இதுவும்கூட தாழ் சர்க்கரை நிலைக்கு முக்கியக் காரணம். நீரிழிவாளர்களுக்கு விருந்து தவறானது என்பதைப் போலவே விரதமும் தவறானது. சத்தான உணவுமுறை, சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதே தாழ் சர்க்கரை நிலை வராமல் தவிர்க்க முடியும்.

இதில் விநோதமான ஒரு விஷயம், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது ஒருமுறை ஏற்பட்ட அறிகுறியே மீண்டும் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. ஒருமுறை வியர்த்துக் கொட்டினால், அடுத்த முறை லோ சுகர் ஏற்படும்போதும் வியர்த்துக் கொட்டும். ஒருமுறை தலைச்சுற்றல் வந்தால் அடுத்த முறையும் தலைச்சுற்றல் மட்டுமே வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

நீரிழிவும் நடைப்பயிற்சியும்…

நீரிழிவு நோயாளிகளுக்கு வாக்கிங் செல்வது நல்ல பயிற்சியாக இருக்கும். ஆனால், எப்படி நடைப்பயிற்சி மேற்கொள்வது என்பதில் சந்தேகமும் இருக்கும். வேகமாக வியர்த்து விறுவிறுக்க நடக்க வேண்டுமா, நிதானமாக நடக்கலாமா, எத்தனை நிமிடங்கள் நடக்கலாம், எந்த நேரம் சரியானது என பல சந்தேகங்கள் இருக்கும்.

இதுதொடர்பாக பல ஆராய்ச்சிகளும் உலகம் முழுவதும் நடைபெற்றுள்ளன. இந்த ஆய்வுகளிலிருந்து கிடைக்கும் முடிவுகள் என்னவெனில், 30 முதல் 40 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வது போதுமானது.

காலையா, மாலையா என்பது உங்கள் வசதியைப் பொறுத்தது. வெறும் வயிற்றில் நடக்கக் கூடாது. அதேபோல் அதிகம் சாப்பிட்ட பிறகும் நடக்கக் கூடாது.

வாரம் முழுவதும் நடக்க வேண்டுமா என்கிற கேள்விக்கு வாரத்தில் 5 நாள்கள் கட்டாயம் நடக்க வேண்டுமென்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 2 நாள்கள் நடைப்பயிற்சியைத் தவிர்த்தால் அவை அடுத்தடுத்த நாள்களாக இருக்கக் கூடாது.

தொடர்ச்சியாக 2 நாள்கள் இயக்கமில்லாமல் இருப்பது சரியானது அல்ல. திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை நடைப்பயிற்சி செய்துவிட்டு சனி, ஞாயிறு என அடுத்தடுத்த 2 நாள்கள் இடைவெளி விடுவது தவறானது.

வேகமாக நடக்க வேண்டுமா, நிதானமாக நடக்க வேண்டுமா என்கிற சந்தேகத்துக்கும் நிபுணர்கள் சொல்கிற பதில், நீங்கள் நடப்பதை நீங்களே உணர்ந்து நடக்க வேண்டும். எந்திரத்தனமாக நடக்கக் கூடாது. நண்பர்களுடன் டீக்கடைக்குச் செல்வது போலவோ, குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்வது போலவோ ரொம்பவும் ரிலாக்ஸ்டாகவும் நடக்கக் கூடாது.

நடக்கிறோம் என்கிற முழுமையான உணர்வுடன் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரே வேளையில் 30 நிமிடங்களும் நடக்க முடியாது என்கிறவர்கள் நேரம் கிடைக்கும்போது நடந்து அந்த 30 நிமிடங்களை ஈடுகட்டலாம். காலையில் 15 நிமிடங்கள் நடந்தால் மாலையில் 15 நிமிடங்கள் நடப்பதும் போதுமானது.

இவர்கள் நடக்கக் கூடாது!

நீரிழிவாளர்களில் நடைப்பயிற்சி செய்யக் கூடாத வகையினரும் உள்ளனர். சர்க்கரை நோயினால் காலில் ஏதேனும் பாதிப்பு இருக்கும்பட்சத்திலும், காலில் புண் இருக்கும்பட்சத்திலும், பார்வை மங்கலாக இருக்கிறவர்களும், கர்ப்பகாலங்களிலும், அதிக ரத்த அழுத்தம் இருக்கும்போதும் நடைப்பயிற்சியைத் தவிர்க்கலாம். இதற்கு பதிலாக வீட்டிலேயே யோகா, தியானம் போன்ற எளிமையான பயிற்சிகளைச் செய்யலாம்.

உடற்பயிற்சிக்கான வழிமுறைகள்!

நீரிழிவு கொண்டவர்கள் உடற்பயிற்சி செய்யலாமா என்கிற சந்தேகமும் எழுவது இயல்பானது. கடினமான உடற்பயிற்சிகள் செய்வது நல்லதா அல்லது இலகுவான பயிற்சிகளே போதுமா என்கிற குழப்பமும் வரக்கூடும். உடற்பயிற்சியில் ஏரோபிக்ஸ் மற்றும் நான் ஏரோபிக்ஸ் என இரண்டு வகைகள் உண்டு. ஏரோபிக் பயிற்சிகள் என்பவை கார்டியாக் பயிற்சிகள் என்றும் சொல்கிறோம். 80 சதவிகிதம் ஏரோபிக் பயிற்சிகளும், 20 சதவிகிதமளவு நான் ஏரோபிக் பயிற்சிகளும் செய்யலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதுபற்றி உடற்பயிற்சி நிபுணருடன் கலந்தாலோசித்தால் உங்களுக்கான உடற்பயிற்சியைத் திட்டமிட்டுக் கொடுப்பார். இதில் நீரிழிவாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம், உடற்பயிற்சிகளையும் வெறும் வயிற்றில் செய்யக் கூடாது. அதிகமாக சாப்பிட்ட பிறகும் செய்யக் கூடாது.

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி இரண்டுமே செய்ய முடியாத பட்சத்தில் நீச்சல், சைக்கிளிங் பயிற்சியை முயற்சி செய்யலாம். உங்களால் முடிந்த அளவுக்கு ஜாக்கிங்கும் போகலாம். இதுபோல் உங்களால் முடிந்த பயிற்சிகளை வாரத்தில் 5 நாள்கள், சராசரியாக ஒருநாளில் 40 நிமிடங்கள் மேற்கொள்ளும்போது சர்க்கரை அளவு நன்கு குறையும். இன்சுலினை நன்கு வேலை செய்ய வைக்கும். ரத்தத்திலிருந்து சர்க்கரையை எடுத்துக் கொள்வதற்காகத் திசுக்களைத் தயார்படுத்தும். இதுபோல் இன்சுலின் செயல்திறனை அதிகரிப்பது, திசுக்களை ரத்தச் சர்க்கரையை கிரகித்துக் கொள்ளத் தயார் படுத்துவதன் மூலம் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும். அதனால்தான் நடைப்பயிற்சியையோ, உடற்பயிற்சியையோ மருத்துவர்கள் கட்டாயம் என்று பரிந்துரைக்கிறார்கள்.

எந்த எண்ணெய் நல்லது?

சர்க்கரை நோயாளிகளுக்கு இருக்கும் முக்கிய சந்தேகங்களில் ஒன்று, எந்த எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்கிற கேள்விதான். நம் உடலில் கொலஸ்ட்ரால் என்கிற சத்தும் தேவை தான். அதற்காக எண்ணெயை உணவில் சேர்ப்பதும் அவசியம். ஆனால், அந்த கொலஸ்ட்ரால் அளவை அதிகமாக்கிவிடுமளவுக்கு எண்ணெய் பயன்பாடு மாறிவிடக் கூடாது.

நீரிழிவாளர்களுக்கு நல்ல எண்ணெய் என்பது நல்லெண்ணெய்தான். அதற்காக நல்லெண்ணெயும் அளவுக்கு அதிகமாகச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. பொதுவாக ஒருநாளில் ஒரு தனிநபருக்கு 2 அல்லது 3 டீஸ்பூன் அளவு எண்ணெய்தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் 4 பேர் இருக்கும்பட்சத்தில் சராசரியாக 10 டீஸ்பூன் எண்ணெய்தான் பயன் படுத்த வேண்டும். இதை வைத்து நீங்கள் வீட்டில் எந்தளவில் எண்ணெய் பயன்படுத்துகிறீர்கள் என்பதை நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

எல்லா எண்ணெய்களிலுமே `சாச்சுரேட்டடு ஃபேட்டி ஆசிட்’ (Saturated fatty acid), `மோனோ அன்சாச்சுரேட்டடு ஃபேட்டி ஆசிட்’ (Mono unsaturated fatty acid), `பாலி அன்சாச்சுரேட்டடு ஃபேட்டி ஆசிட்’ (Poly unsaturated fatty acid) என மூன்றுவிதம் இருக்கிறது. இவற்றில் பாலி அன்சாச்சுரேட்டடு ஃபேட்டி ஆசிட்தான் நல்லது.

இந்த பாலி அன்சாச்சுரேட்டடு கொழுப்பு அமிலமானது மீன் உணவுகளில் அதிகம். எனவே, மீன் சாப்பிடுவது நல்லது. மீனை வறுக்கும்போது கெட்ட கொழுப்பு சேர்ந்துவிடும். எனவே, மீனை வறுக்காமல், பொரிக்காமல் சாப்பிடுவதே சரியானது. வனஸ்பதி போன்ற சாச்சுரேட்டடு ஃபேட்டி ஆசிட் கொண்ட எண்ணெய் வகைகளைத் தவிர்க்க வேண்டும். எல்லா எண்ணெய்களிலுமே நல்ல அம்சங்களும் இருக்கின்றன, கெட்ட கொழுப்பும் இருக்கின்றன. எனவே, ஒரே எண்ணெயை வருடம் முழுவதும் சமையலுக்குப் பயன்படுத்தத் தேவையில்லை.

ஒரு மாதம் கடலை எண்ணெய், ஒரு மாதம் நல்லெண்ணெய், ஒரு மாதம் தவிட்டு எண்ணெய், ஒரு மாதம் கடுகு எண்ணெய் என மாற்றி மாற்றியும் பயன்படுத்தலாம். இதுதான் எண்ணெயை நம் உடல்நலனுக்காக சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் நல்ல முறையும் கூட. ஒரே எண்ணெயைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்கலாம். எது நல்ல எண்ணெய் என்கிற சந்தேகத்தைவிட எந்த அளவு எண்ணெயை உபயோகிக்கிறீர்கள் என்பதே முக்கியமானது.

அசைவ உணவில் எது சரி?

நீரிழிவாளர்களுக்கு அசைவம் சாப்பிடுவதிலும் சந்தேகம் இருக்கும். ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சியில் கொலஸ்ட்ரால் அளவு அதிகம். எனவே மட்டன், பீஃப் வகையை எந்தளவு குறைத்துக் கொள்கிறீர்களோ அந்தளவு நல்லது. முட்டையின் வெள்ளைக்கருவில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் அதிகம். எனவே, மஞ்சள் கருவைத் தவிர்த்து முட்டையை எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக எந்த இறைச்சியையும் வறுக்காமல், பொரிக்காமல் சாப்பிடுவதே பாதுகாப்பானது. வறுக்கும்போது கெட்ட கொழுப்பு உருவாகிவிடும். எந்த இறைச்சியையும் வேக வைத்துச் சாப்பிடுவதே சிறப்பு. ஏனெனில், எல்லா அசைவ உணவுகளிலுமே கொலஸ்ட்ரால் அதிகம். வறுக்கும்போது, பொரிக்கும்போது கொலஸ்ட்ரால் அளவு இன்னும் கூடுதலாகிவிடும்.

எண்ணெயும் சூப்பர் ஸ்டாரும் ஒன்று!

ஒரே எண்ணெயில், ஒரே சட்டியில் திரும்பத் திரும்ப வேக வைக்கும்போது இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலம் உருவாகும். ஃபாஸ்ட் புட் உணவுகளிலும் இந்த டிரான்ஸ்ஃபேட் அதிகம். எண்ணெயை அதிகம் சூடுபடுத்துவது ஆபத்தானது.

அதிலும் கொதிக்க வைத்த எண்ணெயை மீண்டும் கொதிக்க வைத்துப் பயன்படுத்துவது அதைவிட ஆபத்தானது. எனவே, ஒருமுறை சமையலில் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.

சூப்பர் ஸ்டார் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொல்வது போன்றதுதான், எண்ணெயை ஒருதடவை பயன்படுத்திவிட்டால் அது நூறு தடவை பயன்படுத்தியதற்குச் சமம்.

`Reuse, Reheat’ என்பது எண்ணெய் விஷயத்தில் பேசக்கூடாத கெட்ட வார்த்தைகள்.

டயாபட்டிஸும் கல்யாணமும்!

என்னுடைய நோயாளிகளுக்கு நான் வேடிக்கையாகச் சொல்லும் ஒரு விஷயம், ‘டயாபட்டீஸும் கல்யாணமும் ஒன்று’. ஏனெனில், கல்யாணமாகாதவர்கள் எப்போது வேண்டுமானாலும் கல்யாணமானவர்களாக மாற முடியும். ஆனால், கல்யாணமானவர்கள் ஒருபோதும் மீண்டும் கல்யாணமாகாதவர்களாக மாற முடியாது. எதற்காக இந்த உதாரணம் என்றால், டயாபட்டீஸ் ஒருமுறை வந்துவிட்டால் வாழ்க்கை முழுவதும் அது நம்முடனேயே இருக்கும். வந்த நீரிழிவைப் பராமரிக்க மட்டுமே முடியும். மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக மாற முடியாது.

கல்யாணத்துக்கு முன்பு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சுதந்திரமாக இருந்திருக்கலாம். ஆனால், கல்யாணம் செய்து கொண்ட பிறகு நீங்கள் மனம்போன போக்கில் வாழ முடியாது. அப்படி கட்டுப்பாட்டுடன் வாழ்வதே ஆரோக்கியத்துக்கும் நல்லது. திருமண வாழ்க்கையில் எப்படி உங்கள் பார்ட்னரை ஏமாற்ற முடியாதோ, அப்படி ஏமாற்றினால் எதிர்காலத்தில் பிரச்னையைச் சந்திப்பீர்களோ அதேபோல் டயாபட்டீஸையும் பார்ட்னர் போல் பாவித்து அதற்கு உண்மையாக இருங்கள். `ஆமாம்… எனக்கு டயாபட்டீஸ்’ என்று முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள். இதுவே நீரிழிவுடன் வாழ்க்கையையும் சரியாகக் கையாள நல்ல வழி’’ என்கிறார் மருத்துவர் சண்முகம்.

இன்னொரு முறை கைகொடுங்கள்… Happy Diabetes..!

சுகர் டெஸ்ட் எடுப்பதில் மக்கள் செய்யும் தவறுகள் என்ன?

நீரிழிவு மருத்துவர் சஃபி சுலைமான், நாகர்கோயில்

‘‘நீரிழிவை மூன்று விதங்களில் நாம் கண்டறியலாம். தற்செயலாக உங்களுக்கு நீரிழிவு இருக்கிறதா என்று கண்டறிய ஓர் ஆய்வகம் சென்று பரிசோதிக்கிறீர்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இருக்கும் குளுக்கோமீட்டரை வைத்துப் பரிசோதிக்கிறீர்கள் என்றால் உங்கள் சர்க்கரை அளவு 180 mg/dL என்கிற அளவில் இருக்க வேண்டும். நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள், எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்பதெல்லாம் இந்த Random sugar test முறையில் கணக்கு இல்லை. ஒருவேளை இந்த அளவைக் கடந்து 200, 210 என்று இருக்கும்பட்சத்தில் வெறும் வயிற்றிலும் பரிசோதிக்க வேண்டும்.

சஃபி சுலைமான்
சஃபி சுலைமான்

முதல் நாள் இரவு 8 மணிக்கு சாப்பிடுகிறீர்கள், அடுத்த நாள் காலை 8 மணிக்குத்தான் காலை உணவு என்றால் இந்த 12 மணி நேர இடைவெளியில் இன்சுலினுக்கு வேலையே இருக்காது. நாம் சாப்பிடும்போதுதான் சர்க்கரை அளவு அதிகமாகும். அது நீங்கள் வெண்டைக்காய் சாப்பிட்டாலும், காபி குடித்தாலும், பிரியாணி சாப்பிட்டாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடத்தான் போகிறது. இந்தச் சர்க்கரை அளவினைப் பராமரிக்கவே இன்சுலின் சுரக்கிறது.

இன்சுலின் சுரப்பு இரவு முழுவதும் இருக்காது. காலையில் பார்க்கும்போது சர்க்கரையின் அளவு தெரியும். வெறும் வயிற்றில் பார்க்கும்போது சர்க்கரையின் அளவு 90-க்குக் கீழே இருந்தால் உங்களுக்கு நீரிழிவு இல்லையென்று தோராயமாகப் புரிந்துகொள்ளலாம். அதுவே Random sugar 200 என்கிற அளவில் இருந்தாலும், வெறும் வயிற்றில் 95, 100 என்றிருந்தால் நீங்கள் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். அடுத்தகட்டமாக யோசிக்க வேண்டும். இதைத்தான் HbA1c என்கிறோம். இந்த HbA1cதான் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது அல்லது இல்லை என்பதை உறுதிப்படுத்தும்.

பலரும் HbA1c சர்க்கரை அளவு என்பதை சராசரி அளவு பார்ப்பது என்று நினைத்துக் கொள்கிறார்கள். அப்படி கிடையாது. Hb என்பது ஹீமோகுளோபின். அதாவது ஹீமோகுளோபினில் உள்ள சர்க்கரை அளவு என்று அர்த்தம். ஏனெனில், நம் உடலில் ஹீமோகுளோபின் என்பது 90 நாள்கள் வரை சுற்றிக் கொண்டிருக்கும்.

ஹீமோகுளோபின் என்கிற சிவப்பணுக்களில் எந்தளவு சர்க்கரை இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் பரிசோதனை. HbA1c அளவு தோராயமாக 5.6 என்கிற அளவுக்கும் கீழே இருக்கிறது என்றால் நீரிழிவு இல்லை என்று தெரிந்துகொள்ளலாம். 5.6 என்கிற அளவுக்கும் 6.3க்கும் இடையில் இருந்தால் நீரிழிவுக்கு முந்தைய நிலையான ப்ரீ டயாபட்டிக்.

அதுவே 6.3க்கு மேல் சென்றிருந்தால் அவர் நீரீழிவு நோயாளி என்று உறுதி செய்து கொள்ளலாம். 8 என்கிற அளவில் இருந்தால் நீரிழிவு மோசமாக இருக்கிறது என்று அர்த்தம்.

டயாபட்டீஸை குணப்படுத்த முடியுமா?

நீரிழிவை குணப்படுத்தி விடலாம் என்று யாரேனும் சொன்னால் நம்பாதீர்கள். டயாபட்டீஸ் என்பது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தில் ஏற்பட்டிருக்கும் குறைபாடு (Metabolic defect). நோயை குணப் படுத்தலாம். வளர்சிதை மாற்றக் குறைபாட்டை குணப்படுத்த முடியாது.

உதாரணத்துக்கு, கோவிட் ஒரு நோய், டைபாய்டு ஒரு நோய், மலேரியா ஒரு நோய். இந்த நோய் களெல்லாம் குணப்படுத்தக் கூடியவை.

ஆனால், நீரிழிவு அப்படியல்ல. டயாபட்டீஸை கட்டுப்படுத்துவதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை சீராக வைத்துக் கொள்ள முடியும். எனவே, நீரிழிவைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதையே நாம் யோசிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இதை யெல்லாம் தாண்டி நீரிழிவு ஒரு நோயே அல்ல; நீரிழிவை குணப்படுத்தலாம் என்று யாரேனும் பரப்புரை செய்தால் நம்பிவிடாதீர்கள்.

முறையான உணவு, போதுமான உடற்பயிற்சி, சரியான மருந்துகளின் மூலம் HbA1c ஒருவருக்கு 6.3 என்கிற அளவில் இருந்தால் அதை 5.6 என்கிற அளவுக்கு கொண்டு வர முடியும். இந்த அளவில் டயாபட்டீஸின் பாதிப்பைக் குறைப்பது அல்லது கட்டுப்படுத்துவதுதான் சாத்தியமே தவிர முற்றிலும் குணப்படுத்திவிடலாம் என்கிற வாதம் ஆபத்தானது!’’ என்கிறார் நீரிழிவு மருத்துவர் சஃபி சுலைமான்.

…………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to டயாபட்டீஸ் – வருமுன் காக்க… வந்தபின் கலங்காதிருக்க… ஒரு கம்ப்ளீட் கைடு!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //HbA1c ஒருவருக்கு 6.3 // சார்… இப்படி நான் எழுதுவதால், இந்த மருத்துவ அறிஞர்களைவிட மருத்துவ அறிவு உள்ளவனா என்று நினைக்கக்கூடாது. இவர்கள் சொல்லும் அளவீடுகள் பலவற்றில் எனக்குச் சந்தேகம் உண்டு. 6க்குக் கீழே இருந்தால் நிச்சயமாக அவருக்கு சர்க்கரை நோய் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். சர்க்கரை நோய் வருவதற்கான முக்கியமான காரணம், எண்ணெய் கலந்த இனிப்பு (அல்வா, அதிரசம் போன்று), அரிசிச் சோற்றை மலைபோல் நிரப்பி குளம் வெட்டி குழம்பு/ரசம் போட்டுச் சாப்பிடுவது, அகாலத்தில் சாப்பிடுவது, சாப்பிட்டவுடன், அப்படியே கட்டையைச் சாய்ப்பது போன்றவைகள்தாம். எதனால் அரிசிச்சோறு கூடாது, சப்பாத்தி பரவாயில்லை என்று சொல்கிறார்கள் என்றால், அரிசிச் சோற்றை நாம் மலைபோல் சாப்பிட்டுத்தான் பழகியிருக்கிறோம், சப்பாத்தியை பொதுவாக 3-4க்கு மேல் சாப்பிடுவதில்லை. நாம் கொஞ்ச சாதம்தான் போட்டுக்கொள்கிறோம் என்று நினைத்து குழம்பு, ரசம், மோர் என்று சாப்பிடுகிறோம். சாதம் விரைவில் சீரணமாகும், சப்பாத்தி சிறிது நேரம் எடுக்கும். அதனால் உடனே பசிக்காது. வெள்ளை சாதத்தை விலக்கி, பிரௌன் அரிசியை உபயோகியுங்கள். ஜீனி பக்கமே போகாதீர்கள், வாரத்தில் ஒரு முறை சிறிது வெல்லத்தில் செய்த இனிப்பு ஓகே.

    தினமும் 30 நிமிடங்கள் விரைவு நடைப்பயிற்சி வேண்டும் (1 நாள் ரெஸ்ட் கொடுக்கலாம்). ரொம்பநேரம் சேரில் உட்கார்ந்திருக்கக்கூடாது. சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் கழித்துத்தான் படுக்கணும் (அதுக்காக, சாப்பிட்டவுடன், படுக்கையில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்து அப்புறம் தூங்குவதும் சரிப்படாது). இரவு உணவு உறங்கச் செல்வதற்கு 2 மணீ நேரம் முன்னால் முடித்துவிடவேண்டும், உறங்குவது 9-9 1/2 மணிக்குள் என்று ஒரு ஒழுங்குக்குப் பழகவேண்டும்.

    இனிப்பைத் தவிர்க்கணும் என்று சொல்வதில் ஒரு காரணம் உண்டு. எந்த இனிப்பையும் 1க்கு மேல் சாப்பிட்டுத்தான் நமக்குப் பழக்கம். இனிப்பு என்ற ருசிக்கு 1/2 மைசூர்பாக் (அல்லது 1/4 மைசூர்பாக்) போதும். இனிப்பின்மீது ஆசை இருந்தால், எண்ணெய் சேர்க்காத ஒரு இனிப்பு சாப்பிடலாம் (உதாரணம் பிள்ளையார் கொழுக்கட்டை போன்று) முடிந்த வரை எண்ணெயைத் தவிருங்கள்.

    6 மாதத்திற்கு ஒரு முறை HBA1C எடுத்துப் பார்ப்பது எச்சரிக்கையாக இருக்க உதவும். 6 வந்தாலே உடனே பயந்துகொண்டு மருத்துவரைச் சந்தித்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாதீர்கள். அதனால் ஒரு பிரயோசனமும் கிடையாது. ஆங்கில மருந்துகள் ஒருக்காலும் சர்க்கரை நோயைத் தீர்க்காது, கட்டுக்குள் வைக்க உதவும் (provided நாம் நம் உணவு/உடற்பயிற்சி/வாழ்க்கை ஒழுங்கைக் கடைபிடித்தால். சிலர் செய்வதுபோல, இன்னைக்கு விருந்து, அடிச்சுக் கட்டு, ஒரு மாத்திரைக்குப் பதில் இரண்டு மாத்திரை போட்டுக்கொள்வோம் என்றால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரவே வராது). மாத்திரை, 6.3 லிருந்து 5.6 வருவதற்கு உதவும் என்பது டுபாக்கூர் என்பது என் அவதானம். நம் எல்லோரையும் நம்பித்தான் மருந்துக் கம்பெனிகள் மற்றும் பல மருத்துவமனைகள்/மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்காதீர்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.