……………………………………….


………………………………………..
“நான் இந்த மாதிரிதான் ஆகப் போகிறேன்” – என்று திட்டமிட்டு அதற்காக மிகக் கடினமாக உழைத்து அதைச் செய்து காட்டியவர்கள் பலரை தமிழ் சினிமா உலகில் பார்த்திருக்கிறேன்.
அதில் முக்கியமானவர்கள் நாகேஷும் ஜெய்சங்கரும்.
நாகேஷ்:
சினிமாவில் நாகேஷும் நானும் நுழைவதற்கு முன்பிருந்தே பழக்கம். அப்போது ரயில்வேயில் ஒரு வேலையில் இருந்தார் நாகேஷ். ஒரு குடும்பத்துக்குத் தேவையான அளவுக்கு வருமானம் அதன் மூலம் வந்துகொண்டிருந்தது.
அமெச்சூர் நாடக நடிகனாக நடிகர் பாலாஜியின் குழுவில் நடித்துக் கொண்டிருந்தார். சிறப்பாக நடித்துப் பெயர் வாங்கியிருந்தார். ஆனால் சினிமாவுக்குள் நுழைவார் என்று அப்போது யாருக்கும் தெரியாது.
எப்படியோ தொடர்ந்து சினிமாவில் நுழைய முயற்சி பண்ணி ‘தாமரைக்குளம்’ என்ற படத்தில் சிறு வேஷம் கிடைத்தது. அதையே பிரமாதமாகப் பண்ணியிருந்தார். பிறகு ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் நடித்து, கே.பாலச்சந்தரின் நாடகங்களிலும் நடித்துக் கொண்டு, தன்னைத்தானே படிப்படியாக நகர்த்தி முன்னுக்கு வந்தவர் நாகேஷ்.
அந்த அளவுக்கு அசாத்தியமான நடிப்புத் திறமை அவருக்குள் இருந்தது. அது அவருக்கே தெரியும். “நம்முடைய நடிப்புத் திறமையினால் நாம் நிச்சயமாக முன்னேற முடியும்” என்கிற வலுவான நம்பிக்கை அவரிடம் இருந்தது. அதனால் சின்ன வேஷம், பெரிய வேஷம் என்றெல்லாம் கவலைப்படாமல் கிடைத்த வாய்ப்பை எல்லாம் நன்றாகப் பண்ணிக் கொண்டிருந்தார்.
நான் கூட அப்போது “டேய்… சினிமாவை நம்பி ரயில்வே வேலையை விட்டுறாதே” என்று டிஸ்கரேஜ் பண்ணிப் பேசியிருக்கிறேன். அப்போது எனக்கும் சினிமாவைப் பற்றி அதிகம் தெரியாது.
“அதெல்லாம் இல்லை.. நான் பண்ணிக் காட்டுறேண்டா” என்று சொல்லி, துணிந்து, தான் பார்த்துக் கொண்டிருந்த ரயில்வே வேலையை விட்டுவிட்டார் நாகேஷ்.
பாலச்சந்தரின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்து, சொன்ன மாதிரியே சினிமாவில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்து விட்டார்.
டைரக்டர் சொன்னதைச் சட்டென்று பிடித்துக் கொண்டு தன்னுடைய கற்பனைக்கேற்றபடி அந்தக் கதாபாத்திரத்தைப் பிரமாதப்படுத்தி விடுவார். அந்தப் பாத்திரத்தை ‘இம்ப்ரூவ்’ பண்ணியதில் அவருக்கு ஐம்பது சதவிகித பங்கு இருக்கும்.
அந்த விதத்தில் அபூர்வமான நடிகர் நாகேஷ்.
ஜெய்சங்கர்
சினிமாவில் நுழைவதற்கு முன்னால் வெறும் சங்கர் தான். என்னுடைய தம்பி அம்பியோட கிளாஸ்மேட் அவன். எல்லோரும் ஒன்றாக சென்னை விவேகானந்தா கல்லூரியில் தான் படித்தார்கள். அப்போது நாங்கள் நடத்திக்கொண்டிருந்த ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்’ நாடகக் குழுவில் அவனும் நடித்திருக்கிறான். பல நல்ல ரோல்களில் நடித்திருக்கிறான். நன்றாக நடிப்பான்.
நாடகங்களில் நடிக்கும்போதே அவனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் அதிகமாகவே இருந்தது. அதோடு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தான்.
டெல்லியில் ஒரு வேலை கிடைத்தது. இருந்தும் அவனுக்கு “வேலையா?, சினிமாவா?” என்று ஒரே குழப்பம். என்னைப் போன்றவர்கள் அவனிடம் டெல்லியில் வேலையில் சேரச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தோம்.
ஒருவழியாக டெல்லிக்குப் போனவன் ஒரே மாதத்தில் அந்த வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வந்து விட்டான்.
“எப்படியும் சினிமாவில் வந்து காட்றேண்டா” என்று சொன்னவன், அதற்காகவே உழைத்தான். பல ஸ்டூடியோக்களுக்கு அலைந்தான். படத் தயாரிப்பாளர்களைப் பார்த்தான்.
கடைசியில் ஒரு படத்தில் நடிக்க சங்கருக்கு வாய்ப்பு வந்தது. பத்திரிகைகளில் எல்லாம் “புதுமுகம் அறிமுகம்” என்று விளம்பரம் எல்லாம் வந்துவிட்டது. இதற்கிடையில் யாரோ அந்தப் படத் தயாரிப்பாளரிடம் பேசி மனதை மாற்றிவிட்டார்கள். இவனுக்கு வாய்ப்பு பறிபோனது.
யாருடைய மனசையும் சங்கடப்படுத்தி விடக்கூடிய பிரச்சினைதான் இது. என்றாலும் இவன் அசரவில்லை.
“இது போனாப் போகட்டும், அடுத்து இதைவிட நல்ல வாய்ப்பு வரும்” என நம்பிக்கையுடன் சொல்லிக் கொண்டிருந்தான்.
ஜோசப் தளியத்தோட படத்தில் வாய்ப்புக் கிடைத்து, நடித்து அங்கீகாரம் கிடைத்து, அடுத்தடுத்து படங்கள். பிஸியாகி விட்டான். தொடர்ந்து ஹீரோவாகக் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டான்.
என்ன சம்பாதித்தாலும் கொஞ்சம் கூட விளம்பரம் பண்ணிக் கொள்ளாமல் நிறைய தான தர்மங்கள் பண்ணியவன் ஜெய்சங்கர்.
‘மெர்ஸி ஹோம்’ ஒன்றுக்கு அவன் பண்ணியிருக்கிற உதவிகளை கைங்கர்யம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தாராளமாகப் பண்ணியிருக்கிறான்.
எல்லோரிடமும் ரொம்ப ஃப்ரெண்ட்லியாக இருப்பான். ஜாலியாகப் பழகுவான். அவனிடம் யாரும் விரோதம் பண்ணிக் கொள்வது கஷ்டம். அவனை யாராவது விரோதம் பண்ணிக் கொண்டால் அதை ஒரு சாதனை என்றுதான் சொல்லவேண்டும். அப்படி ஒரு மனசு அவனுக்கு.
அவன் கோபப்பட்டு யாரும் பார்த்திருக்க முடியாது. சினிமா மேக்கப் மேன்கள் சிலரை படத் தயாரிப்பாளர்களாக்கி இருக்கிறான். கஷ்டப்பட்டு படமெடுக்கிற தயாரிப்பாளர்கள் என்றால் அவர்களிடம் பணம் வாங்காமல் விட்டுவிடுவான்.
பணம் வாங்காமல் நடிக்கிற படத்திலும் சிரத்தையாக நடித்துக் கொடுப்பான்.
ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. நானும் அவனுடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். அன்றைக்கு படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னால் ஜெய்சங்கரும், எம்.ஆர்.ஆர். வாசுவும் என்னிடம், “டேய்… இந்தப்பட புரோடியூசர் மத்தவங்க மாதிரி இல்லை. வழக்கம்போல நீ கடைசியில் பணத்தை வாங்கிக்கிறேன்னு விட்டுடாதே. ஏமாத்திருவான். அதனால் முதலில் வாங்கிடு” என்று எச்சரித்தார்கள்.
அப்போது நான் நடிக்கிற எந்தப் படத்திலும் படம் முடியும்போதுதான் பணத்தை வாங்கிக் கொள்வது வழக்கம். என்னை எந்தத் தயாரிப்பாளரும் ஏமாற்றியது இல்லை. என் ராசி அப்படி.
இந்த நிலையில் இவர்கள் என்னை எச்சரித்ததும் தயாரிப்பாளரிடம் போனேன்.
“சார்… என்கிட்ட பேசின பணத்தை முதலிலேயே கொடுத்துடுங்க”
“அட்வான்ஸ் கேக்குறீங்களா?”
“இல்லை சார்… பேசின முழுப் பணத்தையும் இப்பவே கொடுத்துடுங்க..”
“என்ன இது.. உங்ககிட்ட இருந்து கேள்விப்படாத பழக்கமா இருக்கு.” – தயாரிப்பாளர் தயங்கினார்.
“நீங்க பணத்தைத் தராமல் ஏமாத்திருவீங்கன்னு சொல்றாங்க சார்” – என்று போட்டு உடைத்து விட்டேன்.
“அப்படிச் சொன்னது யாரு.. சொல்லுங்க” நச்சரித்து விட்டார் தயாரிப்பாளர்.
“சார்.. யார் சொல்லலைன்னு வேணும்னா கேளுங்க. இங்கே இருக்கிற மரம் சொல்லலை. அந்தச் செடி சொல்லலை. செட் சொல்லலை. மற்றபடி எல்லோரும் சொல்லிட்டாங்க சார்..” – சொன்னேன்.
“சரி சார்… மதியம் லஞ்ச் டயத்துக்குள்ள செக் வாங்கிக்கங்க”
“செக் வேணாம் சார். உங்ககிட்ட செக் வாங்கினா திரும்பி வந்துடும்னு சொன்னாங்க”
“சரி.. முழுப் பணத்தையும் நான் கேஷாகவே கொடுத்துடறேன்” – என்று சொன்னபடி லஞ்சுக்கு முன்னாடியே பணத்தைக் கொடுத்து விட்டார்.
மதியம் லஞ்ச் பிரேக்கில் நான் ஜெய்சங்கரிடமும் வாசுவிடம் பணம் கைக்கு வந்து விட்டதைச் சொன்னேன்.
“எப்படிடா வாங்கினே? நாங்க ரெண்டு பேரும் இன்னும் அட்வான்ஸ் கூட வாங்கலையே” என்று இரண்டு பேரும் அங்கலாய்த்துக் கொண்டார்கள்.
தான் ஏமாந்தாலும் நான் ஏமாந்து விடக்கூடாது என்கிற எண்ணம் சங்கருக்கு. பேங்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்த செக்குகளை வைத்து அவன் ஒரு ஆல்பமே தயாரிக்கலாம். அந்த அளவுக்கு ரிட்டனான செக்குகளை வைத்திருப்பான். அதற்காக சண்டை போட்டுக் கொள்ள மாட்டான்.
பணத்திற்கு ரொம்பவும் முக்கியத்துவம் தர மாட்டான். வெளியே தான தர்மம் பண்ணியது போகத்தான் அவனுடைய குடும்பத்திற்கு. எதிலும் ஒரு தன்னம்பிக்கை வெளிப்படுகிறபடி அவனுடைய செயல்பாடுகள் இருக்கும்.
முடியாது என்று லேசில் சொல்ல மாட்டான். ரொம்ப பாசிட்டிவான மனுஷன். எதையும் தன்னால் பண்ண முடியும் என்று நினைப்பான்.
நடுவில் தி.மு.க.காரர்களோட படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு படத்தில் கருப்பு சிவப்பு டிரஸ் போட்டுக் கொள்கிற அளவுக்கு வந்துவிட்டான். நான் ஒரு நாள் அவனைக் கூப்பிட்டேன். வந்தான்.
“பொலிட்டிக்கல் கலர் உன்கிட்ட அதிகமா இருக்கு. இந்த கலர் உனக்கு நல்லதில்லை. பர்ட்ரிகுலரா தி.மு.க. கலர் வேண்டவே வேண்டாம். சினிமாவுக்கு அது ரொம்ப கெடுதல்.
சிவாஜிக்கு முதல் படம் சக்சஸ்னாலும் தி.மு.க. கலரை விட்டு வெளியே வந்த பிறகுதான் அவருக்கு நிறையப் படங்கள் கிடைக்க ஆரம்பிச்சது. எஸ்.எஸ்.ஆர். விஷயத்தையும் நினைச்சுப் பாரு.
எம்.ஜி.ஆர். தி.மு.க.வை வளர்த்தவர். அவரை இதில் கம்பேர் பண்ண முடியாது. நீ யோசிச்சுப் பார்த்தினா தி.மு.க. கலர் எவ்வளவு கெடுதல்னு புரிஞ்சுப்பே. அதிலும் எம்.ஜி.ஆரோட ரசிகர்கள் ஆன்டி டி.எம்.கே.ங்கிறதை முதல்ல புரிஞ்சுக்கோ.
உன்னுடைய பாணி எம்.ஜி.ஆர். டைப். அதனால் எம்.ஜி.ஆர். ரசிகர்களை விரோதம் பண்ணின்டா உன்னோட படம் ஓடாது. அதனால் தி.மு.க. கலர் உனக்கு வேணாம்டா” என்று சொன்னேன்.
“கரெக்ட் தாண்டா” என்று சொல்லி விட்டு அடுத்து தி.மு.க. கலர் உள்ள படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டான். அதற்குப் பிறகு ‘முரட்டுக்காளை’ படத்தில் ரீ-என்ட்ரி ஆகி வில்லனாகவும் குணச்சித்திர நடிகனாகவும் பிரமாதமாக ஒரு ரவுண்டு வந்தான்.
சினிமாவில் தயாரிப்பாளர், டைரக்டர், லைட் பாய் எல்லோரும் அவனுக்கு ஒன்றுதான். எல்லோரிடமும் வித்தியாசம் காட்டாமல் ஒரே மாதிரி அவர்களுடைய தோளில் கை போட்டபடி பேசிக் கொண்டிருப்பான். சினிமா தவிர்த்து நிறைய வி.ஐ.பி-களுடன் அவனுக்கு தொடர்பு உண்டு.
நான் ஒரு சினிமா ஆக்டர் என்கிற பந்தா கொஞ்சம் கூட அவனிடம் இருக்காது. அப்படி ஒரு ஃப்ரெண்ட்லியான மனுஷன் ஜெய்சங்கர்!
நாகேஷ், ஜெய்சங்கர் இரண்டு பேரைப் பற்றியும் நான் சொன்னதிலிருந்து முக்கியமான ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
“வேலையை விட்டுடாதே, சினிமாவை முழுக்க நம்பி விடாதே” என்று நான் சொன்னதற்கு நேர் விரோதமாக தாங்கள் விரும்பியதில் இருவரும் இறங்கினார்கள். ஜெயித்தார்கள்.
அதனால் என்னுடைய யோசனையைக் கேட்காவிட்டால் – எவ்வளவு பெரிய வெற்றியை எல்லாம் அடைய முடியும் என்பதற்கு இவர்கள் இருவரும் உதாரணங்கள… ( நன்றிகளுடன் – ஒசாமஅசா தொடர்; – எழுத்தும், தொகுப்பும்; மணா..)
…………………………………………………………………………………………………………………………..



உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…