
எழுத்துலகில் சிவசங்கரிக்கு தனித்த அடையாளம் உண்டு. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக சிவசங்கரி அவர்களின் எழுத்துகளுடன் எனக்கு பரிச்சயம் உண்டு. அவரை ஒரு முறை நேரிலும் சந்தித்து அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்த அனுபவமும் உண்டு…… பெரும்பாலும் சமூக நலனுக்காகவே எழுதுபவர் என்பதால் அவரை மிகவும் பிடிக்கும்……
கீழே – சிவசங்கரி பேசுகிறார் –
‘`என்னுடைய எழுத்துலக பிரவேசம், என் வாழ்க்கையில் நடந்த அர்த்தமுள்ள விபத்து. கதைகள் எழுதுவதற்காகக் கள்ளச்சாராயம் காய்ச்சுகிற இடம், போதை காளான் சாப்பிடுபவர்கள் கூடும் ‘டிரக் டென்’னுக்குச் சென்று களப்பணி செய்த பிறகே எழுதினேன். ஆனந்த விகடன் எனக்கு கட் அவுட் வைத்துக் கொண்டாடியது. சினிமாவை இயக்கும் வாய்ப்பு வந்தது. மறுத்துவிட்டேன். அரசியலுக்கு அழைத்தார்கள். எனக்குள் இருக்கிற மனுஷி சிவசங்கரி காயப்படுவாள் என்று அதையும் மறுத்துவிட்டேன்.
இந்திரா காந்தியுடன் 21 நாள் கள் தங்கி அவருடைய வாழ்க்கை சரிதத்தை எழுதியது, மதர் தெரசா நோபல் பரிசு வாங்கிய வுடன் முதல் பத்திரிகையாளராக அவரைச் சந்தித்தது, ஜனாதிபதி அப்துல் கலாமுடன் விருந்துண்டது என்று கிடைப்பதற்கரிய பல நிகழ்வுகள் என் வாழ்க்கையில் நடந்திருக்கின்றன.
கிட்டத்தட்ட உலகம் முழுக்க பயணம் செய்திருக்கிறேன். ஒருமுறை நேபாளில் திரிசூலி நதியில் ‘ரேபிட்’ என்னும் வேகமான படகு சவாரி செய்திருக்கிறேன். கொஞ்சம் ஏமாந்தாலும் படகு உடைந்து ஜல சமாதிதான். அலாஸ்கா பனிமலை மேலே ஹெலிகாப்டரில் சென்று இறங்கி நடந்திருக்கிறேன். இவை யெல்லாம் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்னால். இதெல்லாம் எனக்குள் இருக்கிற மனுஷி சிவசங்கரிக்கு ரொம்ப பிடிக்கும். அவளுடைய அனுபவங்களை எழுத்தாளர் சிவசங்கரி அனுபவமாக எடுத்துக்கொண்டாள்.
எனக்கு மிகப்பெரிய மரியாதை கொடுத்த இலக்கியத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும். அதை நாட்டுப்பற்றுடன் செய்ய வேண்டும் என்றுதான் ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’க்காக இந்தியா முழுக்க வலம் வந்தேன். இதற்காக, என் எழுத்து வாழ்க்கையை 16 வருடங்கள் தள்ளி வைத்தேன். அந்தப் புத்தகம் நான்கு தொகுப்புகளாக வெளிவந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்னால் என் னுடைய வாழ்க்கை சரிதத்தை ‘நினைவலைகள்’, ‘சூர்யவம்சம்’ என்று இரண்டு பாகங்களாக எழுதி புத்தகமாக வெளியிட்டிருந்தேன். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் வெளியிட விருக்கிறேன். யோகா, தியானம், பூஜை, எழுத்து, சமூகத்துக்கு சில உதவிகள் என்று வாழ்க்கை மனநிறைவோடு போய்க் கொண்டிருக்கிறது’’ என்றவரின் குரலிலும் பேச்சிலும் அவ்வளவு எனர்ஜி.
‘`முக்தி ஃபவுண்டேஷனுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் ஐந்து பேருக்கு லைட் வெயிட் செயற்கை கை கால் வாங்கித் தந்துகொண்டிருக்கிறேன். இதை நூறு பேருக்குச் செய்ய வேண்டுமென ஆசை. தவிர, வருடத்துக்கு இரண்டு ஏழைகளுக்காவது வீடுகள் வாங்கித்தர ஆசைப்படுகிறேன். அடுத்தவர் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமென்றாலும் பணம் தேவைப்படுகிறது. பார்ப்போம், ஏதாவது வழி கிடைக்கும். மற்றபடி எழுத்தாளர் சிவசங்கரியும் பிஸி. மனுஷி சிவசங்கரியும் பிஸி’’ என்றபடி விடைகொடுத்தார்.(அவள் விகடனில் வெளிவந்த ஒரு கட்டுரை …)
……………………………………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….