“மோடிஜி’க்கு ஏப்ரல் மாதம் கலைஞர் கெட்டவர்; இன்று நல்லவரா….?”

…………………………………………………………

…………………………………………………………

இந்த சுவாரஸ்யமான தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு அரசியல் செய்திக்கட்டுரை கீழே –

இதைப்பார்த்ததுமே எனக்கென்னவோ – நமது கவுண்டமணி அவர்களின் “இந்த சீன் ” தான் ஞாபகம் வந்தது … 😊😊😊

……………………………………….

………………………………………

மோடிக்கு ஏப்ரல் மாதம் கலைஞர் கெட்டவர்; இன்று நல்லவரா?

……………………..

சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நாணய விழாவை முன்வைத்து பாஜக மற்றும் திமுக இடையே சில அரசியல் மாற்றம் நடந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது….

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

இதற்கு முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை ராஜ் பவனில் கொடுத்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், தனது அமைச்சரவை சகாக்களோடு பங்கேற்றார். நாணய வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,

“நா நயம் மிக்க நம் தலைவருக்கு நாணயம் வெளியிடுவது மிகவும் பொருத்தமானது. நூற்றாண்டு விழா நாயகருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை தலைவரை நாம் கொண்டாடி வந்த நிலையில், இப்போது இந்தியாவே கொண்டாடுகிறது” என்றார்.

சோகம் இருந்தால் இரவில் தூக்கம் வராது.. நேற்று மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை.. ஸ்டாலின் நெகிழ்ச்சி …..

இந்த விழாவுக்கு முன்னதாக பாஜகவுடன் ஒரு சுமுக உறவைக் கடைப்பிடிக்க திமுக திட்டமிட்டு சில காய்களை நகர்த்தி வந்ததாகச் சிலர் சந்தேகம் கிளப்புகின்றனர். அதாவது சுதந்திரதின விழாவில் பாஜகவைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜனின் தந்தை குமரி அனந்தனுக்கு திமுக அரசு ‘தகைசால் தமிழர்’ விருது அளித்துக் கவுரவித்தது. இதற்கும் கருணாநிதி நாணய விழாவுக்கும் ஒரு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழிசை தந்தையைத் தமிழ்நாட்டில் கௌரவப்படுத்திய திமுக தலைவர் ஸ்டாலின், தனது தந்தைக்கு தேசிய அளவில் ஒரு மரியாதையைச் செய்வதற்காகக் குமரி அனந்தன் மகள் வழியே சில காய்களை நகர்த்தி இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். அதைப்போலவே அண்ணாமலை பற்றி இதுவரை கடுமையாக விமர்சித்து வந்த திமுக தலைமையின் போக்கிற்கு மாறாக பாஜக மாநிலத் தலைவரை நாணய வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும்படி முதல்வரே தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

விழாவுக்கு வந்த மத்திய அமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் வரை சென்று மரியாதை செலுத்துகிறார். அரசு விழாவுக்கு வந்தவர், நினைவிடம் செல்லவேண்டிய தேவையே இல்லையே…? அந்தளவுக்கு பாஜக மற்றும் திமுக உறவில் சுமுகமான போக்கும் இல்லையே…? என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்து பத்திரிகையாளர் பிரியன் பல விசயங்களைப் பகிரங்கமாகப் போட்டு உடைத்துள்ளார். அவர் பேசுகையில், “ஒரு கடந்த ஒரு வருட போராட்டத்திற்குப் பிறகு இந்த நாணயம் வெளியாகியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மத்தியில் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், பாஜக அரசு அதைக் கிடப்பில் போட்டு வைத்திருந்தது. அதன்பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசி அனுமதி பெற்றார்கள். ஆனால் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் நாணயம் 3 நாட்களில் வெளியானது. தேர்தலுக்கு முன்னதாக ஒபிசி வகுப்பினரின் வாக்குகளைப் பெறுவதற்காக உடனே செய்தார்கள்.

அப்படிப் பார்த்தால் கலைஞர் நாணயம் மிகத் தாமதமாகவே வெளியாகி உள்ளது. திமுகவுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இந்த நாணயம் வெளியீடு என்பது ஒரு முக்கியமான நிகழ்வு. அரசியல் ரீதியாக, அரசு ரீதியாக எதிராக உள்ள இரண்டு கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. பிரதமர் மோடி கருணாநிதியைப் புகழ்ந்து அறிக்கை விடுத்துள்ளார். இந்தியா அளவில் கருணாநிதிக்கு ஒரு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கருணாநிதி படத்தைத் திறப்பதற்கு ராம்நாத் கோவிந்தை கூப்பிட்டார்கள். அண்ணாதுரையின் நாணயத்தை வெளியிட அந்தக் காலத்தில் ஜனாதிபதியைத்தான் அழைத்தார்கள். கட்சி சார்பில்லாமல் இருக்க வேண்டும் என நினைத்து அப்படி அழைத்தார்கள். இந்த முறை மத்திய அரசின் பிரதிநிதியாக ராஜ்நாத்சிங்கை அழைத்திருக்கிறார்கள். இவரை அழைத்ததில் அரசியல் இருப்பதாக நினைக்கவில்லை.

பாஜகவில் உள்ளவர்களின் அதிகம் இந்துத்துவா பற்றி அதிகம் பேசாதவர் இவர்……!!! அதனை மனதில் வைத்து இவரை அழைத்திருக்கலாம். சிலர் ஏன் ராகுலைக் கூப்பிடவில்லை என்று கேட்கிறார்கள். அந்தக் கேள்வி காங்கிரஸ் தரப்பில் இருக்கத்தான் செய்கிறது. ராகுல் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். ஒரு மத்திய அமைச்சருக்கு இணையான பதவியில் இருக்கிறார் அவர். இன்னும் சொல்லப் போனால் ‘இந்தியா’ கூட்டணியில் திமுக உள்ளது. எனவே அவரையும் அழைத்திருக்கலாம். அவரையும் அழைத்திருந்தால் நடுநிலையாக நிகழ்ச்சி இருந்திருக்கும்.

கடந்த 3 மாதங்கள் முன்னதாக தேர்தல் தொடங்குவதற்கு முன்னால் மோடி பேசும் போது, ‘திமுக மகன் மற்றும் மகள் என குடும்பத்தை மட்டுமே கவனிக்கும். வேறு யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது. நாட்டிற்காக ஒன்று செய்யாது. திமுகவும் காங்கிரசும் குடும்பக் கட்சிகள்” என்று பேசியவர்- இன்று,

‘கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை எதிர்கால இந்தியா வழிநடத்தும். தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது அவர் அதிக அக்கறை கொண்டிருந்தார்’ என்று மாற்றிப் பேசுகிறார்.

இந்த மூன்று மாதத்திற்குள் என்ன அப்படி நடந்துவிட்டது? கேள்வி வராதா? ஆளுநரை எதிர்த்து வந்த திமுக திடீர் என்று அவரது தேநீர் விருந்தில் பங்கேற்கிறது. ஆளுநர் அவர் போக்கை மாற்றிக் கொண்டதைப் போலத் தெரியவில்லை. மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி வழங்குவதில் பராமுகம் காட்டுகிறது. மெட்ரோவுக்கு நிதியே ஒதுக்கவில்லையே? அதற்குப் பிறகு மூன்று மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கிவிட்டதே? வெள்ள நிவாரண நிதி கேட்டீர்களே? அதை பாஜக அரசு கொடுத்துவிட்டதா? ‘திராவிட நாட்டை பிளக்கிறது’ என்று இப்போது ஆளுநர் பேசி இருக்கிறார். திராவிடம் என்ற வார்த்தை திமுக கட்சி பெயரில் இருக்கிறது.

அதை எதிர்த்துப் பேசாமல் தேநீர் விருந்துக்கு ஏன் போனார் முதல்வர்..? அதிமுக பாஜகவைவிட்டு விலகி வந்த போது சிறுபான்மை வாக்குகளை இழுக்கவே பாஜக அதிமுகவை மறைமுகமாகத் தனித்துப் போட்டியிட வைத்துள்ளது என்று திமுக குற்றஞ்சாட்டியது. இன்றைக்குச் சிறுபான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற திமுக ஏன் பாஜக அமைச்சரை அழைத்து நிகழ்ச்சி நடத்துகிறது? உங்களுக்கு வாக்களித்த சிறுபான்மையினருக்கு எதிராக வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறதே பாஜக…? அப்படியான நேரத்தில் பாஜக உடன் உறவு வைக்க என்னத் தேவை திமுகவுக்கு வந்தது?

இதற்குள் ஒரு அரசியல் காய் நகர்வு இருப்பதாகத்தான் சந்தேகம் வருகிறது. திமுக கூட்டணிக்கு ஏதோ ஒரு குழப்பத்தை ஏற்படுத்த பாஜக இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஏதோ திட்டம் வைத்துள்ளது” என்கிறார்.

……………

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/kalaignar-was-bad-for-modi-last-april-is-good-man-today-kalaignar-100-rupee-coin-function-631209.html

………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to “மோடிஜி’க்கு ஏப்ரல் மாதம் கலைஞர் கெட்டவர்; இன்று நல்லவரா….?”

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    காசு கொடுத்து வேண்டிக்கொண்டால் மத்திய அரசு நாணயம் வெளியிடும். இதற்கு மதிப்பு கிடையாது. அடையாளத்துக்கு வைத்துக்கொள்ளலாம். காசு கட்டினால் ஸ்டாம்ப் வெளியிடுவதைப் போல. அந்த ஸ்டாம்பில் இருப்பவர் செய்த அநியாயங்கள் மனதில் வந்தால், போஸ்ட் ஆபீஸில் சீல் குத்துபவர் ஓங்கிக் குத்தலாம். இதற்கு எவ்வளவு கட்டினார்களோ தெரியாது… ஆனால் 1 நாணயத்துக்கு 10,000 ரூபாய் விலை திமுக தலைமை வைத்திருக்கிறது என்று படித்தேன். திமுக கழகத்தினர் இந்தப் பணத்தைக் கட்டிவிட்டு ஒரு நாணயம் வாங்கிக்கொள்ளவேண்டும் என்ற கட்டளை வேறு. பணம் பண்ண இது ஒரு வழி. அவ்ளோதான் (முன்பு ராஜாத்தி அம்மாள், கருணாநிதியை கட்சிக்காரர்கள் சந்திக்க வழி பண்ணித்தருவதற்கு தன்னுடைய ராயல் ஃபர்னிசர்சில் 50,000 ரூபாய்க்கு-அந்தக் காலத்தில், பொருட்கள் வாங்கவேண்டும் என்ற நிபந்தனை விதித்திருந்ததாக ஜூனியர் விகடனில் படித்த நினைவு (அல்லது அந்தக் காலத்து நக்கீரனா?)

    நிற்க…. நம் கா.மை சாரின் அபிமான பத்திரிகை ஆசிரியரை கருணாநிதி மரணத்தின்போது அழைத்திருந்து, பத்திரிகையாளர்கள் அவரிடம் மைக்கைக் கொடுத்திருந்தால்,

    மறைந்த கருணாநிதி, சர்காரியா கமிஷனால் ஊழல் குற்றம் சாட்டப்பெற்றவர். மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர். தமிழக அரசியலை சீரழித்தவர். அதனால்தான் எம்.ஜி.ஆர் இருந்தவரை, அவரால் தீயசக்தி என்று சொல்லப்பட்ட கருணாநிதி அரசியலில் வெற்றிபெறவே முடியவில்லை. போதாக்குறைக்கு கூட இருந்தே கருணாநிதியால் வளர்ந்த கோபாலசாமி போன்றவர்களே கருணாநிதியைப் பற்றி கடுமையாகப் பேசிய குற்றச்சாட்டுகளும் நினைவுக்கு வருகின்றன. அத்தகைய கருணாநிதி, இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, இன்னும் பலரின் அர்ச்சனைகளையும் கேட்டிருக்கலாம். ஆனால் கருணாநிதி சட் என்று போய்விட்டது மனதுக்கு வருத்தம் தருகிறது

    என்றுதான் பேசியிருப்பார் போலிருக்கிறது. ஒருவேளை கா.மை. சாருக்குப் பிடிக்காதவர்கள் அவர் வீட்டிற்கு தீபாவளி அல்லது பொங்கல் வாழ்த்து தெரிவிக்கச் சென்றுவிட்டால், ‘வெளியே போடா.. தரையில் காபியை ஊற்றச் சொல்கிறேன்..குடித்துவிட்டு ஓடிவிடு’ என்று வரவேற்பாரோ?

    பத்திரிகையாளர் பிரியன் – ஹா ஹா ஹா. ஜால்ரா போட்டு காசு வாங்கி வயிறு வளர்ப்பவர்களெல்லாம் இப்போது பத்திரிகையாளர் கேட்டகரியில் இருக்கிறார்கள். //பாஜகவில் உள்ளவர்களின் அதிகம் இந்துத்துவா பற்றி அதிகம் பேசாதவர் இவர்// முன்னப் பின்ன பத்திரிகை படித்திருந்தால்தானே இந்த பிரியன் போன்ற ‘காசு வாங்கி வயிறு வளர்ப்பவர்களுக்கு’ உண்மை தெரிந்திருக்கும்.

  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    அடேடே சீமான் ….🤣🤣🤣

    ……………

    இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று பார்த்தீங்களா…? முதல்வர் ஸ்டாலின் பேண்ட்தான் போடுகிறார்..

    எதுக்கு காக்கி பேண்ட் போடனும்? நீங்க திராவிட மாடல் ஆட்சியாளர்கள், திராவிட ஆட்சியாளர்கள், பெரியாரின் வழிதோன்றல்கள் என்கிறீர்களே ஏன் காக்கி பேண்ட் போடனும்? என்றார்.

    Read more at: https://tamil.oneindia.com/news/chennai/naam-tamil-seeman-finds-dmk-bjp-alliance-with-cm-mk-stalins-khaki-pant-symbol-631571.html

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.