……………

……………..
கீழே இருப்பது திருவாளர் கி.வீரமணியார் அவர்கள்
எழுதியவற்றிலிருந்து –
……………
திருச்சியில் தமிழ் காட்டுமிராண்டி மொழி என பெரியார் பேசி இருந்த
நிலையில் காங்கிரஸ் கட்சியினர் அதைப் பெரிய பிரச்னையாக மாற்ற முயன்றார்கள்.
அதைச் சரிசெய்ய திமுக பிரமுகர் கபாலி ஏற்பாட்டில் மந்தைவெளி
அருகே பெரிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பேசிய கலைஞர்
தனக்கே உரிய பாணியில், தமிழை கல்தோன்றி மண் தோன்றா காலத்தே
தோன்றிய மூத்த மொழி என்கிறார்கள். அதற்குப் பொருள் ஆதிகாலத்து
மொழி என்பதே. அதைத்தான் பெரியார் மேல்போக்காக காட்டுமிராண்டி
மொழி என்று சொல்லியிருக்கிறார் எனப் பேசினார்.
ஆனால் பெரியார் பேச வந்தபோது கலைஞர் சொன்னதைச் சுட்டிக் காட்டி,
‘ இதுபோல் கருணாநிதி சொன்னார். நான் காட்டுமிராண்டி மொழி என்று
ஏன் சொன்னேன்? இது திருத்தப்படவேண்டிய மொழி என்பதால் சொன்னேன்.
அவர் ஒப்பனையெல்லாம் பண்ணி சொன்னார். நான் வெளிப்படையாகச் சொல்கிறேன்,’ என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார்.
இரவு எங்களுக்கு உணவு கபாலி இல்லத்தில் ஏற்பாடாகி இருந்தது.
கலைஞர் சிரித்துக்கொண்டே..’அய்யா என்றால் அய்யாதான்.. நாம்
எப்படித்தான் விளக்கம் சொன்னாலும் அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார்!’
என்றார்.
தந்தை பெரியாரோ,’ மொழியைப் பற்றிய என் கருத்து என்பது…
ஒரு பழைய கட்டடம் வெகு நாட்களாக உள்ளது என்றால்… அது ரிப்பேர் பார்க்கப்படவேண்டியது என்றுதானே அர்த்தம்!’ என்று பதில் சொன்னார்.
……….
அண்ணா அவர்கள் மறைந்தபிறகு யார் முதல்வர் பொறுப்புக்கு வருவது
என்ற சூழல் இருந்தபோது நாவலர் போன்ற மூத்தவர் இருக்கையில் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதா என்ற இரட்டை மனநிலை குழப்பம் கலைஞர் அவர்களிடத்து நிலவியது. ஆனாலும் கோ. சி. மணி போன்ற சிலர் அவரை அப்பதவிக்கு நீங்கள் தான் வரவேண்டும் என வலியுறுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போதிருக்கும் சூழலில் கலைஞர்தான் அடுத்த முதல்வராக
வரவேண்டும் என்ற தொலைநோக்கு பெரியாரிடம் இருந்தது.
‘நீங்கள் போட்டியிடவேண்டும், இது என் கட்டளை’ என நான் சொன்னதாக அப்படியே போய்ச் சொல்லுங்கள் என என்னிடம் சொல்லி அனுப்பினார்.
இதன் முடிவு தெரிகிற வரை நான் காத்திருக்கிறேன் என்று சொல்லி இருந்தார். எதையும் கடைசிவரைக்கும் பார்ப்பவர் பெரியார்.
அன்று நாகப்பட்டினத்தில் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள பெரியார் சென்றுவிட்டார். அங்கே மாலையில் ஒரு பொதுக் கூட்டம் அதை முடித்துவிட்டு திரும்பவேண்டும். அதே நாளில்தான் முதல்வரை தேர்வு செய்யும் தேர்தல் நடப்பதாகத் திட்டமிட்டிருந்தார்கள். அவருக்கு தேர்தல் முடிவை தொலைபேசி
மூலம் தெரிவித்தேன்.
மறுநாள் காலையில் அய்யா வந்தபிறகு அவரை அழைத்துக்கொண்டு
கலைஞர் அண்ணா நினைவிடம் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்வித்தார்.
…………
கலைஞரைப் பொருத்தவரை நகைச்சுவை உணர்வு அதிகம். அவருக்கு
முதுகில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. நாங்கள் எல்லோரும் சென்றிருந்தோம். அவருக்கு மயக்க மருந்து கொடுத்திருந்தார்கள்.
அதில் இருந்து மீள்கிறபோது தண்ணீர் கேட்டால் கொஞ்சமாக கொடுக்கச் சொல்வார்கள். இது வழக்கமான முறைதான். கலைஞருக்கும் அப்படியே
செய்யுமாறு கூறப்பட்டது. அவர் மயக்கத்தில் இருந்து விடுபட்டதும் தண்ணீர்
கேட்க, நாக்கை நீட்டச் சொன்ன செவிலியர் அவருக்கு சில சொட்டுகள்
மட்டுமே கொடுத்துள்ளார். திரும்பவும் கலைஞர் கேட்க, அதே போல்
சில சொட்டுகள் மட்டுமே தாப்பட்டன. உடனே கலைஞர் கேட்டிருக்கிறார்:
அம்மா… உன் பெயர் என்னம்மா? காவிரியா? இதைக் கேள்விப்பட்டு
புன்னகை புரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாதவர் இருக்கமுடியாது. மயக்கமருந்தில் இருந்து மீண்டு வருகிறபோதும் சென்ஸ் ஆப் ஹ்யூமர்!
அதுவும் அரசியலை நினைத்துக் கொண்டு… இது ஆச்சரியப்படுத்தக்கூடிய
ஓர் இயல்பு.
…………
அவருடன் சந்திக்கும்போது பழைய விஷயங்களை எல்லாம்
பேசிக்கொண்டிருப்பது வழக்கம். கண்ணதாசனைப் பற்றிய நகைச்சுவை
சம்பவம் ஒன்றை அவர் நினைவுகூர்வார்.
அது கலைஞர் முதல்வர் ஆவதற்கு முந்தைய காலகட்டம். கண்ணதாசன்
ஒருமுறை எல்லோரும் இருக்கையில் தான் பாண்டிச்சேரியில் வரும்
தேர்தலில் நிற்கப்போவதாகச் சொல்லி இருக்கிறார். கலைஞர்,
‘யோவ் கவிஞரே.. உம்மால் பாண்டிச்சேரியில் நிற்க முடியாது’ என
சீரியஸாகச் சொல்லி அவரைச் சீண்டியிருக்கிறார். ‘ ஏன், நான் அங்கே
போய் நிற்கமாட்டேன்,’ என நினைக்கிறீர்களா என்று கவிஞர் பதில்
கேள்வியை அப்பாவித்தனமாகக் கேட்டுள்ளார்.
மீண்டும், ‘பாண்டிச்சேரிக்கு போனால் உங்களால் “நிற்க”முடியாது’
என கலைஞர் சொல்லிவிட்டு சிரித்து இருக்கிறார். இதன் உள்ளர்த்தம்
புரிந்து மற்றவர்களும் சிரிக்க ஆரம்பிக்க, சற்று தாமதமாகப் புரிந்துகொண்ட கண்ணதாசனும் மிகவும் ரசித்து சிரித்துள்ளார்.
.
………………………………………………….



/நாவலர் போன்ற மூத்தவர் இருக்கையில் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதா என்ற இரட்டை மனநிலை குழப்பம் கலைஞர் அவர்களிடத்து நிலவியது./ இவர்தான் கூசாமல் அடித்து விடுகிறார் என்றால் இதை படிக்கும் துர்பாக்யத்துக்கு எங்களை ஆளாக்கிவிட்டீர்களே!
anvarsha,
“பொய்” என்பதை உணராதவர்களுக்குத் தான்
பிரச்சினையாக இருக்கும்….
பொய்யென்பதை புரிந்து கொண்டவர்கள்
ஜாலியாக –
“எவ்வளவு தூரம் உடான்ஸ் விடுகிறார்”
என்று ரசித்துப் படிக்கலாமே…
நான் அப்படித்தான் படித்தேன்…
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்