தங்கமே தங்கம் … !!!

…………………………………………………..

…………………………………………………….

தங்கம்… உலக நாடுகளின் பொருளாதார வலிமையைக் காட்டும் அளவுகோல்களில் ஒன்று. இன்னொரு பக்கம், தனிமனித வாழ்விலும் தங்கம் செல்வவளத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தங்கம், பூமியிலிருந்து எவ்வாறு கண்டறியப்பட்டு, மதிப்புமிக்க உலோகமாக மாறியது? அதன் வரலாறு என்ன?

தங்கத்தின் உலோகத்தன்மை…!

எலக்ட்ரம் (Electrum) என்ற தனிமங்களின் கலவையிலிருந்துதான் தங்கம் தோன்றியது. எலக்ட்ரம் என்றால், நிறைய தங்கமும் கொஞ்சம் வெள்ளியும் கலந்த கலவை. இயற்கையாகக் கிடைக்கும் இதில், மிகச்சிறிய அளவு தாமிரமும் இருக்கும். எலக்ட்ரத்தில் வெள்ளியின் அளவு குறைந்து தங்கம் தூக்கலாக இருந்தால், கண்ணைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். வெள்ளியின் அளவு அதிகமாகி தங்கம் குறைவானால், சற்று மங்கலான மஞ்சள் நிறத்தில் இருக்கும். இவற்றை, ஆதி மனிதர்கள் ஆற்றின் வழித்தடங்கள் போன்ற இடங்களில் சேகரித்தனர். அவற்றின் மீது கொண்ட ஈர்ப்பால் பாதுகாத்து வந்தனர்.

இன்று, சந்தையில் விற்கப்படும் 24 கேரட் சுத்தமான தங்கத்தைக் கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது, நொறுங்கிவிடும். 22 கேரட் தங்கமே ஆபரணத் தங்கம். இதில் 91.67% தங்கமும், 8.33% தாமிரமும் இருக்கும். இந்தத் தங்கம்தான் அடித்து, வளைத்து, நெளித்து ஆபரணங்கள் செய்ய உகந்தது. இதுபோலவே, பண்டைய மனிதர்கள் கண்டறிந்த எலக்ட்ரத்தில் இயற்கையாகவே சுமார் 10% வெள்ளி இருந்ததால், இது கிட்டத்தட்ட இன்றைய 22 கேரட் தங்கம் போன்று இயற்கையிலேயே கிடைத்தது. எனவே, எலக்ட்ரத்தை அடித்து, நிமிட்டி, வடிவங்களை உருவாக்கக் கற்றுக்கொண்டனர் ஆதி மக்கள். காலப்போக்கில், அவை ஆபரணங்களாக உருவெடுத்தன.

எகிப்தின் பாரோ சகுரே (Pharaoh Sahure) மன்னர் ஆட்சிக் காலத்திலேயே, எலக்ட்ரம் பற்றிய தகவல்கள் பதிவாகியுள்ளன.‌ பண்டைய எகிப்து மக்கள் சுமார் 4,600 ஆண்டுகளுக்கு முன்னரே எலக்ட்ரம் பயன்படுத்தி நகைகள், அலங்காரப் பொருள்கள், சடங்குப் பொருள்கள் எனப் பலவற்றைச் செய்தனர். இதுதான், தங்கப் பயன்பாட்டின் மிகப் பழைமையான பதிவாக உள்ளது.

பண்டைய எகிப்து மக்கள் மெல்லிய தங்கத் தகடுகள் தயாரிப்பதில் கில்லாடிகள். சற்று வெள்ளி அதிகமாக இருந்த எலக்ட்ரத்தை `வெள்ளைத் தங்கம்’ என்று அவர்கள் அழைத்தனர். மனதை ஈர்க்கும் இதன் வெளிர் மஞ்சள் நிற உலோகத்தில் நிறைய பரிசுகள் செய்து பரிமா‌றிக் கொண்டனர். 3,330 ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்ட, எகிப்தை ஆண்ட மன்னன் துட்டன்காமூனின் புகழ்பெற்ற தங்க முகமூடி, எகிப்தின் தங்கக் கைவினைத் திறனுக்கு முக்கிய எடுத்துக்காட்டு.

இந்தியா, சிந்து சமவெளி… தங்கம்…!

வட இந்தியப் பகுதிகளில் உள்ள சிந்து சமவெளி நாகரிகம் தமிழர்களுடையது என்ற சான்றுகள் வந்தவண்ணம் உள்ளன. இதேபோல, பண்டைய அனடோலியா (இன்றைய துருக்கி) மக்களும் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே எலக்ட்ரத்தால் நகைகள், அலங்காரப் பொருள்கள் மற்றும் பரிசுப் பொருள்களைச் செய்தனர்.

தமிழகத்தில் தங்கத்தின் வரலாறு!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தொல்லியல் களம், ஆதிச்சநல்லூர். இது தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்கு 1900-ம் ஆண்டுக் காலகட்டத்தில், ஆங்கிலேயர் அலெக்சாண்டர் ரீயா அகழ்வாராய்வு செய்தார். அப்போது, இங்கு எலக்ட்ரத்தால் செய்யப்பட்ட நிறைய தங்கத் தகடுகளைக் கண்டெடுத்தார். எகிப்து மக்கள் போல், பண்டைய தமிழர்களும் மெல்லிய தங்கத் தகடுகள் தயாரிப்பதில் திறமைசாலிகளாக இருந்துள்ளனர். அவற்றை நெற்றியில் பட்டமாகக் கட்டிக்கொண்டனர். இந்தப் பழக்கம், இன்றும் சில மக்களின் திருமணம் உள்ளிட்ட சடங்குகளில் காணப்படுகிறது.

2022, ஜூலை மாதம் மத்திய தொல்லியல் துறையினர், ஆதிச்சநல்லூரில் ஒரு மெல்லிய தங்கத் தகட்டைக் கண்டுபிடித்தனர். அத்துடன் நெல் மணிகள் கிடைத்தன. கார்பன் டேட்டிங் சோதனையில், அவை 3,600 ஆண்டுகள் பழைமையானவை என உறுதிசெய்யப்பட்டன.

தகடு டு நாணயம்!

இப்படி, மக்களிடையே தங்கத்திற்கு இருந்த வரவேற்பின் காரணமாகத் தங்கத்தைக் கொண்டு நாணயங்கள் செய்யத் தொடங்கினார்கள். இன்றைய துருக்கிப் பகுதியில் வாழ்ந்த பண்டைய மக்கள்தான், சுமார் 2,700 ஆண்டுகளுக்கு முன்னரே, எலக்ட்ரத்தைக் கொண்டு முதன்முதலில் நாணயங்கள் செய்தனர். வரலாற்றில், இவை மிகவும் பழைமையான நாணயங்களாகக் கருதப்படுகின்றன. இந்தப் பகுதி, பழைமையான மெசபடோமிய நாகரிகப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

2,300 ஆண்டுகளுக்கு முன்னர், கிரேக்கர்களும் இந்த வகை தங்க நாணயங்கள் தயாரிக்கத் தொடங்கினார்கள். கார்த்தேஜ் (Carthage) என்ற பழைமையான நாட்டிலும், இவ்வகை நாணயங்களைக் கண்டெடுத்துள்ளனர். இந்த நாடு, வட ஆப்பிரிக்கப் பகுதியில் உள்ளது [இப்போது இது துனீசியா (Tunisia) நாட்டின் தலைநகர் துனீசில் (Tunis) உள்ளது].

கார்த்தேஜில் கண்டெடுக்கப்பட்ட எலக்ட்ரத்தால் செய்யப்பட்ட காசுகளும், சுமார் 2,300 ஆண்டுகள் பழைமையானவை. கந்தாரா காலம் (Gandhara period) என்பது 2,600 ஆண்டுகள் பழைமையானது. இந்த அரசு ஆண்ட இடம் இப்போது, வடக்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ளது. இங்கேயும் நிறைய எலக்ட்ரம் நாணயங்கள் கிடைத்துள்ளன.

ஆச்சர்யம்… ஆனால் உண்மை…!

பல அதிசயங்களுக்கும், பழைமைக்கும் பெயர் பெற்ற எகிப்து நாகரிகத்தில், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பதப்படுத்தப்பட்ட மனித முகம் கிடைத்தது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்த மனித முகத்தைத் தங்கம் மற்றும் வெள்ளியின் கலவையான எலட்க்ரத்தால் முலாமிட்டு வைத்துள்ளனர். மறைந்த ஒருவரின் முகத்தில் தங்க முலாம் எப்படிப் பூசினார்கள், ஒருவேளை எலக்ட்ரத்தாலான மிக மெல்லிய தகட்டைச் செய்து முகத்தில் ஒட்டினார்களா என்றெல்லாம் வரலாற்று ஆய்வாளர்களின் புருவங்களை உயர்த்திய ஆச்சர்யம் இது.

மெசபடோமியா முதல் ஆதிச்சநல்லூர் வரை…!

இந்தியாவில், மௌரியப் பேரரசுக்கு முந்தைய காலமான (pre-Mauryan period) 2,400 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் எலக்ட்ரத்தால் செய்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், அரிக்கமேடு கிராமத்தில் எலக்ட்ரம் தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. புதுச்சேரிக்கு அருகிலுள்ள இந்த கிராமம், சோழர் காலத்தில் மீனவ கிராமமாக இருந்தது. இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபம் நடைபெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கிறது.

மொத்தத்தில், வரலாற்றுத் தகவல்கள் பலவும், பண்டைய காலத்து எலக்ட்ரம் ஆபரணங்கள் மற்றும் நாணயங்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் இந்தியத் துணைக் கண்டத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கின்றன.

ஆம்… எகிப்து, மெசபடோமியா, சிந்து சமவெளி மற்றும் நம் பொருநை ஆற்றங்கரை நாகரிகமான ஆதிச்சநல்லூர் என நாகரிக வளர்ச்சியில் உச்சம் தொட்ட பழைமையான இடங்கள் பல இந்த வழித்தடத்தில்தான் அமைந்துள்ளன.


(நன்றி – விகடன் தளம் …)

.
…………………………………………………………………………………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக