………………………………………

……………………………………..
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவர்களின் மனைவி,
மிசேல் ஒபாமா எழுதியுள்ள “The light we carry” என்ற
தலைப்பிலான புத்தகத்திலிருந்து சில பகுதிகள் கீழே –
( கூடவே கொஞ்சம் என் அனுபவங்களும் … !!! )
……..
“என் வாழ்க்கையில் நான் மிகவும் பதற்றமாக இருந்த தருணம்
எது தெரியுமா? பராக் (ஒபாமா) அமெரிக்காவின் ஜனாதிபதிப் பதவிக்குப்
போட்டியிட விரும்புகிறேன் என்று முதன் முதலில் என்னிடம் சொன்ன
தருணம்தான். 2006 பிற்பகுதியில் அவ்வப்போது அதைக் குறித்துப்
பேசியிருக்கிறோம். அந்த உரையாடல்களின் முடிவில் அவர் என்னிடம்
ஒன்று சொல்வார். “முடிவு உன்னுடையது. நீ சம்மதித்தால்
நான் போட்டியிடுகிறேன்”
அவர் என்னை நேசித்தார். நாங்கள் வெறும் தம்பதிகள் அல்ல, நண்பர்கள்.
இந்த முடிவில் ரிஸ்க் மிகவும் அதிகம் என்றோ, அல்லது இதனால்
குடும்பத்திற்குப் பல பிரசினைகள் வரும் என்று நினைத்தாலோ
நான் வேண்டாம் என்று சொன்னால் தன் விருப்பத்தைக் கை விட்டுவிடுகிறேன்
என்று அவர் சொன்னார்
நான் வேண்டாம் என்று சொல்லலாம் என்றுதான் நினைத்தேன்.
அவரைச் சுற்றியிருந்த பல தரப்பட்ட நண்பர்கள் அவரைப் போட்டியிடுங்கள்
என முடுக்கிக் கொண்டிருந்தனர். ஆனால் நான் வேண்டாம் என்றுதான்
நினைத்தேன்.
ஆனால் அதைச் சொல்வதற்கு முன் நான் என் அச்சங்கள் என்ன என்பதை
அலசிப் பார்க்க வேண்டும். நான் வேலைக்குப் போகும் வழியெல்லாம்
இந்த எண்ணம் என் கூடவே வந்தது. ஜிம்மிற்குப் போய் உடற்பயிற்சி
செய்யும் போது கூடவே இருந்தது. என் இரு மகள்களையும் பக்கத்தில்
படுக்க வைத்துக் கொண்டு அவர்களைப் பிடித்தபடி இரவில் படுக்கையில்
கிடந்த போதும் கூடவே படுத்திருந்தது.
பராக் ஜனாதிபதியாக விரும்புகிறார் என்று எனக்குத் தெரியும்,
ஜனாதிபதியானால் சிறப்பாகச் செயல்படுவார் என்றும் தெரியும்.
அதே நேரம் எனக்கு அரசியல் வாழ்க்கை பிடிக்கவில்லை. நான்
இப்போது செய்து கொண்டிருக்கிற வேலை எனக்குப் பிடித்திருந்தது.
குழந்தைகளுக்கு அமைதியான நிலையான வாழ்க்கையைக் கொடுக்க
வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.எதிர்காலம் என்னவென்று
ஊகிக்க முடியாத வேலை, நிச்சயமற்ற சாகசங்கள் இவற்றின் ரசிகை
அல்ல நான்.
தேர்தல், பிரசாரம் என்று இறங்கிவிட்டால் இவற்றையெல்லாம் நிறைய
சந்திக்க வேண்டியிருக்கும். அது மட்டுமல்ல, மற்றவர்கள் எங்களை
எடை போட ஒரு வாய்ப்பை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.
எடை போட வாய்ப்பு என்றால் கொஞ்ச நஞ்ச வாய்ப்பு அல்ல. மொத்த
அமெரிக்காவே எங்களை எடை போடும். ஒவ்வொரு அமெரிக்கனும் எடை
போடுவான். எல்லோருடைய எண்ணமும் ஒன்று போல் இருக்காது
இந்த எண்ணமே என்னை பயமுறுத்தியது
வேண்டாம் என்று சொல்லிவிட்டால் நிம்மதியாக இருக்கும் என்று எனக்குள்
நான் சொல்லிக் கொண்டேன். வேண்டாம் என்று சொல்லிவிட்டால் எல்லாம்
இப்போது இருக்கிற மாதிரியே இருந்து விடும். நாங்கள் செளகரியமாக
எங்கள் ஊரில், எங்கள் வீட்டில் இருந்து கொள்ளலாம். எங்களுக்குப் பழக்கமான, நாங்கள் செய்து கொண்டிருக்கிற, வேலையையே செய்து கொண்டிருக்கலாம்.
நமக்குப் பழக்கமான நண்பர்கள், உறவினர்கள், மனிதர்கள் நம்மைச் சுற்றி இருப்பார்கள். குழந்தைகளின் பள்ளிக்கூடத்தை மாற்ற வேண்டாம்.
சொல்லப் போனால் எந்த மாற்றமும் இருக்காது
இந்த எண்ணம் வந்த போது என் பயம் எனக்கு வெட்ட வெளிச்சமாயிற்று.
என் பயத்திற்கான காரணம் என்ன…?
நான் மாற்றத்திற்குப் பயப்படுகிறேன். எனக்குப் பழக்கமான சூழல்
என் கையை விட்டுப் போய்விடுமோ என்று பயப்படுகிறேன்.
என் பயங்கள் நியாயமாகத் தோன்றலாம். ஆனால் மறுபுறத்தில்
என்ன இருக்கிறது என்று தெரியாமலே நான் பயப்படுகிறேன்.
புதிதாக இருக்கிறது என்பதால் பயப்படுகிறேன்”
………………………………………………………………..…
மிசேல் மாதிரி நம்மில் பலருக்கும் புதிதாக எதையாவது
செய்ய வேண்டும் என்கிற நிலை வரும்போது,
மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்போது – இத்தகைய
தயக்கங்கள் நிச்சயம் வரும்…
நான் என் அலுவலக வாழ்வில் 8 முறை இடமாற்றலுக்கு
உள்ளாகி இருக்கிறேன்… சில சமயம் பதவி உயர்வு…
சில சமயங்களில் ரொடீன் ட்ரான்ஸ்ஃபர்….. சில சமயம்
நானாகவே முயற்சித்து வேறு ஊருக்கு சென்றது…
நான் போன அத்தனை முறையும்,
அத்தனை ஊர்களுக்கும் – என் குடும்பத்தையும் கூடவே அழைத்துச்
சென்றேன். எனக்கு ஹிந்தி நன்றாகத் தெரியும். ஆனால் என் மனைவி,
குழந்தைகளுக்கு ….??? ஹிந்தி சுத்தமாகத் தெரியாது.
என் 3 வயது பெண் குழந்தை மூன்றே மாதங்களில் ஹிந்தியில் நன்றாக
பேச/புரிந்து கொள்ள – துவங்கி விட்டாள்.
அதே, என் மனைவிக்கு மார்க்கெட்டுக்கு போய் சுயமாக காய்கறி
வாங்கும் அளவுக்கு மட்டும் ஹிந்தி கற்றுக்கொள்ள 4-5 மாதங்கள்
பிடித்தது ….காரணம் …?
தேவை…!!!
3 வயது குழந்தைக்கு அக்கம் பக்கத்து சிறுவர்களுடன் விளையாட
வேண்டிய தேவை/கட்டாயம்/அவசியம் ஏற்பட்டதால் சீக்கிரமாகவே
கற்றுக் கொண்டு விட்டாள்.
நான் போன புதிய ஊர்களில், சில இடங்களில் மட்டுமே அரசாங்க
குடியிருப்பு கிடைத்தது… மற்ற இடங்களில் வாடகை இல்லங்கள் தான்…!!!
குறைந்த வருமானம் – மாதச் சம்பளம்…
புதிய ஊர்கள், 3 முறை எனக்கு முற்றிலும் அறிமுகமில்லாத ஊர்கள்.
உத்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் – என்றெல்லாம்…
பழக்கமில்லாத புதிய சுற்றுப்புறம்….
இந்த ஊர்களில் எல்லாம் முன்பே தெரிந்தவர்கள் யாருமே கிடையாது….
வித்தியாசமான க்ளைமேட் வேறு…..
ஆனால் – இவையெல்லாவற்றையும் எதிர்கொள்ள மனதில்
தைரியமும், தெளிவும், தன்னம்பிக்கையும் இருந்தது. ஒரே ஒரு
இடத்தில் மட்டும் கொஞ்சம் கலங்கி விட்டேன்… உத்திரப் பிரதேசத்தில்…
(ஆனால், அங்கும் ஒரு கொலைகார நண்பனின் உதவி கிடைத்தது..!!! )
இருந்தபோதும், எப்போதும் மனதில் ஒரு நம்பிக்கை…. நாம் எத்தனையோ
பேருக்கு உதவி இருக்கிறோம்…. பொது நலனுக்காக எவ்வளவோ
செயல்பட்டிருக்கிறோம்….. இவற்றின் பலன் நமக்கு துணை இருக்கும் என்று.
புதிய இடங்களில் பல சமயங்களில் சமாளிக்க முடியாமல் திண்டாடி
இருக்கிறேன்… தொடர்ந்து முயற்சி செய்வேன்… சில சமயம் விடிவே/வழியே
புலப்படாது…. கடைசியில், கடவுளே என்னை கைவிட்டு விடாதே –
எதாவது ஒரு வழியைக் காட்டு என்று வேண்டுவேன்…. அதற்காகவே
காத்திருந்ததுபோல், நான் சற்றும் எதிர்பார்க்காத யார் மூலமாவது
ஒரு வழி பிறக்கும்… ( கடவுள் நேராகவா வந்து உதவுவார்…!!! )
அனுபவம் தான் வாழ்க்கை…. புதிய அனுபவங்களை எதிர்நோக்க
பயப்பட்டால், வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட முடியாது.
Life is NOT a bed of Roses….
போராடத் தயங்கினால், எதையும் சாதிக்க முடியாது….
அது சரி – மிசேல் ஒபாமா’வை அப்படியே விட்டு விட்டோமே –
………………………………………………………………….
மிசேல் தன் பயம் எப்படித் தெளிந்தது என்பதைப் பற்றியும்
எழுதுகிறார்.
மிசேலின் பயம் தெளிய ஆவிகள்தான் காரணம்…!!!
தமாஷாக இருக்கிறதா …???
இளம் வயதில் மிசேலும் அவருடைய அண்ணன் கிரேக்கும் வீட்டு சோபாவில்
காலை நீட்டிச் சாய்ந்து கொண்டு, கனமான கம்பளியைப் போர்த்துக் கொண்டு,
டிவி பார்ப்பார்கள். அவரது அண்ணனுக்கு பேய்ப் படங்கள் என்றால் உயிர்.
கல்லறையைப் படீரென்று வெடித்துப் பிளந்து கொண்டு ஆவிகள் எழுந்து
வரும் படங்கள், கழுத்தைக் கடித்து ரத்தம் குடிக்கும் டிரகுலா படங்கள்
இவற்றை ஒன்று விடாமல் பார்ப்பார். மிசேல் பயந்து கொண்டு அவ்வப்போது வீறிடுவார். அவர் வீறிட்டால் கிரேக்கிற்கு குஷி. அவர் பயந்து அலற வேண்டும் என்பதற்காகவே திகில் ஒலி வரும் இடங்களில் சத்தத்தை அதிகரிப்பார்.
நமக்கு இவ்வளவு பயம் ஏற்படுகிறதே அண்ணனுக்கு மட்டும் எப்படி
கொஞ்சம் கூட பயமே இல்லை என்று சிறுமி மிசேல் யோசிப்பதுண்டு.
சிறிது வளர்ந்த பின் அவருக்கு அது ஏன் என்று புரிந்தது. அது ஏன்?
பேய், பிசாசு, ஆவி எல்லாம் இருக்கிறது என்று நம்பி
நாம் பயப்படுகிறோம். ஆனால் கிரேக்கிற்கு அவை டிவி திரையில்
தெரியும் வெறும் காட்சிகள், அதில் பிசாசாக வருபவர்கள் நடிகர்கள்,
இந்தப் ‘பிசாசுகள்’ எதுவும் திரையை விட்டு வெளியே வராது,
வெளிய வர முடியாது, அப்படி வர முடியாததால் நம்மை ஒன்றும் செய்ய
முடியாது என்று தெரியும். கிரேக்கிற்குத் தெரியும் என்பதால் அவருக்கு
பயம் இல்லை. எனக்குத் தெரியாதால் எனக்கு பயம் என்பது புரிந்தது
என்கிறார் மிசேல்.
……….
இதை நினைவு கூர்ந்து மிசேல் எழுதுகிறார். ஜனாதிபதி பதவி என்றால் என்ன, அதற்கான போட்டி என்றால் என்ன என்பது பராக்கிற்குத் தெரியும் .அதனால்
அவர் கவலைப்படவில்லை. அவை எனக்குத் தெரியாது அதனால் நான்
பயப்பட்டேன் என்கிறார்.
அனுபவபூர்மான உண்மை….!!!
.
……………………………………………………………………………………………….



Thank you for sharing this KM sir