நீதிமன்றங்களில் தேங்கி இருக்கும் வழக்குகள் ….

………………………………….

…………………………………

தினமணி தலையங்கம் – 19th January 2024

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இந்திய நீதித்துறை மிகப் பெரிய மாற்றங்களுக்குத் தயாராகிக்
கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாகப்
பதவி ஏற்றது முதல் தனஞ்செய் சந்திரசூட் மேற்கொண்ட பல நிா்வாக
நடவடிக்கைகள், இதுவரை இல்லாத அளவுக்கு வழக்குப் பதிவையும்,
தீா்ப்புகளின் எண்ணிக்கையையும் விரைவுபடுத்தி இருக்கின்றன.

2022 நவம்பா் மாதம் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப்
பதவி ஏற்றுக்கொண்ட தனஞ்செய் யஷ்வந்த் சந்திரசூட் பதவிக்காலம்
இந்த ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதிதான் முடிவடைகிறது. தலைமை
நீதிபதியாகப் பதவி ஏற்றபோது தெரிவித்ததுபோல, நீதித்துறையின் செயல்பாடுகளைக் காலத்துக்கு ஏற்றபடி தொழில்நுட்ப ரீதியில் மாற்றும்
முனைப்பில் வெற்றி அடைந்துவருகிறாா் என்றுதான் கூற வேண்டும்.
2023 அதை உறுதிப்படுத்துகிறது.

நீதித்துறை இரண்டு மிகப் பெரிய பிரச்னைகளை எதிா்கொள்கிறது.

உயா்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை
1,114 என்றால், இருப்பது என்னவோ 790 போ் மட்டுமே. அதாவது 324 நீதிபதிப் பணியிடங்கள் உயா்நீதிமன்றங்களில் நிரப்பப்படாமல் இருக்கின்றன.
ஆனால், தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 61,75,579. கீழமை நீதிமன்றங்களில் கேட்கவே வேண்டாம் – 4,46,30,237.

உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் பணி ஓய்வுபெற்ற சஞ்சய் கிஷன் கௌல்
இடம் மட்டுமே நிரப்பப்படாமல் இருக்கிறது என்பது ஆறுதல். ஆனால்,
தீா்ப்பு வழங்கப்படக் காத்திருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 80,040.
இதை எதிா்கொள்ளத் தலைமை நீதிபதி தனஞ்செய் சந்திரசூட்
முன்னெடுத்திருக்கும் சில நடவடிக்கைகள் பலனளித்திருக்கின்றன
என்றாலும், பிரச்னை முடிவுக்கு வந்துவிடவில்லை.

2020 கோவிட் கொள்ளை நோய்த்தொற்றால் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டிருக்கிறது. மலைபோலக் குவிந்து
கிடக்கும் வழக்குகளை எதிா்கொள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை
இரட்டிப்பாக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் இருக்கும் பல நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி,
நீதிமன்றம் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது.

இருக்கும் காலியிடங்களே நிரப்பப்படாமல் இருக்கும் சூழலில், நீதிபதிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதால் என்ன தீா்வு கிடைத்துவிடும் என்று
கனம் நீதிபதிகள் கருதினாா்கள் போலும். உச்சநீதிமன்றத்தின் தலைமை
நீதிபதியாக, மிகவும் இக்கட்டான கோவிட் கொள்ளை நோய்த்தொற்று
காலத்தில் பதவியேற்ற தனஞ்செய் சந்திரசூட், அதையே தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள முற்பட்டாா்.

தேங்கிக் கிடக்கும் வழக்குகளை எதிா்கொள்ள தொழில்நுட்பத்தை ஆயுதமாகக் கையிலெடுக்க முற்பட்டாா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி. இணையவழி வழக்குப்பதிவு முறை (இ – ஃபைலிங்) ஊக்குவிக்கப்பட்டது.

விசாரணைக்கு வழக்குகள் வரிசைப்படுத்தப்படுவது, கணினிப் பதிவு மூலம் முறைப்படுத்தப்பட்டது. மிக முக்கியமான வழக்குகளை விரைந்து விசாரித்துத்
தீா்ப்பு வழங்க, 166 சிறப்பு அமா்வுகள் அறிவிக்கப்பட்டன.

தலைமை நீதிபதியின் முனைப்பு பலனளித்தது. 2022-இல் 39,800 வழக்குகள்
தீா்ப்பு வழங்கப்பட்டு முடிவு காணப்பட்டன என்றால், 2023 டிசம்பா் 24
நிலவரப்படி 52,220 வழக்குகள் முடிவு எட்டப்பட்டன. அதேநேரத்தில்,
இணையவழியில் எளிமையாக வழக்குப் பதிவு செய்ய வழிகோலிய
அவரது முனைப்பு, வேறு ஒரு வகையில் பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒருபுறம் வழக்குகள் விரைந்து ஃபைசல் செய்யப்பட்டன என்றால்,
இன்னொருபுறம் புதிதாகப் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை
அதிகரித்துவிட்டது. 2022-இல் 36,565 புதிய வழக்குகள் பதிவாகின என்றால்,
2023-இல் அதுவே 53,753-ஆக அதிகரித்துவிட்டது. விளைவு…?

தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை குறையவில்லை –

  • 1,549 வழக்குகள் அதிகரித்தன.

2023-இல் எத்தனை எத்தனை வழக்குகள் புதிதாகப் பதிவாகினவோ
அதே அளவிலான வழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட்டுத் தீா்ப்பு
வழங்கப்பட்டன. நிா்வாக சீா்திருத்தமும், தொழில்நுட்பப் பயன்பாடும்
எந்தவொரு பிரச்னைக்கும் உடனடித் தீா்வாக அமைந்துவிடாது. அதற்கு
கால அவகாசம் மட்டுமல்லாமல், தொடா்ந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் அவசியம். அந்த வகையில் ஏறத்தாழ இரண்டாண்டுகள் தொடா்ந்து தலைமை நீதிபதியாக தனஞ்செய் சந்திரசூட் தொடா்வது ஒரு வரப்பிரசாதம்.

அடுத்தாற்போல, 2025-இல் ஆறு மாதங்கள் மட்டுமே பதவிக்காலமாக
இரண்டு தலைமை நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தை அலங்கரிக்க
இருக்கிறாா்கள். அந்தக் குறுகிய காலத்தில் புதிய நடைமுறைகளை
அறிமுகப்படுத்த முயலாமல் நீதிபதி தனஞ்செய் சந்திரசூட் ……………. தனத்தை முனைப்புடன் செயல்படுத்தினால், எதிா்பாா்த்த மாற்றங்களை
நீதித்துறை எட்ட முடியும்.

தொழில்நுட்ப மேம்பாடு என்பது அவசியம் என்பதில் சந்தேகமே கிடையாது.
ஆனால், நீதித்துறையின் செயல்திறனைவிடப் பல மடங்கு அதிகமாக
வழக்குகள் பதிவாகுமானால், இப்போது இருப்பதைவிட மோசமான வழக்குகள் தேக்கத்துக்கு அது வழிகோலும் என்பதையும் உணர வேண்டும். எளிதான
வழக்குப் பதிவு, விரைவான விசாரணை முடித்த தீா்ப்பு இரண்டுமே ரயில் தண்டவாளத்தைப் போல ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே
எதிா்பாா்ப்பது போன்ற விளைவுகளை நாம் அடைய முடியும்.

இந்திய நீதித்துறை வரலாற்றில் மிக அதிக ஆண்டுகள் உச்சநீதிமன்றத்
தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த பெருமை (07 ஆண்டுகள் 179 நாள்கள்)
16-ஆவது தலைமை நீதிபதியான யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட்டுக்கு உண்டு.

உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியான அவரது மகன்
தனஞ்செய் யஷ்வந்த் சந்திரசூட், இரண்டு ஆண்டுகள் மட்டுமே தலைமை
நீதிபதியாக இருக்க முடியும் என்றாலும், தொழில்நுட்ப ரீதியாகப் பல
நடைமுறைகளை அறிமுகப்படுத்திய பெருமை உண்டு என்று வரலாறு
பதிவு செய்யும்!

.
…………………………………………………………………………………………………….………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to நீதிமன்றங்களில் தேங்கி இருக்கும் வழக்குகள் ….

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.