வெகு சுவாரஸ்யம் – சுயம்பகர் சித்தர் – சிறுகதை – பாலகிருஷ்ணன்…

……………………………………………

சுவாரஸ்யமான நடைக்காக, இந்த கதையின் ஆசிரியர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நமது பாராட்டுகளும், வாழ்த்துகளும்…..

…………………………………………….

‘விருதுநகர் வந்துட்டீங்கன்னா அங்கிருந்து பஸ்ஸைப் பிடித்து வத்திராயிருப்புக்கு வந்திடலாம். பஸ் ஸ்டாப்ல இறங்கினீங்கன்னா ரெண்டு நிமிஷம்தான் நம்ம லாட்ஜுக்கு…’ வடிவேலழகன் போனில் சொன்னதைப் போல எளிதாகவே குமரன் லாட்ஜைக் கண்டுபிடித்து விட்டேன்.

லாட்ஜ் பெயர்ப்பலகையில் ‘ர’வும் ‘லா’வும் காணாமற்போயிருந்தன. வாசலில் கழிவுநீர் கால்வாய் அடைத்துக் கொப்பளித்தபடி வழிந்து கொண்டிருந்தது. நுழைவாசலில் வழியை அடைத்துக்கொண்டு சூட்கேஸ் பெட்டிகளுடன் நான்கைந்து பேர். மதுரையிலும் விருதுநகரிலும் எவ்வளவோ விடுதிகள், ஹோட்டல்கள் இருக்க, இங்கே வந்து அவஸ்தைப்படவேண்டும் என்பது என் தலையெழுத்து. இதெல்லாம் சீஃப் எடிட்டர் கனகராஜ் வகுத்த திட்ட ஆலோசனைப்படி செய்யவேண்டிய கட்டாயம்.

எல்லோரும் சித்தர்கள் குறித்த ஸ்கூப் நியூஸ் தேடித் திருவண்ணாமலைக்குப் படையெடுக்க, இவர் ஏனோ சதுரகிரியைத் தேர்ந்தெடுத்தார்.

நான் முகுந்தன் வினாயகம். ‘வானம்’ தமிழ் வார இதழில் ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளன். எனக்கான இந்த புராஜெக்ட், சதுரகிரியில் இரண்டு நாள் டூர் புரோக்ராம். கோயில் பயணம், ஏற்கெனவே சித்தர்களைப் பார்த்த அனுபவம் இருக்கும் லாட்ஜ் உரிமையாளர் வடிவேலழகனின் பேட்டி, அதிர்ஷ்டமிருந்தால் நேரடியான ஏதேனும் சித்தர் தரிசன அனுபவம். இதெல்லாம் உள்ளடக்கிய ஒரு ஆறுபக்கக் கட்டுரை. இங்கு வரக் காரணம், இந்த லாட்ஜில் தங்கினால் குறைந்தபட்சம் வடிவேலழகன் பேட்டியாவது உத்திரவாதம் என்பதே. கோபிகாவைத் தவிர வேறு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஆபீஸில் டி.ஏ வவுச்சரில் கையெழுத்திட்டு ஐந்தாயிரம் முன்பணம் பெற்றுக்கொண்டு மறுநாள் காலை ரயில்வே ஸ்டேஷன் வந்ததும் கோபிகாவின் போன்.

“டேய் முகுந்த், அப்பாகிட்ட நீ எம்.பி.ஏ கிராஜுவேட்ங்கிறத சொல்லி எப்படியாவது கன்வின்ஸ் பண்ணுறேன். தயவுசெய்து இத்தோட இந்த சித்தரு, புத்தருன்னு சுத்தற வேலைய விட்டுட்டு ஒழுங்கு மரியாதையா அப்பா கம்பெனில ஜாயின் பண்ணிட்டு என்னக் கல்யாணம் கட்டிக்கிட்டு செட்டில் ஆகிற வழியைப் பாரு. அப்புறமா, கேட்க ஆளில்லைன்னு சிகரெட்டா ஊதித் தள்ளாதே.”

“ஏய், நான் போறது கோயிலுக்கு.”

“உன்னப்பத்தி எல்லாம் தெரியும் எங்களுக்கு” என்று சிணுங்கலுடன் போனை பட்டென்று கட் செய்தாள் கோபிகா.

லாட்ஜ் ரிசப்ஷனில் அமர்ந்திருந்த நபரைப் பார்த்ததுமே ஏனோ அவர்தான் வடிவேலழகன் என்று எனக்குத் தோன்றியது. கிட்டத்தட்ட யோகிபாபு சாயலில், ஆனால் கொஞ்சம் மாநிறமாக, அதே மாதிரி சுருட்டை முடியுடன் இருந்தார். முதுகில் பேக், கையில் லேப்டாப் சகிதம் வருவதைப் பார்த்தவுடன் இந்த அறுநூறு ரூபாய் லாட்ஜுக்கு இப்படி ஒரு கெட்டப்பில் வருவது நானாகத்தான் இருக்க வேண்டும் என்று அவரும் எளிதாகப் புரிந்துகொண்டார் போல.

நான் நினைத்ததுபோல் அறை ஒன்றும் மோசமாக இல்லை. கட்டிலில் பளிச்சென்று வெள்ளைவெளேர் மெத்தை மற்றும் போர்வை. எல்லாவற்றுக்கும் மேலாக சுத்தமான பாத்ரூம். எதிர்பாராத விதமாக வைஃபை கனெக்‌ஷன் நன்றாகவே இருந்தது.

டின்னருக்கு நான் கேட்டதுபோல் சப்பாத்தி குருமாவுடன் அறைக்கு வந்த வடிவேலழகனை “உங்களோட பேட்டிய இப்பவே வெச்சுக்கலாமா” என்று கேட்டபடி நோட்பேடும் பேனாவும் எடுத்ததும், கொஞ்சம் வருத்தமாக “சார், வீடியோ ஷூட் இல்லியா?” என்றார்.

“இது யூடியூப் பேட்டி இல்ல. வானம் பத்திரிகையில சிறப்புக் கட்டுரையா வரும். சரி, நீங்க பார்த்த சித்தரைப் பற்றி விவரமா சொல்லுங்க, கேட்கலாம்.”

“சார், அவர் பேரு சுயம்பு சித்தர். ஒரு நாலு வருஷம் முன்ன நான் அவரை நேரில் பார்த்த அனுபவம் இது. உங்க ஆபீஸ் கனகராஜ் சார் கிட்ட ஏற்கெனவே சொன்னதுதான். தவசிப்பாறை கிட்டக்க, அப்புறம் கோரக்கர் குகை, நாவல் ஊற்றுன்னு இப்படி இங்கெல்லாம் இந்தச் சித்தரை நிறைய பேர் பார்த்திருக்காங்க.”

“நீங்க அவரைப் பார்க்கறப்ப எப்படி இருந்தார்?”

“ஒவ்வொருத்தருக்கும் அவர் வேறவேற மாதிரி தெரிவார். நான் பார்த்தபோது கிட்டத்தட்ட என்னைப் போல தாட்டியா பரட்டத்தலையா…”

“அப்புறம், மேல சொல்லுங்க.”

“ராத்திரி ஒரு மணியிருக்கும். என்கிட்ட பீடி கேட்டு வாங்கிட்டு, வத்திப்பொட்டி இருக்கான்னார். இல்லன்னதும் ‘அப்ப என்ன மசுத்துக்கு பீடி வெச்சிருக்கே’ன்னு திட்டிட்டு ரெண்டு உள்ளங்கையையும் பரபரன்னு தேய்ச்சாரு. புகையும் நெருப்புமா வந்தது. அதாலயே பீடிய பத்தவெச்சார். ‘சாமி, நான் சன்னியாசம் போகணும். ஆசீர்வாதம் பண்ணுங்க’ன்னு சொன்னேன். காலால என்ன ஒரு எத்து எத்தி, ‘அதெல்லாம் ஒன்னும் வேணாம். போய் உன் பொழப்பப் பாரு’ன்னு சொல்லி, கூழாங்கல்லு ஒன்னு தந்து `இத பத்திரமா வெச்சுக்கோ’ன்னார். அதுக்கப்புறம் என் வாழ்க்கையே மாறிடுச்சு சார். அதை இப்பவும் வீட்டுல பூஜை ரூம்ல வெச்சு தினமும் கும்பிடறேன்.”

“அவரைப் பத்தி இன்னும் வேற எதாவது கதையிருக்கா?”

“என்ன சார் சொல்றீங்க, நான் சொல்றதெல்லாம் கதையில்ல, நிஜம். இப்பெல்லாம் மலையில தவசிக்குகைக்குப் போக அனுமதியில்ல. முன்ன ஒருநாள் அதுக்குள்ளாற இவரு அம்மணமா கால மடிச்சு உக்காந்திருக்கார். ரெண்டு விடலப்பசங்க செல்போன்ல போட்டோ எடுக்கப்போக, வெளிய போன்னு சொல்லி சைகை பண்ணியிருக்கார். பசங்க அவர் சொல்பேச்சு கேக்கல. பக்கத்திலிருந்த ஒரு கல்ல எடுத்து விட்டெறிஞ்சாராம். அது நெருப்புக்கங்கா வந்து விழுந்துதாம். பசங்க அலறியடிச்சு ஓடியிருக்காங்க.”

“எல்லோரும் அவரைப் பார்க்க முடியுமா?”

“நிச்சயமா இல்ல, பிறவிப்பயனும் குடுப்பினையும் இருந்தா மட்டும்தான் அவரப் பாக்கமுடியும். இல்லன்னா கண்ணுலயே தென்படமாட்டார்” என்றார் வடிவேலழகன் பெருமையாக.

பேட்டியை முடித்துக்கொண்டு பேனாவை மூடியதும் “சார், நாளைக்குக் காலைல டிபன் முடிச்சிட்டு ரிலாக்ஸா கிளம்பி ஆட்டோல தாணிப்பாறைக்குப் போயிடலாம். அங்கேயிருந்து கோயிலுக்கு மலையேறிடலாம். காஸ்ட்லியா இல்லாத சாதா போன் எடுத்துக்கோங்க. ஒரு துணிப்பையில டவல், தண்ணி, பிஸ்கெட் மட்டும் போதும்” என்றார் வடிவேலழகன்.

மலையேற வசதியாக ஜீன்ஸ் பேண்ட் அணிந்துகொண்டேன். கையிலிருந்ததும் சாதாரண ரெட்மி மொபைல்தான். பௌர்ணமிக்கு அடுத்த நாள் என்பதால் சதுரகிரியில் கூட்டம் அதிகமாக இல்லை. கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் மலையேறி மகாலிங்கம் சன்னதியில் தரிசனம் முடித்தபின்தான் கால்வலியே தெரிந்தது. சில நாட்கள் முன்பு கோபிகா வற்புறுத்தலில் ஜிம்முக்குப் போய் ட்ரெட் மில்லில் வாக்கிங் செய்ததன் பலன் மலையேற்றத்தில் நன்றாகவே தெரிந்தது. வரும்வழியிலேயே அன்னதானம் உபயத்தில் மதிய உணவு முடிந்தது. பொழுதுசாய இன்னும் நேரம் இருந்ததால் இருவரும் ஒரு பாறையில் அமர்ந்து கொஞ்ச நேரம் இளைப்பாறினோம்.

‘திட்டமிட்டபடி மாலை நான்கு மணிக்குமேல் நான் மட்டும் நழுவி தனியாக அம்மன் சன்னதிக்குப் பின்புறமாக, மேற்குப்பக்கமாக ஏறி, கிழக்குப் பக்கவாட்டில் இறங்கி தவசிப்பாறையை அடைந்து இருட்டும்வரை ஏதேனும் பாறையிடுக்கில் மறைவாக அமர்ந்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகு நடப்பதெல்லாம் சிவன் சித்தம்’ என்ற வடிவேலழகன் நிறைய நிபந்தனைகள் மற்றும் கட்டளைகள் சொல்லியிருந்தார்.

யாரும் கவனிக்காதபடி இரவு தங்க வேண்டும். இருட்டில் தேவையில்லாமல் மொபைல் டார்ச் பயன்படுத்தக் கூடாது. வன விலங்குகள் ஒருவேளை தென்படலாம். அவற்றிடம் மாட்டிக்கொண்டால்கூட பரவாயில்லை. வனப் பாதுகாப்புப் பிரிவினால் இரவு தங்குவதற்கு தடைசெய்யப்பட்ட பகுதி என்பதால் அவர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம். ஒருவேளை அவர்களிடம் சிக்கினால் ஏதாவது பொய் சொல்லி நானே சமாளிக்க வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர்களிடம் இவரைப் போட்டுக்கொடுக்கக் கூடாது. இங்கு சுத்தமாக மொபைல் நெட்வொர்க் இருக்காது. எனவே காலையில் வெளிச்சம் வந்ததும் மலையிலிருந்து கீழே இறங்கியவுடன் தாமதிக்காமல் அவருக்கு போன் செய்யவேண்டும்.

எல்லாவற்றையும்விட பெரிய கொடுமை என்னவென்றால், இவ்வளவையும் சொல்லிவிட்டு ஏதோ பரீட்சைக்குப் போவதுபோல ‘பெஸ்ட் ஆப் லக்’ என்று கைகுலுக்கியதுதான்.

வடிவேலழகன் சென்றபின் கூட்டத்தைத் தவிர்த்து நடக்கத் தொடங்கினேன். இவ்வளவு விவரம் சொன்னவர், இது கஷ்டமான பாதை என்று சொல்லவே இல்லை. இருட்ட ஆரம்பித்ததும் லேசாக பயம் வந்ததால் கால்கள் பின்னின. ஒரு மணி நேரம் கடந்ததும் தோராயமாக தவசிக்குகை வந்துவிட்டதாக நினைத்து அவசரப்பட்டதில் மலைப்பாதையில் கால் இடறிச் சறுக்கியது. கீழே விழுகிறேன் என்று ஒரு மைக்ரோ நொடியில் புரிந்ததே தவிர, பிறகு எதுவும் நினைவுக்கு வரவில்லை. கண் விழித்துப் பார்த்தபோது ஒரு நீள்வட்டப் பாறைமீது ஒருக்களித்தபடி சாய்ந்து படுத்திருக்கிறேன்.

எதிரே ஒரு அடர்ந்த சிக்குதாடி மீசை நபர் அமர்ந்திருக்க பகீரென்றது. சித்தரோ? தாடியைத் தவிர வேறு சித்தர்களுக்கான அடையாளங்கள் எதுவும் அவரிடமில்லை. அழுக்கு நீலநிறச் சட்டையும் காவி வேட்டியும் அணிந்திருந்த அவர் கைப்பையிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்து குடிக்கத் தண்ணீர் தந்தார். “நாவலூத்துத் தண்ணி… குடிச்சிப்பாரு.”அதிலிருந்து தாகம் தீர ஒரு மிடக்கு குடித்தேன். நாவல் பழம் போல வாசனை. “நல்லாருக்கில்ல. இப்பெல்லாம் ஊத்து வத்திப்போச்சு. எல்லோரும் மருந்துன்னு மொண்டுட்டுப் போறாங்க. காத்து தண்ணியெல்லாம் இடம் மாறினா பலன் தராது. இது யாருக்கும் புரியல.”

அந்த வழுக்குப்பாறைமீது சப்பணாங்கால் போட்டு உட்கார்ந்திருந்த அவர் “என்ன பேசாம வாயடைச்ச மாதிரி பாக்குற? சரி, உங்கிட்ட கோல்டு ப்ளேக் சிகரெட் இருக்குமே. தர்றியா” என்றார்.

ஏற்கெனவே அதிர்ச்சியில் இருந்த எனக்கு இப்போது குழப்பமும் பயமும் உண்டானது. என் பிராண்ட் அவருக்கு எப்படித் தெரிந்தது? “சிகரெட் இல்லியே” என்று சொல்லிக்கொண்டே பேண்ட் பாக்கெட்டைத் தடவினால், நேற்று வாங்கி, எடுத்து வைக்க மறந்த சிகரெட் பாக்கெட் அதற்குள் இருந்தது.

என் முகபாவத்தைப் பார்த்து “அதுக்கு ஏன் இப்படி அதிர்ச்சி ஆயிட்டே. சிகரெட் இருக்கான்னுதானே கேட்டேன். சீக்ரெட் இருக்கான்னு கேக்கலியே” கறைபடிந்த பல்லைக்காட்டி பலமாகச் சிரித்து “இப்பெல்லாம் இந்த பிராண்ட் வர்றதில்ல” என்றார்.

“ஏன், நான் நேத்துதானே வாங்கினேன்” என்றேன் குழப்பமாக. எதுவும் பதில் சொல்லாமல் புன்முறுவலுடன் என்னிடமிருந்து வாங்கிய சிகரெட் ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக உடைத்து பில்ட்டரைக் கிள்ளி எறிந்துவிட்டு மிச்சத்தைக் கைப்பையிலிருந்த காலி சோப்பு டப்பாவில் பத்திரப்படுத்திக்கொண்டார். கைப்பையிலிருந்து தீப்பெட்டியை எடுத்து ஒரு சிகரெட் துண்டை தீக்குச்சியால் பற்றவைத்தார்.

இதைப் பார்த்ததும் கொஞ்சம் பயம் தெளிந்து அவரிடம் கேட்டேன் “கோயில் கிட்டக்க சிகரெட் பிடிக்கிறது தப்பில்லையா?”

“ஏன்?”

“இங்க சாமி இருக்குமில்ல.”

“மத்த இடத்திலெல்லாம் இல்லையா?”

“ஆனா புகைபிடிக்கிறது கெடுதி இல்லையா?”

“நான் பிடிச்சா கெடுதி என் உடம்புக்குத்தானே. மத்தவங்களுக்கு வராதில்ல. போய்ட்டுப் போது… உடம்ப முக்கியமா நினைக்கிறவன் இங்க வந்து சேரமுடியாது. அப்புறம் சுற்றுப்புறத்துக்கும் பிரச்சினை வராது. ஏன்னா, நான் உள்ளே இழுத்த புகையை வெளிய விடறதில்ல” அப்போதுதான் சுற்றிலும் கவனித்தேன். ஒரு சிறு கீற்றுப் புகைகூட இல்லை.

இப்போது அவரை மீண்டும் கூர்ந்து கவனித்தேன். அந்தச் சிக்கு தாடிக்குள் மறைந்திருந்த அந்த முகம் யாருடையது என்று இனம் காண முடியாதபடி, ஆனால் எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாக இருந்தது.

சிகரெட்டைப் புகைத்தபடி அவர் என்னிடம் பேச்சு கொடுத்தார். “இந்த ராத்திரியில யாராச்சும் சித்தர் கண்ணுல சிக்குறாங்களான்னு வந்தியா? நீ யார தேடி வந்த?”

“சுயம்பு சித்தர்னு ஒருத்தர” என்றேன் தயங்கியபடி.

“ஹும்… அது சுயம்பு சித்தரில்ல; சுயம்பகர் சித்தர்.”

“அப்படின்னா..?”

“தன்னை விளக்கி உன்னைப் புரிய வைக்கிறவர். அதாவது நீதான் நான்… நான்தான் நீன்னு.”

“புரியுது… ஜீவாத்மா பரமாத்மா.”

“ம்… ஒருவிதத்துல அதுவும் சரிதான். உலகத்துல இருக்குற அத்தனையுமே நீதான்னு உணருவது பரமாத்மா… அதான் முக்தி. யார அடிச்சாலும் உனக்கும் வலிக்கும். அப்பதான் நீ ஜீவாத்மாவ விட்டு விலகி பரமாத்மால ஐக்கியமாயிட்டதா அர்த்தம். அதில்ல இது.’’

என் முழங்கையில் ஏற்பட்ட சிராய்ப்பை அப்போதுதான் கவனித்தேன்.

“என்ன ஆச்சு?” என்று கேட்டு, பிடிமண்ணை எடுத்து என் கை சிராய்ப்பின்மேல் தேய்த்தார்.

“கால் இடறி விழுந்திட்டேன்.”

“கால் இடறி விழுந்தாயோ. காலம் தவறி வந்தாயோ.”

“நீங்க நல்லா சிலேடையா பேசறீங்க. உண்மையைச் சொல்லுங்க, நீங்க ஒரு சித்தர் தானே?’’ கேட்டுக்கொண்டே கீழே விழுந்ததில் போன் ஏதும் டேமேஜ் ஆனதா என்று எடுத்துப் பார்த்தேன். ‘‘ஐயோ… ஏதோ செட்டிங் மாறிடுச்சுபோல. வருஷம் 2032-ன்னு தப்பாக் காட்டுது.”

“தப்பாக் காட்டல. சரியாத்தான் காட்டுது. இன்னைக்கு என்ன நாள்… சொல்லு பாப்போம்?”

“ஏன், பெளர்ணமிக்கு அடுத்த நாள்.”

“அப்படின்னா, மேல வானத்துல நிலாவக் காட்டு பாக்கலாம்…”

அண்ணாந்து பார்த்தபோது வானத்தில் மினுக்கும் ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள். ஆனால் தலையை 360 டிகிரி சுற்றிப் பார்த்தும் நிலவு மட்டும் காணவில்லை.

“உண்மைய சொல்லுங்க. நீங்க தானே அந்த சுயம்பகர் சித்தர்?”

“கிட்டக்க வந்திட்டியே. ஆமான்னும் சொல்ல மாட்டேன், இல்லைன்னும் சொல்லமாட்டேன்.”

“அப்படின்னா நான் எங்கிருந்து வர்றேன்னு சொல்லுங்க.”

மேலே கையை உயர்த்திக் காட்டி “வானத்திலிருந்து” என்றார். நான் ‘வானம்’ பத்திரிகையிலிருந்து வருவதை சூசகமாகச் சொல்கிறாரா?

“இப்ப புரிஞ்சிடுச்சு. டைம் லூப்… இல்லன்னா, நான் மல்டிவெர்ஸ்ல வந்து மாட்டிக்கிட்டேனா.”

“நிறைய இங்கிலீஷ் படம் பார்ப்பியோ?” புன்முறுவலுடன், “குவாண்டம் பிஸிக்ஸ் கேள்விப்பட்டிருக்கியா?” என்று கேட்டார்.

“என்னது, குவாண்டம் பிஸிக்ஸா?”

“ஏன், சித்தர்னாலே ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ன்னு திருவாசகமோ, திருமந்திரமோதான் பாடணுமா? குவாண்டம் பிஸிக்ஸ் பற்றிப் பேசக்கூடாதா?”

“தாராளமா பேசலாம்” என்றேன் ஆர்வத்துடன்.

“இந்த விஷயத்தை அப்படிப் பொத்தாம்பொதுவா மல்டிவெர்ஸ், இணை பிரபஞ்சம், டைம் டிராவல்னு அடக்கிடமுடியாது. காலம், நேரம்ன்ற பரிமாணமெல்லாம் மனிதன் உருவாக்கினதுதான். எல்லையில்லாத பிரபஞ்சத்தில இப்பவே உன்னோட விதவிதமான பதிப்புகள் எங்கெல்லாமோ இருக்கலாம். நாம வாழ்க்கையில் எடுக்காத முடிவுகள், செய்யத் தவறிய செயல்கள்… இதனால் மாறின நம் வாழ்க்கையின் வெவ்வேறு வடிவங்கள் முடிவிலி பிரபஞ்சத்தின் பற்பல உலகங்களில் இருக்கலாம். நம்ம கனவுல பார்க்கிற நாம, அதில நம்மைச் சுத்தியிருக்கிற முகம் புரியாத நபர்கள் எல்லாம் மின்னல் கீற்றா வர நம்ம இணையுலக வாழ்க்கையோட துணுக்குகள்தான்.”

“எதுவும் சரியாப் புரியல.”

“வேணும்னா உன் வசதிக்கு இது ஒரு டைம் டிராவல்னு நினைச்சிக்கிட்டாலே சுலபமா இருக்கும்” என்றார் சுயம்பகர் சித்தர்.

போனில் ஐந்து பர்சண்ட் சார்ஜ் மட்டுமே இருந்தது. “உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா” அவரிடம் அனுமதி கேட்டேன். “இந்த இருட்டுலியா” என்று சிரித்தார்.

“மொபைல் ப்ளாஷ் போட்டா கொஞ்சம் வெளிச்சம் வரும்”

ப்ளாஷே தேவையில்லை என்று சொல்லும்படியாக இருட்டில் பல்லைக்காட்டி போஸ் கொடுத்தார். “ஏதாச்சும் சாப்பிட்டியா?”

“கைப்பையில பிஸ்கெட் இருந்தது, வழியில விழுந்திடுச்சு.”

“ம்ம்… மைதா மாவு. அதெல்லாம் வேணாம். மரவள்ளிக் கிழங்கு இருக்கு. சுட்டுத் தர்றேன்” என்று பையிலிருந்து இரண்டு கிழங்குத் தண்டுகளை எடுத்து சருகு குச்சியெல்லாம் குவித்துவைத்து, பையிலிருந்து தீப்பெட்டி எடுத்து என்னைத் திரும்பிப் பார்த்தார். “என்னடா இவன், கையைத் தேய்ச்சு நெருப்பு வரவைக்காம வத்திப்பொட்டி எடுக்கிறானேன்னு பார்க்கிறியா. அதெல்லாம் உனக்குத் தேவைப்படாது.”

சாப்பிட்டு முடித்ததும் “எல்லோரும் சித்தர்கள்னா பறக்கணும், இல்ல ஏதாவது அதிசயமோ மாயாஜாலமோ செய்யணும்னு நினைக்கிறாங்க. நல்லவேளையா நீ அப்படி எதுவும் எதிர்பார்க்கல. கவனமா கேட்டுக்கோ. நீ திரும்பிப் போனதும் ரொம்ப நாளா ஏங்கி எதிர்பார்த்துட்டு இருந்த செய்தி ஒன்னு உனக்கு வரும். அதுக்கு நீ அனுப்புற பதில்தான் உன் வாழ்க்கையை மடைமாற்றம் செய்யும். ஆமான்ற பதில், வசதியான லௌகீக வாழ்க்கையைத் தரும். இல்லைன்ற பதில், உன்னை இங்க கொண்டு வந்து சேர்க்கும். சரி, இப்போதைக்கு இங்கன பாறை இடுக்குல சரிஞ்சு படுத்துக்க. மத்தது காலைல பாத்துக்கலாம்” என்றார் சுயம்பகர் சித்தர்.

மெத்தையில் படுத்தாலே தூக்கம் வராமல் புரளும் நான், அந்த உச்சிப் பாறையிடுக்கில் எப்போது, எப்படிப் படுத்துத் தூங்கினேன் என்று தெரியவில்லை. காலை வெயில் சுள்ளென்று முகத்திலடிக்க, பதறியபடி எழுந்து பார்த்தபோது சுயம்பகர் சித்தரைக் காணோம்.

கீழே ஒரு இளைஞர் பட்டாளம் என்னைப் பார்த்து ஏதோ கையைக் காட்டிப் பேசிக்கொண்டார்கள். “அடப்பாவிகளா, அதற்குள் எனக்கு ஜீன்ஸ் சித்தர் என்று பெயர் வைத்து மொய்க்க ஆரம்பித்துவிட்டார்களா?” அருகிலிருந்த கருங்கற்களை எடுத்து அவர்களை நோக்கி வீசியெறிந்தேன். உற்றுப்பார்த்தபோது அவை நெருப்பாக மாறாமல் கற்களாகவேதான் விழுந்திருந்தன. அதெல்லாம் பார்க்க அவகாசமின்றி பயந்துபோய் அலறியடித்தபடி ஓடினார்கள் அந்த இளைஞர்கள். மலைப்பாதையில் இறங்கும் வழியில் ஒரு தேநீர்க்கடையில் சூடாக டீ குடித்துவிட்டு அடிவாரத்தில் ஆட்டோ பிடித்தேன்.

லாட்ஜ் வாசலில் நின்றிருந்த வடிவேலழகன் என்னைப் பார்த்த பார்வை ‘எப்படிடா திரும்பி வந்த’ என்ற பாவனையில் இருந்தது. “சார், என்ன ஆச்சு, போன் பண்ணுனா எடுக்கவே இல்லை. ஏதாவது பிரச்சினையா…” என்று இழுத்தார்.

“பிரச்சினை எதுவும் இல்லை. போன்ல சார்ஜ் சுத்தமா காலியாடுச்சு, அதான்.”

“சரி சார், ரூமுக்குப்போய் குளிச்சிட்டு டிபன் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. பிறவு பேசலாம்” என்றவர், கொஞ்ச நேரத்தில் லாட்ஜ் பையனிடம் இட்லி, வடை கொடுத்து அனுப்பினார். நிச்சயமாக, குளிக்கும் பொறுமையெல்லாம் இல்லை. குழாய்த் தண்ணீரில் முகத்தை மட்டும் அலசிவிட்டு அறைக்குத் திரும்பினேன்.

மொபைல் போனை சார்ஜரில் இணைத்ததும் அது மெதுவாக உயிர் பெற்றெழுந்தது.

கோபிகா வாட்ஸப் வாய்ஸ் மெசேஜில் கோபமாகக் கொஞ்சியிருந்தாள். “மொக்க முகுந்தா, எங்கடா போய்த் தொலைஞ்ச? எத்தனை முறை கால் பண்ணுறது… சீக்கிரமா அப்பா அனுப்பின இ-மெயிலுக்கு ஓகேன்னு ரிப்ளை அனுப்பு. எங்க இருந்தாலும் சட்டுபுட்டுனு சென்னைக்கு வந்து சேரு.”

போன் கேலரிக்குள் நுழைந்து நேற்று இரவு எடுத்த சித்தரின் போட்டோவை க்ளிக் செய்ய… “ஐயையோ!” என்று பயந்து பதறியடித்தபடி பாத்ரூம் நிலைக்கண்ணாடி முன் நின்றேன். தாடிக்குள் ஒளிந்திருந்த அந்தச் சித்தரின் பரிச்சயமான முகம் அதில் துல்லியமாகத் தெரிந்தது. ‘நீதான் நான்… நான்தான் நீ!’

எல்லாம் இப்போது கொஞ்சம் புரியத் தொடங்கியது. சாவகாசமாக வெளியே வந்து படபடக்கும் இதயத்துடிப்பை உணர்ந்தபடி நடுங்கும் கைகளால் லேப்டாப்பைத் திறந்தேன். இ-மெயில் இன்பாக்ஸில் கோபிகாவின் அப்பா விஜயவாடாவில் நிர்வகிக்கும் ‘ஸ்பைசி பட்ஸ்’ ஊறுகாய் கம்பெனியிலிருந்து வந்த செய்தி. நான் தலைமை விற்பனை அதிகாரி பதவிக்குத் தேர்வானதை மகிழ்ச்சியுடன் சொல்லி, மூன்று நாள்களுக்குள் பொறுப்பை ஏற்றுக்கொள்ள அறிவுறுத்திப் பல்லிளித்தது.

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய், முகுந்த வினாயகா…’

‘ஆம்’ என்று பதிலளித்தால் ஊறுகாய்க் கம்பெனியின் விற்பனைப்பிரிவுத் தலைமை அதிகாரி, போனஸாக கோபிகா. இல்லையென்றால், ஒருவேளை 2032-ல் சதுரகிரி மலையில் அவ்வப்போது அம்மணமாகச் சுற்றித்திரியும் சுயம்பகர் சித்தராக?

பெரிதாக யோசனை எதுவும் செய்யாமல் இ-மெயிலுக்கு ‘ஆம், உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன்’ என்று பதில் தட்டிவிட்டு லேப்டாப் முகப்பில் சதுரகிரி பற்றிய தரவுகளடங்கிய ‘சுயம்பு சித்தர்’ என்று பெயரிடப்பட்ட பைலை பட்டென்று டெலிட் செய்தேன்.

கதவு தட்டும் சத்தம் கேட்டுத் திறந்தால், வெளியே தயங்கியபடி வடிவேலழகன். “நேத்து உங்களுக்கு ஒன்னும் தேறலைன்னு புரிஞ்சிடுச்சு சார். வர்ற ஆடி அமாவாசைக்கு மறுநாள் வாங்க. அன்னைக்கு கண்டிப்பா ஏதோ நடக்கும்னு என் உள்மனசு சொல்லுது.”

“ம்… வர்ற ஆடி அமாவாசைக்கு என்னால வர முடியாது. எங்க பத்திரிகையோட எடிட்டர் கனகராஜ் சித்தர் வருவாரு” என்று சொன்னதும் சற்றே குழப்பம் கலந்த ஏமாற்றமான முகபாவனையுடன் மெல்ல நகர்ந்தார் வடிவேலழகன்.
(நன்றி -விகடன் …)

.
……………………………………………………………………………………………………………..……..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.