…………………………………..

……………………………………
கடந்த சில நாட்களாக தவித்துக் கொண்டிருக்கும் சென்னை வாழ்
மக்களின் நிலை குறித்தும், வீண் வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு,
நடைமுறையில் எதையும் செய்யாத தமிழகத் தலைவர்களைப் பற்றியும்
வெளுத்து வாங்கி இருக்கிறது விகடன் இதழின் இந்த கட்டுரை –
‘சென்னையில் மழைவெள்ள பாதிப்புகள் ஏற்படாமலிருக்க நிறைய பணிகளைச் செய்துள்ளோம். எனவே, இந்த ஆண்டு மழைநீர் தேங்காது
என்று ஓரளவு நம்பிக்கை இருக்கிறது’ என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால், சுத்தமாக நம்பிக்கையே இல்லை என்பதுதான் உண்மை.
சென்ற 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் பெய்த கனமழையின்போது, ‘ஸ்டாலினுக்கே ஓரளவுக்குத்தான் நம்பிக்கை இருக்குதாம்… அதனால மகாஜனங்களே, இப்பவே உஷார்… உஷார்!’
என்ற தலைப்பில் எழுதப்பட்டதுதான் கீழே இருக்கும் கட்டுரை.
சென்னையில் மழை பெய்தால் எளிதில் வடிந்துவிடும், மழைநீர்
தேங்காது என்று சொல்லப்பட்டது.
அதாவது, தி.மு.க ஆட்சியைப் பிடித்த 2021-ம் ஆண்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், ‘ஒரு சொட்டு தண்ணீர்கூட தேங்காத
நகராக சென்னையை மாற்றுவோம்’ என்று முழங்கினார். ஆனால்,
ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நெருங்கப்போகிறது. பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி, பல நூறு கிலோ மீட்டர் தூரத்துக்கு
மழைநீர் கால்வாயை கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையெல்லாம் கொடுத்தார்கள்.
ஆனால், மூன்று ஆண்டுகளாகவே காட்சிகள் மாறவில்லை. இதோ,
கடந்த சில தினங்களுக்கு (29/11/2023) முன்பாகப் பெய்த மழையில்
மீண்டும் சென்னை மூழ்கியது. பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை. இன்னமும் மோட்டார் வைத்துதான் தண்ணீரை இறைத்துக்
கொண்டுள்ளனர்.
‘இதற்கு பருத்தி மூட்டை குடோன்லய இருந்திருக்கலாமே’ என்பதுபோல, ‘மோட்டார் வைத்து தண்ணீரை இறைப்பதற்கு, எதற்காக
பல நூறுகோடிகளைக் கொட்டி மழைநீர் கட்டமைப்பை உருவாக்கி
யிருப்பதாக கதையளக்கிறீர்கள்?’ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது…?
இந்த நேரத்தில், 2022-ம் ஆண்டில் எழுதப்பட்ட கட்டுரை மீண்டும்
உங்கள் பார்வைக்கு…
”அப்புறம் மகாஜனங்களே… ரெடியாக வேண்டியவங்கள்லாம்
ரெடியாகிடுங்க. அப்புறம் கோடம்பாக்கத்துக்குச் சொல்லல… கொருக்குப்பேட்டைக்குச் சொல்லலனு பஞ்சாயத்தைக் கூட்டிரக்கூடாது.
நான் என்ன சொல்ல வர்றேன்னா… மு.க.ஸ்டாலினுக்கே நம்பிக்கை இல்லையாம். அதனால, சொந்தக்காரங்ககிட்ட சொல்லி வைக்க வேண்டியவங்க, ஊருகாட்டுக்கு வண்டி ஏறவேண்டியவங்க, காரு பைக்கையெல்லாம் பாலத்துல நிறுத்தவேண்டியவங்க இப்பவே ரெடியாகிடுங்க.
அங்கங்க இருக்கற பாலங்கள்ல நாலு செங்கல்லு, பாறாங்ல்லுனு போட்டு
உங்க உங்க இடத்தை ரிசர்வ் பண்ணி வெச்சுடுங்க. அப்புறம், ‘வேளச்சேரி பாலம் ஹவுஸ்ஃபுல்… கத்திப்பாரா பாலம் ஹவுஸ் ஃபுல்’னு மீடியாக்காரங்க போர்டு போட்டுடப் போறாங்க.”
உண்மையிலேயே இப்படித்தான் எச்சரிக்கை செய்யவேண்டும் போலிருக்கிறது..
கடந்த 26-ம் தேதி அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய ஸ்டாலின், ‘சென்னையில் மழைவெள்ள பாதிப்புகள் ஏற்படாமலிருக்க நிறைய பணிகளைச் செய்துள்ளோம். எனவே,
இந்த ஆண்டு மழைநீர் தேங்காது என்று ஓரளவு நம்பிக்கை இருக்கிறது’
என்று கூறியிருக்கிறார். ஆனால், சுத்தமாக நம்பிக்கையே இல்லை
என்பதுதான் உண்மை.
சென்னை மழை வெள்ள பாதிப்பு; அதிமுகவை கை காட்டி தப்பிக்கப் பார்க்கிறதா திமுக?
சென்னையின் பல சாலைகளிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கின்றன.
மீதி சாலைகளில் மின்வாரியம், குடிநீர் வாரியம் போன்றவை தோண்டி வைத்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக எல்லா சாலைகளையும்
மழைநீர் வடிகால் கட்டமைப்பு என்கிற பெயரில் சென்னை மாநகராட்சி தோண்டி வைத்துள்ளது. இதையெல்லாம் தோண்ட ஆரம்பித்துக்
கிட்டத்தட்ட ஓராண்டாகப் போகிறது.
ஆனால், எங்குமே பணிகள் முழுமை பெறவே இல்லை. ஆனால், கடந்த
சில மாதங்களுக்கு முன் நகர்ப்புற துறை அமைச்சர் கே.என். நேரு,
‘இந்த ஆண்டு சென்னையில் மழைநீர் தேங்காது. மக்கள் பாதிக்கப்படவே மாட்டார்கள்’ என்று அவ்வப்போது நம்பிக்கையோடு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
10 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சி…
தி.மு.க ஆட்சிக்கு வந்த 2021-ம் ஆண்டின் பிற்பகுதியில் மழைபாதிப்பு காரணமாகச் சென்னை சிக்கிச் சீரழிந்தது. இதைத் தொடர்ந்து,
‘முந்தைய அ.தி.மு.க. ஆட்சிதான் காரணம்’ என்று ஆளாளுக்குப்
பேசினார்கள்.
கடந்த ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பரில் வெளுத்து வாங்கிய மழை, ஒட்டுமொத்தமாகச் சென்னையையும் அதன் புறநகர்ப் பகுதிகளையும் புரட்டிப்போட, நள்ளிரவே ஓடோடிப்போய் மழை-வெள்ள பாதிப்புகளை
ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்.
‘இவரு கொஞ்சம் ஓவர் ஆக்க்ஷன் பண்ற மாதிரி இருக்கே?’ என்று ஒருசில வாய்கள் உச்சரித்தாலும், உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஆக்க்ஷன்தான். ஆம், நவம்பர் மாதம் துவக்க வாரத்தில் தீபாவளியை
யொட்டி பெய்த பெரு மழையின் போதும் சரி, டிசம்பர் மாதம்
ஒரே நாள் 20 செ.மீ மழையின் போதும் சரி, முதல்வரின் வேகம் மலைக்க வைத்தது. ஏரியா கவுன்சிலர் வருவதற்கு முன்பாக, முதல் நபராக வந்து நின்றார். அதுமட்டுமா, போகிற இடத்திலெல்லாம் புகார் சொல்ல வருபவர்களைக் காவலர்கள் தடுத்தாலும், அருகில் அழைத்து
பிரச்னையைக் கேட்டறிந்தார்.
நவம்பர் மாத மழைக்குக் காரணம்… ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் என்கிற
அ.தி.மு.க ஆட்சியில் நடத்தப்பட்ட ஊழல்கள்தான்’ என்று அப்போதே அறிவித்தார் முதலமைச்சர்.
ஓராண்டில் செய்தது என்ன?
அதையடுத்து டிசம்பரில் ஒரே நாளில் சென்னையை மூழ்கடித்த மழை பாதிப்புகளை ஆய்வு செய்த ஸ்டாலின், ‘கடந்த 10 ஆண்டுகளில்
குட்டிச்சுவர் ஆக்கி வைத்துள்ளனர். விமர்சனம் செய்வதற்கு நான்
தயாராக இல்லை. அடுத்த பருவமழைக்குள் அனைத்து சீரமைக்கப்படும்’
என்று நம்பிக்கையூட்டினார்.
உண்மைதான்… அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில், அதாவது கடந்த 10 ஆண்டுகளாகக் குட்டிச்சுவர் ஆக்கிவைத்துவிட்டனர் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று நீங்கள் என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்?
அந்தக் குட்டிச்சுவர் கூட காணாமல் போய்விட்டதே ! அதாவது, பருவமழை தொடங்குவதற்கு முன்பாக கடந்த செப்டம்பர் 26-ம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் பல்வேறு அதிகாரிகளையும் அமைச்சர்களையும் இணைத்து
ஒரு கூட்டத்தை நடத்தியிருக்கிறீர்கள். இதேபோல கடந்த ஆண்டு
செப்டம்பர் 24-ம் தேதியும் ஒரு கூட்டத்தை நடத்தினீர்களே அது நினைவிருக்கிறதா?
கடந்த ஆண்டு நடத்திய கூட்டத்தில் உங்களுடைய முக்கியமான பேச்சே…’வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மனித உயிரிழப்புகள்
மற்றும் உடைமைகளுக்குச் சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்க அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என்பதாகத்தானே இருந்தது.
அதாவது, மழை-வெள்ளம் சென்னையைப் பாதிப்பதற்கு 45 நாள்களுக்கு முன்னதாகவே அப்படியொரு கூட்டத்தை ஆர்வத்தோடு கூட்டி,
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விரிவாகவே
பேசினீர்கள்.
டீ, பிஸ்கட்… கூட்டம்!
ஆனால், நீங்கள் பேசியதையெல்லாம் உங்களுடைய கெழுதகை
நண்பர்களும் அமைச்சர்களுமான எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன்,
மா.சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன்,
கே.என்.நேரு போன்றோரும்… திறமைவாய்ந்த அதிகாரிகளான தலைமைச்செயலர் வெ.இறையன்பு, டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் பல்துறைகளில் பணியாற்றும் தீரமிக்க செயலாளர்களும் கேட்டுக்கொண்டுதானே இருந்தார்கள்.
பிறகு, எப்படிக் கடந்த ஆண்டு நவம்பர் மழைக்கு மூழ்கியது சென்னை?
உங்கள் கூட்டத்தில் பங்கேற்ற யார் கண்களுக்கும் ஸ்மார்ட் சிட்டிதான் காரணம் என்பது அப்போதே தெரியாமல் போனது எப்படி?
45 நாள்களுக்கு முன்பே தயாராகியும் தி.நகரும், கே.கே, நகரும், கூடுவாஞ்சேரியும் கன்னியாகுமரியும், மதுரையும், கோவையும்
தண்ணீரில் தத்தளித்தது எப்படி?
சரி, இதைக்கூட விட்டுவிடுவோம். ‘பருவமழையை எதிர்கொள்ள
அனைத்து ஏற்பாடுகளும் தயார்’ என்று அக்டோபர் 5-ம் தேதியன்று
(2021) சென்னை மாநகராட்சியின் ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்ததாவது நினைவிலிருக்கிறதா?
எந்தக் கால்வாயை ஆய்வு செய்தார்கள்?
பேய் மழையால் சின்னபின்னமாகிப் போன அதே சென்னையின்
தியாகராய நகர், ஜி.என். செட்டி சாலையில் நின்றுகொண்டுதான்,
அதற்கு 30 நாள்களுக்கு முன்னதாக விரிவான பேட்டியொன்றை
அளித்தார் மாநகர கமிஷனர். ”106 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால்
பணிகள் நடக்கின்றன. சென்னையில் உள்ள 15 மண்டலங்களைக் கண்காணிக்க 15 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மழைநீர் வடிகால்கள் தூர்வாருதல் மற்றும் நீர் நிலைகளில் மிதக்கும் தாவரங்களை அகற்றி, தூர்வாரும் பணிகளைப் பருவமழை காலத்துக்கு முன்னதாகவே விரைந்து முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்’ என்றெல்லாம் பேட்டி கொடுத்தார் ஆணையர் ககன்தீப் சிங் பேடி.
அப்படியென்றால், அந்த 15 சிறப்பு அதிகாரிகளும் எந்தக் கால்வாயை
ஆய்வு செய்தார்கள்? எந்த ஏரியைக் கண்காணித்தார்கள்? எந்தத்
தெருக்களில் இறங்கி மழை நீர் தேங்கும் என்று கண்டுபிடித்தார்கள்?
சரி, இதுவும்கூட தொலைந்து போகட்டும். நவம்பர் 16 க்குப் பிறகு
மொத்தமாக மழை நின்றுபோய்விட்டது. அதிலிருந்து டிசம்பர் 30
பேய் மழை வரை கிட்டத்தட்ட 45 நாள்கள் இடைவெளி இருந்தது. இந்த இடைவெளிகளில் உங்கள் ஆள், படை, அம்பாரியெல்லாம் என்ன செய்துகொண்டிருந்தன!
சின்ன உதாரணம்… சாலைகளையெல்லாம் சுரண்டி புதுச்சாலை
போடுகிறோம் என்கிற பெயரில், மீண்டும் மழைநீர்க் கால்வாயில் அதையெல்லாம் கொட்டியதால், வளசரவாக்கம், தி.நகர் பகுதிகளில்
மீண்டும் வெள்ளப்பெருக்கெடுத்துவிட்டது. இதுபோல ஆயிரத்தெட்டு சொதப்பல்கள். எந்தவொரு இடத்திலும் மழைநீர்க் கால்வாய்ப்
பணியானது முழுமைபெறவே இல்லை. கடந்த ஆட்சியில் அ.தி.மு.க-வினரும் கான்ட்ராக்டர்களும் கூட்டணி போட்டதுபோல இப்போது உங்கள் தி.மு.க-வினரும் கான்ட்ராக்டர்களும் கூட்டணி போட்டுக் கொள்ளையடிக்கின்றனர்.
இதைத் தவிர வேறு பணிகள் ஏதும் நடக்கவில்லை. அடிக்கடி
ஆய்வுக்குச் செல்லும் உங்கள் கண்களுக்கு இதெல்லாம் தெரியாமல்
இருப்பது, விந்தையே! அரசியல்வாதிகள் கூட்டமும், அதிகாரிகளின்
கூட்டமும்… தங்கள் தங்கள் ஏரியாக்களைக் காப்பாற்றி வைத்துக்
கொள்வதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு துளியைக் காட்டினால்கூட
போதும்… பொதுமக்கள் வாழும் பகுதிகளைப் பலமாக வைத்துக்
கொள்வதற்கு.
முழங்கால் தண்ணீரில் ஆய்வு செய்கிறீர்களே… அப்படியே ஐ.ஏ.எஸ்,
ஐ.பி.எஸ் குவார்ட்டர்ஸ்கள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று பாருங்கள்…
ஒரு சொட்டு தண்ணீர் இருக்காது. உங்கள் அமைச்சர்களும் நீதிமான்களும் வசிக்கும் கிரீன்வேஸ் சாலைக்குப் போய் பாருங்கள்… சொட்டுத் தண்ணீர் இருக்காது.
முதலில் உங்கள் ஆய்வுகளை இதுபோன்ற இடங்களில் நடத்துங்கள்.
அரசாங்க பணத்தில், அமைச்சர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினர்கள்
வாழும் இடங்கள் எப்படிப் பராமரிக்கப்படுகின்றன. சம்பளமும்,
கிம்பளமும் வாங்கி வாங்கிக் கொழுத்துக் கொண்டிருக்கும்
அதிகார வர்க்கத்துக்கும், அரசியல்வர்க்கத்துக்கும் அரசாங்க செலவிலேயே வீடு, வாசல் எல்லாம் வாரி வழங்கப்படுகிறது. பளிங்கு போலச்
சாலைகள்…. 24 மணி நேரமும் மின்சாரம்… 24 மணி நேரமும் குடிநீர் என்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்தையும் அனுபவிக்கிறார்கள்.
ஆனால், நின்றால் வரி… நிமிர்ந்தால் வரி… உட்கார்ந்தால் வரி என்று
பற்பல ரூபங்களிலும் வரிகளாகக் கொள்ளையடிக்கப்படும் அப்பாவி பொதுமக்களின் வீடுகளே ஒவ்வொரு மழைக்கும் மூழ்குகின்றன.
சாலையில் நடக்கக்கூட முடியாத பரிதாபம்.
ஸ்டாலின் அவர்களே… திரும்பத் திரும்ப முந்தைய ஆட்சியாளர்களைக்
குறை சொல்லிக்கொண்டே காலத்தை ஓட்டமுடியாது.
அவர்கள்தான் உங்கள் பாஷையில் அடிமைகளாயிற்றே. விட்டுத்தள்ளுங்கள். கிடைத்த இடைவெளியில் நீங்கள் எதைச் சாதித்தீர்கள்… எதை இழந்தீர்கள் என்று யோசியுங்கள்.
link –
https://www.vikatan.com/government-and-politics/precautionary-works-for-rain-and-flood-in-chennai-people-beware
.
………………………………………………..



சென்னை நிலவரத்தை நீங்கள் முரசொலி, தினத்தந்தி போன்ற நடுநிலை பத்திரிகையிலோ இல்லை நக்கீரன் போன்ற பத்திரிகையிலோ பார்த்துத் தெரிந்துகொண்டிருக்கலாமே… விகடனும் improvised முரசொலிதான் என்றாலும், அதன் எஜமானர்களுக்கு ஏற்றபடி செய்திகளை (அதாவது ஒருவர், யாரையாவது காலி பண்ணணும் என்றால் அதற்கு ஏற்றமாதிரி செய்திகளை) வெளியிடும். அதன்படி இப்போ சென்னை வெள்ளத்தைச் சாக்கிட்டு யாரை காலி பண்ண நினைக்கிறார்கள் என்று நாமே புரிந்துகொள்ள வேண்டியதுதான். சென்னை மேயர் மற்றும் மா.சு சொல்லிவிட்டார்கள், சென்னையில் புழல் ஏரியைத் தவிர எங்குமே தண்ணீர் தேங்குவதில்லை, மழை பெய்யப் பெய்ய தண்ணீர் வழிந்தோடிவிடுகிறது. ஐயாயிரம் கோடி செலவழித்து நவீன வடிகால் வாய்க்கால்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன, அதையும் மீறி தண்ணீர் சிறிது எங்காவது தங்கினால் எங்களுக்குச் சொல்லுங்கள் உடனே தண்ணீரை ஆவியாக்கிக் காட்டுகிறோம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்களே. பிறகு என்னதான் பண்ணணும் அரசு என்று நினைக்கறீங்க?
இது கிடக்கட்டும். இன்னொரு செய்தி இன்று தினமலரில் படித்தேன். (https://www.dinamalar.com/news_detail.asp?id=3494433 ) அந்தத் தலைப்பைப் படித்ததும் எனக்கு மனதில் உடனே, முதல்வரிடம் பலமுறை சொல்லியியும் எங்கள் கட்சிக்குத் தரும் பணத்தை-லஞ்சம் என்று நாம் புரிந்துகொள்ளணும், உயர்த்தித் தரவில்லை என்று பத்திரிகை வாயிலாக கம்ப்ளெயிண்ட் பண்ணுகிறார் என்று நினைத்தேன். இந்தச் செய்தியை எப்படித் தவறவிட்டீர்கள்? கொத்தடிமைகளான கம்யூனிஸ்டுகள், விசிக, வை.கோ, முஸ்லீம் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இருக்கும்வரை, சென்னைக்கோ ஏன் தமிழகத்துக்கோ எப்போதுமே விடியல் ஏற்படாது.
ரொம்ப கேட்டால் குடுத்த 25 கோடியை திருப்பி குடு என்று கேட்டால் என்ன பண்ணுவது? எப்போது கை நீட்டி திமுகவிடமிருந்து காசு வாங்கிவிட்டார்களோ அப்போதே கேள்வி கேட்கும் தகுதியை இழந்துவிட்டார்கள். இப்படித்தான் வழவழா என்று பேசி தப்பிக்கவேண்டியிருக்கிறது!