வள்ளுவருக்கு, வக்கீலாக மாறிய ஔவையார் ….!!!

……………………………………

( கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் ஒரு கிராமபோன் பதிவுக்காக பாடத்தயாராகிக் கொண்டிருக்கும் புகைப்படம் மேலே ….)

…………………………………..

1941- ஆம் ஆண்டிலிருந்தே, அவ்வையாரைப் பற்றி ஒரு திரைப்படம்
எடுக்க விரும்பிய எஸ்.எஸ். வாசன், புகழ்பெற்ற அவரது வாழ்க்கை
மற்றும் காலங்கள் குறித்து ஆய்வு செய்து ஒரு வரைவு ஸ்கிரிப்டை
உருவாக்க தமிழறிஞர் கொத்தமங்கலம் சுப்புவின் தலைமையிலான,
ஜெமினி கதைத் துறைக்கு அறிவுறுத்தினார். இந்த குழு,
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டது.

ஔவையாரின் பாடல்கள் பலகாலமாக நிலைத்து தமிழ் உலகில்
உலவி வந்தலும், அவரது காலம், வாழ்க்கை பற்றிய எந்தவித
ஆதாரபூர்வமான ஆவணக்குறிப்புகளும் வரலாற்றில் இல்லை.

எனவே, தமிழ் வரலாற்றில், பல்வேறு காலகட்டங்களில் சொல்லப்பட்ட
பல நிகழ்வுகளை ஔவையாரின் வாழ்க்கையுடன் ஒருங்கிணைத்து,
ஒரு கற்பனை வரலாறு உருவாக்கப்பட்டது.

அதிக முயற்சிகளுக்குப் பிறகு, ஒரு வழியாக திரைக்கதை தயாரானது.

அந்த காலத்தில், ஔவையாரின் பாத்திரத்தை நம்பிக்கை
தரும் விதத்தில் நடிக்ககூடிய ஒரே கலைஞராக
பிரபல மேடை மற்றும் திரைப்பட கலைஞரும், கர்நாடக இசையில்
அருமையாக பாடக்கூடியவருமான கே.பி.சுந்தராம்பாள் மட்டுமே
என்று வாசன் முடிவு செய்தார். ஆனால், தனது கணவரான எஸ்.ஜி.கிட்டப்பா’வின் மறைவுக்குப் பிறகு, கே.பி.சுந்தராம்பாள் நடிப்புலகிலிருந்து சுத்தமாக விலகி இருந்தார்….

கே.பி.சுந்தராம்பாள் அவர்களை மிகவும் வற்புறுத்தி வாசன்
இந்த பாத்திரத்தை ஏற்கச்செய்தார்….. அந்த காலத்தில்,
வேறு யாரும் வாங்காத உச்ச பட்சமான சம்பளம் கொடுத்து
அந்த படத்துக்காக அவரை ஒப்பந்தம் செய்தார்.

வாசனுக்கு ஒரு வித்தியாசமான வழக்கம் உண்டு. தான் தயாரிக்கும்
பிரம்மாண்டமான படங்களை முதலில், தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் திரையிட்டு காட்டி, அவர்களது
கருத்தை தெரிந்து கொள்வார்…. தேவைப்பட்டால், படத்தில் உரிய
மாற்றங்களையும் மேற்கொள்வார். அதன் பிறகே திரைப்படம்
முழு வடிவம் பெற்று வெளியிடப்படும்.

அதே போல், வாசன் முதலில் தான் தயாரித்த அவ்வையார் படத்தை
பார்க்க, அவரது நண்பர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களது
குடும்பத்தினர் அழைக்கப்பட்டு, அவர்கள் தங்கள் கருத்தை
எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

‘படம் மிகவும் மெதுவாக நகர்கிறது… இது ஒரு திரைப்படம்
போல் இல்லை ஒரு ஆவணப்படம் போல இருக்கிறது ‘ என்று
சில கருத்துகள் கிடைத்தன…. .

வாசனும் உண்மையில் அதே கருத்தை தான்கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கொத்தமங்கலம் சுப்பு மற்றும் மற்றவர்களிடம்
படத்தில் பொழுது போக்கு அம்சம் இல்லை என்று சொல்லி,
திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் திறனையும், பார்வையாளர்களை
ஈர்க்கும் வகையிலான பொழுதுபோக்கு காட்சிகளையும் இணைத்து திரைக்கதையை மீண்டும் எழுதச் சொன்னார்.

அப்போதுதான் பண்டைத் தமிழ் மன்னன் பாரி அவ்வையாருக்கு
பிரமாண்ட வரவேற்பு அளித்த காட்சியும், இன்னும் சில
சுவாரஸ்யமான நிகழ்வுகளும் சேர்த்து எழுதப்பட்டன…..

கொத்தமங்கலம் சுப்பு, அதை ஒரு பொழுதுபோக்குப் படமாக
மாற்றினார். கூடுதல் காட்சிகள் கணிசமான செலவில்
படமாக்கப்பட்டது. மிகப்பெரிய முழு தெரு செட் ஒன்று கட்டப்பட்டது.
10,000 க்கும் மேற்பட்ட இளைய கலைஞர்கள் பாரம்பரிய நாட்டுப்புற
நடனங்கள் இணைக்கப்பட்ட கண்கவர் காட்சியில் பங்கேற்றனர்.
1950-களில் இந்த செலவுகள் எல்லாம் மிகவும் பெரிதாக இருந்தது.

இவையெல்லாம் சேர்ந்து திரைப்பட பார்வையாளர்களுக்கு
ஒரு கம்பீரமான காட்சி தாக்கத்தை உருவாக்கியது. இந்த காட்சி
படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருந்தது.

படம் வெளியான பின், நல்ல விமர்சனங்களையும், பாராட்டுகளையும் பெற்றது. நல்ல வசூலையும் பெற்றது. பாடல்கள் அனைத்தும்
மிகச்சிறப்பாக அமைந்தன. பலர் பாடல்களுக்காகவே
மீண்டும் மீண்டும் படம் பார்க்க வந்தனர்.

  • சுமார் 70 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்கள் இவை என்பதை மனதில் வைத்துக்கொண்டு பார்த்தால் – கீழே உள்ள காணொலியும் ரசிக்கும்.….

ஔவையார் –
திரைப்படத்திலிருந்து மதுரை பொற்றாமரைக் குளத்தில்,
வள்ளுவரின் – திருக்குறள் அரங்கேறும் காட்சி ….கீழே –

……………………

.
…………………………………………………………………………………………………..…………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.