…………………………………………………………

………………………………………………………….
பெண்களுக்கு எதிரான சமூக, அரசியல் அமைப்புகளில் உள்ள
பாகுபாட்டை நீக்கி, பாலின சமத்துவத்தோடு அவர்களை எல்லா
தளங்களிலும் பங்கேற்கச் செய்வதற்கான மாநாடுதான் சீடா
(The Convention on the Elimination of All Forms
of Discrimination against Women – CEDAW).
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட
சர்வதேச மாநாடான இதில் இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது.
அந்தக் கருத்தரங்கை நடத்தியவர்களிடம், ‘சீடா பற்றி, அதன்
நோக்கம் பற்றி நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள்.
இவற்றைக் கருத்தில்கொண்டு தீர்ப்பு சொல்லும் வாய்ப்பு எனக்கு
எப்போது வருமோ…’ என்று ஏக்கத்துடன் சொன்னேன்.
‘இந்த விஷயங்கள் உங்கள் மனதில் ஊறிக்கொண்டே இருக்கட்டும்.
என்றாவது ஒருநாள் வழக்கும் வாய்ப்பும் வரும். அப்போது சீடாவின் சாராம்சத்தை நீங்கள் கவனத்தில் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டி
வரலாம்’ என்றார்கள். அடுத்த சில மாதங்களிலேயே அப்படியொரு
வாய்ப்பு எனக்கு வந்தது.
மயிலாடுதுறை அருகிலுள்ள ஒரு குடும்பத்தார் ஓர்
அறக்கட்டளையை நடத்திக் கொண்டிருந்தார்கள். அறக்கட்டளை
சார்பாக நிறைய கல்வி நிறுவனங்களையும் நடத்திக்
கொண்டிருந்தார்கள். அறக்கட்டளை யில் கல்விக்குழு
(எஜுகேஷன் கமிட்டி) என ஒன்று இருந்தது. அவர்களுடைய
சந்ததியினர்தான் அந்தக் குழுவில் இருந்தார்கள். பெண்களை
(Women descendants) அந்தக் குழுவில் இணைக்க வேண்டும்
என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அறக் கட்டளைகள் தொடர்பான
வழக்குகள், அந்த அறக்கட்டளை எந்த இடத்தில் இருக்கிறதோ,
அந்த இடத்தின் அதிகார வரம்புக்குள் உள்ள மாவட்ட
நீதிமன்றத்துக்குப் போகும். இந்த வழக்கும் அப்படிப் போனது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ‘எல்லோரும் மனு கொடுங்கள்.
அவர்களில் யார் சிறப்பானவர் என்பதை பிறகு தீர்மானிப்போம்’
என்றார். மனு கொடுத்தவர்களில் ஆண்களும் இருந்தார்கள்.
எல்லா மனுதாரர்களையும் பரி சீலித்துவிட்டு, இரண்டு ஆண்களுக்கு
தான் அந்தத் தகுதி இருப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் அவர் ‘பெண்களுக்குப் பிறந்தவர்கள்தானே இந்த ஆண்கள்… அதனால்
அவர்கள்தான் ‘ஃபீமேல் டிஸெண்டன்ட்ஸ்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தவிர, மனு கொடுத்திருந்த பெண்களுக்கு தகுந்த அனுபவம்
இல்லாததால் இந்த இரண்டு ஆண்களுக்குக் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து இரண்டு பெண்கள் சீராய்வு மனு
கொடுத்தார்கள். அந்த வழக்கு என்னிடம் வந்தது. நான் எதிர்பார்த்துக் காத்திருந்த சீடாவை அந்த வழக்கில் பயன்படுத்த எனக்கு அது
வாய்ப்பாக அமைந்தது.
கல்விக் குழுவில் பெண்களின் பிரதிநிதித் துவம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்தத் தீர்மானமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பெண்ணுக்குப் பிறந்தவர்கள்தானே ஆண்கள் என சொல்லி
ஆண்களுக்கு வாய்ப்பளித்தால், பெண்களுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். ‘ஃபீமேல் டிஸெண்டன்ட்ஸ்’ என்றால் பெண்
சந்ததியினர்தான். எனவே பெண்களுக்குத்தான் வாய்ப்பு
கொடுக்கப்பட வேண்டும் என்பதை நான் முதலில் தீர்மானித்தேன்.
என்னுடைய அந்தக் கருத்துக்கு வலு சேர்க்க, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும், ஆங்கில அகராதியிலிருந்து அதை எப்படிப்
புரிந்துகொள்ள வேண்டும் என்ற விஷயங்களையும் தீர்ப்பில்
குறிப்பிட்டேன்.
மனு கொடுத்த பெண்களுக்கு அனுபவமில்லை என்று
குறிப்பிடப்பட்டிருந்த காரணத்தையும் என்னால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை. ஏற்கெனவே தீர்ப்பளித்த நீதிபதியின் கருத்தின்படி
அனுபவம் உள்ளவருக்குத்தான் வாய்ப்பு என்று முடிவு செய்து,
ஆண்களுக்கே அனுபவங்களையும் வாய்ப்புகளையும் கொடுத்துக்கொண்டிருந்தால், பெண்களுக்கு எத்தனை ஜென்மங்கள்
ஆனாலும் அனுபவங்களைப் பெற வாய்ப்பே இருக்காதே….
எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்தாவது பெண் நீதிபதியாக
எனக்குக் வாய்ப்பு கிடைத்தது . ஆண்களுக்கு இணையான வேகத்தில் பெண்களால் முன்னேற முடியாமல் போக பல காரணங்கள் உண்டு.
அதற்கு அவர்களுடைய திறமையோ, தகுதியோ காரணமாவதில்லை.
திருமணம், குழந்தைப்பேறு என்ற பெயரில் பெண்ணின் வாழ்க்கையில்
பல தருணங்களில் இடைவெளி விழுகிறது. கணவருக்கு வேலை மாறுதல் காரணமாக வேறு ஊருக்கோ, நாட்டுக்கோ இடம்பெயர
வேண்டியிருந்தால் தன் கரியரை, கனவுகளைத் தியாகம் செய்துவிட்டு மனைவியும் உடன் செல்ல வேண்டியிருப்பதாலும் அவளது வளர்ச்சி தடைப்படுகிறது.
இப்படி பெண்ணின் திறமையோடு தொடர்பில்லாத எத்தனையோ
தடைகள் சமூக கட்டமைப்பினாலும் குடும்ப கட்டமைப்பினாலும் எதிர் பார்ப்பினாலும் ஏற்படுகின்றன. வாய்ப்புகளே அளிக்கப்படாத
நிலையில் அவளுக்கு அனுபவம் எங்கிருந்து கிடைக்கும்?
மேற்குறிப்பிட்ட வழக்கில் மறு சீராய்வு மனு கொடுத்த இரண்டு
பெண்களில் ஒருவர் மருத்துவர், இன்னொருவர் சமூகத் தொண்டுகள்
செய்பவர். இருவருக்குமே பொதுப் பணிகளில் அனுபவம் உண்டு
என்பதால் இருவரும் தகுதி குறைந்தவர்களே இல்லை. கல்விக்
குழுவில் இருப்பதற்கான தகுதி உள்ளவர்களே என்று சொல்லித்
தீர்ப்பளித்தேன். அதை எதிர்த்து ஆண்கள் உச்ச நீதிமன்றத்துக்குப்
போனார்கள். அங்கேயும் நான் அளித்த தீர்ப்புதான் சரி
என்பது உறுதியானது.
நீதிபதியாகப் பணியாற்றிய பத்தாண்டுகளில் எனக்கு மிகுந்த
மனநிறைவைக் கொடுத்த வழக்குகளில் இதுவும் ஒன்று. பெண்களின் பங்களிப்பும் பிரதிநிதித்துவமும் தேவைப்படும் அனைத்து
இடங் களிலும் சீடாவை நினைவு கூரலாம்.
உரிமையை நிலைநாட்ட உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு கொடுத்த
அந்த இரு பெண்களின் துணிச்சலும் பாராட்டுக்குரியது.
சரியெனப்படுகிற விஷயத்தை சட்டரீதியாக சாதிப்பதிலும் நிலைநாட்டுவதிலும் தங்களின் பங்கும் பொறுப்பும் கடமையும்
முக்கியம் என்பதை ஒவ்வொரு பெண்ணுக்கும் இதன் மூலம்
உணர்த்த விரும்புகிறேன்.
(நன்றி – நீதியரசி பிரபா ஸ்ரீதேவன் )
.
………………………………………………………………………………………………..……….



நிஜமான சாமியாரா இல்லை ….