……………………………………

………………………………….
இந்து தமிழ் திசையில் – இளையராஜா நேர்காணல் …
…………..
உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல; இசையால்
இணைந்த இசைஞானி இளையராஜாவின் பன்மொழி ரசிகர்கள்
அவரது எண்பதாவது பிறந்த நாளை பலவிதங்களில் கொண்டாடிக் களித்திருக்கிறார்கள்.
5 முறை தேசிய விருது, 9 மொழிகளில் 1420 படங்களுக்கு
7300 பாடல்கள் என, கடந்த 46 ஆண்டுகளில் அவருடைய சாதனை பிரம்மாண்டமானது.
அவற்றில் ராஜா தனது சொந்தக் குரலில் பாடியவை மட்டுமே
400 பாடல்கள். ‘அன்னக்கிளி’யில் தொடங்கிய அவரது திரையிசைப்
பயணம், அமேசான் ஓடிடி வரை நவீனத் தலைமுறைப்
படைப்பாளிகளோடு இணைந்து ஒரு தீராத நதியாக
ஓடிக்கொண்டிருக்கிறது.
அவரது இசைப்பணியை கௌரவம் செய்யும் விதமாக,
நாடாளுமன்ற மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக
ஆக்கியிருக்கிறது மத்திய அரசு. அரசியல் குறித்து உரையாட
ராஜாவுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லாவிட்டாலும் இசை குறித்த கேள்விகளுக்கு உயிர்ப்பு மிக்க பதில்களைத் தந்தார்.. இந்து தமிழ்
திசைக்காக இளையராஜா அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து –
…………….
நீங்கள் பார்த்து, கேட்டு வளர்ந்த முதல் பாடகி யார்? –
அம்மாவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்! எல்லாக் கிராமத்து அம்மாக்களிடமும் புழக்கத்தில் இருந்த தாலாட்டுப் பாடல்களைக்
கேட்டே நானும் வளர்ந்தேன்.
மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ‘லைலா மஜ்னு’ படத்தின் இசை
உங்கள் உள்ளம் தொட்டது குறித்துச் சொல்லியிருந்தீர்கள்..
அதுபற்றி நிறையப் பேசிவிட்டேன். அப்போது பண்ணைப்புரத்தில்
பெருமாள் வாத்தியார் நடத்தி வந்த தொடக்கப் பள்ளியில் மூன்றாம்
வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு 10 வயது. எனது
அண்ணன் பாஸ்கரும் நானும் எங்கள் கிராமத்தின் டூரிங் தியேட்டருக்கு அடிக்கடிப் போய் படங்களைப் பார்ப்போம். அப்படித்தான்
‘லைலா மஜ்னு’ படத்தைப் பார்த்தோம்.
பானுமதியும் நாகேஸ்வர ராவும் நடித்திருந்தார்கள். படத்தின்
பாடல்களுக் காகவே மீண்டும் மீண்டும் போய் பார்த்தோம். அந்தப்
படத்துக்கு சி.ஆர்.சுப்பராமன் இசையமைத்தார் என்பதெல்லாம்
அந்த வயதில் தெரியாது. ‘லைலா மஜ்னு’ படம் பார்த்த மறுநாள்
பள்ளியில் ஆசிரியர் எழுதச் சொன்ன பாடத்துக்கு பதிலாக ‘லைலா’
என்று சிலேட்டில் எழுதிவிட்டேன். ஆசிரியர் துவைத்து எடுத்துவிட்டார்.
‘ஆதியந்தம் இல்லாத அருட்ஜோதியே’ என்கிற பாடலைப் பள்ளியில் மாணவர்கள் முன் பாடிய தருணம் நினைவில் இருக்கிறதா? –
எப்படி மறப்பது? ‘கோம்பை’ நகரில் நடுநிலைப் பள்ளியில்
படிக்கும்போது ‘மாநில மீதினிலே மாதா உந்தன் மலர்ப் பதமே பணிந்தோம்..’ என்று சரஸ்வதியைப் பற்றிய கடவுள் வாழ்த்துப்
பாடலை ‘பிரேயர்’ அணிவகுப்பில் பாடுவேன். பிறகு
உத்தமப்பாளையம் அருகில் உள்ள தேவாரம் என்கிற ஊருக்கு
2 மைல் தூரம் தினசரி நடந்துபோய் 9 வகுப்பில் சேர்ந்து படித்தேன்.
பள்ளியில் சேர்ந்து 3 மாதம் ஓடியிருந்தது. நான் நன்றாகப் பாடுவேன்
என்பதை ஆசிரியர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால், மாணவர்கள்
யாரும் என்னுடன் பழக முன்வரவில்லை. நடுநிலைப் பள்ளியில் இருந்த கொண்டாட்டமும் குறும்பும் உயர்நிலைப் பள்ளியில் இல்லை.
அங்கே ‘ஆதியந்தமும் இல்லாத அருட்ஜோதியே’ பாடலை பிரேயர் அணிவகுப்பில் குருசாமி என்பர் பாடுவார். அன்றைக்கு அவருக்கு
உடல்நலம் குன்றி, குரல் சரியில்லை. என்ன தோன்றியதோ “ராஜய்யா.. இன்னைக்கு நீ பிரேயர் சாங் பாடிடு” என்று என்னைக் கூப்பிட்டு நிறுத்திவிட்டார்.
அதுவரை இல்லாத வழக்கமாக ஒரு புதுப் பையனைக் கூப்பிட்டுப்
பாடச் சொல்கிறார்களே என்று நான் பாடத் தொடங்கும் முன்னரே
‘பின் டிராப் சைலன்ஸ்’. பிரேயர் பாடல் பாடி முடித்ததும்
சலசலப்புடன் மாணவர்கள் கலைந்து அவரவர் வகுப்புகளுக்குச்
செல்வது வழக்கம்.
ஆனால், நான் பாடி முடித்தபோது அந்தச் சலசலப்பும் இல்லை.. எல்லா
மாணவ, மாணவிகளும் ‘யார் இந்தப் பையன்?’ என்று என்னைக்
கூர்ந்து பார்த்தபடி அமைதியாகச் சென்றார்கள். அதன்பிறகு என்னோடு எல்லோரும் மனம் விட்டுப் பழகினார்கள். கலையால் விளைந்த
பயனைப் பள்ளிப் பருவத்திலேயே உணரத் தொடங்கிவிட்டேன்.
உங்களுடைய இப்போதைய குரல்தான் எல்லார் மனதிலும்
பதிந்திருக்கிறது. இந்தக் குரல் சிறு வயது முதலே இருந்ததா? –
இல்லை.. எல்லாரையும்போல்தான் எனக்கும் குரல் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. 13 வயதில் பெண் குரலில் இருந்தபோதுதான்
அண்ணனுடன் மேடைகளில் பாடச் சென்றேன். திருவெறும்பூர்
கம்யூனிஸ்ட் தொழிலாளர் மாநாட்டில் பாடுவதற்கு இரண்டு
பாடல்களைச் சொல்லிக்கொடுத்து அண்ணன்கள் என்னை
அழைத்துச் சென்றிருந்தார்கள். 50 ஆயிரம் தொழிலாளர்கள்
கூடியிருந்த மக்கள் கடல் அது.
நான் பாடி முடித்ததும் ஐம்பதாயிரம் பேரும் கைதட்டிப் பாராட்டியது
எனக்குப் புது அனுபவமாக இருந்தது. பாடலுக்கும் பாடிய எனது
குரலுக்கும் கிடைத்த அங்கீகாரம் அது.
அடுத்து வந்த வருடத்தில் பருவ மாற்றம் காரணமாக எனது குரல்
உடைந்து அதிலிருந்த பெண் தன்மை போய்விட்டது. குரல் மாறிவிட்டது, ஜோடிப் பாடல் பாட இனி தோதுபட மாட்டான் என்று தெரிந்ததும்
என்னை விட்டுவிட்டு அண்ணன்கள் கச்சேரிகளுக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். இனி பாட வாய்ப்புக் கிடைக்காது என்று தெரிந்தபிறகுதான் நான் ஆர்மோனியம் வாசிக்கக்
கற்றுக் கொண்டேன்.
ஊரில் இருக்கும்போதே நாடகங்களுக்கு இசையமைக்கத் தொடங்கிவிட்டீர்களா? –
இல்லை. சென்னை வந்த பிறகுதான் அதிக நாடகங்களுக்கு இசையமைத்தேன். அதற்கு முன்னர், பாரதிராஜா தேனியில்
ஒரு நாடகம் போட்டார். அதற்குத்தான் முதன் முதலில்
இசையமைத்தேன்.
சென்னை வந்த பிறகு இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம்
150 படங்களுக்கு உதவியாளராகப் பணிபுரிந்திருக்கிறீர்கள்!
இது எப்படிச் சாத்தியமானது? –
எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். ஏனென்றால் 68 முதல்
74 வரை 6 ஆண்டுகள் அவரிடம் பணி புரிந்திருக்கிறேன். அவருக்கு வேலையில்லாத நேரங்களில் சலில் சௌத்ரி, கே.வி.மகாதேவன்,
எம்.எஸ்.வி., மலையாளத்தில் தேவராஜன், உமர் உட்படப் பல இசையமைப்பாளர்களுக்கு வேலை செய்திருக்கிறேன்.
காம்போ ஆர்ஹன், கிட்டார் என இவர்கள் அனைவருக்கும் இன்ஸ்ட்ருமெண்ட்டும் வாசித்திருக்கிறேன். ஒரே வருடத்தில்
தேவராஜன் மாஸ்டருக்கு 53 படங்களுக்கு வாசித்திருக்கிறேன்.
சதா அண்ணன் இதையறிந்து “வருடத்துக்கு 52 வாரம் தானய்யா
இருக்குது!” என்று ஆச்சர்யப்பட்டார். நான் இசையமைப்பாளர்
ஆனபிறகு ஒரே வருடத்தில் 57 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன்.
இசையை வாசிப்பதும் இசையை பிரசவிப்பதும் மன அழுத்தம்
தருவதல்ல; மனதை இலகுவாக்குவது.
‘அன்னக்கிளி’ படத்துக்கு பாடல் பதிவு செய்யப்பட்டபோது
மின் தடை ஏற்பட்டது உண்மைதான் என்று கூறியிருக்கிறீர்கள்.
அப்போது உங்கள் உணர்வுநிலை எப்படிப்பட்டதாக இருந்தது? –
அப்போது நான் வெற்றிபெற்ற இளைய ராஜா கிடையாதே..!
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை ஒரு சாமானியன் சந்தித்தால்
என்ன உணர்வை எதிர்கொள்வானோ அதையேதான் நானும் எதிர்கொண்டேன்.
இன்றைக்கு இசைக்குள் தொழில்நுட்பம் அதிகமாக ஆதிக்கம்
செலுத்துகிறது. குறிப்பாக ‘ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ்’
இசைத் துறைக்குள் நுழைவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? –
அதை நான் எதற்குப் பார்க்க வேண்டும்? நான் பார்க்க வேண்டும்
என்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? இது கோபத்தில் பேசுவதல்ல;
நான் நானாகத்தான் இருக்க முடியும். மனிதன் என்றாலும் பிற உயிர்கள் என்றாலும் ஒவ்வொன்றும் ஒரு தனித்தன்மையுடன் இறைவனால் படைக்கப்பட்டவை. அவை இயற்கைக்கு முரணாக மாறும்போது,
இறைவன் வரமாக வழங்கிய தனித் தன்மையை இழந்து விடுகின்றன. இசையும் அப்படித்தான்.
டெக்னாலஜி என்பது டெக்னிக் என்கிற புகுத்தப்பட்ட உத்தியை
உள்ளே வைத்திருக்கிறது. ‘டெக்னிக்’கை வைத்துக்கொண்டு
இசையைப் பிரசவிக்க முடியாது. இசை என்பது இசைதான்.
அதைப் படைக்கத்தான் முடியும், அதைப் படைப்பதும் பாடுவதும்,
இசைப்பதும் கலைஞனின் கற்பனையிலிருந்து இயற்கையாகப் பிரசவிக்கப்படுவது. அதை உத்தி வழியே உற்பத்தி செய்ய முடியாது.
அப்படிச் செய்தால் அது இசையல்ல.
………
இசையும் மொழியும் இணையும்போதுதான் இசையின்
ஆயுள் கூடுகிறதா? –
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ஒரு பாடலின் வரிகள் மறந்துபோய்விட்டன என்று வைத்துக்கொள்ளுங்கள். அதைப் பற்றி
அந்தப் பாடலின் இசையால் கவரப்பட்டவர் வரிகள் இல்லாமலே
இசையை மட்டும் பாடுவது எப்படி? இந்த இடத்தில் மொழியை இசை வென்றுவிடுகிறது இல்லையா? ஒரு சிறு எடுத்துக்காட்டு.
சமீபத்தில் ஆந்திராவில் இசை நிகழ்ச்சி நடத்தினேன். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள், தமிழ்ப் பாடல்களை வரி பிசகாமல் பாடுகிறார்கள். இதற்குக் காரணம் அவர்களுக்குத் தமிழும் தெரியும் என்பதல்ல; இசைக்கு மொழி தேவைப்படுவதில்லை என்பதுதான்.
ஒரு பாடல்போல் இன்னொரு பாடல் இல்லாதபடி எப்படி
இசையமைக்க முடிகிறது? –
அதுதானே நான். எனது இசையுலகம் காற்றுடன் சம்பந்தப்பட்டது. உயிர்களோடும் வானோடும் சம்பந்தப்பட்டது. செவி என்பது என்
இசையை உள்வாங்கும் ஒரு கருவி. அதற்குத் தெரியாது, நம்மைக்
கடந்து செல்லும் இசை ஆன்மாவுக்குள் ஊடுருவிச் செல்வது என்று.
எனது இசை உயிர்களை வாழ்விப்பது. ஏழு சுரங்களுக்குள்தான்
இருக்கிறது இசை என்று இந்தப் பிறவியில் நாம் கண்டு
பிடித்திருக்கிறோம். ஆனால், அதைத் தாண்டி ஏதோ ஒன்றை
எனது இசையில் இறைவன் புகுத்துகிறான். அதைப் புகுத்த நான்
சரியான தெரிவு என்று கடவுள் நினைத்ததால் என்னிடம் நீங்கள்
வியந்து நிற்கிறீர்கள்; அவ்வளவே!
உங்கள் இசையைக் காட்சி மொழியின் வழியாகக் கௌரவம்
செய்த புத்தாயிரத்துக்குப் பிறகான இயக்குநர்கள் என்று
யாரையெல்லாம் சொல்வீர்கள்? – அப்படி யாரையும் குறிப்பிட்டுச்
சொல்வது அறமல்ல; இந்தக் கேள்வியைத் தவிர்த்துவிடலாம்.
‘சத்மா’, ‘மகாதேவ்’ என நீங்கள் இந்தியில் இசையமைத்த
படங்கள் வெள்ளி விழா கண்டன. ஆனால், பாலிவுட்டில் தொடர்ந்து இசையமைக்கவில்லையே ஏன்? –
என்னைப் பற்றி அங்கிருப்பவர்களுக்குப் பயம் இருக்கிறது. இவரை
நம்மால் நெருங்க முடியவில்லையே என்கிற அகம் அவர்களுக்கு.
அதனால், நிறைய கட்டுக்கதைகளைப் பரப்பி விட்டார்கள்.
அதைப் பற்றி நான் கவலைப் படவில்லை. அவர்களை நான்
‘இம்ப்ரெஸ்’ பண்ண வேண்டும் என்று ஏதுமில்லை.
எனது பாடல்கள், மொழி கடந்து, இனம் கடந்து சென்று மக்களை
‘இம்ப்ரெஸ்’ செய்வது எனக்குப் போதும்.
இந்தி இசை மேதை நௌஷாத் அலி – “காலம் தான் இளையராஜாவின்
இசைச் சாதனையை மதிப்பிட முடியுமே தவிர, வேறு யாராலும் அல்ல; வெளிப்படையாகச் சொல்வதென்றால் இந்தப் பிறவி மேதையிடமிருந்து
நான் கற்றுக்கொண்டது நிறைய” – என்று உங்களைப் பாராட்டினார். இப்படிப்பட்டவர்களும் உங்கள் பாடல்களைக் கேட்டுப் பெற்றுப் பயன்படுத்திய இசையமைப்பாளர்களும் பாலிவுட்டில் இருக்கத்தானே செய்கிறார்கள்.. ???
என் இசைக்குத்தான் எல்லாப் பெருமையுமே தவிர, தனி மனிதனாக
இந்த இளையராஜாவுக்கு அல்ல. அவர்களைப் பொறுத்தவரை
எனது இசையும் நானும் ஒன்று என்றே நினைத்துப் பாராட்டுகிறார்கள்.
உலகம் முழுவதிலும் அப்படியே நினைக்கிறார்கள். அது எனக்கு
இறைவன் வழங்கிய அருட் கொடை.
நௌஷாத் அலி, என்னைக் குறித்து நிறைய விசாரித்துவிட்டுத்தான்
என்னை அணுகி வந்தார். எத்தனையோ முறை சந்தித்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் என்னை மிகவும் மரியாதையாக நடத்தினார்.
நான் சிறு வயது முதல் அவரது பாடல்களைக் கேட்டு ரசித்து,
வளர்ந்தவன்.
உங்கள் மீது சொல்லெறிபவர்களை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? –
உலகை எந்தக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறோமோ அப்படித்தான்
அது நமக்குப் புலப்படும். மனிதருக்கு மனிதர் இந்த conceptions மாறுபடுகிறது. ஒரு கம்யூனிஸ்ட், ‘உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வு
என்பதே இல்லாத ஒரே தேசமாக ஏன் இருக்கக் கூடாது’ என்று
பார்ப்பார். ஒரு கவிஞன். ‘கடவுள் எவ்வளவு சிறந்த படைப்பாளி!’
என அவரது படைப்பில் இருக்கும் உன்னதங்களை எண்ணி
வியந்துபோவார்.
இது மனதின் விசாலத்தன்மையை, தொலைநோக்குச் சிந்தனையை,
கடவுள் தந்த படைப்பாற்றலைப் பொறுத்து மாறுபடுகிறது. ஆனால், எல்லாரிடமும் இதை எதிர்பார்க்க முடியாது. மனதால் குறுகிப் போன,
இறுகிப் போனவர்கள் என் மீது குறை காண்பது அவர்களுடைய
பார்வையின் கோளாறு.
என் மீது குறை காண்பவர்களால் ஒருபோதும் என்னை மாற்ற
முடியாது. அப்படிப்பட்டவர்கள்தான் என் மீது பந்தை அடிக்கிறார்கள்.
எத்தனை முறை வீசினாலும் நான் பந்தைத் தொடுவதில்லை.
ஏனென்றால் நான் ‘மேட்ச்’ ஆடுபவன் அல்ல.
ஹங்கேரி இசைக்கலைஞர்கள் உடனான உங்கள் பந்தம் எப்படித் தொடங்கியது? –
இசை வானத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் கலை. இது சென்னையின் வானம், இது டெல்லியின் வானம், இது ஹங்கேரியின் வானம் என்று அது பார்ப்பதில்லை. எனக்கு எல்லா வானமும் ஒன்றுதான்.
மத்திய அரசு அளித்த மாநிலங்களவை எம்பி நியமனத்தை மக்களுக்காகப் பயன்படுத்த முடிகிறதா? –
என்னையும் எனது இசை வாழ்க்கையையும் மத்திய அரசு
மதித்திருப்பதன் அடையாளமே எம்.பி.பதவி. ‘நான் கட்சியில் சேர்ந்துவிட்டேன்’ என்று அதைத் தவறாகப் பிரச்சாரம்
செய்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
எனது இசையின் ரசிகர்களாக இருக்கும் மக்களுக்குத் தெரியும்,
‘ராஜா அரசியலுக்கு அப்பாற்பட்டவன்’ என்பது.
எம்.பி. பதவியை மக்களுக்காகப் பயன்படுத்த முடிகிறதா என்று
கேட்டீர்கள். அவையில் நான் பேசவிருக்கும் எனது முதல் உரையைக் கொடுத்திருக்கிறேன். அது வெளியாகும்போது இதற்கான பதில்
கிடைக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி மீது நல்ல மதிப்பை வைத்துள்ள உங்களுக்கு,
அவரது செயல்பாடுகளில் பிடித்தவை பற்றிக் குறிப்பிட முடியுமா?
இந்தியாவை உலக அரங்கில் முன்னிறுத்துவதையே தனது
முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படுகிறார். இதற்கு முன்னர்
இருந்த எந்தப் பிரதமரும் நம் நாட்டின் புகழையும் பெருமைகளையும் பண்பாட்டையும் உலகறியச் செய்தது இல்லை. இது ஒன்றுபோதுமே
அவரது செயல்பாடுகளின் தொலைநோக்கைப் புரிந்துகொள்வதற்கு.
(நன்றி – இந்து தமிழ் திசை தளம் …)
.
……………………………………………….



மிகவும் பண்பட்ட ஒரு பேட்டி. மேதை மேதைதான்!
Nice Interview from Music!!!