கருப்புப் பணமும் – ஒரு வித்தியாசமான விசாரணையும் ….!!!

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை
பல இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ளது பற்றிய வழக்கில்,
சுப்ரீம் கோர்ட் மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்து
வரும் நிலையிலும், அவர்களைப் பற்றிய விவரங்களை
வெளியிட மறுத்து வருகிறது மத்திய அரசு.

சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறிவரும் சாக்குகளைப் பார்க்கும்போது, ஒரு கட்டத்தில் கோர்ட் விவாதம் இப்படியும் அமையலாம் என்றே தோன்றுகிறது.

சுப்ரீம் கோர்ட் நீதிபதி : வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்
பணம் போட்டுள்ள இந்தியர்களின் பட்டியலை வெளியிடும்படி, அரசுக்கு இந்த நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. பட்டியல் தயாராக உள்ளதா?

மத்திய அரசு வக்கீல் : அதில் சட்டச் சிக்கல் இருப்பதால் பட்டியலை வெளியிடுவது பற்றி விவாதிக்க ஒரு
ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது யுவர் ஹானர்.
அந்தக் குழுவில் கூறப்படும் கருத்துகள் குறித்து அமைச்சரவையில் விவாதித்த பிறகு, பட்டியலை
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் தேதியை எந்தத்
தேதியில் அறிவிப்பது என்று முடிவெடுக்க உரிய
நடவடிக்கை எடுக்கப்படும்.

சு.கோ.நீதிபதி : மக்கள் பணத்தைக் கொள்ளை
அடித்தவர்களின் பெயர்களை வெளியிடுவதில் ஆலோசிக்க என்ன இருக்கிறது?

ம.அ.வக்கீல் : இருக்கிறது யுவர் ஹானர். பட்டியலை வெளியிட்டால், உலகெங்கிலும் உள்ள கறுப்புப் பண வாடிக்கையாளர்களை இழந்து, ஸ்விஸ் பேங்க் திவாலாகி
விடக் கூடிய ஆபத்து இருக்கிறது. அந்த வங்கியின் பணியாளர்கள் வேலை இழப்பார்கள். அவர்களுக்கு நாம் நஷ்டஈடு தர வேண்டியிருக்கும். உலகம் முழுவதும் வங்கித் தொழில் பாதிக்கும்.

பொதுநல வக்கீல் : யுவர் ஹானர், மற்ற நாடுகள் எல்லாம் கறுப்புப் பணத்தை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுத்துவிட்டன. இந்திய அரசு மட்டும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ம.அ.வக்கீல் : மற்ற நாட்டு அரசுகளுடன் இந்திய அரசை
ஒப்பிட முடியாது யுவர் ஹானர். இந்தியாவில் நடப்பது
இந்திய அரசு. மற்ற நாடுகளில் நடப்பது மற்ற நாடுகளின்
அரசு. எனவே, மற்ற நாடுகளில் செய்வதுபோல் இங்கு
செய்ய முடியாது.

சு.கோ.நீதிபதி : கறுப்புப் பணத்தை மீட்பது அரசின்
கடமை இல்லையா?

ம.அ.வக்கீல் : இப்போது போடப்பட்டுள்ள பணத்தை
அவசரப்பட்டு மீட்டு விட்டால், எதிர்காலத்தில் மீட்பதற்கு
கறுப்புப் பணமே இல்லாமல் போய்விடும். பெட்ரோல் விலை லிட்டர் ரூ.197-ஐ எட்டிவிடும். பண வீக்கம் 38.39% அளவுக்கு உயர்ந்துவிடும். இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன.

சு.கோ.நீதிபதி : பட்டியலை அரசு எப்போதுதான்
வெளியிடும்?

ம.அ.வக்கீல் : பட்டியலில் உள்ளவர்களின் மீது வழக்குத்
தொடரும் நிலை வரும்போது – நிச்சயமாக வெளியிடப்படும். முன்னதாக வெளியிட்டால் அவர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி விடுவார்கள்.

சு.கோ.நீதிபதி : வழக்குத் தொடரும் நிலை எப்போது வரும்?

ம.அ.வக்கீல் : அது வராது யுவர் ஹானர்.
வழக்கு தொடர்ந்தால், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அரசை மதிக்க மாட்டார்கள். பங்கு பத்திரத் தொழில் விழுந்துவிடும். அதன் காரணமாக தீவிரவாதிகளுக்குக்
கோபம் வரும். வெடிகுண்டு சம்பவங்கள் நடந்து
உயிர் இழப்புகள் அதிகரிக்கும். கறுப்புப் பணக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் பிரச்சனைக்கு ஒரே தீர்வு.

சு.கோ.நீதிபதி : கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள். இது இந்த நாட்டு மக்களிடமிருந்து
கொள்ளை அடிக்கப்பட்ட பணம் என்பதையாவது
இந்த அரசு ஒப்புக் கொள்கிறதா இல்லையா?

ம.அ.வக்கீல் : ஆம், யுவர் ஹானர். அதனால்தான்
அதற்குரிய வரியை வசூலிக்க பட்டியலில் உள்ளவர்களுடன்
பேசி வருகிறோம்.

சு.கோ.நீதிபதி : மொத்தப் பணமுமே கொள்ளை
அடிக்கப்பட்ட பணம் எனும்போது, வரி வசூல் பற்றி
ஏன் பேசுகிறீர்கள்?

ம.அ.வக்கீல் : இல்லாவிட்டால் வரியும் கொள்ளை
போய்விடும் யுவர் ஹானர்.

பொதுநல வக்கீல் : வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து
பெறப்பட்ட பட்டியலை அரசு மறைப்பதில் உள்நோக்கம் இருக்கிறது யுவர் ஹானர்.

ம.அ.வக்கீல் : கறுப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டு விட்டதால், அது வெளிநாட்டுப் பிரச்சனையாகி விட்டது. பெயர்களை வெளியிட்டால் அயல்நாடுகளுடனான
உறவு பாதிக்கப்பட்டு உலக யுத்தமே வரலாம். அணுகுண்டுகள் வீசப்பட்டு லட்சக்கணக்கானோர் உயிரிழக்கலாம். அரசு இவ்வளவையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

சு.கோ.நீதிபதி : கொள்ளையர்களுக்கு அரசு பாதுகாப்பு
அளிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கொள்ளைகளில் எத்தனை வகை இருக்கிறது என்பதை அறிய இந்த நீதிமன்றம் விரும்புகிறது.

ம.அ.வக்கீல் : நல்ல கேள்வி யுவர் ஹானர்.
இந்திய வருமான வரித் துறையை மட்டும் ஏமாற்றி சில தொழிலதிபர்கள், நடிகர்கள் போன்றோர் நமது நாட்டுக்குள்ளேயே நேர்மையாகப் பதுக்கி வைக்கும் பணம்
ஒரு வகை கொள்ளை. அது நல்ல கொள்ளை.

சு.கோ.நீதிபதி : கெட்ட கொள்ளை என்பது?

ம.அ.வக்கீல் : எந்தத் தொழிலும் செய்யாமல்
அரசியல்வாதிகள் பினாமி பெயர்களில் நமது நாட்டு
வங்கிகளில் போட்டு வைக்கும் பணம் – கெட்ட கொள்ளை.

சு.கோ.நீதிபதி : வெளிநாட்டு வங்கிகளில் போடப்படுவது?

ம.அ.வக்கீல் : சில தொழிலதிபர்கள் தங்கள் தொழில் மூலம் கொள்ளை அடிக்கும் பணத்தை நாட்டுப் பற்றில்லாமல், வெளிநாட்டு வங்கிகளில் போடுவது மோசமான கெட்ட கொள்ளை. அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில்
ஊழல் செய்து அதையும் வெளிநாட்டு வங்கிகளில் போடுகிறார்களே அதுதான் படுமோசமான கெட்ட
கொள்ளை. இப்படி பல வகை கொள்ளைகள் உள்ளன.

சு.கோ.நீதிபதி : இந்த நீதிமன்றம் கவலைப்படுவது,
ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் விற்பனை போன்ற
சமூக விரோதச் செயல்கள் மூலம் செய்யப்படும் பயங்கர கொள்ளை பற்றித்தான். அதைப் பற்றியும் அரசு
கவலைப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது.

ம.அ.வக்கீல் : நீதிமன்றம் உத்தரவிட்டால் அதிர்ச்சி
அடைய இந்த அரசும் தயாராக இருக்கிறது யுவர் ஹானர்….

ஆனால், வெளிநாட்டு வங்கிகளுடன் போட்டுள்ள
ஒப்பந்தத்தை மதிக்காவிட்டால் உலகமே நம்மை தூற்றும்.
ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்கும்.

ம.அ.வக்கீல் : ரகசியங்களை வெளியிட மாட்டோம்
என்பதுதான் ஒப்பந்தம். ரகசியமாக பெறப்பட்ட தகவல்கள் ஒப்பந்தப்படி அரசிடம் ரகசியமாகவே இருப்பதுதான் முறை.

சு.கோ.நீதிபதி : ஒப்பந்தம் பற்றிப் பேசாதீர்கள்.
கறுப்புப் பணம் பற்றி பேசுங்கள்.

ம.அ.வக்கீல் : கறுப்புப் பணம் பற்றி எதுவும் பேசக் கூடாது என்பதுதான் ஒப்பந்தம், யுவர் ஹானர்.

சு.கோ.நீதிபதி : ஒப்பந்த காலம் முடிந்த பிறகுதான்
பட்டியல் வெளியிடப்படும் என்கிறீர்களா?

ம.அ.வக்கீல் : இல்லை. இல்லை … அப்புறம் மறு ஒப்பந்தம் போடப்பட வேண்டும். அதற்குப் பிறகு மறு மறு ஒப்பந்தம் போடப்படும். அதற்குப் பிறகுதான், கொள்ளை
யடித்தவர்களுடன் ஒப்பந்தம் போட வேண்டும்.

சு.கோ.நீதிபதி : ஹசன் அலி என்பவர் 36000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளார். சரியாக விசாரிக்காமல்,
இந்த அரசு அவரை தப்ப விட்டுள்ளது. எந்த அடிப்படையில் அவரை தப்ப விட்டீர்கள்?

ம.அ.வக்கீல் : வழக்கை முறையாக விசாரித்தால், அரசுக்கு
பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்படும். எனவே 36000 கோடியோடு தொலையட்டும் என்று, வழக்குச் செலவையாவது
மிச்சப்படுத்த அரசு கொள்கை முடிவெடுத்தது.

சு.கோ.நீதிபதி : (கோபத்துடன்) என்னதான் சொல்கிறீர்கள்? பட்டியலை வெளியிட எவ்வளவு அவகாசம்தான் வேண்டும்?
நூறு ஆண்டுகள் வேண்டுமா?

ம.அ.வக்கீல் : அது போதும், யுவர் ஹானர். அதுவரை வழக்கை ஒத்தி வைக்க கோருகிறேன்.

.( இந்த கட்டுரை வியப்பைத் தருகிறதா…?
இது என்னுடைய எழுத்து நடை போலத் தெரியவில்லையே
என்று தோன்றுகிறதா…? )
………………………………………………………………………………………………………………………

பின் குறிப்பு –

மேற்படி கட்டுரை – 2011-ல் மேன்மைதங்கிய மன்மோகன் சிங் அவர்கள்
அரசாட்சி செய்யும்போது “துக்ளக்” வார இதழில், சத்யா
அவர்களால் எழுதப்பட்டது….

பெரும்பாலும் இன்றைய தினத்திற்கும் பொருந்துகிறதே
என்று ஆச்சரியமாக இருக்கிறதா …???

ஆமாம் – ஆட்சி தான் மாறியதே தவிர,

இதுவரை எத்தனை ஆயிரம் கோடி கருப்புப்பணம்
வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கிறது….?
ஸ்விஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்தவர்களின்
பெயர்கள் வெளிவந்ததா….?
திருடி விட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடி
சென்றவர்களில் யாரையாவது – ஒரே ஒருத்தரையாவது –
திரும்ப கொண்டு வர முடிந்ததா….?

எந்த கட்சி ஆட்சி செய்தால் என்ன….?
எல்லாருமே ஒரே அரசியல் குட்டையில் ஊறுபவர்கள் தானே..?

அரசியலுக்கு வருவதே பணம் பண்ண தானே….?
எங்கே வாய்ப்பு இருக்கிறதோ அங்கே வருகிறார்கள்…

எல்லாருமே இங்கு உத்தமர்கள் தான் –
வாய்ப்பு கிடைக்கும் வரையில் …. !!!

கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதில் –
ஒவ்வொருவரும் “என் வழி -தனி வழி ” என்று
ஒவ்வொரு வழியை உண்டு பண்ணிக் கொள்கிறார்கள்.
ஊரில் பினாமிகளுக்கா பஞ்சம்…!!!

.
…………………………………………………………………………………………………….……………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.