…
…
“அறம்” என்று, வணிக ரீதியாக, துளிக்கூட கவர்ச்சியே இல்லாத
பெயரை ஒரு திரைப்படத்திற்கு இட்டு, வெளியிட்டிருக்கிறார்கள் …
முதலில் அவர்களது தன்னம்பிக்கையை பாராட்ட வேண்டும்.
முதலிலேயே சொல்லி விடுகிறேன். இது திரைப்பட விமரிசனம் அல்ல.
பல அருமையான திரைப்பட விமரிசகர்கள் வலைத்தளத்தில்
ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும், இந்த படத்தைப்பற்றி அவசியம் இந்த தளத்தில் எழுத வேண்டியது என் கடமை என்று தோன்றியதால்
இதை எழுதுகிறேன்.
முன்பெல்லாம் நான் நிறைய திரைப்படங்கள் பார்த்துக்கொண்டிருந்தேன்.
இப்போது மிகவும் குறைந்து விட்டது. நிச்சயம் வித்தியாசமாக
இருக்கும் என்று என் மனதிற்கு தோன்றும் படங்களை மட்டும்
பார்க்கிறேன். ஆனால், படத்தைப்பற்றிய விமரிசனங்கள் எதையும்
படிக்காமல், வெளியான 2-3 நாட்களுக்குள் பார்த்து விடுவேன்.
பல சமயங்களில் என் நம்பிக்கை ஜெயித்திருக்கிறது…. சில சமயங்களில்
ஏமாற்றியும் இருக்கிறது.
“அறம்” திரைப்படம் சில அடிப்படை கருத்துகளை மிக ஆழமாக
முன்வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது….
விஞ்ஞான வளர்ச்சி அவசியம் தேவை… இந்தியா விண்வெளி
விஞ்ஞானத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டிருக்கிறது.
பெருமைப்படுகிறோம். மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், இத்தோடு
தீர்ந்ததா ? விண்வெளி ஆராய்ச்சியில், வளர்ந்த நாடுகளுடன் போட்டி
போட்டுக் கொண்டு முன்னேறுவதால் ….
நாட்டில் உள்ள சாதாரண, அடித்தட்டு மக்களுக்கு என்ன பயன்…?
இந்த விஞ்ஞானத்தைக் கொண்டு, இந்த நாட்டின் அடித்தட்டு மக்களுக்கு
மிக அவசியமான, அன்றாடத் தேவைகளை தீர்க்கும் வழிமுறைகளை
கண்டுபிடிப்பதில் நாம் கவனம் செலுத்தாததேன்…… ?
குடிக்க தண்ணீர் இல்லாமல் மனிதனால் எவ்வளவு மணி நேரம்
உயிர் வாழ முடியும்…? நம் மக்கள் அனைவருக்கும் அடிப்படை
ஜீவாதாரத்தேவையான குடிநீர் கிடைக்க நமது விஞ்ஞான வளர்ச்சி
எந்த விதத்தில் உதவிக்கு வருகிறது…?
சாதாரண மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காதபோது,
பெரியபெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு, குளிர்பானங்கள் தயாரித்து
விற்க, தண்ணீர் எப்படி கிடைக்கிறது…? இதற்கு அரசு எந்திரங்கள்
எப்படி, ஏன் – துணை போகின்றன…? அந்த வசதிகளில், பாமர
மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டாமா…?
அரசாங்கங்களும், அரசு அமைப்புகளும் எதற்காக இருக்கின்றன…?
மக்களுக்கு மிகவும் அவசியமான, ஜீவாதார தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள
அவர்களுக்கு உதவியாக இருக்கவா அல்லது சட்டத்தின் துணையோடு
சுயநலவாத அரசியல்வாதிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் துணை நிற்கவா…?
சந்திர மண்டலத்திற்கும், செவ்வாய் கிரகத்திற்கும் ராக்கெட் விட்டு
சாதனைகள் புரியும் நாம், ஒரு தொலைதூர கிராமத்தில்,
சாதாரண ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து விட்ட ஒரு குழந்தையை,
உயிருடன் மீட்க என்ன சாதனத்தை கண்டுபிடித்திருக்கிறோம்…?
அதற்கான அக்கறையை இந்த அரசு கட்டமைப்புகளோ,
விஞ்ஞானிகளோ, அரசியல்வாதிகளோ, காட்டாதது ஏன்..?
– இப்படி குறிப்பிடத்தக்க சில விஷயங்களை மட்டும் முன் நிறுத்தி,
பார்ப்பவர்களின் மனதில் பலத்த பாதிப்பை ஏற்படுத்துகிறது இந்தப்படம்.
கொஞ்சம் அசந்தால், டாக்குமெண்டரியாக மாறியிருக்கக்கூடிய
விஷயத்தை, தன் கற்பனையாலும், செயல்திறனாலும், அருமையான
விறுவிறுப்பான திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்
திரு.கோபி நயினார். திரு.ஓம்பிரகாஷ் அவர்களின் அற்புதமான
ஒளிப்பதிவு இந்த படத்தில் மிக முக்கியமான, பாராட்டத்தக்க விஷயம்..

படத்தின் இயக்குநர் திரு.கோபி நயினார்
…

படத்தின் ஒளிப்பதிவாளர் திரு.ஓம் பிரகாஷ்
…

படத்தில் மாவட்ட கலெக்டராக நயன்தாரா
…
முக்கியமான இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
இந்த படத்தை உருவாக்கத்தில், படத்தின் நாயகி நயன்தாரா
அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு என்று இயக்குநர் கோபி நயினார்
கூறி இருக்கிறார். படத்திற்கு நிதியுதவி கூட செய்து உதவினார் என்றும்
தெரிகிறது. வணிக ரீதியாக வெற்றி பெறுவது சந்தேகம் என்று
பலரும் தயங்கிய இந்த படத்திற்காக தன் பணத்தையும், உழைப்பையும்
கொடுத்த நயன்தாரா அவர்களும் பாராட்டிற்குரியவர். அவருக்காக
இந்த படத்தில் எந்தவித பில்ட்-அப் களும் கிடையாது என்பது அவசியம்
சொல்லப்பட வேண்டிய விஷயம். இதே கதையில், நமது தமிழக
முன்னணி ஹீரோக்கள் நடித்திருந்தால், எந்த அளவு இமேஜ்
உருவாக்கப்பட்டிருக்கும் என்பதையும் கற்பனையில் பார்க்க முடிகிறது.
இந்தப்படம், அரசியல்வாதிகளிடையே எந்தவித மாற்றங்களையும்
கொண்டு வந்து விடும் என்று நான் நம்பவில்லை… ஆனால்,
சுயமாக சிந்தித்து செயல்படக்கூடிய, புதிதாக பணிக்கு வந்துள்ள
இளம் IAS, IPS அதிகாரிகள் இந்த படத்தை பார்த்தால், அவர்களுக்கு
ஓரளவு நல்ல செயலூக்கம் பிறக்கும் என்று சொல்லலாம்.
அரசியல்வாதிகளின் பிடிகளையும் தாண்டி, IAS அதிகாரிகளால்,
நிச்சயமாக மக்களுக்கு பணியாற்ற முடியும்… அதற்கான சிந்திக்கும்
மனப்பான்மையையும், நெஞ்சுரத்தையும் அவர்கள் பெற வேண்டும்.
நமது சமூகம் அவசியம் விவாதிக்க வேண்டிய சில விஷயங்களை
இந்த படம் முன்னுரைக்கிறது… படத்தின் உருவாக்கத்தில் பங்கு
கொண்ட அனைவருக்கும் நமது வாழ்த்துகளும், பாராட்டுகளும்.



Mr.Gopi is a very good thinker
K.M.sir,
I also saw the film.
As you say ” நமது சமூகம் அவசியம் விவாதிக்க வேண்டிய சில விஷயங்களை
இந்த படம் முன்னுரைக்கிறது…”
The team deserves appreciation and support.
கோபியின் துணிச்சல் பாராட்டப்படவேண்டியதே, இளைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் .
மதிவதனி – கதாபாத்திரம் போல தானும் ஆக வேண்டும் என்கிற தாக்கத்தை சிறார்கள் மற்றும் இளையதலைமுறைகளிடம் ஏற்படுத்தினால் அதுவே படத்தின் முழு வெற்றி …! கண்டிப்பாக இந்த படம் ஏற்படுத்தும் …!!!