ஒரு குஜராத் MP-யின் கொலைக்கதை…..!!!


ஜூலை,20, 2010 – பட்டப்பகலில், பலபேர் முன்னிலையில், குஜராத்,
அஹமதாபாத் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே
அமித் ஜெத்வா என்கிற 34 வயது இளைஞர் – மோட்டார் சைக்கிளில்
வந்த இரண்டு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

சுடப்பட்டு, உயிரிழக்கும் நிலையில் கூட அந்த இளைஞர், தன்னை
தாக்கிய அந்த 2 நபர்களையும் பிடிக்க முயல்கிறார். மோட்டார் சைக்கிள்
விழுகிறது. ஆனாலும், அவர்கள் மீண்டும் எழுந்து தப்பியோடி
விடுகிறார்கள்.ஆனால், அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கியும், சில
ஆவணங்களும் கீழே விழுந்து விடுகின்றன.

அந்த ஆவணங்களையும், துப்பாக்கியையும் வைத்துக் கொண்டு,
உடனடியாக போலீஸ் அவர்களை பிடித்திருக்கலாம் என்றாலும், அடுத்த
5 நாட்களுக்கு யாரும் கைது செய்யப்படவில்லை…!!!
சம்பந்தப்பட்டவர்கள் ஆளும் கட்சியான பாஜக வை சேர்ந்த முக்கிய
பிரமுகர்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்குமோ என்னவோ…!

ஆட்சியும், அதிகாரமும் தன் பக்கம் இருந்தால் ஒரு அரசியல்வாதி எந்த
அளவிற்கு போக முடியும், என்னென்ன செய்ய முடியும் என்பது நாம்
அறியாததல்ல….

இருந்தாலும் இந்த கதையை நாம் முழுவதுமாக அறிய வேண்டியது
மிக அவசியம்…

ஏனென்றால், இது நடப்பது, இந்த நாட்டிலேயே மிகவும் புண்ணிய
ஷேத்திரம் என்று கூறப்படும் குஜராத்தில்….

ஈடுபட்டவர் செல்வாக்கு படைத்த ஒரு குஜராத்தி பாஜக அரசியல்வாதி,
அப்போதைய பாஜக ஜூனாகர் தொகுதி – எம்.பி..!!!

அப்போது நடந்து கொண்டிருந்தது தர்மராஜரின் ஆட்சி..!!!
போலீஸ் மந்திரியாக (அதாவது, உள்துறை அமைச்சராக) இருந்தவர்
தற்போதைய பாஜக அகில இந்திய தலைவர்…!!!

அமித் ஜெத்வா ஒரு இளைஞர்… மருந்தாளுநர் வேலைக்கு படித்தவர்.

கொலை செய்யப்பட்ட இளைஞர் -அமீத் பாத்வா –

கொஞ்ச நாட்கள் அந்த பணியை செய்து கொண்டிருந்தவர்… பிறகு ஒரு
உரிமைப் போராளியாக உருவெடுத்து, தகவல் அறியும் உரிமை
சட்டத்தின் கீழ் பல ஊழல்வாதிகளுக்கு எதிரான தகவல்களை பெற்று,
அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தும் பொது வாழ்வில்
ஈடுபட்டிருந்தார்.

கோர்ட் வாசலில் கொலை செய்யப்பட்ட இளைஞர் அமித் ஜெத்வா
செய்த சில முக்கியமான தவறுகள் –

– குஜராத் மாநில அரசு லோக்பால் (அதாலத் ) நியமனம் செய்யாமல்
காலம் தாழ்த்தி வந்ததை எதிர்த்து, அஹமதாபாத் உயர்நீதி மன்றத்தில்
மாநில அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்…

– சிங்கங்களின் பாதுகாப்பு சரணாலயமான, கிர் வனப்பகுதியில் சிலர்
அத்துமீறி நுழைந்து விலங்குகளை வேட்டையாடியதையும், அதற்கு
வன இலாகா அதிகாரிகள் (மாநில ஊழியர்கள்) சிலர் உடந்தையாக
இருந்ததையும் எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அப்போதைய எம்.பி. தினுபாய் சோலங்கி

..

..

– பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்திற்குள் சட்டவிரோதமாக சுரங்கம்
தோண்டி, கடத்தல் தொழிலில் ஈடுபட்டதாக அப்போதைய குஜராத் பாஜக
எம்.பி. – திருவாளர் தினுபாய் போகாபாய் சோலங்கி மற்றும் அவரது
கூட்டத்தை சேர்ந்த சிலர் மீது நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார்….

– தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கோட்பாடுகளை பொதுமக்களுக்கு
விளக்கி, சில இளைஞர்களையும் அந்த இயக்கத்தில் தயார் படுத்திக்
கொண்டிருந்தார்…

இவை போதாதா என்ன ஒருவர் ரவுடி அரசியல்வாதிகளால் கொலை
செய்யப்படுவதற்கு…?

தலைவருடன் சோலங்கி

அமீத் ஜெத்வா கொலை நிகழ்ந்த பிறகு, குஜராத் போலீஸ், மெதுவாக,
மிக மெதுவாக – யாருக்கும் வலிக்காமல் – களத்தில் இறங்கியது.
பெயருக்கென்று சிலர் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட எம்.பி. தினுபாய் சோலங்கி
அவர்களுக்கு, குஜராத் க்ரைம் போலீஸ் “க்ளீன் சிட்” வழங்கியது….!
( இந்த எம்.பி.யின் மீது ஏற்கெனவே 43 F.I.R.கள் விசாரணை
நிலையிலேயே இருந்தது அவரது விசேஷ தகுதி…!!!)

கொலை செய்யப்பட்ட அமீத் ஜெத்வாவின் குடும்பத்தில், அவரது
மனைவி, இரண்டு பெண் குழந்தைகள், வயதான தந்தை, இரண்டு
தம்பிகள், ஆகியோர் இருந்தனர். இந்த குடும்பம் அனாதரவாக தவித்தது.

தினுபாய் சோலங்கிக்கு “க்ளீன் சிட்” கொடுக்கப்பட்டதை எதிர்த்து
அமீத் ஜெத்வாவின் தந்தை பிகாபாய் ஜெத்வா குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு கொடுத்தார். தன் மகனின் கொலைக்கு உண்மையில் காரணமானவர்கள், தங்களது அரசியல் செல்வாக்கு காரணமாக வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்…. வழக்கு சரியான திசையில் செல்லவில்லை. உயர்நீதிமன்றம் தலையிட்டு ஆவன செய்ய வேண்டுமென்று.

புகார் கொடுத்த தந்தை பிகாபாய் மிரட்டப்பட்டார். புகாரை வாபஸ்
வாங்கச் சொல்லி கொலையாளியின் ஆட்களால் துன்புறுத்தப்பட்டார்.
அமீத் ஜெத்வாவின் மனைவியும், தம்பிகளும் பயமுறுத்தப்பட்டனர்.
உயிருக்கு அஞ்சி, ஜெத்வாவின் தந்தையை தவிர மற்ற அனைவரும்
இடம் பெயர்ந்தனர். கண்காணாத இடத்திற்கு சென்று தங்கள் உயிரை
தக்க வைத்துக் கொண்டனர்.

வயதான தந்தை பிகாபாய் மட்டும் என்ன ஆனாலும் சரி. என் மகன்
சாவுக்கு நீதி கிடைக்காமல் ஓய மாட்டேனென்று சொல்லி உயர்நீதி
மன்றத்தையே சுற்றிசுற்றி வந்தார். அவருக்கு இருந்த ஒரே துணை
பொதுவாழ்வில் நாட்டம் கொண்ட ஒரு வக்கீலான ஆனந்த் யக்னிக்.

உதவிக்கு வந்தது உயர்நீதிமன்றம். குஜராத் போலீசார் விசாரணையை
நேர்மையான முறையில் நடத்தவில்லை என்று கண்டனம் தெரிவித்த
உயர்நீதிமன்றம், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்திரவிட்டது.

2013, டிசம்பரில் -சிபிஐ களம் இறங்கியது. பாஜக எம்.பி. தினுபோகா
சோலங்கி, அவரது மருமகன் ஷிவா சோலங்கி ( மோட்டார் பைக்கில்
வந்தவன்), கூலிப்படையைச் சேர்ந்த ஷார்ப் ஷூட்டர் சைலேஷ்
பாண்ட்யா உட்பட மொத்தம் 6 பேரை கைது செய்து,
ஐபிசி பிரிவுகள் 120பி, மற்றும் 320-யின் கீழ்வழக்கு பதிவு செய்து,
வழக்கு தொடர்ந்தது.

அரசியல் கிரிமினல்களை, சட்டத்தால், நீதிமன்றங்களால் அவ்வளவு
சுலபமாக வளைத்து விட முடியுமா..?

வழக்கு நடந்தது…. அதனால் என்ன…? வழக்கில் சாட்சிகளாக வந்த
195 பேரில், 101 பேர் தடம்புரண்டனர். கொலை மிரட்டலும், ஆள்
கடத்தலும் வரும்போது – அவற்றை மீறிக்கொண்டு பொது வழக்கில்
சாட்சி சொல்லும் அளவிற்கு நம் மக்கள் இன்னும் பழகவில்லையே…!
இன்னும் 5 பேர், தங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை – எனவே
தங்களால் சாட்சி சொல்ல முடியாது என்று கோர்ட்டிலேயே
சொன்னார்கள். ஆனால் –

சிங்கிள் ஜட்ஜ் நீதிமன்றம்…. இவை எதையும் காதில் வாங்கிக்
கொள்ளாமல், விசாரணையை முடித்து வைத்து தீர்ப்பு கூற தேதியும்
குறிப்பிட்டு விட்டது…. தீர்ப்பு எப்படி இருக்கும் என்று நம்மாலேயே
யூகிக்க முடிகிறபோது, வழக்கு தொடர்ந்த – கொலைப்பட்டவரின்
-தந்தையால் உணர முடியாதா என்ன….?

ஆனால், கயமை அரசியலுக்கும், மிரட்டலுக்கும் முன்னால் நீதியே
பயந்தால், சாதாரண முதியவரால் என்ன செய்ய முடியும்….?

( கதை இன்னும் முடியவில்லை… ஆனால், எதிர்பாராத அவசர வேலை
காரணமாக வெளியே செல்ல வேண்டியிருக்கிறது. 3-4 மணி நேரத்தில்
வந்து விடுவேன். வந்தவுடன் முதல்வேலையாக மீதியை எழுதி
பதிப்பிடுகிறேன்…. இடைவேளைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்…)

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ஒரு குஜராத் MP-யின் கொலைக்கதை…..!!!

  1. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    திரில்லர் பாேல விறுவிறுப்பாக இருக்கிறது …
    .
    ( மோட்டார் பைக்கில்
    வந்தவன்), கூலைப்படையை சேர்ந்த ஷார்ப் ஷூட்டர் சைலேஷ்
    பாண்ட்யா …. இதில் கூலிப்படை …என்று மாற்றவும் …

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி பிரனீஷ்.

      தவறு சரி செய்யப்பட்டு விட்டது.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    // சிங்கிள் ஜட்ஜ் நீதிமன்றம்…. இவை எதையும் காதில் வாங்கிக்
    கொள்ளாமல், விசாரணையை முடித்து வைத்து தீர்ப்பு கூற தேதியும்
    குறிப்பிட்டு விட்டது…. தீர்ப்பு எப்படி இருக்கும் என்று நம்மாலேயே
    யூகிக்க முடிகிறபோது, வழக்கு தொடர்ந்த – கொலைப்பட்டவரின்
    -தந்தையால் உணர முடியாதா என்ன….?

    ஆனால், கயமை அரசியலுக்கும், மிரட்டலுக்கும் முன்னால் நீதியே
    பயந்தால், சாதாரண முதியவரால் என்ன செய்ய முடியும்….? //

    இப்போ 2002 படுகொலைகளும் – சோரப்தீன் fake encounter, Ehsan Jafri-Gulburg Society படுகொலைகளும், Best bakery கொலைகளும் – யாருக்காவது ஞாபகம் வந்தால் அது உங்கள் தவறு. இந்த வழக்குகளிலிருந்து வெளிவந்தவர்கள் இந்நாட்டின் முக்கிய பொருப்புகளில் இருப்பவர்கள். எனவே அவர்கள் உத்தமர்கள்.

    கபர்தார்.

    • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

      குஜராத்தின் வளர்ச்சி, அகில இந்தியாவும் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்களே பாவிகள்
      இது தான் அவர்கள் சொல்லும் வளர்ச்சியா ?

      இந்த மாதிரி வழக்குகளைப்பற்றி எல்லாம் ஏன் மீடியாக்கள் எடுத்துச் சொல்வதில்லை ? பயமா அல்லது விலைக்கு வாங்கி விட்டார்களா ?

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர்களுக்கு,

    சில பின்னூட்டங்களை இங்கிருந்து விலக்கி விட்டேன் ( deleted..)

    இன, மத உணர்வுகளை தூண்டும் விதமாக யாரும் எழுத வேண்டாமென்று நண்பர்களை அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த விஷயத்தில் விவாதம் என்று ஆரம்பித்தால், அதற்கு முடிவே கிடையாது…. வெறுப்பும், குரோதமும், மனவேதனையும் தான் மிஞ்சும்.

    இந்த தேசம் நம் அனைவருக்கும் பொதுவானது.

    இங்கு இனவெறிக்கோ, மதவெறிக்கோ இடம் கொடுக்காமல் – அனைத்து மதத்தினரும், இணக்கமாகவும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்பது என் விருப்பம், ஆசை, நோக்கம் எல்லாம்.

    இதற்கு விரோதமாக எதையாவது பார்க்க நேர்ந்தால் கூட, அந்த தவறு திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்கிற அடிப்படை நோக்கத்தோடு தான் நான் எழுதுகிறேன்.

    நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.