…
…
எதிர்க்கட்சிக்காரர்கள் குறைகூறுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை… ஆனால், வரிசையாக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் அபாயச்சங்கை ஊதி வருவது ஆச்சரியத்தை உண்டுபண்ணுகிறது.
மோடிஜியின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற தொடர் நடவடிக்கைகள் தோல்வி அடைந்து விட்டன. பொருளாதாரம் தலைகுப்புற விழுந்து கொண்டிருக்கிறது என்று பாஜக, ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
முதலில் துவக்கியவர் வழக்கம்போல் டாக்டர் சு.சுவாமி… ஆனால் அவரது தாக்குதல்கள் முக்கியமாக திரு.ஜெட்லியை குறி வைத்தது…. அடுத்து ஸ்டேட் வங்கியின் வெளிப்படையான ரிப்போர்ட் – பொருளாதார சீர்கேட்டை விமரிசனம் செய்தது.
அடுத்து, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் திரு.குருமூர்த்தி அவர்கள் சொன்னது தான் எதிர்பார்க்காதது. ஆச்சரியத்தை உண்டு பண்ணியது…
அடுத்து வந்தது திரு.யஷ்வந்த் சின்ஹாவின் அட்டாக்… பொருளாதார சீர்கேட்டையும், நிதியமைச்சரையும் கடுமையாகச் சாடிய யஷ்வந்த் சின்ஹா, மோடிஜியையும் விட்டு வைக்கவில்லை. மார்க் தர்ஷக் என்கிற உயர்ந்த அந்தஸ்தில் உள்ள சின்ஹா சொல்கிறார்.
” நான் யாரிடம் இதைப்பற்றி எல்லாம் பேச முடியும்…? பிரதமரிடம் பேசுவதற்கான நேரம் கேட்டிருந்தேன்… 10 மாதங்களாக காத்திருக்கிறேன். மோடிஜிக்கு என்ன சந்திக்க நேரம் கிடைக்கவில்லை – வேறு வழியின்றி தான் பத்திரிகையில் எழுதுகிறேன் ” என்கிறார்.
மோடிஜி தான் பாஜக.
மோடிஜி தான் மத்திய அரசு.
என்று இந்த நிலை, ஆர்.எஸ்.எஸ்.க்கு ஏற்புடையதாக இல்லை. தனி நபர் புகழ் பாடுவதில் ஆர்.எஸ்.எஸ்.க்கு ஏற்புடையது இல்லை. மோடிஜி கட்சியை முன் நிறுத்துவதை விட்டு விட்டு,
மிகுந்த பொருட்செலவில்
தன்னையே முன் நிறுத்திக் கொள்கிறார்… தன்னையே விளம்பரப்படுத்திக் கொள்கிறார்; இது ஏற்கத்தக்கதல்ல – என்று ஆர்.எஸ்.எஸ். தலைமை நினைப்பதாக தெரிய வருகிறது.
ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பாஜக தொழிற்சங்கமான பாரதீய மஜ்தூர் சங் மோடிஜியின் பொருளாதார கொள்கைகளை தொடர்ந்து கடுமையாக தாக்கி வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களையும் அறிவித்து வருகிறது. நிதி ஆயோக்-க்கு எதிராக மிகக்கடுமையான விமரிசனங்களை முன்வைத்தது.
இந்த நிலையை விளக்கி நான் ஒரு இடுகை எழுத முனைந்தபோது, மின்னம்பலம் செய்தி வலைத்தளத்தில் திரு.ராகவேந்திரா ஆரா அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையை பார்த்தேன்.
அதுவும் இந்த விவகாரத்தை கிட்டத்தட்ட இதே பார்வையில், இன்னும் விவரமாக விவாதிக்கிறது. எனக்கும் இத்தகைய சந்தேகங்கள் உண்டு. திரு.ராகவேந்திரா ஆரா அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டு, விமரிசனம் தள வாசக
நண்பர்களின் பார்வைக்காக – அவரது கட்டுரையை கீழே பதிப்பிக்கிறேன்….
————————————————–
மோடியை ஆர்.எஸ்.எஸ். எதிர்க்கிறதா? எதிர்ப்பதாக நடிக்கிறதா?
(ராகவேந்திரா ஆரா…)
எதிர்ப்பே இல்லாதவர் என்று கருதப்பட்டு வந்த பிரதமர் மோடிக்கு பாஜகவில் இருந்தே சமீப நாள்களாகப் புறப்பட்டிருக்கும் எதிர்ப்புகளுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். இருக்கிறதா என்ற கேள்வி தேசிய அளவில் இப்போது விவாதமாகியிருக்கிறது.
முன்னாள் நிதியமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா, தற்போதைய மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை வெளிப்படையாக தாக்கியிருக்கிறார். ‘இந்தியாவைச் சரிவுக்கு இட்டுச் செல்கிறார்கள் மோடியும்,
ஜெட்லியும்’ என்று சின்ஹா கூற, பதிலுக்கு ஜெட்லி, ‘வேலை தேடும் 80 வயது முதியவர்’ என்று சின்ஹாவைத் தாக்கினார்.
இந்த நிலையில், ஏற்கெனவே மோடிக்கு எதிராக கலகக்குரல் எழுப்பிவரும் பீகார் பாஜக எம்.பியும் பிரபல நடிகருமான சத்ருஹன் சின்ஹா, ‘நாட்டின் தற்போதைய பொருளாதார சூழல் பற்றி மோடி நாட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று
கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சத்ருஹன் சின்ஹா, ‘உண்மையில் பிரதமர் மோடிக்கு நடுத்தர குடும்பத்தினர், வணிகர்கள், சிறிய தொழில்களில் ஈடுபடுபவர்கள், நாடு முழுவதும் குறிப்பாக விரைவில் தேர்தலை
எதிர்கொள்ளும் குஜராத் மாநில மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதை நிரூபிக்கும் நேரம் இது. பத்திரிகையாளர் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். நிச்சயமாக மோடி இதைச் செய்வார் என
நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். சிந்தனை கொண்டவரும் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவருமான துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி சமீபத்தில், ‘மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்’ கல்வி நிறுவனத்தில் சென்னை
சர்வதேச மையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசினார்.
ஏற்கெனவே பணமதிப்பிழப்பு திட்டத்தைக் கொண்டாடிய குருமூர்த்தி, இப்போது தனது கருத்தைத் தலைகீழாக மாற்றிக்கொண்டார்.
“பணமதிப்பழிப்பு, வங்கிக் கடன் தொடர்பான சட்டங்கள், சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு ஒரே சமயத்தில் அடுத்தடுத்து மேற்கொண்டுள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றதல்ல. அவசர
கதியில் செய்யப்பட்ட மாற்றங்கள் இவை.
நோக்கம் நல்லதாக இருந்தாலும் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மோசமான முறையில் அமல்படுத்தப்பட்டிருப்பதால் அதன் பலன்கள் கிடைக்கவில்லை. உயர் மட்ட நிர்வாகத்தில் ரகசியக் காப்பு இல்லாததால் கறுப்புப் பணத்தை வைத்திருந்தவர்கள்
எளிதாகத் தப்பிவிட்டனர்.
உயர் மதிப்பு நோட்டுகளைத் திரும்பப் பெற்றதால் முறைசாரா துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்துறை 90 சதவிகித அளவிலான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. எனவே, பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் வேலைவாய்ப்பு உருவாக்கம் தடைப்பட்டுள்ளது” என்று மத்திய அரசை மிக வெளிப்படையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் நாடு முழுவதும் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளுக்கு பாஜக கூடாரத்தில் இருந்தே வெளிப்படையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைநகரமான நாக்பூர் இருக்கலாம் என்று
கருதப்படுகிறது.
எதிர்க்கட்சியினர் அனைவரும் பாஜகவின் வழிகாட்டி ஆர்.எஸ்.எஸ். என்றே பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கே இந்த ஆட்சியோடும் பிரதமர் மோடியோடும் பல வேறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. நில அபகரிப்பு சட்டம் என்று குறிப்பிடப்படும் நில கையகப்படுத்தும் சட்டத்தில் மோடிக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் விவசாயப் பிரிவு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது.
ஆர்.எஸ்.எஸ்ஸில் தனிநபர் துதி என்றைக்கும் இருந்ததில்லை. சங்கம் என்ன சொல்கிறதோ, அதற்குக் கட்டுப்படுவோம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிப்படை விதி. ஆனால், மோடி பிரதமர் ஆனவுடன் தனது தனிப்பட்ட அடையாளத்தையும், ஆளுமையையும் பல மடங்கு பெருக்கிக்கொண்டார். பாஜக அரசு என்பதைக் கூட
மறைத்து மோடி அரசு என்று பல இடங்களில் விளம்பரப்படுத்தினார். பதவிக்காக பாஜகவுக்கு வந்த சிலரும், ஏற்கெனவே பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்த சிலரும் இந்த மோடி புராணத்தை முன்னெடுத்தனர். இதில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்குக் கடுமையான கருத்து வேறுபாடு உண்டு.
அது கடந்த மார்ச் மாதம் உத்தரப்பிரதேச முதல்வர் தேர்வு விவகாரத்தில் வெளிப்படையாக தெரிந்தது. உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகளுக்குப் பின் தனது கேபினட்டில் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக இருந்த மனோஜ்
சின்ஹாவை உத்தரப்பிரதேச முதல்வர் பதவிக்குத் தேர்வு செய்தார் பிரதமர் மோடி.
கடந்த மார்ச் 17ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் புதிய முதல்வர் மனோஜ் சின்ஹாதான் என்று டெல்லியில் இருந்து முடிவாகி, மனோஜ் சின்ஹாவின் சொந்த மாவட்டமான கிழக்கு உத்தரப்பிரதேசத்திலுள்ள காசிபூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் குறிப்பு
தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் சிக்னலை அடுத்து முக்கிய போலீஸ் அதிகாரிகள் மனோஜ் சின்ஹாவைச் சந்தித்து மரியாதை செய்வதற்காகப் புறப்படத் தயாராகினர். மனோஜ் சின்ஹாவுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்த போலீஸ் படையினரும்
சீருடையோடு தயாராக இருந்தனர். ஆனால், நாக்பூரில் இருந்துவந்த உத்தரவால் மார்ச் 18 மாலை கோரக்பூர் எம்.பியான ஆதித்யநாத் யோகி உ.பி. முதல்வராக அறிவிக்கப்பட்டார். தனி நபரைவிட அமைப்புக்கே பலம் அதிகம் என்று மோடிக்கு
ஆர்.எஸ்.எஸ். உணர்த்திய சம்பவம் இது.
வெளிப்படையாக தெரிந்த இன்னொரு சம்பவம்… பிரதமர் மோடியின் கனவு அமைப்பான நிதி ஆயோக் துணைத் தலைவரான அரவிந்த் பனாகாரியா சத்தமே இல்லாமல் ராஜினாமா செய்த விவகாரம். இதை தேசிய ஊடகங்களோ, மாநில
ஊடகங்களோ பெரிய அளவில் விவாதப் பொருளாக்கவில்லை.
அரவிந்த் பனாகாரியா, ‘கார்ப்பரேட்டின் கையாள், வேலைவாய்ப்புகளின் கொலைகாரர்’ என்று ஆர்.எஸ்.எஸ்ஸின் கிளை அமைப்பான சுதேசி ஜாக்ரான் மஞ்ச் என்ற அமைப்பின் அமைப்பாளர் அஸ்வனி மகாஜன் மோடிக்குக் கடிதம்
எழுதுகிறார். ‘அரவிந்த் பனாகாரியாவைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் வலியுறுத்துகிறார். இந்த அழுத்தங்களின் விளைவே ஆகஸ்ட் மாதம் நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறார் அரவிந்த் பனாகாரியா.
ஆனால், இதெல்லாம் ஊடகங்களால் விவாதம் ஆக்கப்படவே இல்லை என்பதற்குப் பின்னாலும் ஆர்.எஸ்.எஸ். இருக்கிறது என்பதையும் மறுக்க முடியவில்லை.
மோடி மற்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்களைவிட கரிஷ்மா எனப்படுபடும் புகழ் நிறைந்தவராக இருக்கிறார். அவரிடம் இதுவரை இந்திய வலதுசாரி அரசியல்வாதிகளில் யாருக்கும் இல்லாத அளவுக்கு கவர்ச்சி இருக்கிறது. அவரைப் பிரதமர் ஆக்கினால் நமது திட்டங்களை எளிதில் அமல்படுத்த முடியும் என்பதே ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆரம்பகால அஜெண்டா.
அதனால்தான் பழம் தின்று கொட்டை போட்ட அத்வானியையே கிடப்பில் போட்டு,
அத்வானி ரத யாத்திரையின்போது அவருக்கு மைக் பிடித்த மோடியை இந்திய அளவில்
ப்ரமோட் செய்தது ஆர்.எஸ்.எஸ்.

அத்வானிஜிக்கு
மைக் பிடிக்கும் மோடிஜி
ஆனால், மோடி தன்னை உணர்ந்துகொண்டதும் ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பைத் தாண்டிய மோடியிசம் என்ற ஒரு பதத்தை சமீபகாலமாக உருவாக்கிக் கொண்டார். உலக வலதுசாரி தலைவர்களில் தலையாயவராக தன்னை காட்டிக்கொண்டார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னை வார்த்திருந்தாலும், அதையும் தாண்டிய தனது தனிப்பட்ட பிம்பத்தை நிலைநிறுத்த மோடி மெனக்கெடுகிறார். அதற்காக பொருளாதார ரீதியாக நிறைய செலவு செய்கிறார். இதையெல்லாம் தனது அமைப்பை மீறிய செயல் என்று ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது.
ஆனால், மோடிக்கு எதிரான தனது கருத்துகளைப் பொது வெளியில் வைத்தால் அது பாஜகவுக்கு இழப்பாகிவிடுமோ என்று அஞ்சும் ஆர்.எஸ்.எஸ். மெல்ல மெல்ல கட்சிக்குள் மோடியை மதிப்பு இழக்க வைக்கும் நடவடிக்கைகளைத்
தொடங்கியிருக்கிறது. மோடி என்ற தனி நபரா அல்லது அமைப்பா என்று பார்த்து அமைப்பை முன்னிறுத்துகிறது ஆர்.எஸ்.எஸ்.
மீண்டும் மோடி ஆட்சி என்பது மோடியின் கொள்கை.
மீண்டும் பாஜகவின் ஆட்சி என்பதே ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கை.
நேற்று அத்வானியை தூக்கிப்போட்டு மோடியை முன்னிலைப்படுத்திய ஆர்.எஸ்.எஸ். நாளை மோடியை தூக்கிப் போட்டுவிட்டு இன்னொருவரை முன்னிலைப்படுத்த தயார் ஆவதன் அறிகுறிகள் தென்படுகின்றன.
ஆனால் மோடியிடம் அது நடக்குமா என்ற கேள்வியும்
பெரிதாக எழுந்து நிற்கிறது.



இதில் இன்னொரு கோணமும் கூட தெரிகிறது….
பாஜகவில் இருந்துகொண்டே குறை சொல்பவர்கள் அநேகமாக
மோடிஜியை குறை சொல்லுவதில்லை. திரு.அருண் ஜெட்லியையோ,
அதிகாரிகளையோ தான் குறை சொல்வார்கள்.
குறைகளை கூறும் அதே நேரத்தில், , பிரதமருக்கு சரியான ஆலோசனை கிடைக்கவில்லை என்று பிரதமரை இவர்களே cover செய்ய முயற்சிப்பார்கள்….!!!
இது ஏனென்று தெரிகிறதா…?
பயம்….!!!
மோடிஜியை நேரடியாக குறை கூற பாஜகவின் மூத்த தலைவர்களே கூட
பயப்படுகிறார்கள்…!!!
-காவிரிமைந்தன்
நாக்பூரிலிருந்தே தமிழகத்திற்கு ஒரு ஆளுநர் வந்துள்ளதில் ஏதேனும் உள்குத்து இருக்குமோ?
கா.மை. சார்… இதில் இரண்டு செய்திகள் இருக்கின்றன.
பாஜகவின் பின்புலம் ஆர்.எஸ்.எஸ். அவர்கள் கொள்கைகளை மட்டும்தான் முன்னிறுத்துகிறார்கள். நிறைய பதவிகளில் கொள்கை சார்ந்தவர்களையே அமர்த்துகிறார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக மோடி அவர்கள் தன்னை முன்னிறுத்துகிறார். இது பாஜக என்ற கட்சிக்கு நல்லதில்லை. இப்படித்தான் காங்கிரஸ் கெட்டழிந்தது. அதனால் கட்சி இப்போது தன்னை நிலை நிறுத்திக்கொள்ளப் பார்க்கிறது. நாளை தேவையானால், நல்லது நடக்காததற்குக் காரணம் மோடிதான் என்று கட்சி அவரைக் கை கழுவி வேறு ஒருவரை முன்னிலைப்படுத்தலாம். (ஆனாலும் கரிஷ்மா இல்லாமல் ஒரு கட்சி வெற்றிபெறுவது கடினம். கரிஷ்மா உள்ள தலைவர் தேவை). ஆனால் இந்தியாவில் பொதுவாக வாக்கு என்பது தலைவருக்குத்தான்.
இன்றைக்கு மோடி முகம் இந்தியா முழுவதும் தெரிந்த ஒன்றாகியிருக்கிறது. 2019 தேர்தலில் என்ன நடக்கும் என்று தெரியாது. ஒருவேளை மோடி அவர்களே ஓரளவு எம்.பிக்கள் சீட்டுடன் கட்சியை வெற்றிப்பாதைக்கு, அல்லது பெரிய கட்சி என்ற அந்தஸ்துக்குக் கொண்டு செல்லலாம். அப்படி நடக்கும் என்றால், இன்னும் 7 வருடங்களுக்கு மோடி என்ற நபர் அதிகாரம் மிக்கவராக இருப்பார். அதனால்தான் மோடி எதிர்ப்பு என்பது ரொம்பவும் வெளியில் தெரியாமலும், நேரடியாக மோடியை எதிர்ப்பதாக நடக்காமலும் இருக்கிறது. மோடி எதிர்ப்பு என்பது பாஜக கட்சியின் அழிவில் கொண்டுபோய்ச் சேரக்கூடாது என்பதுதான் இதன் காரணம்.
// ஆர்.எஸ்.எஸ். சிந்தனை //
அது என்ன ஆர்.எஸ்.எஸ். சிந்தனை? வேறு எந்த கட்சிக்கும் அமைப்பிற்கும் சிந்தனை இல்லையா? அது ஒரு சதி.
ஆர்.எஸ்.எஸ். நடாத்தும் பயங்கரவாத செயல்களை நாட்டு மக்கள் அறியாமல் இருக்க அவர்களால் உருவாக்கப்பட்டவர்களால் கையாளப்படும் சொல்லாடல்.
ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு தான் என்பதற்கு அது கடந்த,
நிகழ் காலங்களில் சிறுபான்மையோர் தலித்துகள் மீது கட்டவிழ்த்துவிடும் மதக்கலவரங்கள் வெறித்தனமான வன்முறைகளே சாட்சி. அந்த மதக்கலவரங்களிலிருந்து வன்முறையிலிருந்து தன்னை இலகுவாக தற்காத்துக்கொள்ளுவதை நாட்டு மக்கள் அறிந்தே இருக்கிறார்கள். இதை தான் அவர்களின் சிந்தனை என்கிறார்களோ.
சுதந்திர போராட்ட காலங்களில் வெள்ளையர்களிடம் இவர்கள் விளைபோனதை பலபேர் சுட்டிக் காண்பித்துள்ளார்கள். இருமுறை தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருப்பதில் அவர்களுக்கு தான் எவ்வளவு பெருமை. அதுவும் இவர்களின் சிந்தனையின் வெளிப்பாடோ.
இந்நாட்டில் யாருக்கும் தேசப்பற்றே கிடையாது. அது தான் எல்லாத்தையும் அவர்களே குத்தகை எடுத்துவிட்டார்களே. இந்த தேசப்பற்றை வியாபாரப்படுத்தி விளம்பரப்படுத்தி இன்று நல்ல பலனை அடைந்துள்ளார்கள். எதற்கும் ஒரு மாற்றம் வரும். இதற்கும் நிச்சயம் வரும்.
இதையும் இவர்களின் சிந்தனையின் பலனாக சேர்த்துக்கொள்ளலாம்.
பொதுவாகவே எந்நாட்டின் பெரும்பாலான மக்கள் மத விசயத்தில் இலகுவில் உணர்ச்சிவசப் படுபவர்களாகவே உள்ளார்கள். அந்த உணர்வை தூண்டி இவர்கள் அடையும் வெற்றிகள் ஒரு நாள் மக்கள் இவர்களின் உள் நோக்கங்களை அறிந்துகொள்ளும் போது அதே மக்களால் இவர்கள் தூக்கிவீசப்படுவார்கள். நிச்சயம் இது ஒரு நாள் இல்லை ஒரு நாள் நடக்கத்தான் போகிறது. அப்போது எந்நாடு கலவரங்களில்லா நாடாக வலுப்பெரும்.
கடவுள் எந்நாட்டை காப்பாற்றுவார்.
ஜு.வி.யில் இவற்றை எல்லாம் எழுதி,
சம்பளம் கொடுப்பவரை திருப்திப் படுத்திய பெருமகனுக்கும், அவற்றை விரிவாக்கம் செய்து நியாயப்படுத்தும்
சில அறிவுஜீவிகளுக்கும் –
சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்…
1) நிறைவு விழாவில் அறிவிக்கப்பட்ட தொகை
சுமார் 2.42 லட்சம் கோடி ரூபாய். ( மாநாடு முடிந்த பின்னர் தான் இந்த இதழ் ஜூ.வி. வெளிவந்தது. இருந்தாலும் அவர்களுக்கு ஒரு லட்சத்தை விட்டு வெளியே வர விருப்பமில்லை…)
2) ஜூ.வி. கூறுவது போல் இதில் 25 சதவீதம் வந்தாலே –
– சுமார் 60,000 கோடி ரூபாய் -அதுவே மிகப்பெரிய தொகைதான்..!
3) இந்த தொகை இன்றோ, நாளையோ, இன்னும்
ஆறு மாதத்திற்குள்ளோ வந்து விடும் என்று யாரும்
எதிர்பார்க்கவில்லை. சுமார் இரண்டு ஆண்டுகளில் வரலாம்.
4) அது எப்போது வந்தாலும் – தமிழ்நாட்டின் எதிர்கால
வளர்ச்சிக்கு நல்லது தானே …?
5) இவர்கள் எதிர்பார்ப்பது போல், அடுத்த தேர்தலில் அதிமுக தோற்று வேறு யாராவது ஆட்சியைப் பிடித்து விட்டால்….?
( என்று கேள்வியை கேட்காமல் கேட்கிறார்கள்.. )
– அப்படியே ஆனால் தான் என்ன …?
அடுத்து வரும் ஆட்சிக்கும் இது நல்லது தானே …?
அன்று வரிந்து கட்டி கொண்டு சப்பை கட்டு கட்டினீர்கள் .இன்று அந்த முதலீடு எல்லாம் என்ன ஆகியது
நண்பரே, (Thatchai Kannan )
நீங்கள் எழுதியிருப்பதற்கும் இந்த இடுகைக்கும் என்ன சம்பந்தம் என்பது
புரியவில்லை…. இதை வேறு எங்காவது எழுத நினைத்தீர்களா…?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Edippar illa emara mannan
Keduppar elanum kedum –kural