கலிபோர்னியாவில் ராகுல் காந்தி… எங்கே தவறு…?



காங்கிரஸ், பாஜக – ஆகிய இரண்டு கட்சிகளையும்
சாராமல் – அரசியலில் ஆர்வமுள்ள இந்த நாட்டின் ஒரு
சாதாரண குடிமகன் என்கிற முறையில் இந்த அலசலை
மேற்கொள்கிறேன்…

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர், திரு.ராகுல் காந்தி
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேசிய பேச்சுக்கள்
இப்போது விவாதப்பொருளாகி விட்டன.

தேர்தல் கமிஷனுக்கு, தன்னுடைய சரியான கல்வித்தகுதியை
தெரிவிக்கக்கூட தெரியாத ஒரு மத்திய அமைச்சர்,
அஞ்ஞாதவாசம் முடிந்து அண்மையில் அர்த்தமுள்ள ஒரு
இலாகாவுக்கு மந்திரியாக்கப்பட்ட,
அந்த நன்றிக்கடனை அடைக்க,
இந்த பேச்சுகளை மிகத்தீவிரமாக குறை கூறுகிறார்…. மற்ற பாஜக தலைவர்களும் அவருடன் சேர்ந்து கொள்கிறார்கள்….அவர் கூறுவது எந்த அளவுக்கு சரி…?

முதலில் அடிப்படையாக ஒரு விஷயம்…

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் நமது அரசியல்வாதிகள்,
இந்திய உள்நாட்டு அரசியலைப்பற்றி அங்கே பரபரப்பிற்காக
கருத்து தெரிவிப்பதும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மூத்த
இந்திய அரசியல் தலைவர்களைப்பற்றி ஏளனமாக பேசுவதும்
நாகரிகமல்ல என்பது தான் என் கருத்தும்….

ஆனால், இந்த அநாகரிகத்தை துவக்கி வைத்தது யார்…?
மஹாகனம் பொருந்திய நமது பிரதமர் தான்.
அவர் பதவியேற்ற புதிதில், பயணம் செய்த பல
வெளிநாடுகளில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
அவர்களைப்பற்றியும், காங்கிரஸ் தலைமையை பற்றியும்,
ஏளனமாகப் பேசுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார்.
அப்போது பாஜக அதை ரசித்து கொண்டாடியது…..!!!

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பல மிகப்பெரிய
ஊழல்கள் நிகழ்ந்து, அவை கண்டுபிடிக்கப்பட்டபோது கூட,
கூட்டணி கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக திரு.ம.மோ.சிங்
அவற்றை கண்டுகொள்ளாமல் இருந்தது உண்மை தான்…

ஆனாலும், இவற்றின் காரணமாக முன்னாள் பிரதமரை,
இந்நாள் பிரதமர் தனது வெளிநாட்டு பயணங்களின்போது
விடாமல் ஏளனம் செய்தது அநாகரிகம்.

எனவே, ஏற்கெனவே வெளிநாட்டு பயணங்களின்போது
மோடிஜி அவர்கள் பேசியது தவறு என்று ஒப்புக்கொள்ள
தயாராக இருப்பவர்களுக்கு தான் இப்போது ராகுல்காந்தியை
குறை சொல்ல உரிமை இருக்கிறது.

அப்படி திரு.ராகுல் காந்தி என்ன தான் பேசினார்..?
( மிகச் சுருக்கமாக…)
————————–

திரு.நரேந்திர மோடி கரிஸ்மா மிக்க ஒரு பெரிய தலைவர்.
அற்புதமாக உரையாற்றக் கூடியவர்…

பொதுக்கூட்டங்களில், தான் நினைப்பதை, வெகு சிறப்பாக
எடுத்துச் சொல்லக்கூடியவர்..

ஒரே கூட்டத்தில் இருக்கும் பலதரப்பட்ட மக்களுக்கும்,
அவர்கள் விரும்பும் பல செய்திகளை சொல்லக்கூடியவர்..

அவர் என்னை விட பலமடங்கு திறமைசாலி.

—————————–

– பாஜகவினர் உண்மையில், ராகுல் காந்தியின் இந்த
கருத்துகளுக்கு நன்றி அல்லவா சொல்ல வேண்டும்..?

நேர்மறையாக கருத்து சொன்னதை எல்லாம் விட்டுவிட்டு,
எதிர்மறையாக சொல்லப்பட்டவற்றை மட்டும் பிடித்துக்
கொள்கிறார்கள்…
………………………..

அப்படி எதிர்மறையாக என்ன சொன்னார்…?

– யாருடனும் கலந்து ஆலோசிப்பதில்லை.
யாரையும் மதிப்பதில்லை. தனக்கு ஆலோசனை கூறும்
அளவிற்கு தகுதி இருப்பதாக அவர் யாரையும்
கருதுவதில்லை.

தன்னுடன் இணைந்து பணியாற்றுபவர்களுடைய கருத்துகளை
கூட ஏற்றுக் கொள்வதில்லை. அனைத்து முடிவுகளையும் தன்
விருப்பம்போலவே எடுக்கிறார்…அண்மையில்,
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, அவரது கட்சி எம்.பி.
ஒருவரே இதை வெளிப்படையாக உறுதி செய்தார்…

– பண மதிப்பிழப்பு தோல்வியடைந்தது.. லட்சக்கணக்கான
மக்கள் தேவையின்றி இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

– காங்கிரஸ் கட்சி முன்னதாக ஆட்சியில் இருந்தபோது
கொண்டு வந்த, பல நல்ல திட்டங்களை, மசோதாக்களை
பார்லிமெண்டில் போதுமான அளவு மெஜாரிடி இல்லாததாலும்,
பாஜக எதிர்த்ததனாலும் – இயற்ற முடியாமல் இருந்த
மசோதாக்களை எல்லாம் –

இப்போது இவர்கள் நிறைவேற்றி தாங்கள் கொண்டுவந்தது
போல் சொந்தம் கொண்டாடுகிறார்கள்….

– தனி மனிதர்களின் உரிமை பாதுகாக்கப்படுவதில்
மிகப்பெரிய அலட்சியம் காட்டப்படுகிறது… சட்டம் ஒழுங்கை
மதத் தீவிரவாதிகள் பலர் தங்கள் கைகளில் எடுத்துக்
கொள்கிறார்கள்…

பசுவதையை தடுக்கிறோம் என்கிற
போர்வையில், அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள்…
நாட்டில் மதத்தின் பெயரால், வெறுப்புணர்வும், வன்முறையும்,
துவேஷமும் தூண்டி விடப்படுகிறது…

– என்னை அவமானப்படுத்தவும், கேவலப்படுத்தவும்,
செயற்கையாக ஒரு பெரிய கூட்டமே பாஜக நிர்வாக
யந்திரத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அவர்கள் கணிணிச் செய்திகள் மூலம் தொடர்ந்து –
நான் ஒரு முட்டாள்… கையாலாகாதவன் என்று
என்னை அவதூறு செய்து, ஒரு தோற்றத்தை உருவாக்கி
பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள்….

– இந்த நாட்டின் ஆளும் கட்சியைச் சேர்ந்த இந்த கூட்டம்
ஒரு ராணுவத்தைப் போல் தொடர்ந்து இந்த அவதூறு
பணியில் ஈடுபட்டிருக்கிறது.

————————————–

திரு.ராகுல் காந்தி சொல்லிய இந்த கருத்துகளில் எங்கே,
என்ன – தவறு இருக்கிறது..?

இன்றைய அரசியல்வாதிகளில் எவ்வளவு பேர் உண்மையை
பேசுகிறார்கள் ? எவ்வளவு பேர் தன் அரசியல் எதிரியின்
குணங்களை பாராட்டுகிறார்கள் …?

அபூர்வமாக, ராகுல் காந்தி பெரும்பாலும் உண்மைக்கு
வெகு நெருக்கமாகவே பேசி இருக்கிறார்…

பாஜக வினரைத் தவிர,
மோடிஜியின் ரசிகர்களைத் தவிர,
இன்றைக்கு இந்த நாட்டு மக்களில் பெரும்பாலானவர்க்கு
கிட்டத்தட்ட இதே கருத்து தான் இருக்கும்…!!!

——————–

இந்த விவாதத்திற்கு அப்பாற்பட்டு சில கருத்துகளை இங்கே
சொல்ல விரும்புகிறேன்…

திரு.ராகுல்காந்தி மிகவும் எளிமையான மனிதர்…
பந்தா இல்லாமல் பழகுகிறார்…
பல சமயங்களில் உண்மைக்கு நெருக்கமாகத்தான் பேசுகிறார்…
பதவி ஆசையோ, எப்படியாவது அதிகாரத்தை பிடிக்க
வேண்டும் என்கிற தீவிரமோ அவரிடம் இல்லையென்பது
நன்கு வெளிப்படையாகவே தெரிகிறது…

அவர் விரும்பி அரசியலுக்கு வந்தவரல்ல…
அவரது அன்னையின் வற்புறுத்தலால் வந்தவர்…

எனவே அவரிடம் ஒரு Drive, வேகம், மக்களை ஆகர்ஷிக்கும்
வசீகரம், ஆவேசமான, கவர்ச்சிகரமான உரை –
ஆகியவைஇல்லை… ஆனால் 2014 தேர்தலின்போது இருந்ததை ஒப்பிடும்போது, இப்போது தேவலை…
இப்போது அரசியலை ஓரளவு நன்றாக புரிந்து
வைத்திருக்கிறார். கொஞ்சம் பக்குவமும் பெற்றிருக்கிறார்.

ஆனால், அரசியலுக்கு தேவையான சாமர்த்தியம்,
அதிரடி நடவடிக்கைகள் ஆகியவை அவருக்கு கைவரவில்லை.

ஆகையால், சர்வசக்தி பொருந்திய,
சகல சாமர்த்தியங்களும் கைவரப்பெற்ற – பல தேர்தல்களை
சிறப்பாக கையாண்ட அனுபவங்களை உடைய
திரு.நரேந்திர மோடி அவர்களை எதிர்த்து,

பல கட்சிகளை ஒருங்கிணைத்து, திட்டமிட்டு,
தேர்தலில் தீவிர பங்காற்றி, வெற்றி பெற்று
ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு திரு.ராகுல்
காந்திக்கு சாமர்த்தியம் இல்லை என்று தான்
சொல்ல வேண்டும். இருவரும் சமபலம் உடையவர்கள் அல்ல.
திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு -திரு.ராகுல் காந்தி
சரியான போட்டியாளர் அல்ல…

அரசியலில் நல்லவராக இருந்தால்
மட்டும் போதாது – வல்லவராகவும் இருக்க வேண்டும்…!

இந்த நாட்டில், அகில இந்திய அளவில் பரவலாக,
கிட்டத்தட்ட சம பலத்துடன் – இரண்டு கட்சிகள்
இருக்க வேண்டியது, ஜனநாயகத்தின் நலனை முன்னிட்டு
மிக மிக அவசியம்.

ஆட்சியில் இருக்கும் கட்சி தவறு செய்யும்போதோ,
வரம்பு மீறும்போதோ – அதை தூக்கி எறியவும்
மாற்று கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வரவும்
மக்களுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும்…

இன்றைய தினத்தில், பாஜகவுக்கு சமமான அல்லது
மாற்றான கட்சி அகில இந்திய அளவில் இல்லை.

திரு.ராகுல் காந்தி அவர்களின் தலைமையில் எதிர்க்கட்சிகள்
கூட்டணி அமைக்குமேயானால், 2019 தேர்தலுக்குள்
அது ஒரு வலுவான கூட்டணியாக உருவாக வாய்ப்பில்லை
என்றே தோன்றுகிறது.

அநேகமாக, 2019 பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக
ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பே அதிகம் என்று
இப்போதைய நிலையில் தோன்றுகிறது…

ஆனால், அப்படியே நிகழ்ந்தாலும் கூட, பாஜகவின்
இப்போதைய ராட்சத பலம் குறைக்கப்பட்டு,

ஒரு வலுவான, பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில், பலமுள்ள எதிர்க்கட்சிகளின் ஒரு கூட்டணி
அமைய வேண்டியது மிக அவசியம்…

சிதறுண்டு கிடக்கும் எதிர்க்கட்சிகள் இந்த அவசியத்தை
உணர்ந்து செயல்பட வேண்டும்.

இந்த நாட்டில் தொடர்ந்து ஜனநாயகம் சிறக்க இது அவசியம்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to கலிபோர்னியாவில் ராகுல் காந்தி… எங்கே தவறு…?

  1. Raju's avatar Raju சொல்கிறார்:

    Ragul Personal Weakness (!!!) is the enemy for him. very difficult to come out.

    • Raghavendra's avatar Raghavendra சொல்கிறார்:

      தன்னைவிட சிறப்பான, வலிமையுள்ள, மக்களை
      ஈர்க்கக்கூடிய ஒருவரை ராகுல் காந்தியே தேர்ந்தெடுத்து,
      அகில இந்திய காங்கிரசுக்கு அவரை தலைவராக்கி விட்டு,
      தான் அதன் முதன்மை செயலாளராக பொறுப்பேற்றூ
      ஒரு புதிய, சக்திவாய்ந்த குழுவை உருவாக்கலாம்.

      ஜ்யோதிர் ஆதித்ய சிந்தியா, சசின் பைலட் இன்னும் பல இளைஞர்களை
      அந்த குழுவில் இணைக்கலாம். அவர்கள் எல்லாம் நன்கு செயல்படக்கூடியவர்கள். இளைஞர்களை ஈர்க்கக்கூடியவர்கள்.

  2. chandramouly.venkatasubramanian's avatar chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

    unlucky person

  3. avudaiappannav's avatar avudaiappannav சொல்கிறார்:

    onfit person..can not win

  4. Ramanathan's avatar Ramanathan சொல்கிறார்:

    Modi spoke about opposition to indian diaspora and but Rahul spoke to UC Berkeley students. you missed this point.

    Modi is not perfect. do you think, in current situation, it would be better if combined opposition wins election and do better job than bjp? please answer with your neutral stand

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப ராமநாதன்,

      இருவர் பேசியதும் அமெரிக்காவில் தான். இரண்டும் அமெரிக்க நாளிதழ்களில், தொலைக்காட்சிகளில் முக்கியத்துவம் பெற்றது. எனவே இரண்டு பேருமே உள்ளூர் அழுக்கை அமெரிக்காவில் போய் அலசினார்கள்…. முதலில் செய்தவர், மூத்தவர் என்கிற முறையில் மோடிஜிக்கு தான் இதில் அதிக பொறுப்பு…!

      இப்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில், எதிர்க்கட்சிகள்
      2019 தேர்தலில் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இல்லை என்பதே
      என் அபிப்பிராயம்.

      ஆனால், பாஜக மக்கள் மதம் கொண்டு அலைகிறார்கள்.
      அவர்களின் ஆட்டம் அளவுக்கு மீறிப்போகிறது.

      இதைக்கட்டுப்படுத்த பாஜகவுக்கு மூக்கணாங்கயிறு மாட்டப்பட வேண்டியது அவசியம். அதற்கு, பாஜகவின் பலம் குறைக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளின் பலம் அதிகரிப்பது ஓரளவு உதவலாம் என்பது என் கருத்து…!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  5. புது வசந்தம்'s avatar புது வசந்தம் சொல்கிறார்:

    நூறு சதவிகிதம் சத்தியமான வார்த்தைகள். நல்ல பதிவு.

  6. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இந்திரா, நேருவின் நிழலில் அரசியல் கற்றவர். ராஜீவ் அப்படியில்லை. வேறு வழியின்றி அரசியலுக்கு இழுத்துவரப்பட்டவர். ராகுல்காந்தி தன் சொந்த வாழ்வைக் காவுகொடுத்துவிட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளார். என்ன, சோனியா அப்போதே ராகுலை முன்னிலைப்படுத்தியிருக்கவேண்டும்.

    ஏதோ ராகுலுக்கு ஒன்றுமே தெரியாது என்றும், காங்கிரசில் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்கள் இருப்பதுபோலும் எண்ணவேண்டாம். ராகுலுக்கு கரிஷ்மா வரும். அவருக்குத் தேவை, திக் விஜய் சிங் போன்ற அல்லக்கைகள் இல்லை. அவருக்கு இளைஞர்களுடன் கூடிய நல்ல ஆலோசனைக் குழுதான் தேவை.

    மோடிக்கு மாற்று இந்த உருளைக் கிழங்கு கூட்டங்கள் இல்லை (லாலு, ஸ்டாலின் போன்ற ஊழலில் திளைத்து எல்லாவித அரசியல் அசிங்கங்களும் நிரம்பப்பெற்ற). காங்கிரசே தன்னை நம்பி ராகுலை முன்னிலைப்படுத்தலாம். நிச்சயம் பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸ் மட்டும்தான் இருக்கமுடியும். மானிலக் கட்சிகள் அல்ல. மானிலக் கட்சிகள் ஊழலின் ஊற்றுக்கண்கள். இவர்கள் யாருக்கும் கொள்கைகள் கிடையாது. சொந்த வாழ்க்கை, சொந்தக் கட்சி, மானிலம், இந்தியா ஒவ்வொன்றுக்கும் இவர்கள் ஒவ்வொரு கொள்கை வைத்திருப்பார்கள். ஆரியர்கள் கூடாது என்று சொல்லிக்கொண்டே கபில் சிபலின், வேணுகோபாலின் காலை நக்கிப் பிழைக்கும் நாய்கள் இவர்கள். காங்கிரஸ் கூடா நட்பு என்று சொல்லிக்கொண்டே அவர்கள் காலடியில் விழுந்துகிடக்கும் அடிமைகள் இவர்கள். தங்கள் சொந்தக் கல்லூரி, பள்ளிகளுக்கு அரசு ஆசிரியர்களுக்கு என்ன சம்பளம் சலுகைகள் கொடுக்கச் சொல்லுகிறார்களோ அதில் பத்தில் ஒரு பகுதிகூட கொடுக்காத பிசினாரிகள் இவர்கள்.

    மோடி வெளினாட்டில் காங்கிரஸ் அரசைப் பற்றிப் பேசியதும் தவறு. ராகுல் பேசியதில் சிலவற்றை அவர் தவிர்த்திருக்கலாம். ஆனால் மோடி பேசியதுதான் தவறு.

    மோடி 2019ல் வெற்றி பெறுவார் என்று நினைக்கவேண்டாம். அவரையே தேர்ந்தெடுப்போம் என்று நினைக்கும் அளவு அவர் இன்னும் எதையும் செய்துவிடவில்லை. அதே சமயம் மோடியை மதத்தினால் எதிர்ப்பவர்கள் சொல்லுவதில் ஒரு அர்த்தமும் இல்லை. அவர்கள், தங்களது மத வெறியினால் மோடியை வெறுக்கிறார்கள். என்னைக் கேட்டால் மோடி பெரும்பான்மை பெறுவது மிகவும் கடினம். அடுத்த 5 ஆண்டுகள், இந்தியாவுக்கே டர்புலன்டாகத்தான் இருக்கும் (மெஜாரிட்டியாக ஒரு கட்சி இல்லாமல்)

    • Sanmath AK's avatar Sanmath AK சொல்கிறார்:

      Mr.Puthiyavan, you said something very correct and realistic – next 5 yrs of turbulence for the country and the expected dent in BJP’s majority in 2019 elections. Also I accept your point about regional parties. In this case I would like to stress upon something – while Tamil Nadu’s leaders are considered most corrupted, TN was(not is) one of the most developed states at least till 2012. I feel it is because of regional parties. It is also dependent on the nature of the leader the party has. In this same forum I have asked the same question – lets take the example of Gujarat and Madhya Pradesh where BJP has been ruling for more than a decade. The so-called developments are inclusive?? I could quote a very recent example of a good government with inclusive growth – 1996-2001 rule(comparatively better). Present example is Andra & Telangana. National parties will not allow regional leaders to grow, that easily – we should appreciate Modi(that too because BJP was not able to find a better replacement after ABV, so Mahajan and then Advani came in to fray. We should accept Modi evolved as a leader(with exceptional PR work), which was the need of the party too). Regional leaders have to grow and only then they could do something good for the region, which is little remote in a national party. So a right regional leader have to be found.

  7. கொச்சின் தேவதாஸ்'s avatar கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

    கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்
    மோடி அவர்கள் அமெரிக்கா வருவதற்க்கு விசா வழங்கக்கூடாதென நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50
    பேர் கையெழுத்திட்டு அனுப்பியது,
    பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட
    ஒருவரை மிக மோசமாக வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்தது,
    இஸ்லாமிய நாடுகளுக்குச் சென்று மோடி வெற்றி பெற்றால் முஸ்லீம்கள்
    இந்தியாவில் வாழமுடியாது என்று
    பிரச்சாரம் செய்து இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் வாக்குகளைப்பெற பேசியது என முதலில் ஆரம்பித்து வைத்தது யாரென என்னை விட தங்களுக்கு அதிகம் தெரிந்து இருக்கும்.
    காங்கிசிஸ் வெற்றி பெறுவதற்க்காக எந்த எல்லைக்கும் செல்லும் என்பது
    உள்ளங்கை நெல்லிக்கனி போலத்
    தெரியும்.
    வெற்றி பெற்ற பிறகு காங்கிரஸ் எப்படி
    நடந்துகொள்ளும் என்பதற்கு உதாரணம்
    காமராஜர்.

  8. கொச்சின் தேவதாஸ்'s avatar கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

    கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்
    மோடி அவர்கள் அமெரிக்கா வருவதற்க்கு விசா வழங்கக்கூடாதென நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50
    பேர் கையெழுத்திட்டு அனுப்பியது,
    பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட
    ஒருவரை மிக மோசமாக வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்தது,
    இஸ்லாமிய நாடுகளுக்குச் சென்று மோடி வெற்றி பெற்றால் முஸ்லீம்கள்
    இந்தியாவில் வாழமுடியாது என்று
    பிரச்சாரம் செய்து இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் வாக்குகளைப்பெற பேசியது என முதலில் ஆரம்பித்து வைத்தது யாரென என்னை விட தங்களுக்கு அதிகம் தெரிந்து இருக்கும்.
    காங்கிசிஸ் வெற்றி பெறுவதற்க்காக எந்த எல்லைக்கும் செல்லும் என்பது
    உள்ளங்கை நெல்லிக்கனி போலத்
    தெரியும்.
    வெற்றி பெற்ற பிறகு காங்கிரஸ் எப்படி
    நடந்துகொள்ளும் என்பதற்கு உதாரணம்
    காமராஜர்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.