திருவாளர் ஸ்டாலின் மீதான புகார் – நிஜமாக இருக்க முடியுமா ?

திருவாளர் ஸ்டாலின் மீதான புகார் – நிஜமாக
இருக்க  முடியுமா ?

தமிழ் நாடு அரசு –
தன் மீது வேண்டுமென்றே நில அபகரிப்பு
பொய் வழக்கு போடுகிறது என்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின்,அவரது மகன் உதயநிதி மற்றும்
சில நண்பர்கள் மீது சேஷாத்ரி குமார் என்பவர்
கொடுத்துள்ள “நில ஆக்கிரமிப்பு” புகார்
உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா ?


புகார் என்ன சொல்கிறது ? –

——————–
ஆழ்வார்பேட்டையில் ஒரு பரம்பரை நிலம் இருக்கிறது.
குடும்பத்தின் பல்வேறு உறுப்பினர்களுக்கு அது பங்கு
பிரிக்கப்படுகிறது.

அதில் சேஷாத்ரி குமார் என்பவர் பங்கிற்கு இரண்டரை
கிரவுண்டு நிலம் கிடைத்திருக்கிறது. அதில் அவர்
சுமார் 4,400 சதுர அடியில் ஒரு வீடு கட்டி முதலில்
தான்  குடியிருந்திருக்கிறார். பின்னர் தேவி பழனிச்சாமி
என்பவருக்கு மாதம் ரூபாய் ஒரு லட்சத்து இருபதாயிரம்
என்கிற அளவில்  ஒப்பந்தம் செய்து வாடகைக்கு
விட்டிருக்கிறார்.

இவரது பரம்பரை நிலத்தில், பக்கத்திலேயே
பாகம் பிரிக்கப்பட்ட மற்ற உறவினர்களுக்கு கிடைத்த
சுமார் 6 கிரவுண்டு இடத்தை
ஸ்டாலின் வாங்கி வீடு கட்டி குடி வந்திருக்கிறார்.
தன் மகனுக்கும் பக்கத்திலேயே  ஒரு வீடு கட்டுவதற்காக
ஸ்டாலின் தரப்பில் சேஷாத்ரி குமாரை, அவரது பங்கான
இரண்டரை கிரவுண்டு நிலம் மற்றும் அதில் கட்டியுள்ள
வீட்டை விற்று விடுமாறு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

சேஷாத்ரி குமார் விற்க மறுக்கவே, அவரது வீட்டில்
குடியிருந்த தேவி பழனிச்சாமி என்பவரை முதலில்
மிரட்டி காலி செய்ய வைத்திருக்கிறார்கள்.

பின்னர் – ஸ்டாலின் சார்பில் அவரது நண்பர் ராஜசங்கர்,
சீனிவாசன், சுப்பா ரெட்டி ஆகியோர் அடியாட்களுடன்
வந்து மிரட்டி, பத்திரப் பதிவாளரை அவரது வீட்டிற்கே
அழைத்து வந்து ஹைதராபாத்தை சேர்ந்த
வேணுகோபால் ரெட்டி என்பவருக்கு
5.5 கோடி ரூபாய்க்கு சேஷாத்ரி குமார் அவரது வீட்டை
விற்று விட்டதாக பத்திரம் பதிவு செய்து கொண்டனர்.
அதற்கான தொகையாக 5.5 கோடி ரூபாய்க்கு
டி.டி.யும் கொடுத்துள்ளனர்.

சில நாட்களுக்கு பின் கணக்கில் வராத பணமாக
ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயை ரொக்கமாகக்
கொடுத்துள்ளனர். அது கணக்கில் வராத பணம் என்றும்
விஷயத்தை வெளியில் சொன்னால், மத்திய திமுக
அமைச்சர் பழனி மாணிக்கம் மூலமாக வருமான வரி
சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று
மிரட்டி இருக்கின்றனர்.

அதன் பின்னர் அந்த வீடு ஸ்டாலின் மகன் உதயநிதி
பெயரில் மாத வாடகை ரூபாய் 20,000 என்று
வீட்டை வாங்கிய வேணுகோபால் ரெட்டிக்கும்,
உதயநிதியின் படக்கம்பெனிக்கும் ஒப்பந்தம்
போடப்பட்டு, அதில் ஸ்டாலின் மகள் செந்தாமரை
குடி இருக்கிறார்.

இந்த கட்டாய விற்பனையை ஏற்றுக்கொள்ளாத
சேஷாத்ரி குமார், இதை எதிர்த்து  சட்டபூர்வமாக
நடவடிக்கை எடுக்க முயற்சி செய்திருக்கிறார்.
அந்த தகவல் தெரிந்ததும், அவர்
வீட்டுக்கு வருமான வரி அதிகாரிகள் ரெய்டு வந்து
அவரை மிரட்டி வாக்குமூலம் வாங்கிக்கொண்டு
போயிருக்கிறார்கள்.

இவ்வாறு, தன் வீட்டை அதிகார துஷ்பிரயோகம் செய்து
மிரட்டி, தனது பினாமி பெயரில் எழுதி வாங்கியதுடன்,
தன் வீட்டுக்கு வந்து கறுப்புப் பணத்தை வலுக்கட்டாயமாக
கொடுத்து, பின்னர் வருமான வரி சோதனையும்
செய்ய வைத்து, தன்னை மிரட்டி வரும்
வேணுகோபால் ரெட்டி, மு.க.ஸ்டாலின்,
உதயநிதி ஸ்டாலின், ராஜா சங்கர், சுப்பாரெட்டி,
சீனிவாசன் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து,
தன் வீட்டை தனக்கு மீட்டுத் தரும்படியும்,

தனக்கும் தன் குடும்பத்தினரின்
உயிருக்கும் பாதுகாப்பு தரும்படியும் –
காவல் துறையிடம் வேண்டிக்கொண்டு –
புகார் கொடுத்துள்ளார் சேஷாத்ரி குமார்.

—————————

இந்த வழக்கு கோர்ட்டுக்கு வரும்போது,
வாதப் பிரதிவாதங்கள் நிகழும். சாட்சிகள்
விசாரணைக்கு வரும். அனைத்தையும் ஆராய்ந்து
தீர்ப்பு சொல்லப்படும்.

ஆனால், அது இப்போதைக்கு நடக்கப்போவதில்லை.
எந்த காலத்தில், அரசியல்வாதிகளின் மீதான
ஊழல் வழக்குகள்  முடிவிற்கு  வந்திருக்கின்றன ?
அது வரை  மோசடி,மோசடி  என்று ஒரு தரப்பும்,
பொய் வழக்கு, பொய் வழக்கு  என்று எதிர்த்தரப்பும்
சொல்லிக்கொண்டே இருக்கப் போகின்றன.

அதற்கு முன்னர் –

உண்மைகளைப் பொறுத்த வரையில் நீதிமன்றங்களின்
எதிர்பார்ப்பு, அளவுகோல் வேறு.
நிஜ வாழ்க்கை நடைமுறை வேறு.

நீதிமன்றங்கள் – குற்றம் எல்லாவித சந்தேகங்களுக்கும்
அப்பாற்பட்டு (beyond all reasonable doubts)
நிரூபிக்கப்பட வேண்டும் என்கிற நியதியின் அடிப்படையில்
இயங்குகின்றன. எல்லா குற்றங்களையும் நீதிமன்றத்தின்
முன்னால் நிரூபித்து விட முடியாது !
நீதிமன்றங்களில், சந்தேகத்தின் பலன் குற்றம்
சாட்டப்பட்டவருக்கே போய்ச் சேரும்.(In courts –
the benefit of doubt goes in favour of
the accused )

நீதிமன்றத்திற்கு போக முடியாத அல்லது நீதிமன்றத்தில்
நிரூபிக்க முடியாத குற்றங்கள் நிறைய நடந்து கொன்டு
தான் இருக்கின்றன. நாமும் பார்த்துக்கொண்டு தான்
இருக்கிறோம் !

நம்முடைய, சமுதாயத்துடைய – அளவுகோல் வேறு.
குறிப்பிட்ட ஒரு விஷயம்  நடந்திருக்குமா இல்லையா
என்கிற அளவிற்கு நமக்கு தெரிந்தால் போதும்.
நம் மனதுக்கு புரிந்தால் போதும்.
நீதிமன்றங்களில் இவை என்ன முடிவை சந்தித்தாலும் சரி!

இந்த பின்னணியில் –
இந்த விஷயத்தை கொஞ்சம் அலசினால்,
ஓரளவு உண்மை நிலை என்னவாக இருக்கக்கூடும்
என்பதை  நாமே புரிந்து கொள்ள முடியும்
என்று தோன்றுகிறது. அது போதுமே நமக்கு !

1) ஸ்டாலின் தற்போது இருக்கும் சொந்த வீட்டிற்கு
பக்கத்து இடம் என்பதால் – அவர் தரப்பிற்கு இதில்
ஆர்வம்  இருக்க வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

2) எனவே, அதை விற்கும்படி நிர்பந்தம் செய்தார்கள்
என்கிற புகாரிலும் உண்மை இருக்கலாம்.

3) ஆழ்வார்பேட்டையில், இரண்டரை கிரவுண்டு நிலம்,
4,400 சதுர அடி கட்டிடத்துடன் 5.5 கோடி +
ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் விலைக்கு
விலை பேசப்பட்டிருக்கிறது.
சம்பந்தப்பட்ட இடம் இந்த அளவு தான்
விலை பெறுமா ?

புகாரை ஆராய்ந்தால் – குறைந்த
விலைக்கு எழுதி வாங்கி விட்டார்கள் என்று எங்கும்
சொல்லப்படவில்லை.
எனவே அதிகாரத்தை பயன்படுத்தி குறைந்த விலைக்கு
விற்கச்சொல்லி கட்டாயப்படுத்தினார்கள் என்று
சொல்ல முடியாது.

4) ஆனால் – விற்க விரும்பாத நபரை,
கட்டாயப்படுத்தி, மிரட்டி, வற்புறுத்தி, விற்பனை
பத்திரம் எழுதி வாங்கியதாக புகார்
கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சம்பந்தப்பட்ட பத்திரப் பதிவு அதிகாரி வீட்டிற்கே
அழைத்து வரப்பட்டு, பதிவு செய்யப்பட்டதாக புகார்
கூறப்பட்டுள்ளது.

இதை  உறுதி செய்துகொள்வது மிகவும் எளிது.
பத்திரப்பதிவு அலுவலகத்து ஊழியர்களிடம் விசாரணை
செய்வதன் மூலமும், ஆவணங்களை பரிசீலனை
செய்வதன் மூலமும் இதை சுலபமாக உறுதிப்படுத்திக்
கொள்ளலாம்.

பத்திரப்பதிவு அதிகாரி – வீட்டிற்கு அழைத்து
வரப்பட்டார் என்பது உறுதியானால்,
இதில் வற்புறுத்தல்,
கட்டாய விற்பனை – ஆகியவை
நிகழ்ந்து இருக்கிறது
என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

5) அடுத்து, வீடு விற்பனை குறித்து விளம்பரம்
எதுவும் செய்யப்படாத நிலையில், ஹைதராபாதில்
உள்ள வேணுகோபால் ரெட்டிக்கு
சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள சேஷாத்ரி குமாரின்
வீடு விற்கப்பட இருப்பதாக எப்படி தெரிந்தது ?
அவர் எப்படி, யார் மூலம், விற்பனை பற்றிய பேரத்தை,
பேச்சு வார்த்தைகளை, நடத்தினார் ?

6) வேணுகோபால் ரெட்டி ஸ்டாலினுடைய பினாமி என்று
சொல்லப்படுவதை, அவரது வங்கி கணக்குகளைக்
கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

5.5 கோடி என்பது சாதாரண தொகை அல்ல.
அவர்  5.5 கோடி ரூபாய்க்கு டி.டி. எடுத்தது
எந்த வங்கியில் ?
அந்த டி.டி.க்கு பணம் செலுத்தப்பட்டது யாரால்,
எப்படி, எப்போது என்று சுலபமாக வங்கி ஆவணங்களில்
இருந்து கண்டு பிடித்து விடலாம்.
சுமார் ஆறரை கோடி ரூபாய் கொடுத்து சென்னையில்
வீடு வாங்கி வாடகைக்கு விட வேண்டிய சூழ்நிலை
அவருக்கு ஏன், எப்படி வந்தது என்றும் ஆராயலாம்.

அவருக்கு அந்த அளவிற்கு நிதி வசதிகள் இருந்தனவா,
அவர் என்ன தொழில் செய்கிறார், அவருக்கும்
உதயநிதிக்கு என்ன தொடர்பு, போன்ற விஷயங்கள்
தெரிந்தால் இது உறுதிப்பட்டு விடும்.

7) அடுத்து அந்த வீடு வாடகைக்கு விடப்பட்டது
குறித்து –

முன்னதாக அந்த வீடு சேஷாத்ரி குமாரால்,
தேவி பழனிச்சாமி என்பவருக்கு மாத வாடகை ரூபாய்
ஒரு லட்சத்து இருபதாயிரம் என்கிற தொகைக்கு,
பத்திரம் எழுதி வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது.

இப்போது அதே வீடு, அதை வாங்கியதாகச்
சொல்லப்படும் வேணுகோபால் ரெட்டி
என்பவரால், ஸ்டாலின் மகன்
உதயநிதிக்கு மாதம் 20,000 ரூபாய்க்கு பத்திரம்
எழுதி  வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது.

ஆழ்வார்பேட்டையில் 4,400 சதுர அடி வீட்டை
வெறும் 20,000 ரூபாய்க்கு
ஒருவர் மாத வாடகைக்கு விட்டார் என்றால் –
அது நேர்வழியாக இருக்க வாய்ப்பே இல்லை !

8) மேலும், வாடகை ஒப்பந்தம் உதயநிதியின்
படக்கம்பெனிக்கும், வேணுகோபால் ரெட்டிக்கும்
இடையே தான்.
வாடகைப் பணம்  கொடுப்பது படக் கம்பெனி தான்.
படக்கம்பெனியின் கணக்கில் சினிமா சம்பந்தப்பட்ட
செலவுகள் தானே  வரவேண்டும் ?

ஆனால் ஸ்டாலின் மகள் குடியிருக்க
உதயநிதியின் படக்கம்பெனி பணம்
செலவழிக்கப்படுவது எப்படி ?
இங்கும் ஏதோ நிரடுகிறதே !

மேற்கண்ட  விவரங்களை எல்லாம் மீண்டும்
ஒரு முறை படித்துப் பார்த்தால்,
புகார் உண்மையாக இருக்க வாய்ப்பு
இருக்கிறதா, இல்லையா என்பது நம் மனதிற்கு
ஓரளவிற்கு விளங்கவே செய்கிறது

–இல்லையா ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to திருவாளர் ஸ்டாலின் மீதான புகார் – நிஜமாக இருக்க முடியுமா ?

  1. vignaani's avatar vignaani சொல்கிறார்:

    மீண்டும் ஒரு நல்ல பதிவு.
    அனைத்து விவரங்களையும் பார்த்து நடந்தது என்ன என்று நாம் ஊகிக்கலாம் .
    இவ்வளவு கால தாமதம் செய்து புகார் கொடுத்தார் என்பது தான் கேள்விக்குறி.

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    இவ்வளவு விவரங்கள் எதற்கு கா.மை.?

    துன்பப்படறவங்க எல்லாம் அவங்க கவலையை
    தெய்வத்துக்கிட்டே முறையிடுவாங்க
    ஆனா தெய்வமே கலங்கி நின்னா
    அந்த தெய்வத்துக்கு யாராலே ஆறுதல் சொல்ல முடியும்
    (சோதனை மேல் சோதனை பாடலின் இடையில் வரும் வரிகள்)

    If someone decides to kill me risking his own life,then no security in the world can save me-John F. Kennedy

    ஒரு ஜனநாயக நாட்டில் தங்கள் நலனைப் பேண மக்கள் ஒரு அரசை தேர்வு செய்கின்றனர்.ஆனால் அந்த அரசே அவர்களுக்கு இன்னல விளைவித்தால் அவர்களை காப்பாற்ற யாரால் இயலும்?

    நம் நாட்டில் ஜனநாயகம் ஒரு கேலிகூத்தாக்கி விட்டது.
    இந்த அமைப்பை வைத்து நாம் நம் பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

  3. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    //இவ்வளவு கால தாமதம் செய்து புகார் கொடுத்தார் என்பது தான் கேள்விக்குறி.//

  4. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    //இவ்வளவு கால தாமதம் செய்து புகார் கொடுத்தார் என்பது தான் கேள்விக்குறி.//
    உங்கள் அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று ஜெயா பேரிலோ அல்லது சசிகலா பேரிலோ ஒரு புகார் பதிவு செய்ய முயலுங்கள.மேற்கண்ட கேள்விக்கான பதில் கிடைக்கும்!!

  5. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    ****//இவ்வளவு கால தாமதம் செய்து புகார் கொடுத்தார் என்பது தான் கேள்விக்குறி.//
    உங்கள் அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று ஜெயா பேரிலோ அல்லது சசிகலா பேரிலோ ஒரு புகார் பதிவு செய்ய முயலுங்கள.மேற்கண்ட கேள்விக்கான பதில் கிடைக்கும்!!****

    ஹா..ஹா.. அருமையான பதில். எனது பைக்கைத் திருடிவிட்டனர் என்று போய் கம்ப்ளையிண்ட் கொடுத்தாலே பத்து நாள் இழுத்தடித்து அதன் பின் எஸ்.பியிடம் பேசிவிட்டுத்தான் எஃப்.ஐ.ஆரே போட்டார்கள். எஃப்.ஐ.ஆர் போட்ட தேதி பைக் காணாமல் போய் பத்து நாள் கழித்த தேதி. நான் முன்னமே புகார் கொடுத்திருந்தும் அதை ஒரு ஏட்டு தொலைத்துவிட்டார். எஃப்.ஐ.ஆர் போட்ட தேதிக்கு முதல் நாள் தேதியில் புகார் கொடுப்பதாக மீண்டும் லெட்டர் வாங்கினர்.

    இதிலே ஹைலைட்டான விஷயம், “நான் அன்னிக்கே லெட்டர் கொடுத்துட்டேன். இந்த ஏட்டுதான் தொலைச்சிட்டார்”னு நான் அப்பாவியா இன்ஸ்பெக்டரிடம் சொல்லவும், அந்த ஏட்டுக்கு வந்ததே கோபம்!! ‘ஏட்டையா’ன்னு சொல்லணுமாம். வெளியே வந்ததும் நாயி மாதிரி வள்வள்ளுனு விழுந்தார்.

    இப்போ தெரிஞ்சுக்கலாம் சேஷாத்ரியின் புகார் எப்படி கால தாமதமாச்சுன்னு!!!

    போலீஸ்காரன் என்கிட்ட லேட்டாதான் கம்ப்ளையிண்ட் வாங்கினான்னு நான் எப்படி கோர்ட்ல நிரூபிக்கிறது??

  6. pidithavan's avatar pidithavan சொல்கிறார்:

    காவிரிமைந்தன் சார்,

    பிரச்சினையை விளக்கமாகவும் எழுதணும்.

    அதே சமயம் வக்கீல் நோட்டீசும்
    வந்துடக் கூடாது. உங்க நிலை புரியுது.
    பிரமாதம் சார்.
    இதே மாதிரி நிறைய எழுதுங்கள்.
    எங்களால் சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது.
    கவலையே வேண்டாம்.

  7. rathnavel's avatar rathnavel சொல்கிறார்:

    நல்ல பதிவு.
    நன்றி.

  8. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    நண்பர் காவிரிமைந்தனே!
    இன்று உள்ள ஒவ்வொரு பத்திரிக்கையும் உங்களிடம் காணப்படும் எழுத்து நடைமுறையை கடைபிடித்தால், எவருக்கும் சந்தேகம் வர வாய்ப்பே இல்லை. யாரும் நீதிமன்றம், வாய்தா என்று அலையவும் தேவை இருக்காது.
    மிகவும் நடுநிலையான சந்தேகத்தை தீர்க்கும் அருமையான பதிவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகள்

  9. r v ramani's avatar r v ramani சொல்கிறார்:

    அருமையான பதிவு.

  10. CDR's avatar CDR சொல்கிறார்:

    அய்யா! நீங்கள் மூத்த பத்திரிக்கையாளரா அல்லது வழக்கறிஞ்கரா? உங்களின் செறிவார்ந்த சிந்தனை என்னை வியக்கவைக்கின்றது……….

  11. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அன்புள்ள கா.மை.

    நீங்கள் தொகுத்துள்ள அத்தனை உண்மைகளும் அரசிற்கும் அரசு தரப்பு வக்கீலும் நன்கு தெரியும் அதற்கு மேலும் தெரியும் அப்படி இருந்தும் ஸ்டாலினை கைது செய்ய தயக்கம் ஏன்?
    அவர் ஒரு நீதிமான் போல காவல் துறைத்தலைவர் அலுவலகம் வேறு சென்று தன் தரப்பு நியாத்தை சொல்லிவிட்டு வந்துள்ளார்.

    வேலை நீக்கம் செய்யப்பட்ட மேலாளர் நம் கண் முன் அடிக்கடி நடந்து நம்மை வெறுப்பேற்றத்தான் செய்வார்.நம் கவனம் எல்லாம் புதிதாக நியமனம் செய்யப்பட மேலாளர் மீது தான் இருக்க வேண்டும்.

    கடந்த ஏழு மாத அலுவல்களை வைத்துப்பார்த்தால் புது மேலாளர் நடவடிக்கைகள் மிகுந்த அதிருப்திஅளிப்பதாகவும் கவலை அளிப்பதாகவும் இருக்கின்றன அப்பாவி பொது மக்கள் அன்றாடம் படும் இன்னல நாளுக்கு நாள் பெருகி வருகிறது.அதேசமயம் பழைய மேலாளருக்கோ அவர் குடும்பத்தினருக்கோ எந்த ஒரு இன்னலுமின்றி அவர்கள்
    முன்பை விட தென்புடன் வாழ்வது போல தோன்றுகிறது.

    இந்நிலை நல்லதிறகில்லை.

    “தெய்வம் நின்று கொல்லும்” என்ற கருத்தைத்தவிர மற்ற கருத்துக்கள் அடங்கிய விவாதங்களை ஆவலுடம் எதிர் நோக்குகிறேன்.

  12. விக்னேஷ்'s avatar விக்னேஷ் சொல்கிறார்:

    அய்யா உங்களை போல வலைப்பு அமைக்க மிகவும் ஆசைப்படுகிறேன். ஆகையால் எனக்கு எளும் சந்தேகங்களை தீர்த்து தரவேண்டும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் விக்னேஷ்,

      உங்கள் ஆசை நிறைவேற என் வாழ்த்துக்கள்.

      எனக்கு கணிணி நுணுக்கங்கள் எதுவும்
      தெரியாது. என்னைப் போய் கற்றுக் கொடுக்கச்
      சொல்கிறீர்களே !

      சரி – என்னால் முடிந்ததை சொல்கிறேன் –

      1) நிறைய வலைத்தளங்கள் தமிழில் உள்ளன.
      எல்லா வலைகளுக்கும் போய் நிறையப் படியுங்கள்.
      எப்படி எழுதி இருக்கிறார்கள் என்று கவனியுங்கள்.

      2) முதல் கட்டமாக, மறுமொழி எழுதப் பழகுங்கள்.

      3) தமிழில் பிழை இல்லாமல் தட்டச்சு செய்ய
      பழகுங்கள்.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.