அடுத்த (தற்காலிக) பிரதமர் மீரா குமார்.. (prime minister in waiting ?) அன்னை சோனியாவிற்கு பிடித்தது ஏன் ?

அடுத்த (தற்காலிக) பிரதமர் மீரா குமார்..
(prime minister in waiting ?)
அன்னை சோனியாவிற்கு
பிடித்தது ஏன் ?

இப்போதைய தற்காலிக பிரதமர் சிங் அவர்களால்
தாக்குப் பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால்
அன்னை சோனியா காந்தி மாற்று பிரதமராக
மனதில் வைத்திருந்தது ப.சிதம்பரம் அவர்களை.

ஆனால் அண்மையில் பிரனாப் முகர்ஜியுடன் ஏற்பட்ட
பிரச்சினை காரணமாகவும், 2ஜி தாக்குதல்
காரணமாகவும் ப.சி.யின் வாய்ப்பு பறி போய் விட்டது.

அடுத்து அன்னை தயார் நிலையில் வைத்திருப்பது …
(prime minister in waiting ..)
நாடாளுமன்ற அவைத்தலைவர் (சபாநாயகர்)
திருமதி மீரா குமார் அவர்களை.

தகுதி உடையவர் தான் மீரா குமார்.
இந்திய வெளியுறவுத் துறையில் (IFS)
நீண்ட காலம் பணியாற்றியவர்.
வக்கீலுக்குப் படித்தவர் (MA,LLB).
4 முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
2004 லிருந்து 2009 வரை மத்திய
சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றிய
அனுபவம் உடையவர்.

இருந்தாலும் அன்னைக்கு பிடித்ததற்கான
காரணங்கள் வேறு –

எந்த காலத்திலும் தனக்கு கட்டுப்படக்கூடியவர் –
தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் –
ஓரளவு,பிரச்சினைகளை சமாளிக்கும் திறன் கொண்டவர் –
தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரை பிரதமர்
ஆக்கினால் வரவிருக்கும் உத்திரப் பிரதேச தேர்தலில்
மாயாவதியை எதிர்கொள்ள அந்த இமேஜ்
உதவியாக இருக்கும்.

எனவே உ.பி.தேர்தலுக்கு
முன்னரே மாறுதல்கள் வரக்கூடும் என்கிறார்கள்
டெல்லி நண்பர்கள்.

மீரா குமாருக்கு அனைத்து வாய்ப்புகளும்
கூடி வந்த வேளையில் –

தகவல் தெரிந்து கொள்ளும் உரிமை
சட்டத்தின் கீழ் (RTI act)சுபாஷ் சந்திர அகர்வால்
என்கிற   ஒரு மனிதர் வெளிக்கொண்டு
வந்துள்ள விஷயங்கள் சோனியா காந்தி,
மீரா குமாரை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதை
மேலும் தெளிவு படுத்துகிறது.

முன்னுரை  முடிந்தது.

இனி விஷயத்திற்கு வருவோம்.
வெளிவந்துள்ள தகவலின் சாராம்சம் –

திருமதி மீரா குமார் மறைந்த முன்னாள் மூத்த
காங்கிரஸ் தலைவரும், 40 வருடங்களுக்கு மேல்
மத்தியில் அமைச்சர் பொறுப்பு வகித்தவருமான
பாபு ஜகஜீவன்ராம் அவர்களின் மகள்.

1986 ல் ஜகஜீவன்ராம் மறைந்த பிறகு,
பீகாரில் அவரது தொகுதியான சாசாராமில் இருந்து
முதல் தடவை நாடாளுமன்ற உறுப்பினராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அதற்குப் பின் உத்திரப் பிரதேசத்தில் மாயாவதிக்கு
எதிராக நின்று ஒரு தடவையும், டெல்லியிலிருந்து
2 தடவைகளும் காங்கிரஸ் எம்.பி.யாக
தேர்ந்தெடுக்கப்பட்டவர்.2004லிருந்து 2009 வரை
மத்தியில் காங்கிரஸ் அமைச்சராக இருந்தவர்.

எண்.6, கிருஷ்ண மேனன் மார்க்-ல் உள்ள பங்களா.
இது பாபு ஜகஜீவன்ராம் மத்திய அமைச்சராக
இருந்த காலத்தில், அவருக்கு
ஒதுக்கப்பட்ட, மத்திய அரசுக்கு சொந்தமான
மிகப்பெரிய  பங்களா.

1986ல் ஜகஜீவன்ராம் மறைந்தார்.
பங்களாவை காலி பண்ண வேண்டிய அவசியம் வந்தது.
காலி செய்யவில்லை.
காங்கிரஸ் தரப்பில் அதே ஜகஜீவன்ராமின் தொகுதியில்
எம்.பி. சீட் பெற்று இடைத்தேர்தலில் வெற்றி பெற்று
எம்.பி. ஆனார்  திருமதி மீரா குமார்.

அப்போதைய பிரதமராக இருந்த
ராஜீவ் காந்தியை அணுகி எம்.பி. என்கிற முறையில்
அதே பஙகளாவை தன் பெயரில் ஒதுக்கிக்கொண்டார்.
பங்களா தொடர்ந்து அவர் வசமே இருந்தது.

நவம்பர் 1989ல் மத்திய அரசில் அதிகாரம் மாறியது.
(வி.பி.சிங் தலைமையிலான ஆட்சி )
பங்களாவை காலி செய்து ஒப்படைக்கும்படி
புதிய ஆட்சி உத்திரவு போட்டது.

அம்மையார் காலி செய்யாமல் இழுத்தடிக்கவே,
மத்திய அரசு கோர்ட்டை அணுகியது.
மார்ச் 31, 1990க்குள்
பங்களாவை காலி செய்து ஒப்படைக்க வேண்டும்
என்று கோர்ட் உத்திரவு இட்டது.

இருந்தாலும், காலி செய்யவில்லை.
அடுத்த பிரதமராக 1991-ல் நரசிம்ம ராவ்
பதவிக்கு வரும் வரை இழுத்தடித்தார்.

பின்னர் நரசிம்மராவைப் பிடித்து,
பங்களாவை இவரது தாயாரும், மறைந்த
ஜகஜீவன் ராமின் மனைவியுமான
இந்திராணி தேவியின் பெயரில் அவர் தனது
இறுதிக்காலம் வரை அந்த பங்களாவிலேயே
இருக்கலாம் என்று உத்திரவு பெற்றார்.
நிம்மதி.அடுத்த 11 வருடங்களுக்கு
எந்த தொல்லையும் இல்லை.

மீண்டும் தொல்லை ஆரம்பித்தது
இந்திராணி தேவி 2002-ல் இறந்தபோது.

அப்போது பதவியில்
இருந்தது பிஜேபி அரசு. வீட்டைக் காலி செய்து
ஒப்படைக்கச் சொன்னது.ஆனால் அம்மையார்
வழக்கம் போல் –
காலி செய்யாமல் இழுத்தடித்தார்.

2004-ல் மன்மோகன் சிங் பிரதமராக
ஆகின்ற வரையில் காலி செய்யாமலே இழுத்தடித்தார்.
2004-ல் காங்கிரஸ் ஆட்சியில் சமூக நல
அமைச்சராக பதவி கிடைத்தது. இப்போது மீண்டும்
மத்திய அமைச்சராக அதே பங்களாவை தன்
பெயருக்கு ஒதுக்கீடு செய்து பெற்றுக் கொண்டார்.

ஆனால் பங்களாவை நிரந்தரமாகப் பெற
வேண்டுமே – என்ன வழி ?

வழி கிடைத்தது. மத்திய அரசுக்கு ஒரு
வேண்டுகோள் வைத்தார் –
தனக்கு வேறு பங்களா ஒதுக்கப்பட வேண்டும்.
இந்த பங்களா தனது தந்தையும்
மறைந்த தலைவருமான பாபு
ஜகஜீவன்ராமின் நிரந்தர நினைவு இல்லமாக
மாற்றப்பட  வேண்டும் !

மன்மோகன் சிங் அரசு ஆயிற்றே –
முடிவு அவ்வளவு சீக்கிரம் தெரிந்து விடுமா ?
இந்த வேண்டுகோள் 2004 லிருந்து 2009 வரை
மன்மோகன் சிங் அரசின் பரிசீலனையில் எந்த வித
முடிவும் எடுக்கப்படாமலே இருந்தது (!).

2009-ல் மீண்டும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு
வந்ததும் பிரச்சினை தானாகவே தீர்ந்து விட்டது !

எப்படி ? –
சோனியா காந்தியின் விருப்பப்படி,
இப்போது  மீரா குமார் மக்கள் அவை
சபாநாயகராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனவே, சபாநாயகருக்கென்று ஒதுக்கப்பட்ட –
எண்.20, அக்பர் ரோடு பங்களா அவருக்கு
ஒதுக்கப்பட்டது.
(ஒரே கல்லுல ரெண்டு மாங்கா ? )

திருமதி மீரா குமார் இப்போது – புதிய,
சபாநாயகருக்கான பங்களாவில் குடியேறினார்.
ஆனால் -ஏற்கெனவே அவர் வசம் இருந்த
எண்.6, கிருஷ்ணமேனன் மார்க் -ல் உள்ள
பங்களாவையும் அவர் ஒப்படைக்கவில்லை !
அவரது தந்தை பெயரில் நினைவு இல்லம் எழுப்பும்படி
அவர் விடுத்த வேண்டுகோளும்
(இன்று வரை ) அப்படியே இருக்கிறது !!

இந்த நிலையில்,
RTI தகவல் கேட்டு விண்ணப்பம் வந்தவுடன்
விழித்துக்கொண்ட மத்திய அரசின்
பொதுப்பணித் துறை, திருமதி மீரா குமாருக்கு
அவர் வசம்  வைத்துள்ள எண்.6, கிருஷ்ணமேனன் மார்க்
பங்களாவிற்கான வாடகை பாக்கியாக,
ரூபாய் 1.98 கோடி(ஆமாம் கோடி தான் )
மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய
பாக்கி இருக்கிறது என்றும்  விரைவாக
அதை அரசு கஜானாவில்  செலுத்தும்படியும்
அறிவிப்பு அனுப்பி இருக்கிறது !

பின் குறிப்பு –

இந்த தகவல் மீடியாவில் வெளிவந்தவுடன்,
சபாநாயகரின் அலுவலகத்திலிருந்து (கவனிக்கவும் –
திருமதி மீரா குமாரிடமிருந்து அல்ல …)
யாரோ ஒரு அதிகாரி ஒரு பத்திரிகைக் குறிப்பு
ஒன்றினை அனுப்பி இருக்கிறார்.

பொதுப்பணித்துறை தவறான தகவலைத்
தந்திருக்கின்றது என்றும், 2002 லேயே மீரா குமார்
அந்த பங்களாவை காலி செய்து விட்டார் என்றும் !
(2004 முதல் 2009 வரை இவர் சமூகநலத்துறை
அமைச்சராக இருந்தபோது இதே பங்களாவில் தான்
இருந்தார் என்பதை அவர் மறந்தது போலவே
நாமும் மறந்து விடலாம் !)

கூடிய விரைவில், பொதுப்பணித் துறை –
இந்த தவறை சரி செய்து விடும் என்றும் நம்பலாம்  !!

பிரதமராக வர வேண்டியவருக்கு நோட்டீஸ் அனுப்பிய
பொதுப்பணித்துறை அதிகாரி எங்காவது
தண்ணி இல்லாத காட்டுக்கு டிரான்ஸ்வர்
செய்யப்படுவார்  என்றும் நம்பலாம்.

வாழ்க  ஜனநாயகம் !
வந்தே மாதரம் !!
பாரத் மாதா கீ ஜெய் !!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to அடுத்த (தற்காலிக) பிரதமர் மீரா குமார்.. (prime minister in waiting ?) அன்னை சோனியாவிற்கு பிடித்தது ஏன் ?

  1. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    உங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் மின் அஞ்சல் வாயிலாக படித்துக் கொண்டிருக்கின்றேன். ரொம்பவே ஆச்சரியப்படுத்துறீங்க. வித்யாசமான உருப்படியான அற்புதமான தகவல்கள். உங்களுக்கு நன்றி நண்பரே.

    டெல்லியில் இருக்கீங்களோ?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் ஜோதிஜி,

      உங்கள் மடல் மிக்க மகிழ்வு தருகிறது.

      இந்த தளம் நம்பகமான தகவல்களையும்
      நேர்மையான அணுகுமுறையையும்
      கொண்டிருக்க வேண்டும் என்பது
      என் விருப்பம்.
      நான் எந்த ஒரு அரசியல்
      கட்சியையும் சாராதவன்.
      இந்த வலைத்தளத்தில் என் மனசாட்சி
      சொல்வதை எழுதி வருகிறேன்.

      உங்களைப் போன்ற நண்பர்கள் தரும் ஊக்கம்
      தான் நான் தொடர்ந்து உற்சாகமாகப்
      பணியாற்ற உதவுகிறது.

      உங்கள் நல்லெண்ணங்களுக்கு நன்றி.

      (நீண்ட நாட்கள் முன்பு –
      நான் டெல்லியில் இருந்தேன் !
      நண்பர்கள் இப்போதும் உண்டு )

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  2. vignaani's avatar vignaani சொல்கிறார்:

    தகவல் அறியும் சட்டம் இவ்வாறான விஷயங்கள் வெளியாவதற்கு சரியான வழி. இதை வைத்துக்கொண்டு தான் சு.சுவாமி போன்றவர்கள் 2G பற்றியும் பல உண்மைகளை வெளிக்கொணர முடிந்தது. (இடைக்கால பிரதமராக வருவதற்கு அந்தோணி தகுதிகள் பற்றி வலையில் படித்திருக்கிறேன். மீரா குமார் இன்னமும் பொருத்தமே) இது போன்ற தகவல்கள் தமிழக செய்தி தாள்களில் இடம் பெறுவது இல்லை என்று நினைக்கிறேன்.
    இவ்வலைப்பதிவில், ராபர்ட் வதேரா, ஸ்டாலின் போன்று பல தகவல்கள் கிடைக்கப் பெற்றோம். நற்பணி தொடர்க.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் விஞ்ஞானி,

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  3. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    உங்கள் விடா முயற்சிக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

    மக்களை காப்பாற்ற வேண்டிய அரசே அவர்களை சுரண்டி கொள்ளை அடிக்கும் போது அது சர்வாதிகார அரசாக இருந்தால் மக்கள் புரட்சி செய்யலாம்.

    ஆனால் ஐந்தாண்டுக்கொருமுறை மக்களே தேர்வு செய்த அரசு
    அவர்களை சுரண்டி கொள்ளை அடிக்கும் போது என்ன செய்வது?இது ஒன்றுதான் நம்மை நோக்கியிருக்கும் கேள்வி.

    எனவே ,A ஒரு திருடன் ,B ஒரு திருடன்,C ஒரு திருடன் என்றெல்லாம் தனி தனியே நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை A முதல் Z வரை அனைவரும் திருடர்களே!

    இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன என்ற கேள்விக்குத்தான் நாம் விடை தேட வேண்டும்.விவாதங்கள் அலசல்கள் மூலம்…

    இதெல்லாம் வேலைக்காகாது என அறிந்தோ என்னமோ ஹிந்து போன்ற நாளிதழ்களே “கொலைவெறி” பாடல்களை அலசிக்கொண்டிருக்கின்றன!

    ஒரு சிறு தகவல்..
    மீரா குமாரின் தந்தை செய்த ஊழல்களை பதிவு செய்ய ஆரம்பித்தால் அது ஒரு நெடுங்கதையாக செல்லும்.மேலும் அவர்கள் மேல் எடுக்கும் எந்த நடவடிக்கையும் தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் எடுக்கும் நடவடிக்கை போல என்பதால் எந்த அரசும் இதற்கு முனையாது.

    முடிவாக
    In democracy people only get what they deserve!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் கண்பத்,

      நாமும் இங்கு தானே இருக்கிறோம்.

      இப்போது இருப்பதை விட நல்ல
      அரசாங்கத்துக்கு, நல்ல தலைவர்களுக்கு
      – நாம் நிச்சயம் தகுதி உடையவர்களே.

      நம்மில் சிலர் செய்யும் தவறுக்காக –
      நம் சமுதாயம் தொடர்ந்து அவதிப்பட
      வேண்டிய அவசியம் இல்லை.

      நம்மால் என்ன செய்ய முடியும் என்று
      நினைத்து பேசாமல் இருப்பதற்கு பதிலாக –
      இதை மாற்ற நம்மால் முடிந்ததை
      நாம் செய்வோம் என்று
      பெரும்பாலானோர் நினைக்கும்போது
      – மாற்றம் நிச்சயம் வரும்.

      நம்பிக்கையுடன் இருங்கள் !

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  4. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    நண்பரே,

    நம்பிக்கை+செயல்பாடு=மாறுதல்.

    நீங்கள் நம்பிக்கையில் கவனம் செலுத்துகிறீர்கள்
    நான் செயல்பாடு என்ன தேவை என்பதில் கவனம் செலுத்துகிறேன்.

    பிரச்சினையைப்பற்றி பேசுவதை/எழுதுவதை விட தீர்வைப்பற்றி பேசுவது/எழுதுவது இன்னும் உசிதமானது.

    காவிரிமைந்தன் மிக சிறந்த, திறமையான மனிதர்.அவர் தொகுதிக்கு அவர் எம் எல் ஏ ஆக சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரால் (ஆளுங்கட்சி,எதிர்கட்சிகளை மீறி)ஏதாவது நல்லது செய்ய முடியுமா என்பதுதான் கேள்வி.
    முடியாது என்பதுதான் பதில்.இதை பதிவர் பத்ரியிடம் கேட்டபோதும் அவர் பதிலளிக்கவில்லை.இந்த நிலை மாறும் வரை நம் நிலையும் மாறாது.

    நன்றி,வாழ்த்துக்கள்.

  5. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    வருக நண்பர் கண்பத்,

    சரி.
    இதை மாற்ற என்ன செய்யலாம் ?
    உங்கள் உத்தேசம், யோசனை என்ன – கூறுங்களேன் !

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  6. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    நன்றி,காவிரிமைந்தன்!
    பல யோசனைகள் என்னிடம் உள்ளன.
    முதலில் ஒரு சிலவற்றை இங்கு கூறுகிறேன்.
    அதற்கு வரும் விவாதங்களை பார்த்து தொடரலாம்.

    இந்திய,பிரதமர்,நிதி அமைச்சர்,உள்துறை அமைச்சர்,பாதுகாப்பு துறை அமைச்சர், அனைத்து மாநில முதன் மந்திரிகள்.இவர்கள் உள்ளிட்ட குழு அமைக்கப்படவேண்டும்.இதை A என அழைக்கலாம்.இவர்கள் சம்பந்தப்பட்ட எந்த வழக்கும் உச்ச நீதி மன்றத்தால் மூன்று நீதிபதிகள் அடங்கிய bench விசாரணை செய்யப்பட்டு சரியாக 12 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.தீர்ப்பு மூன்று வகைபடுத்தப்படவேண்டும்
    1.குற்றவாளி
    2.குற்றவாளி என நிரூபிக்கபடவிட்டாலும் குற்றம் செய்ததறகான சாத்தியகூறுகள் அதிகம் உள்ளன
    3. நிரபராதி.
    இதில் 1க்கு ஆயுள் தண்டனையும்,2ற்கு பதவி நீக்கமும்,மீண்டும் தேர்தலில் போட்டியிட ஆயுடகால தடையும் விதிக்கப்படவேண்டும்
    மேல் முறையீட்டிற்கு அனுமதி இல்லை.

    உச்ச /உயர் நீதிமன்ற நீதிபதிகள்,மத்திய மாநில காரியதரிசிகள்,
    முப்படை தளபதிகள் எல்லா மாநில காவல்துறை IGs and கமிஷனர்கள்.இவர்கள் உள்ளிட்ட குழு அமைக்கப்படவேண்டும்.இதை B என அழைக்கலாம்.இவர்கள் சம்பந்தப்பட்ட எந்த வழக்கும் உச்ச நீதி மன்றத்தால் மூன்று நீதிபதிகள் அடங்கிய bench விசாரணை செய்யப்பட்டு சரியாக 12 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.தீர்ப்பு மூன்று வகைபடுத்தப்படவேண்டும்
    1.குற்றவாளி
    2.குற்றவாளி என நிரூபிக்கபடவிட்டாலும் குற்றம் செய்ததறகான சாத்தியகூறுகள் அதிகம் உள்ளன
    3. நிரபராதி.
    இதில் 1க்கு ஆயுள் தண்டனையும்,2ற்கு பதவி நீக்கமும் தண்டனை.
    மேல் முறையீட்டிற்கு அனுமதி இல்லை.

    உங்கள் எல்லோருடைய கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.

  7. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    வாங்க கண்பத்,

    ஆனாலும் உங்களுக்கு அநியாய,
    அளவுக்கு மீறிய ஆசைகள் !

    ஆமாம் – இவற்றை எல்லாம்
    நிறைவேற்ற சட்டங்கள் வேண்டுமே –
    அதற்கு என்ன திட்டங்கள் ?

    -வாழ்த்துக்களுடன்
    காவிரிமைந்தன்

    • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

      பதிலுக்கு நன்றி காவிரிமைந்தன்!
      இதெல்லாம் நடக்காத காரியம் என்பது எனக்கும் தெரியும்.
      ஆனால் இதெல்லாம் நடந்தால்தான் நாம் எதிர்பார்க்கும் மாறுதல்கள் வரும் என்பதே நான் சொல்ல வரும் கருத்து.
      அதாவது,
      அத்தை சித்தப்பாவாக மாறவேண்டும் என்பது உங்கள விருப்பம்.
      அது நிகழ அத்தைக்கு மீசை முளைக்கவேண்டும் என்பது என் கருத்து.
      அது நடக்காது என்பது நாம் எல்லோரும் அறிவோம்.
      அதை விட எளிமையான முறை இருக்கிறதா என்பதை பலர் கருத்துக்களை கேட்டு தெரிந்துகொள்வோம் என்பதே என் வேண்டுகோள்
      We are “exploring” all possible solutions for our problem
      if all solutions are found to be non-viable then the only solution left is “explosion”

  8. yatrigan's avatar yatrigan சொல்கிறார்:

    நடக்கக் கூடியதாக யோசியுங்கள்.

    இப்படி எல்லாம் சட்டம் கொண்டு வர முடியும்
    என்று நம்பிக்கை இருக்கிறதா உங்களுக்கு ?

    “அன்னா ஹஜாரே” டீமுக்கு கிடைத்த ட்ரீட்மெண்ட்
    பார்த்தீர்கள் அல்லவா ?

    இவர்களுக்கெல்லாம் “அன்னா” பயனில்லை –
    “அந்நியன்” கள் தான் தேவை !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.