74,617 கோடி ரூபாய் அம்பேல் !!

அசலும் போச்சு – வட்டியும் போச்சு !
74,617 கோடி ரூபாய் அம்பேல் !!

90 நாட்களுக்கு மேலாக வட்டியும்
கட்டப்படாமல், அசலும் திருப்பப்படாமல்
அசைவே இல்லாமல் உறங்கிக் கொண்டுள்ள
வங்கிக் கடன்களுக்கு
வங்கியை நிர்வகிக்கும் புண்ணியவான்கள்
வைத்திருக்கும் பெயர் “non performing
assets”

ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று வீட்டு
கடன்கள் வாங்கி விட்டு, சமயத்தில்
திரும்பச்செலுத்த தவறும் நபர்களின்
(ஆண்களாக இருந்தாலும் சரி,
பெண்களாக இருந்தாலும் சரி )-

புகைப்படத்துடன் கூடிய விலாசத்தை
பொறுப்பாக பத்திரிகைகளில்,
காசு கொடுத்து,
விளம்பரம் செய்து,
அவர்களது மானத்தை வாங்குவதை
கடமை தவறாமல்
நாட்டுடமை ஆக்கப்பட்ட வங்கிகள்
மேற்கொள்வதை அடிக்கடி பத்திரிகைகளில்
பார்த்திருக்கலாம்.

இத்தனைக்கும் வீட்டுக்கடன்கள் அனைத்தும்
பாதுகாப்பானவை.  வீட்டுப் பத்திரங்கள்
சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் அடமானம்
வைக்கப்பட்டிருக்கும்.  

கொடுத்த கடன் திரும்ப வராமல் போனால்,
அந்த வீட்டை விற்று வங்கிகள்
தாங்கள் கொடுத்த கடனை
வசூலித்துக் கொள்ளலாம்.
இருந்தாலும் – சிறியவகை கடன்
பெற்றவர்களிடம்
வங்கிகள் நடந்து கொள்ளும் முறை  இது.

சரி -சாதாரண மக்களுக்கு கொடுக்கப்படும்
சிறிய கடன்களுக்கே இந்த கெடுபிடி என்றால் –

பெரிய தொழில் நிறுவனங்களுக்கு,
வர்த்தக நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும்
கடன்களுக்கு எத்தனை உறுதியான
உத்திரவாதங்கள் பெறப்பட்டிருக்க வேண்டும் ?
உரிய நேரத்தில், வட்டியோ, அசலோ
திரும்பவில்லை என்றால் எத்தகைய
நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் ?

ஆனால் – சரியான உத்திரவாதம் இன்றி
பெரும் தொழில் மற்றும் வர்த்தக
நிறுவனங்களுக்கு
கடனாகக் கொடுக்கப்பட்டு,
வங்கிகளால் திரும்ப
வசூலிக்கப்பட முடியாமல் இருக்கும் தொகை
எவ்வளவு தெரியுமா ?

மார்ச் 2011 முடிவில் இவ்வாறு திரும்ப வராத
கடன்களின் மொத்த தொகை
ரூபாய் 74,617 கோடி.

மயக்கம் வருகிறதா ?
ஆமாம் – எழுபத்தி நாலு ஆயிரம் கோடி தான்.

அதிகமில்லை ராஜாவின் 2ஜி யில்
பாதி தொகை தான்.

நான் சொல்வது கதை அல்ல – நிஜம் !

கடந்த வாரம் நிதிஅமைச்சர் பிரனாப் முகர்ஜி
நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளின்
கலந்தாலோசனை கூட்டம்  ஒன்றில் கலந்து
கொண்டு பேசியபோது கிடைத்த
தகவல் தான் இது.

இந்த கடன்களை ஏன் வசூலிக்க முடியவில்லை ?

இந்த கடன்கள் கொடுக்கும் முன்னர் தகுந்த
உத்திரவாதங்கள் பெறப்பட்டனவா இல்லையா ?
–  பதில் இல்லை.

உத்திரவாதங்கள்/அடமானங்கள்  இருந்தால் –
அதை ஏலம் விட்டு கடனை வசூல் செய்ய ஏன்
நடவடிக்கை எடுக்கவில்லை ?
–  பதில் இல்லை (செல்லத்தக்க
உத்திரவாதங்கள் இருந்தால் தானே ?
அவர்கள் தான் பெரும் தொழிலதிபர்கள் ஆயிற்றே –
வங்கி மேலதிகாரிகளை “தகுந்த முறை”யில்
கவனித்திருப்பார்கள்.)

அதிகாரிகளுக்கு என்ன –
அவர்கள் அப்பன் வீட்டு பணமா போகிறது ?

வங்கிப் பணம் தானே ?
வரம்பு மீறி கொடுத்திருக்கிறார்கள் ?

இப்படி பொறுப்பில்லாமல் கடன் கொடுத்த
அதிகாரிகளின் மீது என்ன நடவடிக்கை
எடுக்கப்பட்டது ?

நடவடிக்கை எப்படி எடுப்பார்கள் ?
அப்படி எடுக்க வேண்டியவர்களையும் தான்
“கவனித்து” இருப்பார்களே !

சரி – இன்னின்னார் –  இந்த இந்த
நிறுவனங்கள்  எல்லாம் இன்னும் வாங்கிய
கடனை திரும்ப செலுத்தவில்லை என்று
விளம்பரம் ஏதும் செய்யப்பட்டதா ?
–  இல்லை.

சரி இப்போதாவது கடனை திரும்பக்
கொடுக்காத நிறுவனங்களின்
பட்டியலையாவது
வெளியிடுவீர்களா ?

முடியாது. வங்கி நடைமுறைகள்
அதை அனுமதிக்கவில்லை.

பாவிகளா – 5 லட்சம்,10 லட்சம்
என்று வீட்டு கடன் வாங்கிய பெண்களின்
படத்தை எல்லாம் போட்டு
விளம்பரம் செய்கிறீர்களே !
இவர்கள்  பெயரையும், படத்தையும் ஏன்
விளம்பரம் செய்யவில்லை ?
– வங்கி நடைமுறைகள் அனுமதிக்கவில்லை!

இந்த அதிகாரிகளில் எவராவது
அவரது சொந்தப் பணமாக இருந்தால்,
அதில்  500 ரூபாயையாவது
எவருக்காவது இப்படி கடன் / தானம்
கொடுக்க முன் வந்திருப்பாரா ?

இவ்வளவு பெரிய தொகையை திரும்பப்பெற
என்ன செய்யப்போகிறீர்கள் என்று
அமைச்சரும் கேட்கவில்லை –
அதிகாரிகளும் சொல்லவில்லை.

வாராக் கடன்களின் நிலை “ கவலை
அளிக்கிறது என்று மட்டும்  சொல்லி
விட்டு அமைச்சர் போய் விட்டார் !
அவ்வளவு தான்.  இனி அடுத்த
வருடம் தான் ஆய்வு கூட்டம். அதற்கு
வேறு மந்திரி யாராவது வந்து “கவலை”
தெரிவித்து விட்டுப் போவார்கள் !

உண்மையில் –
அமைச்சரும் கவலைப்பட மாட்டார் –
அதிகாரிகளும் கவலைப்பட மாட்டார்கள் !

கவலைப்பட வேண்டியவர்கள்
நாட்டு மக்களாகிய நாம் தான் –
ஏனென்றால்
அது நம் வங்கி,நாட்டுடைமை ஆக்கப்பட்ட
வங்கி. அது நம் பணம்,
பாழாய்ப்போவது  நம்  வரிப்பணம்.

வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட போது,
இந்திரா காந்தி அம்மையார்  
அதற்கான காரணங்கள்,
குறிக்கோள்கள், லட்சியங்கள் என்று
பலவற்றைச் சொன்னார்.

ஆனால் –

நோக்கங்களில் இதுவும் ஒன்று என்று
அம்மையார் அன்றே
சொல்லாமல் போய் விட்டாரே !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், சுதந்திரம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to 74,617 கோடி ரூபாய் அம்பேல் !!

  1. paarvathi's avatar paarvathi சொல்கிறார்:

    அய்யா,
    நான் உங்களின் பதிவுகளை தவறாமல் படித்து வருகிறேன்.
    அனைத்துமே சிறந்த கருத்துக்களை கொண்ட பதிவுகள். உங்களின் தெளிவான விமர்சனங்கள் மிக அருமை.

    தொடரட்டும் உங்கள் பணி……..

    ஒரு வேண்டுகோள்…..

    சமசீர் கல்வி பற்றி உங்களின் நிலை என்ன?.. அதைப் பற்றி ஒரு பதிவு இடுவீர்களா??…

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி நண்பரே,

      கலைஞரால் கொண்டு வரப்பட்ட
      கல்வித் திட்டத்தில் பெயரில் மட்டும் தான்
      சமச்சீர் இருக்கிறது.

      உண்மையில் சமச்சீர் கல்வி என்றால்,
      ஒரே பாட திட்டத்தை அனைத்து வித
      பள்ளிகளுக்கும் கொடுப்பது இல்லை.

      அனைத்து பள்ளிகளிலும் ஒரே வித கல்வித்தரம்
      இருக்கும்படி உறுதி செய்வதே சமச்சீர் கல்வி.

      வகுப்பறைகளில் வசதிகள் பெருக்கப்பட வேண்டும்.
      ஆசிரியர் – மாணவர் விகிதம்
      (teacher – student ratio )
      சீர்படுத்தப்பட வேண்டும்.
      எல்லா பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு
      ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.

      பரிசோதனை சாலைகளின்(laboratories)
      தரம் ஒரே மாதிரியாக உயர்த்தப்பட வேண்டும்.

      மாணவர்களுக்கு சுகாதாரமான சூழ்நிலை
      உறுதி செய்யப்பட வேண்டும்.ஒழுங்கான
      கழிப்பிட வசதிகள், நல்ல குடிநீர் கிடைக்க
      வழி செய்ய வேண்டும்.

      இவை எதையும் செய்யாமல்,
      அவசர அவசரமாக
      தன் புகைப்படம்,
      தன்புகழ்,
      தன் மகள் கவிதை ஆகியவை
      பாடப் புத்தகங்களில் சேர்க்கப்படுவதை மட்டும்
      உறுதி செய்து கொண்டு புதிய திட்டத்தை
      தேர்தலுக்கு முன் கலைஞர் அறிவித்தது
      நிச்சயமாக ஒரு ஏமாற்று வேலை தான்.

      இருந்தாலும் – பள்ளி திறக்கும் நேரத்தில்
      இதில் தலையிட்டால் – மாணவர்களும்,
      பெற்றோர்களும் அவதிப்படுவார்கள் என்பதை
      உணர்ந்து, அதிமுக அரசு இன்னும் சிறிது
      முன்யோசனையுடன் செயல்பட்டிருக்க
      வேண்டும்.

      இந்த கல்வி ஆண்டிற்கு அனுமதித்து விட்டு,
      ஒரு வருட அவகாசத்தில் புதிய குழுவை
      அமைத்து, ஆராய்ந்து, அனைத்தையும்
      உண்மையிலேயே சீர் செய்திருக்கலாம்.

      அவசரப்பட்டு விட்டார்கள்.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  2. ins's avatar ins சொல்கிறார்:

    how much viewers visit this site per day?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பரே,

      சராசரியாக நாள்தோறும் 600 வருகைகள்
      பதிவாகின்றன.

      உங்கள் அக்கரைக்கு நன்றி.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  3. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    காவிரி மைந்தன்,
    இது போல நாமும் கடன் வாங்கி பணம் கட்டாமல் விட்டு விட்டு கோர்ட்டுக்கு ஜப்தி என்று வரும்போது இதை முன்னுதாரணம் காட்டலாமா? வராக்கடன் அடிப்படையில் இதையும் தள்ளுபடி செய்யலாம் என்று கோரலாமா? இது கயமைத்தனம் என்றாலும் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சொரணை வரும்படி செய்வதற்கு இதுபோல யுக்திகளைக் கையாளுவதுதானே சரியாகும்??

    மக்களாட்சியின் ஆணிவேர் என்பது நடுத்தர/எளிய மக்களின் சகிப்புத்தன்மையில் மட்டும்தான் அடங்கியிருக்கிறது என்பது மிக அபாயகரமானது.

  4. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    ப்ப்பூ வெறும் 75 ஆயிரம் கோடிதானா!
    எங்க status க்கு இது ரொம்ப குறைச்சல்
    ஒரு லட்சம்
    கோடிதான் எங்களுக்கு minimum

    கொடி பிடிக்க தொண்டர்கள்
    அடி கொடுக்க குண்டர்கள்
    கோடி அடிக்க தலைவர்கள்
    இதுதான் இந்தியா

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் கண்பத் / ரிஷி

      எதற்கும் ஒரு முடிவு வந்து தானே ஆக வேண்டும் ?

      காத்திருப்போம் –
      வேறு வழி ?

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  5. ins's avatar ins சொல்கிறார்:

    //இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?///
    when will change? every day ,we have a change …
    yesterday cabinet reshuffles(change) but no one change benefit for us??

  6. Bandhu's avatar Bandhu சொல்கிறார்:

    மிக நல்ல விழிப்புணர்வு கருத்துக்களை எழுதுகிறீர்கள். ஆங்கிலத்தில் சொல்வது போல், The politicians have been given a very long rope! we have to wait for them to kill themselves with that!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.