கடனா – லஞ்சமா?
லஞ்சமா – கடனா ? ஒரு அலசல் !
வாங்கியது கடன் –
வட்டியுடன் சேர்த்து திரும்பக் கொடுத்தாகி விட்டது !
பிறகு லஞ்சம் எங்கே – ஊழல் எங்கே ?
48 பக்க குற்றச்சாட்டை சிபி ஐ கோர்ட்டில் தாக்கல்
செய்த பிறகும் வரும் வார்த்தை இது.
சிபி ஐ குற்றச்சாட்டுகளின் சாரம் –
தொலைக்காட்சிக்கு தரப்பட்ட 200 கோடி கடன் அல்ல –
2ஜி அலைக்கற்றை கிடைக்கச்செய்ததற்காக டிபி ரியல்டி
நிறுவனத்தால் ராஜாவிற்கு கொடுக்கப்பட வேண்டிய
லஞ்சப்பணத்தின் ஒரு பகுதி, அவரது ஆலோசனைப்படி
அவரது கூட்டாளி(கனிமொழி)யின் தொலைக்காட்சி
நிறுவனத்திற்கு டிசம்பர் 2008க்கும் ஆகஸ்டு 2009க்கும்
இடைப்பட்ட காலகட்டத்தில் கொடுக்கப்பட்டது
என்று கூறி இதற்கு ஆதாரமாக 14 வித சான்றுகளையும்
காட்டியுள்ளது சிபி ஐ.
அதன்படி கலைஞர் டிவி துவங்கப்பட்டது 2007ல்.
அதன் மொத்த மதிப்பு ரூபாய் 10 கோடியே ஒரு லட்சம்.
இதில் கனிமொழியின் பங்கு 20% (அதாவது 2 கோடி)
கலைஞரின் துணைவி தயாளு அம்மையாரின் பங்கு
60 % (அதாவது 6 கோடி). நிர்வாகி சரத்குமாரின் பங்கு
20% (அதாவது 2 கோடி). இந்த டிவி நிறுவனத்தின்
2008-2009ஆம் ஆண்டுக்கான மொத்த வரவு-செலவுத்
தொகையே (டர்ன் ஓவர் ) 47 கோடியே 54 லட்சம் தான்.
இந்த நிலையில் கலைஞர் டிவிக்கு டிபி ரியல்டியால்
சுற்றி வளைத்து வேறு நிறுவனங்கள் மூலம்
கொடுக்கப்பட்ட 200 கோடி ரூபாயை
இந்த டிவி நிறுவனத்தின் 30 %
(அதாவது 3 கோடி ரூபாய் பெறுமானம் உள்ள) பங்குகளை
வாங்குவதற்காக கொடுக்கப்பட்ட முன்பணம் என்று
கூறுவது நம்ப முடியாதது – ஏற்க முடியாது.
அதே போல் பங்கு விலை பேரம் ஒத்து வராததால் –
இந்த பணப்பரிமாற்றம் பின்னர் கடனாகக் கருதப்பட்டு
வட்டியுடன் திரும்பக்கொடுக்கப்பட்டது என்கிற வாதமும்
ஏற்கக்கூடியதல்ல. ஏனெனில் இது கடன் என்று கூறப்பட
ஆரம்பித்தது ராஜா மீது சிபி ஐ நடவடிக்கைகள்
துவங்கிய பிறகு தான்.
ராஜா மீது 2010 டிசம்பர் 24ஆம் தேதி சிபி ஐ
நடவடிக்கையைத் துவங்கிய பிறகே இந்த பணம் கடன்
என்று கூறப்பட்டு, திரும்பக் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது.
2011 ஜனவரி24ம் தேதி 65 கோடி ரூபாயும்,
2011 ஜனவரி 29ம் தேதி 25 கோடியும்,
2011 பிப்ரவரி2ம் தேதி 50 கோடியும்
திரும்பக் கொடுக்கப்பட்டது.
இந்த கால கட்டத்தில் தான் ராஜாவின் கைது நடவடிக்கைகள்
பற்றி மீடியாவில் பெரிய அளவில் செய்திகள் வர ஆரம்பித்தன !
மேலும் இவ்வளவு பெரிய பணப்பரிமாற்றம் ஏற்பட்டதற்கு
ஆதாரமாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையே
ஒப்பந்தங்கள் எதுவும் செய்து கொண்டதற்கான
ஆதாரங்கள் எதுவும் இல்லை. இவ்வளவு பெரிய தொகையை
கடன் கொடுக்க (தகுந்த ஜாமீன் -அடமானம் போன்றவை)
எந்த வித உத்தரவாதமும் கொடுக்கப்படவில்லை.
இன்னும் சில நெருடலான விஷயங்கள் –
கலைஞர் டிவிக்கு கிடைத்த 200 கோடி ரூபாய் பணம்
எப்படி, யாரால், எந்த விதத்தில் – பயன்படுத்தப்பட்டது
என்பது பற்றிய விவரங்கள் இல்லை.
அதே போல் – கடன் என்று சொல்லி வாங்கிய பணத்தை
திரும்பக் கொடுக்கும்போது கலைஞர் டிவிக்கு –
இந்தப் பணத்தை அஞ்சுகம் பிலிம்ஸ் என்கிற
நிறுவனம் கொடுத்து உதவியுள்ளது.
இந்த அஞ்சுகம் பிலிம்ஸ் எப்படி உள்ளே வந்தது ?
யார் இதன் உரிமையாளர்கள் ?
கலைஞர் டிவிக்கும்
அஞ்சுகம் பிலிம்ஸுக்கும் உள்ள தொடர்பு என்ன ?
அந்த நிறுவனத்திடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது ?
அந்த நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளில் படம் எதுவும்
எடுத்ததாகத் தெரியவில்லையே – திடீரென்று வந்தது எப்படி ?
இப்போது அஞ்சுகம் பிலிம்ஸ்
கலைஞர் டிவிக்கு கொடுத்திருக்கும்
பணம் கடனா ? இல்லை தானமா ?
ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. சாமர்த்தியமாக
திசை திருப்பி விட்டார்கள்.
எதார்த்தமான கேள்வி தான் –
என் பெயருக்கு ஒரு விளம்பர மதிப்பு இருக்கிறது.
எனவே என் மனைவியும், மகளும் 10 கோடி ரூபாய்
முதல் போட்டு என் பெயரில்
ஒரு கம்பெனி துவங்குகிறார்கள். கம்பெனியின்
வியாபாரத்திற்கு என் பெயர் பயன்படுத்தப்படுவதாலும்,
சம்பந்தப்பட்டவர்கள் என் மனைவியும் மகளும் என்பதாலும்
நான் நிச்சயம் அதன் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு
தான் வருவேன் என்று நீங்கள் நினைக்கலாம்.
இந்த நிலையில், எனக்குத் தெரியாமல்
என் மனைவியும் மகளும் அந்த 10 கோடி ரூபாய்
கம்பெனிக்காக 200 கோடி ரூபாய் கடன் வாங்கினார்கள்
என்றால் அதை நீங்கள் யாராவது நம்புவீர்களா ?
என் மனைவியும், மகளும் வாங்கிய 200 கோடி
பற்றிய விவரமே எனக்குத் தெரியாது என்று நான்
கூறினால் நீங்கள் நம்புவீர்களா ?
அல்லது
ஒன்றாகவே, ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் –
என் மனைவியோ மகளோ கோடிக்கணக்கில் பணம்
சம்பாதித்தாலோ, கடன் வாங்கினாலோ அதற்கும்
எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று
சொன்னால் நம்புவீர்களா ?



நண்பரே,
ஒரு 15 நாட்களுக்கு ஊழல் அரசியல் பற்றிய பதிவுகளுக்கு ஒய்வு கொடுக்கலாமே!அப்புறம் அடுத்த பல நாட்களுக்கு அதுதானே எழுதவேண்டியிருக்கும்! )))
நன்றி