“நிதானம்” தவற வேண்டாம் –
நாஞ்சில் நாடன் அவர்களே!
நேற்றைய நாளிதழ் ஒன்றில் படித்த உங்கள்
பேட்டி ஒன்றின் விளைவாக எழுந்த
வேதனையும் கோபமும் தான் என்னை இதை
எழுத வைக்கிறது. பின்னர் நிதானமாகக்கூட
எழுதலாம் தான்.இருந்தாலும் என்னுள் எழுந்த
இந்த சூடு தணிவதற்குள் எழுத வேண்டும் –
அதை அப்படியே பதிவு செய்ய வேண்டும் என்று
தோன்றியதால் உடனடியாக எழுதுகிறேன்.
உங்களிடம் ஒரு சின்ன கேள்வி –
சாகித்ய அகாடமி பரிசு பெறும் முன்னர்
நாஞ்சில் நாடன் யார் என்பதை அறிந்தவர் யார் யார் ?
எத்தனை பேர் ?
தமிழ் இலக்கியங்களில் ஆர்வமும்,
பரிச்சயமும் உள்ள,
தொடர்ந்து தமிழ் இதழ்களையும்,
வெளியீடுகளையும் வாங்கிப் படிக்கும்
வசதியும், வாய்ப்பும் உள்ள,
எண்ணிக்கையில் சில ஆயிரங்களில்
அடங்கி விடக்கூடிய தமிழர்களுக்கு மட்டுமே
உங்களைத் தெரியும். அவர்களிலும் –
உங்கள் எழுத்துக்கள்
அனைத்தையும் படித்திருக்கக் கூடியவர்
எத்தனை பேர் ? அத்தகைய வாய்ப்பு
எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும் ?
சாகித்ய அகாடமி பரிசு கிடைத்தவுடன்,
தமிழ் நாட்டிலும் – வெளியிலும், ஒரு பரபரப்பு.
உங்களைப் பற்றியும், உங்கள் படைப்புகளைப்
பற்றியும், செய்திகள் தொலைக்காட்சியிலும்,
நாளேடுகளிலும்,
வார இதழ்களிலும் வெளி வந்தன.
தமிழர் அல்லாதவர் கூட உங்களைப் பற்றி
தெரிந்து கொண்டார்கள்.
மேலும் பலர் இந்த செய்திக்குப் பிறகு
உங்கள் படைப்புகளைத் தேடிப் படிக்க
ஆரம்பித்தார்கள். இது வரை நீங்களே
உங்கள் எழுத்துக்களில் சொன்னதைத் தவிர
உங்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள்
யாருக்கும் அதிகம் தெரியாது.
உங்களுக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம்
உண்டு என்பது நீங்களே ஒரு கட்டுரையில்
சொல்லித்தான் தெரியும்.
தமிழ்ப் புத்தகங்கள் மிகச் சில ஆயிரங்களே
அச்சடிக்கப்படுகின்றன – விற்கப்படுகின்றன.
எனவே இதற்கு முன்னர் உங்கள் கட்டுரையின்
மூலம் உங்கள் குடிப்பழக்கம் பற்றி
அறிந்திருக்கக்கூடியவர்கள் மிகச்சிலரே.
முதலாக, இதைப் பற்றி நீங்கள் –
எழுதி இருக்க வேண்டியதே இல்லை.
நீங்கள் என்ன குடிக்கிறீர்கள்
எப்படி படுக்கிறீர்கள் என்பதைப் பற்றி
யாருக்கு என்ன அக்கரை ?
மக்கள் உங்கள் எழுத்தைத் தான்
தெரிந்து கொள்ள விரும்பினார்கள்.
உங்கள் குடிப்பெருமையை அல்ல.
சரி -ஏதோ உங்களுக்கு தோன்றியது – எழுதினீர்கள்.
உங்கள் பழக்கம் உங்களோடு.
அதைப் பற்றி யாரும் விமரிசனம் செய்யவில்லை.
இப்போது குடிப் பழக்கத்தை தீவிரமாக நியாயப்படுத்தி
பேசி இருக்கிறீர்கள்.அதுவும் எப்படி ?
பல லட்சம் பிரதிகள் விற்கும்
ஒரு நாளிதழில் -மிகத்தீவிரமாக குடியை ஆதரித்து !
உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் குடிப்பதற்கு
வக்காலத்து வாங்குவது சமூகத்திற்கு நல்லதா ?-
என்று அந்த பத்திரிகையாளர் கேட்டதற்கு
என்ன பதில் சொல்கிறீர்கள் நீங்கள் ?
– ” நான் குடிப்பதற்கான நியாயத்தை சொல்றேன்.
குடிப்பழக்கம் ஒழுக்கம் சார்ந்த விஷயம்.அறம் வேறு.
அறம் என்பது எப்பொழுதும் நிலையாக
இருக்கக் கூடிய்து. ஒழுக்கம் என்பது காலத்திற்கு
காலம் மாறுபடக்கூடியது.”
என்ன சொல்ல வருகிறீர்கள் ?
தனி மனித ஒழுக்கம் தேவையற்றது
என்று சொல்கிறீர்களா ?
தனி மனித ஒழுக்கம் இல்லையென்றால்
சமுதாய ஒழுக்கம் எப்படி வரும் ?
அவரவர் விருப்பம் போல் நடந்து கொள்ள
ஆரம்பித்தால் – சமுதாயம் என்ன ஆகும் ?
நீங்கள் குடிப்பதை நியாயப்படுத்துவதற்காக –
குடிப்பழக்கத்தையே நியாயப்படுத்துகிறீர்களா ?
ஒழுக்கம் காலத்திற்கு காலம் மாறுபடக்கூடியதா –
இல்லை மேம்படக்கூடியதா ?
மேற்கொண்டு இன்னும் கூறுகிறீர்கள் –
“உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா சமூகமும்
குடிப்பழக்கத்தை ஆதரிக்கிறது”.
எந்த சமூகமும் குடிப்பழக்கத்தை ஆதரிக்கவில்லை.
சில சமூகங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
சில சமூகங்கள் சகித்துக் கொண்டுள்ளன.
அவ்வளவு தான்.
“இன்றும் உலகத்தில் உள்ள அனைத்து பழங்குடி
சமூகத்திடமும் குடிக்கின்ற பழக்கம் இருக்கிறது”.
அப்படியானால் மீண்டும் காட்டுமிராண்டி ஆகு
என்று சொல்கிறீர்களா ?
குடிப்பது தமிழர்களின் கலாச்சாரம் என்று
சொல்ல வருகிறீர்கள் !
எது ஒரு சமூகத்தின் கலாச்சாரம் ஆகும் ?
சமுதாயத்தின் பெரும்பகுதியினரால் மனதார
ஏற்றுக்கொள்ளப்பட்டு தொடர்ந்து கடைப்
பிடிக்கப்படும் பழக்க வழக்கங்கள் தான்
அந்த சமூகத்தின் கலாச்சாரம்.
தமிழர்கள் குடியை ஒரு பண்பாக ஏற்றுக்கொண்டு
விட்டார்கள் என்பது தான் உங்கள் வாதமா ?
இது தமிழ்ச் சமுதாயத்தால்
ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கம் என்றால் –
– 2000 ஆண்டுகளுக்கு
முன்னர் திருவள்ளுவர் இதைக் கண்டித்து
ஒரு அதிகாரமே எழுத வேண்டிய அவசியமென்ன ?
உங்களுக்கு தேவைப்படும்போது மட்டும்
தொட்டுக்கொள்ள திருக்குறள் என்ன
சாராயக் கடை ஊறுகாயா ?
நமது சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட
கலாச்சாரம் என்றால், மோகன்தாஸ் கரம் சந்த்
காந்தி – நம் கலாச்சாரத்தை எதிர்த்தே
போராடினாரா ?
கள்ளுக்கடை மறியல் செய்த தமிழர்கள்
எல்லாம் கலாச்சார விரோதிகளா ?
நீங்கள் தான் கலாச்சாரத்தை மீட்டுக் கொடுக்க
வந்த தேவ தூதனா ?
2000 ஆண்டுகளாக இருந்து வரும் பழக்கம்
என்பதால் ஆதரிக்கிறேன் என்கிறீர்களே –
ஏன் விபச்சாரம் கூடத்தான் அதற்கும் முன்பிருந்தே
இருந்து வரும் பழமையான பழக்கம்.
ஆதரிப்பீர்களா ?
மேலை நாடுகளில் செக்ஸ் ஒர்க்கர் என்பதை
ஒரு தொழிலாகவே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
நாமும் செய்யலாம் என்பீர்களா ?
இன்னும் என்ன சொல்கிறீர்கள் ? –
“ஏழைகளின் சந்தோஷத்திற்கு குடி உதவுகிறது.
அவர்களின் நியாயங்களை நாம் புறக்கணிக்கக்
கூடாது.”
அந்த ஏழைக்கு எது சந்தோஷம் என்பதை
யார் தீர்மானிப்பது ? நீங்களா –
இல்லை அவன் குடும்பமா ?
குடும்பத்தில் மற்றவர் யாருக்கும் துன்பம் அளிக்காத
ஒரு விஷயத்தை தான் சந்தோஷம் என்று
சொல்ல முடியும்.
ஒரு நாளைக்கு 150 ரூபாய் சம்பாதிக்கும்
தொழிலாளி 120 ரூபாய் கொடுத்து
குவார்ட்டரை போட்டுக்கொண்டு வந்து
பெண்டாட்டி பிள்ளைகளை பட்டினி போட்டு,
சண்டைக்கிழுத்து,தெருவில் துரத்தி,
தன் குடலையும்,
சிறுநீரகத்தையும் கெடுத்துக் கொண்டால்
அதை நீங்கள் சந்தோஷம் என்பீர்களா ?
உண்மையில் அவனுக்கு எது
தீங்கில்லாத சந்தோஷம் –
அந்த சந்தோஷத்தை எப்படி தருவது என்பது
அவனது பெண்டாட்டிக்கும்,
பிள்ளைகளுக்கும் தெரியும்.
தனி மனிதனின் சந்தோஷம் பெரிதா இல்லை
அவன் மொத்த குடும்பத்தின் சந்தோஷம் பெரிதா?
அதெப்படி ஒரு மனிதனின் சந்தோஷத்தை
அவன் குடும்பத்திலிருந்து பிரித்து பார்க்கிறீர்கள் ?
நீங்கள் அவன் தொழில் செய்யும் இடத்துக்கும்
வீட்டிற்கும் நடுவில் சாராயக்கடையை
திறந்து அவனை வா வா என்று அழைக்காத
வரையில் அவனும் சந்தோஷமாகத் தான் இருந்தான்,
அவன் குடும்பமும் சந்தோஷமாகத்தான் இருந்தது.
வருடம் ஒன்றுக்கு சாராயக்கடைகளின் மூலம்
அரசுக்கு கிடைக்கும் வருமானமே 15,000 கோடி
என்றால், மொத்த விற்பனையாளர்,
சில்லரை விற்பனையாளர், உற்பத்தியாளர்,
அரசியல்வாதிக்கு லஞ்சம், லாபம் எல்லாவற்றையும்
கூட்டிச் சேர்த்தால், தமிழர்கள் ஆண்டுக்கு குடிக்காக
மட்டும் செலவழிப்பது சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் !
எந்தவித பிரயோஜனமும் இன்றி,
குடும்பங்களை நாசம் பண்ணிக்கொண்டு,
பெண்கள் – சிறுவர்களின் வாழ்க்கையை
நரகமாக்கிக்கொண்டு,
குடிப்பவனின் ஆரோக்கியத்தையும்
கெடுத்துக்கொண்டு,
40 வயதிலேயே தமிழர்களை எதற்கும்
உதவாக்கரையாக்கும் குடிக்காக வீணே செய்யப்படும்
செலவு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி.
இந்த பணத்தை அந்த குடும்பங்கள்,
சாப்பாட்டிற்கும், கல்விக்கும்,
மற்ற சௌகரியங்களுக்காகவும் செலவழித்தால் ?
அரசு – மருத்துவ வசதிகளுக்காகவும்,
கல்வி வசதிகளுக்காகவும், விவசாய, தொழில்
முன்னேற்றத்திற்காகவும், கட்டமைப்பிற்காகவும்
செல்வழித்தால் ?
– நாடும் மக்களும் எவ்வளவு
சுபிட்சம் அடைய முடியும் ? மக்களின்
வாழ்க்கைத்தரம் எந்த அளவிற்கு உயர்வு பெரும் ?
குடியினால் வரும் கேடுகள் என்ன – எவ்வளவு
என்று பட்டிமன்றம் நடத்தி தெரிந்து கொள்ள வேண்டிய
அவசியத்திலா இருக்கிறோம் நாம் ?
உங்களுக்கு தெரியாதா ?
அனுபவத்தில் பார்த்ததில்லையா ?
வசதி படைத்த – 650 ரூபாய் விஸ்கி வாங்கி
குடிப்பவர்களைப் பற்றி நான் பேசவில்லை.
சமூகத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்களைப் பற்றி
தான் நான் கவலைப்படுகிறேன்.
தினம் தினம் இரவு ஆனால் –
குடிகாரக் கணவனிடம்
மாட்டிக்கொண்டு தவிக்கும் நம் பெண்களைப் பற்றியும்
கல்வியறிவும், ஆரோக்கியமும் மறுக்கப்பட்டு
தெருப்பொறுக்கும் நிலைக்கு தள்ளப்படும்
அவர்களது வாரிசுகளைப் பற்றியும் – நாளைய
தமிழர்களைப் பற்றியும் தான் நான் கவலைப்படுகிறேன்.
குடியைப் பற்றிய அனுபவமே இல்லாத,
சபலமே இல்லாத ஒரு இளம் சமுதாயம் சுதந்திற்குப்
பிறகு வளர்ந்து கொண்டு தான் இருந்தது.
தங்கள் சுயநலத்திற்காக
மீண்டும் சாராயக்கடைகளைத் திறந்து விட்ட
தமிழ் நாட்டு அரசியல்வாதிகளால் மீண்டும்
குடிகாரத் தலைமுறைகள் உருவாகி விட்டன.
சில நாட்கள் முன்பு சேத்துப்பட்டு பாலத்தின் கீழ்
15 வயது கூட ஆகி இருக்காத சேரிச் சிறுவர்கள்
நான்கு பேர் சாராய பாட்டிலும் கையுமாக
கெட்ட வார்த்தைகளும், அசிங்கமான
சைகளுமாக கொட்டமடித்துக் கொண்டிருப்பதைப்
பார்த்தபோது ஏற்பட்ட மனவருத்தம் என்னிடமிருந்து
என்றும் நீங்காது.
அது எப்படி உங்களுக்கு இந்த சமூகப் பிரக்ஞை
இல்லாமல் போனது ?
உங்கள் பழக்கத்தை உங்களால் விட முடியவில்லை –
புரிகிறது. அதை நான் குறை சொல்லவில்லை.
ஆனால் அதை ஏன் நியாயப்படுத்தி,
வக்காலத்து வாங்குகிறீர்கள் ?
உங்கள் எழுத்தைப் படிக்காதவர் கூட,
உங்கள் தின மலர் பேட்டியைப் படித்து விட்டு –
கொஞ்ச நஞ்சம் மனசாட்சி உறுத்தலில்
இருந்தவர் கூட –
“அடப் போய்யா – சாகித்ய அகாடமி வாங்கியவரே
சொல்றாரு – குடிக்கறது தான் நம்ப நாகரீகம்னு”
என்று தானே வாதம் செய்வர் ?
நான் கவலைப்படுவது அரைவயிற்று சாப்பாட்டிற்கு
மட்டுமே சம்பாதிப்பவனைப்பற்றி –
அவன் குடும்பத்தைப் பற்றி,
பெண்டாட்டி பிள்ளைகளைப்பற்றி.
நீங்கள் கேட்கிறீர்கள் – அவன் சந்தோஷமாக
இருக்க குடிக்கிறான்.அதைத் தடுக்க நீ யார் என்று.
தான் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதும்
என்று நினைப்பவனுக்கு திருமணம் எதற்கு ?
பெண்டாட்டி எதற்கு ? பிள்ளை குட்டிகள் எதற்கு ?
குடும்பம் என்று ஒன்று எதற்கு ?
தனி மனித சந்தோஷம் முக்கியமா அல்லது
முழு குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும்
முக்கியமா ?
அடுத்தவரின் சந்தோஷத்தை தடுக்க நீ யார்
என்று கேட்கிறீர்களே –
உங்கள் மனைவியோ, மகளோ, மகனோ
குடிப்பதை நீங்கள் ஊக்குவிப்பீர்களா ?
அவர்கள் சந்தோஷமாக இருப்பதைக் கண்டு
நீங்களும் ஆனந்தம் கொள்வீர்களோ ?
ஏன் – உங்களுக்கு குடித்து விட்டு சந்தோஷமாக
இருக்க உரிமை உண்டென்றால் அது
அவர்களுக்கு மட்டும் கிடையாதா ?
47 வயதில் 2 பள்ளி செல்லும் வயது
பெண்களையும் ஒரு பையனையும்,
42 வயது மனைவியையும் பரிதவிக்க விட்டு
அகால மரணம் அடைந்த என் நண்பன் கடைசியாக
என்னிடம் தொலைபேசியில் கூறி அழுததை
இன்னும் என்னால் மறக்க முடியவில்லை –
“ஒண்ணுக்குப் போகணும் போல இருக்கு.
போய் நிக்கறேன். வலிக்கறது – எரியறது.
ஆனால் மூத்திரம் வர மாட்டேங்கறது”.
இரண்டு கிட்னியும் கெட்டுப்போய்
47 வயதிலேயே செத்தான் அவன்.
எங்கள் தெருவிலேயே குடியிருந்த
21 வயது மாரியப்பன் – புதிதாகச்
சம்பாதிக்கும் திமிரில் ஏற்படுத்திக் கொண்ட
பழக்கத்தில் – குடித்து விட்டு,
புத்தி கெட்டுப்போய், அண்ணன் பெண்டாட்டியிடம்
தவறாக நடக்கபோய் – அவமானத்தில்
தூக்குப் போட்டுக் கொண்டு செத்தது –
5 பெண்களுக்குத் தகப்பனான
பெயிண்டர் மகாலிங்கம், குடிபோதையில்
பஸ்ஸில் ஏறும்போது இடறி, அதே பஸ்
சக்கரத்தினடியில் விழுந்து, நசுங்கி, உயிரை விட்டது –
இப்படி எத்தனையோ பேர்களை
நான் பார்த்தது போல்
இத்தனை வயதில் நீங்கள் யாரையும்
பார்த்தது இல்லையா ?
குடித்த பின் -சிந்தனை, செயல் இரண்டும்
நம் கட்டுப்பாட்டில் இருப்பது இல்லையே.
கட்டுப்பாடு இல்லாத மனிதன்
கட்டுமீறத்தானே துடிக்கிறான் ?
இப்படி ஒரு சந்தோஷம் தேவையா ?
நாஞ்சில் நாடன் அவர்களே –
உங்களுக்கு சாகித்ய அகாடமியில் பரிசு
கிடைத்தது
உங்கள் – நடைக்காகவே –
நடத்தைக்காக அல்ல !
-என்பதை தயவு செய்து உணர்ந்து கொண்டு
சமுதாய நலனுக்கு விரோதமான விஷயங்களுக்கு
வக்காலத்து வாங்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள்



100 % சரி!
வார்த்தைக்கு வார்த்தை ஒப்புக்கொள்கிறேன்!
நாடு மிகவும் ஆபத்தான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது
சாகித்ய அகாடமி பரிசா அவருக்கு ரெண்டு புல்லு கொடுத்திருந்தாலே சந்தோசமா வாங்கிடு வந்திருப்பார்போல. முன் உதரணமா இருக்கவேண்டியவர்களே சமுதாயத்துல தலைகீழா நடக்கிறது நல்லாவாயிருக்கு.
very nice article.thanks for posting.
sariyaana saattaiyadi
vaazhthukkal
இவனுக்கெல்லாம் எவன்யா பரிசு………கொடுத்தது?
நண்பர் ராஜசேகர்,
மரியாதை குறையாமலே
நம் கருத்தைச் சொல்வோமே நண்பரே !
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
சில எழுத்தாளர்கள் தாம் குடிப்பதை மிகவும்
பெருமையுடன் சொல்லிக் கொள்வது
இப்போதெல்லாம் வழக்கமாகி வருகிறது.
தங்களை ஒரு “திறந்த புத்தகம்”
என்று காட்டிக்கொள்கிறார்களாம் !
உண்மையிலேயே அது தான் நோக்கமாக இருந்தால் –
அவர்கள் செய்யும் “இன்ன பிற” காரியங்களைப் பற்றியும்,
வெளிப்படையாகச் சொல்லி விட
வேண்டியது தானே !
“குடிப்பது” நிச்சயமாக ஒரு பெருமைப்படத் தக்க
செயல் அல்ல. இது ஒரு குணக்கேடு.
தங்கள் பலவீனத்தை மறைக்க –
இவர்கள் குடிப்பதை நியாயப்படுத்த
முயற்சிக்கிறார்கள்.
இவர்கள் குடித்துத் தொலையட்டும்.
ஆனால் குடியை பெருமைப்படுத்துவதும்,
மற்றவர்களுக்கும் அதை சிபாரிசு செய்வதும்,
அயோக்கியத்தனம். சமூகத்தைக் கெடுக்கும் செயல்.
இதைப்பற்றி விவரமாக எழுதியது நல்லது தான்.
நாலு இடங்களிலிருந்து
கண்டனங்கள் எழுந்தால் தான்
இதைப் பற்றி இவர்களுக்கு ஒரு கூச்சம் வரும்.
தாழ்ந்து கொண்டிருக்கும் தமிழனின் தரமே இது போன்ற எழுத்தாளர்களின் வாதம். நீங்கள் சொன்னதில், //அந்த ஏழைக்கு எது சந்தோஷம் என்பதை
யார் தீர்மானிப்பது ? நீங்களா –
இல்லை அவன் குடும்பமா ?//நச்!
ஒரு வேளை குடியையும் குட்டியையும் பற்றி மட்டுமே எழுதி “பிரபல” மான எழுத்தாளரை பின்பற்றுகிறாரோ என்னமோ?
நாஞ்சில் நாடன் இப்படியொரு சிபாரிசை செய்தாரா? அவரைப்பற்றி இருந்த மதிப்பு மரியாதையெல்லாம் காற்றில் போய்விட்டது! ஆனால் அவரின் தவறை மிகச்சரியான வாதங்கள்/கேள்விகள் மூலம் கேட்டு, அவர் வெட்கித்தலைகுனியும் வண்ணம் இருக்கிறது இடுகை! எல்லா கேள்விகளுமே நச்…..ரகம்! வாழ்த்துக்கள் அய்யா, நன்றிகளும்!
குடி குடியைக் கெடுக்கும். ஆனால் டாஸ்மாக் நாட்டையே கெடுத்துக்குட்டிச்சுவராக்கிவிடும். ஒரு விஷயத்தை சிபாரிசு செய்யறதுக்கு முன்னாடி, நாம யாரு, நம்ம கடமை என்ன, நாம என்ன சொல்றோம், அதனால என்ன விளைவுகள் ஏற்படும் இப்படி எதையுமே யோசிக்க முடியாதவரா நாஞ்சில் அவர்கள்? ரொம்ப வருத்தமா இருக்கு அவரோட இந்த செய்கை! இனியாவது இப்படியான தவறுகளை செய்யாமலிருப்பார்கள் நாஞ்சில் போன்றவர்கள் என்று நம்புவோம்!
சாட்டையடி பதிவுக்கு மீண்டும் வாழ்த்துக்கள் அய்யா!
//நிதானம்” தவற வேண்டாம் – நாஞ்சில் நாடன் அவர்களே!//
என்று தொடங்கி,,,
//சமுதாய நலனுக்கு விரோதமான விஷயங்களுக்கு
வக்காலத்து வாங்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள்//
என்று அருமையாக முடித்துள்ளீர்..
இந்த இரு சொற்றொடர்களுக்கிடையில் அருமையாக கருத்துகளை செருகியுள்ளீர்கள்.
. சிறப்பான கட்டுரை மட்டுமன்றி பொறுப்பான கட்டுரையும்…
நல்ல கட்டுரை. சரியான கருத்து. ஆனால் நாஞ்சில்நாடன் அவர்கள் இணையமெல்லாம் பார்ப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதற்கு அவரது பதில் என்னவென்று தெரிந்தால் நல்லது. ஒருவேளை அவரது சார்பாக நண்பர் ”சுல்தான்” ஏதாவது விளக்கம் சொல்ல முன் வருவாரா? பார்ப்போம்.
எஸ்.ஐ.சுல்தான் எழுதுவது: நாஞ்சில் நாடன் இதுவரை மூன்று கட்டுரைகள் மதுப் பழக்கத்தை குறித்து எழுதியுள்ளதாக எனக்கு தெரிகிறது. அதில் 2003ல் வெளியான கட்டுரைதான் “நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று ” கட்டுரை. அதை நாஞ்சில் நாடனின் இணைய தளத்தில் படிக்கலாம். கட்டுரையின் தலைப்பே அதுகுறித்து சொல்லும். என்னிடம் கைவசம் இருக்கும் அடுத்த கட்டுரை ஜூலை 2007ல்வெளியான “குடியும் குடி சார்ந்த எண்ணங்களும் விழுமியங்களும்” எனும் நாஞ்சிலின் கட்டுரை. அக்கட்டுரையை விரைவில் முழு கட்டுரையாக நாஞ்சில் நாடன் தளத்தில் பதிப்பிக்கிறேன். அதில் நீங்கள் கேட்க்கும் கேள்விகளுக்கான விடை முழுதுமாக உள்ளது. நானறிந்தவரை நாஞ்சில் நாடன் சொல்வதும் காவிரிமைந்தன் சொல்வதும் ஒரே சமூக நல கருத்தைதான். ஆனால் பத்துவரி நாளிதழ் செய்தி சொல்வதற்க்கும் ஆயிரத்தி ஐம்பது வரி நாஞ்சில் நாடனின் கட்டுரை வரிகள் சொல்வதற்க்கும் மிகுந்த வித்தியாசங்கள் இருக்கலாம் அல்லவா?
நாஞ்சில் நாடனின் கட்டுரைகளைப் படிக்க http://nanjilnadan.wordpress.com
நன்றி சுல்தான். அந்தக் கட்டுரைகளைப் படித்தேன். அடுத்த பகுதி வெளியானதும் படிக்கக் காத்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல நாளிதழ் பேட்டிகளில் வரும் ஒரு சில வரிகளை மட்டும் படித்து விட்டு, ”இவர், இப்படித்தான் “ என்ற முடிவுக்கு வருவது தவறு என்பது புரிகிறது.
காவிரி மைந்தன் சார், நீங்கள் கட்டுரையைப் படித்து விட்டீர்களா? உங்கள் கருத்து….?
/////////////பின்னர் நிதானமாகக்கூட
எழுதலாம் தான்/////////////////
?????????????????
வருக நண்பர் ரமணன்,
வருக நண்பர் சுல்தான்,
நண்பர் ரமணன் எடுத்துக்கொண்ட
முயற்சிகளுக்கு பாராட்டுகளும் நன்றியும்.
நண்பர் சுல்தான் அவர்கள் நாஞ்சில் நாடன்
அவர்களின் எழுத்துக்களை இணைய தளத்தில்
பதிவேற்ற எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளை
நான் அறிவேன்.முதலில் அதற்கான என்
பாராட்டுக்கள்.
ஒன்றினை முதலிலேயே
தெளிவுபடுத்தி விடுகிறேன் –
நாஞ்சில் நாடனின் எழுத்துக்களை நான் மிகவும்
ரசிக்கிறவன். விரும்புகிறவன். அவரது
எழுத்தாற்றலைக்கண்டு வியக்கிறவன்.
ஆனால் நான் சொல்ல வந்தது வேறு விஷயம் –
மக்கள் அண்ணாந்து பார்க்கிற அளவிற்கு
உயரமான இடத்தில் இருக்கும் படைப்பாளிகளுக்கு
சமூகப் பொறுப்பு மிக மிகத் தேவை.
தங்கள் சொந்த ரசனையை விவரிக்கப் போய்,
சமுதாயத்தில் தவறான பழக்க, வழக்கங்கள்
வளர்வதற்கு அவர்கள் நியாயம் கற்பிப்பதாக
ஆகி விடக்கூடாது.
2003லும் 2007லும் அவர் சொன்னது ஒரு பக்கம்
இருக்கட்டும். மார்ச் 25, 2011 அன்று
தினமலர் இதழ் பேட்டியில் நாஞ்சில் நாடன்
சொன்னது தானே லேட்ஸ்ட்டாக இருக்க முடியும் ?
இதில் சுற்றி வளைத்துப் பேச எதுவும் இல்லை.
அவரிடம் நேரடியாகக் கேட்கப்பட்ட வினா –
“உங்களைப் போன்ற அறிவு ஜீவிகள் குடிப்பதற்கு
வக்காலத்து வாங்குவது சமூகத்திற்கு நல்லதா ?”
இதற்கு அவர் சொன்ன பதிலைத்தான் நான்
விமரிசித்தேன்.
எனவே நாஞ்சில் நாடன் தின மலர் இதழுக்கு
அளித்த பேட்டி தவறாகப் பிரசுரம் செய்யப்பட்டு
இருக்கிறது என்று மறுத்தாலொழிய –
என் கட்டுரையில் மாறுதல் எதற்கும்
அவசியமிருப்பதாகத் தெரியவில்லை.
சுல்தான் – இயன்றால் நாஞ்சில் நாடன்
அவர்களிடம் அவரது தின மலர் பேட்டி குறித்து
ஒரு விளக்கம் பெற
முயற்சி செய்யுங்களேன்.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
/////////////////உங்களிடம் ஒரு சின்ன கேள்வி –
சாகித்ய அகாடமி பரிசு பெறும் முன்னர்
நாஞ்சில் நாடன் யார் என்பதை அறிந்தவர் யார் யார் ?
எத்தனை பேர் ?/////////////////
இந்த தளத்தில் குறைந்தபட்ச விபரங்கள் கிடைக்கும்: http://nanjilnadan.wordpress.com/நாஞ்சில்வாழ்க்கைக்குறி/
kudi kudiyai ketukkum. Evar kudi nam nattai ketukum.
நன்றி அய்யா! உங்கள் கருத்துக்களை மிகவும் மதிக்கிறேன். இந்த கட்டுரை எனக்கும் நல்ல மாற்றம் தந்துள்ளது. தொடர்ந்து பண்பட்டு சீரழிவை கண்டிக்க வேண்டும்.