போதைக்கு அடிமையாகும் தமிழர்கள் !

போதைக்கு அடிமையாகும் தமிழர்கள் !

நாளுக்கு நாள் புகை பிடிக்கும் பழக்கமும்,
குடிப்பழக்கமும்  தமிழகத்தில்  அதிகரித்துக்கொண்டே
போகின்றது.

ஒவ்வொரு நாளும் புதிதாக இந்தப் பழக்கத்துக்கு
அடிமையாகும்  இளைஞர்களின்
எண்ணிக்கையும்  பெருகிக்கொண்டே போகிறது.

இப்போதெல்லாம் ஒன்பதாவது, பத்தாவது படிக்கும்
சிறுவர்கள் கூட
திருட்டுத்தனமாக புகைக்க, குடிக்க
ஆரம்பித்து  விடுகிறார்கள்.
சுயமாகச் சம்பாதிக்கும் நிலை வந்ததும்தைரியமாக
இதை வெளிப்படையாகவே செய்யத்  துவங்குகிறார்கள்.

அரசாங்கம் நினைத்தால் இதை ஒரு வழிக்கு
கொண்டு வரலாம். ஆனால் அரசாங்கம் நினைக்காது!
வரும்படி குறைந்து விடுமே !

அரசாங்கம் செய்ய முற்படாது என்கிற நிலையில்
சமுதாய அக்கரை உடைய வேறு யாராவது தான்
இதை செய்ய முன் வர  வேண்டும்.

போன வாரம் டெல்லியிலிருந்து வந்த
“பெரிய வீட்டு பிள்ளை” சொன்னார் –
“குடிப்பழக்கம் ஒழுக்கம் சம்பந்தப்பட்டதல்ல –
ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது” என்று.

அது அவர்கள் பண்பாடாக இருக்கலாம் !
ஆனால், நம்மைப் பொறுத்த வரையில் இது
ஒழுக்கம், ஆரோக்கியம் மட்டும் அல்ல –
நமது வாழ்க்கைப் பிரச்சினையாகவே ஆகி விட்டது.

குடி இங்கு குடிப்பவரின் பிரச்சினை அல்ல –
அவர்களது குடும்பத்தின் மிகப்பெரிய பிரச்சினையாகவே
ஆகி விட்டது.  குடியினால் பெரிதும் பாதிக்கப்படுபவர்
குடிப்பவர் அல்ல – அவர்களது குடும்பத்து பெண்களே.
நம் சமூகத்தில் 30 % பெண்கள் இதனால்
நிம்மதி இழந்து தவிக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் எதுவும்
இதைப்பற்றி யோசிக்கவே தயாரில்லை.

விதிவிலக்காக டாக்டர் ராமதாஸ் ஒருவர் மட்டும்
தொடர்ந்து ஒழுக்கமின்மையைப்பற்றி கவலைப்பட்டு
பேசி வருகிறார்.

துரதிருஷ்டவசமாக, அவருடைய நம்பகத்தன்மை அற்ற
அரசியல் போக்கு காரணமாக அவரது பேச்சை யாரும்
தீவிரமாக எடுத்துக்கொள்ளுவதில்லை.

அண்மையில் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கான
பயிற்சி முகாம் ஒன்றினை துவக்கி வைத்து பேசும்போது –

“எங்கள் கிராமத்தில் யாரும்
குடி பழக்கத்துக்கு அடிமையாகவில்லை.
இங்கு யாரும் புகைப்பதில்லை.
திருமணத்துக்கு வரதட்சணை வாங்குவதில்லை”

என விளம்பர பலகைகள் வைத்தால்
அக்கிராமம் முன்னேறும்”
என்று கூறி இருக்கிறார்.

இது ஒரு நல்ல யோசனை தான்.

டாக்டர் ராமதாஸ் இந்த பணியில் தீவிரமாக
ஈடுபட்டாரானால் தமிழ்ச் சமுதாயத்திற்கு
மிகப்பெரிய தொண்டாக அது அமையும்.
அவரது மக்கள் தொலைக்காட்சி ஒரு
சிறந்த முன்னுதாரணமாக இருப்பது, அவரால்
இதில் தீவிரமாக ஈடுபட முடியும் என்கிற
நம்பிக்கையை அளிக்கிறது.

ஆனால் இது மட்டும் போதாது. இந்த விஷயத்தில்
அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது பெண்கள் தான்.
எனவே பெரிய அளவில் பெண்களால் இயக்கப்படும்
தொண்டு நிறுவனங்களும் இதில் ஈடுபட வேண்டும்.
தொடர்ந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மதுவிலக்கை அமுல்படுத்துவதாக உறுதிப்படுத்தும்
கட்சிகளுக்கே பெண்களின் ஓட்டு என்று
அறிவிக்க வேண்டும். தொடர்ந்து தீவிரமாகப் போராடுவதன்
மூலமே அரசியல்வாதிகளிடையே  இதன் முக்கியத்தை
உணர வைக்க முடியும்.

70 -80 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளைக்காரர்களிடம்

“கள்ளுக்கடைகளை மூடு” என்று போராடிய  நாம்
மீண்டும் இன்று  –

இந்தக் கொள்ளைக்காரர்களிடம்
போராடியாக வேண்டிய நிலையில் இருக்கிறோம் !
வெட்கக்கேடு !!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to போதைக்கு அடிமையாகும் தமிழர்கள் !

  1. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அன்புள்ள காவிரிமைந்தன்,
    வணக்கம்
    முந்தைய பதிவில் நீங்கள் எனக்கு அளித்துள்ள பதிலுக்கு நன்றி.
    சமுதாய அக்கறையுடனும்,நேர்மையுடனும் பதிவுகள் போட்டு வருகின்றவர் நீங்கள்.உங்கள் நம்பகத்தன்மை பாதிக்கப்பட கூடாதே என்ற ஆதங்கத்தில்தான் நான் உங்களை எச்சரித்தேன்.மற்றபடி தொடரட்டும் உங்கள் பணி.

    இந்த பதிவை எடுத்துக்கொண்டால் எனக்கு எப்பவும்
    திரு. ராமதாசு மீது ஒரு நம்பிக்கை உண்டு.அவரிடம் உள்ள குறைகள், அவர், தன்னை முன்னிலைப்படுத்த, எடுத்த சில தவறான முடிவுகள்.நிச்சயமாக மு.க (அ) ஜெயா (அ) காங்கிரஸ் விட அவர் தேவலை என்பது என் தாழ்ந்த கருத்து.
    ஒரு முறை அவருக்கு வாய்ப்பு கொடுப்பதால் பெரிய நஷ்டம் எதுவும் வந்து விடாது.திரு விஜயகாந்த் மீதும் எனக்கு இதே அபிப்பிராயம் தான்!
    உங்கள் கருத்து என்னவோ?
    நன்றி.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி கண்பத்.
      என் கருத்தை கொஞ்ச நாட்களுக்குப்பிறகு
      தெரியப்படுத்துகிறேனே.

  2. RAJASEKHAR.P's avatar RAJASEKHAR.P சொல்கிறார்:

    ராமதாசின் நம்பகத்தன்மை சந்தேகிக்க படவேண்டிய ஓன்று .புகை மற்றும் மது கொள்கை பாராட்ட தக்கது.முதலில் தலைவருக்கு இதில் உடன்பாடு இருந்தால் நான் புகை மற்றும் மது அருந்துவதில்லை என்பதை தெளிவு படுத்த வேண்டும்

  3. RAJASEKHAR.P's avatar RAJASEKHAR.P சொல்கிறார்:

    மன்னிக்கவும் சார்.உபதேசம் ஊருக்கு மட்டும்தான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.