ரத்தன் டாடா உத்தமரா ?
கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ?
(இந்த இடுகை சற்று நீளக்கூடும்.
இன்று முடிக்க முடியவில்லை என்றால்,
நாளை தொடருகிறேன்.)
சிலர் உரக்கக் கூவுகிறார்கள் –
நீரா ராடியா ஒலிப்பதிவு வெளியிடப்பட்டதை எதிர்த்து.
முதலாவதாக ரத்தன் டாடாவின் புகார்.
தன் ப்ரைவசி மீறப்பட்டதாக.
நித்யானந்தா – ரஞ்சிதாவின் படுக்கை அறைக்காட்சிகள்
தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் சன் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பப்பட்டபோது இந்தக் குறை யாருக்கும்
தென்படவில்லையே – அது ஏன் ?
உலகப்பணக்காரர் வரிசையில் இடம் பெற்றவரும்,
பெரிய தொழிலதிபரும்,
சமுதாயத்தில் மதிப்புடன் அண்ணாந்து
நோக்கப்பட்டவருமான
75 வயது நிரம்பிய ரத்தன் டாடா
காசு வாங்கிக்கொண்டு காரியம் ஆற்றிக்கொடுக்கும்
தரகராக பணிபுரியும் பெண்மணியிடம்
ஊர் வம்பு பேசுவதைக் கேட்டபோது
பொது மக்களுக்கு
ஏற்பட்டதே அதிர்ச்சியும் ஏமாற்றமும் –
அதை ஈடுகட்டுவது யார் ?
இந்த உரையாடல்கள் சட்டபூர்வமாக,
நிதி அமைச்சகத்தால், வருமான வரி இலாகாவால்,
குறிப்பிட்ட காரணத்தோடு பதிவு செய்யப்பட்டன.
நீரா ராடியா தனது வருமானங்களை மறைக்கிறார்
என்று சந்தேகப்பட்டு அமுலாக்கப்பிரிவு இவற்றைப்
பதிவு செய்திருக்கிறது – நோக்கத்தில் பழுதில்லை –
அவர்களது சந்தேகம் நியாயமானதே என்பது
பிற்பாடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த பதிவுகளின் நகல் எப்படி பிறருக்குக்
கிடைத்தன என்பது இதுவரை
தெரியவில்லை – விசாரணை நடக்கிறது.
தெரிய வரலாம் அல்லது தெரியாமலேயும் போகலாம்.
கையில் கிடைத்த இவற்றை முதன் முதலில்
தைரியமாக பொது ஊடகத்தில் ( வலைத்தளத்தில் )
போட்டது ஓப்பன் மாகஸின் என்கிற ஆங்கில
வார இதழ். இந்த சாதனையைச் செய்தவர்
ஹர்டோஷ் சிங் பால் என்கிற அதன் ஆசிரியர்.
இந்திய மக்கள் அவருக்கு பெரிதும் கடன்
பட்டிருக்கிறார்கள்.இதை வைத்துக்கொண்டு
அவர் எவ்வளவோ காசு பார்த்திருக்க முடியும் –
ஆனால் செய்யவில்லை !
அவருக்கு நம் பாராட்டுதல்கள் !
(அவரது புகைப்படம் கீழே )
உரையாடல்கள் உண்மையானவையே
என்பது நிரூபணம் ஆகி விட்டது. ஆவணங்கள்
போலியோ பொய்யோ அல்ல.
இந்த நிலையில் -அவற்றை
எப்படி வெளியிடலாம் என்கிற கேள்விக்கு
என் பதில் –
பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவு நாடாக்கள்
அரசாங்கத்திடம் ஏற்கெனவே
இருக்கின்றன என்கிற நிலையில் இந்தியக்
குடிமகன் ஒவ்வொருவருக்கும் right to
information act – தகவல் அறியும்
உரிமை சட்டத்தின் கீழ் இந்தத் தகவலை
அரசாங்கத்திடமிருந்து அதிகாரபூர்வமாகவே
கேட்டுப் பெற உரிமை இருக்கிறது.
அதற்கு பல படிகள் ஏறி இறங்க வேண்டும்
என்பது வேறு நிலை.
இப்படி இல்லா விட்டாலும், நாளை
உச்ச நீதி மன்றத்தில் இவை ஆவணங்களாக
சமர்ப்பிக்கப்படும்போது – தன்னாலேயே
அதிகாரபூர்வமாக வெளிவரும்.
ஆனால் இவற்றை வெளியிட முடியாது
என்று யாரும் வாதிக்க முடியாது.
உருவாக்கப்பட்ட ஆவணங்கள் அரசாங்கத்துக்கு
சொந்தம். அதைக்கேட்டுப் பெற நமக்கு
உரிமை இருக்கிறது என்பது சட்டம்.
இனி – அதன் உள்ளே இருப்பது –
பெரிய மனிதர்களின், தொழிலதிபர்களின்,
அரசியல்வாதிகளின், அதிகாரத் தரகர்களின்,
தொலைக்காட்சிகளில் பணிபுரியும் சில
பத்திரிகையாளர்களின் (ஜர்னலிஸ்ட்களின்)
மாறுபட்ட மற்றொரு முகம் தெரிய வருகிறது.
சம்பந்தப்பட்டவர்கள், பொது வாழ்க்கையில்
ஈடுபட்டிருப்பவர்கள் என்பதால் அவர்களின்
அதிர்ச்சி தரும் இன்னொரு முகத்தைக் காண்கையில்
நமக்கு வெறுப்பாக இருக்கிறது.
ஏமாற்றமாக இருக்கிறது.
ஒன்பது மணி நேரம் நடந்த சிபிஐ விசாரணையில்
நீரா ராடியா சில உண்மைகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
சட்ட நிபுணர்களைக் கலந்து ஆலோசித்த பிறகே
அவர் சிபிஐ விசாரணையை எதிர்கொண்டுள்ளார்
என்பதால் – இயன்ற வரையில் தன்னைப்
பாதுகாத்துக்கொள்ளும் வகையில் பேசி இருக்கிறார்.
டாடா விற்காக அவர் பல காரியங்களைச் செய்து
கொடுத்திருக்கிறார். அதற்காக 64 கோடி ரூபாய்
பணம் பெற்றிருக்கிறார். இந்த வாக்குமூலம்
அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என்பதால்,
டாடா நிறுவனத்திற்கு தொழில் முறையில் ஆலோசனை
கூறியதற்காக இந்த 64 கோடியை பெற்றதாகக் கூறி
இருக்கிறார்.
(இந்த வருமானத்தை நீரா தனது வருமான வரி
கணக்கில் காட்டி இருக்கிறாரா என்பதும்,
டாடா நிறுவனம் இந்த செலவிற்கு கணக்கு
காட்டி இருக்கிறதா என்றும் -காட்டப் பட்டிருந்தால்,
எந்த இனத்தில் காட்டப்பட்டிருக்கிறது என்பதும்
இந்த பணப்பறிமாற்றத்தின் சட்டபூர்வத்தை
நிர்ணயிக்கும் )
டாடாவின் தொழில் நிறுவனங்கள் அனைத்துமே
மிகப் பெரியன. ஒவ்வொன்றிலும் ஏகப்பட்ட
நிர்வாகிகளும், ஆடிட்டர்களும், தகுதி வாய்ந்த
ஆலோசகர்களும்
நிரந்தரமாகப் பணி புரிகிறார்கள்.
அவர்களால் தர முடியாத ஆலோசனையையா
நீரா நாடியா கொடுத்திருக்கப் போகிறார் ?
சட்டபூர்வமாக அரசாங்கத்திடம் பெற முடியாத
சில சலுகைகளைப் பெற அவர் உதவி இருக்கிறார்
என்பதே உண்மையாக இருக்கக்கூடும்.
பொதுவாக (brokerage) – தொழில் முறையில்
உள்ள வழக்கப்படி தரகர் கமிஷன் என்பது
மொத்தத் தொகையில் 2 சதவீதமாக இருக்கும்.
2 % = 64 கோடி ரூபாய் என்றால் –
செய்து கொடுக்கக்ப்பட்ட காரியத்தின் மதிப்பு
எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை
நாமே யூகித்துக் கொள்ள வேண்டியது தான்.
இந்த சலுகைகளை அவர் தொலை தொடர்பு துறை
அமைச்சகத்திலிருந்து பெற வேண்டி இருந்திருக்கிறது.
எனவே ஏற்கெனவே அவருக்குப் பழக்கமான
ராஜா மீண்டும் இந்த துறைக்கு அமைச்சராக
பொறுப்பேற்றால் – அவருக்கும் லாபம்,
இவருக்கும் சுலபம்.
அதை முன்னிட்டே ராஜா தொலை தொடர்பு
அமைச்சராக வேண்டும் என்று நீரா ராடியா
அவ்வளவு அக்கரை எடுத்துக்கொண்டு
செயல்பட்டிருக்கிறார். அவருக்கு சாதகமாகவும்
தன் சொந்த விருப்பம் காரணமாகவும்,
திமுக விலிருந்து – தலைவர்
கலைஞரின் மகள் அவருக்கு உதவி இருக்கிறார்.
(தொடரும்)




//நித்யானந்தா – ரஞ்சிதாவின் படுக்கை அறைக்காட்சிகள்
தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் சன் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பப்பட்டபோது இந்தக் குறை யாருக்கும்
தென்படவில்லையே – அது ஏன் ?//
சூப்பர் கேள்வி. கிருஷ்ணனையும், ராமனையும் பழிக்கும் கம்சர்க்ள் பதில் சொல்வார்களா?