கொலை, கொள்ளை,
கடத்தல், கற்பழிப்பு –
இந்த பிஞ்சுகளைப் பாருங்கள்.
நமக்கே வயிறு எரிகிறது.
இந்தக் குழந்தைகளைப் பெற்றவர்கள்
எப்படி கொதித்துக்கொண்டிருப்பார்கள் ?
நான் எண்பதுகளில் பீகாரில் இருந்திருக்கிறேன்.
உத்திரப் பிரதேசத்தில் இருந்திருக்கிறேன்.
அங்கு நிகழ்ந்த சில சம்பவங்களால் நேரடியாக
பாதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
நான் அங்கிருந்த வரை –
கொலை, கொள்ளை, (கற்பழிப்பு- அதிகமில்லை)
சம்பவங்களைக் கேள்விப்படாத நாளே இல்லை.
இரண்டு கொலைகளை நேரடியாகப் பார்த்த
அனுபவமும் உண்டு.
இப்போது அதே நிலையில் – ஏன் அதை விட
மோசமான நிலையில் தமிழ் நாடு இருக்கிறது.
கடந்த ஒரு வருடமாக கொலை, கொள்ளை,
கற்பழிப்பு, செயின் பறிப்பு சம்பவங்கள்
நடக்காத நாள் எதாவது உண்டா ?
ஏன் இந்த நிலை ? நான் காவல் துறையின்
திறமையின்மையை காரணமாகச் சொல்ல
மாட்டேன். அயோக்கியர்களுக்கு –
சட்டத்தின் மீதும், அரசு நிர்வாகத்தின் மீதும் இருந்த
பயம் முற்றிலுமாகப் போய் விட்டது.
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
ஒன்று பணம் இருக்க வேண்டும் அல்லது ஆளும் கட்சி
பிரமுகர் (அமைச்சர், எம் எல் ஏ, அல்லது மாவட்ட
செயலாளர் ) உறவு/ஆதரவு இருக்க வேண்டும்.
இதில் ஏதாவது ஒன்றிருந்தால் போதும் –
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
ஒன்று காவல் துறையினர் பிடிக்க மாட்டார்கள்.
அல்லது பிடித்தாலும் வெளியே வந்து விடலாம்.
இல்லை வழக்கு நடந்தாலும் மிகவும் பலகீனமாகவே
வழக்கு தொடர்வார்கள். சுலபமாக உடைப்பதற்கு
ஏற்பவே வழக்கு தொடரப்படும்.
ஒன்றா இரண்டா – தொடர்ந்து பார்த்துக்கொண்டே
தானே வருகிறோம். எத்தனை எத்தனை வழக்குகள் !
தா. கிருட்டினன் கொலை வழக்கு –
மதுரை தினகரன் அலுவலகத்தில்
எரிக்கப்பட்ட மூவர் வழக்கு –
இன்னும் எத்தனை எத்தனையோ –
உடனடியாக ஞாபகத்திற்கு வருபவை இவை.
ஏன் சென்ற மாதம் சேலத்தில் நிகழ்ந்த ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்ட
சம்பவம் – கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக
ஆளும்கட்சி பிரமுகர் கைது செய்பப்பட்டு சிறையில்
(சகல சௌகரியங்களுடன், முதல் வகுப்பில் தான்)
அடைக்கப்பட்டிருக்கிறார் – மன்னிக்கவும் –
தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.
அவரை அமைச்சர்
ஒருவர் சைரன் ஒலிக்கும் அரசாங்க காரில்
ஜெயிலுக்குச் சென்று பார்க்கிறார்.
அமைச்சர் கொலைக்குற்றவாளியை ஜெயிலில் சென்று
பார்க்கலாமா என்று கேட்டால் – தம்பி மகனைப் போய்
பார்த்தால் தவறா என்று கேட்கிறார்கள்.
நேற்று கோவையில் – 2 பச்சிளம் பாலகர்கள் –
11 வயது சிறுமியும், 7 வயது சிறுவனும்
கடத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
எழுதவே கூசுகிறது –
சிறுமியை பாலியல் பலாத்காரம் வேறு செய்திருக்கிறார்கள்.
இவர்கள் எல்லாம் மனிதர்களா இல்லை- ராட்சசர்களா ?
எப்படி இவர்களுக்கு இந்த துணிச்சல் வந்தது ?
இந்த அரசாங்கத்தை இந்த அயோக்கியர்கள் – பொறுக்கிகள்
நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மாட்ட மாட்டோம் – மாட்டினாலும் சுலபமாக
வெளியே வந்து விடலாம் என்று அவர்களுக்குத் துணிச்சல்.
கடுமையான நிர்வாகம் இருந்தால் அவர்களுக்கு
இந்த தைரியம் வருமா ?
காவல் துறைக்கு பொறுப்பானவர் 87 வயதான இளைஞர்.
அவருக்கு மான்களும், மயில்களும் ஆடுவதை
வேடிக்கை பார்க்கவும், சினிமா நட்சத்திரங்களின்
பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டு
ஐஸ் மழையில் நனையவும்,
சொந்தங்களிடையே பங்கு பிரித்துக் கொடுக்கவும்,
ஜெயலலிதாவிற்கு
பதில் எழுதவுமே நேரம் பற்றவில்லை.
நேற்று கோவையில் நிகழ்ந்த சிறுவர்களின் கோர
அனுபவம் பற்றி அவருக்கு இன்னும் தெரியுமா என்பதே
தெரியவில்லை. ஏனெனில் இந்த நிமிடம் வரை
அவரிடமிருந்து இது பற்றி அறிக்கை, வருத்தம், செய்தி
எதுவுமே இல்லை.
நாளை அல்லது மறுநாள் இறந்த குழந்தைகளின்
பெற்றோருக்கு தலைக்கு ஒரு லட்சம் நிதிஉதவி
அளிக்கப்படலாம்.
அன்று ஈழத்தில் நடந்தபோது அரசியல்
காரணம் என்று எண்ணினோம்.
இன்று இங்கேயே நடப்பவற்றிற்கு எதைக்காரணமாக
நினைப்பது ?
எல்லாம் நாம் செய்த தவறு தான்.




நம் நாட்டில் ஜனநாயகம் முழுவதும் தோல்வி அடைந்துவிட்டது.
இந்த அரசியல் சட்டம்,குற்றவியல் சட்டம் இருக்கும் வரை நிலைமை எள்ளளவும் மாறாது.மனம் வெதும்பி சொல்கிறேன்.இனி நாட்டை கடவுள் (அ) அதற்கு இணையான சக்தி காப்பாற்றினால் தான் உண்டு.அது நாளையும் நடக்கலாம் (அ) 100 வருடங்கள் கழித்தும் நடக்கலாம்!