ரஜினியும் – கலைஞரும் ….
துஷ்டரைக் கண்டால் ….

கடந்த சில மாதங்களாக, கலைஞருடன்
அதிக நெருக்கத்தைத் தவிர்க்க முயன்று
வருகிறார் ரஜினி.
ஒரு முறை அதை வெளிப்படையாகவும்
கூறினார் –
“சூரியனிடம் ரொம்ப நெருங்குவது ஆபத்து.
அதே போல் விலகியும் இருக்க முடியாது”
என்று.
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ரஜினியைத்
தன் வசம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில்
கலைஞர் தீவிரமாக இருக்கிறார். பிடிபடாமல்
வழுக்கிக்கொண்டு போகும் ரஜினியை
மறைமுகமாக அழுத்தங்களைக் கொடுத்து
தக்க வைத்துக்கொள்ளப் பார்க்கிறார்.
சில நாட்கள் முன்னர் நடந்த ஒரு பொது விழாவில்
ரஜினியை பக்கத்தில் வைத்துக்கொண்டே,
ரஜினியின் மருமகன் தனுஷ் நடித்தால் தப்பில்லை.
என் பேரன் நடித்தால் மட்டும் குறை கண்டு
பிடிப்பதா என்று தேவையே இல்லாமல் ரஜினியை
சங்கடப்படுத்தினார்.
நேற்று சென்னையில் நிகழ்ந்த
கவிஞர் வைரமுத்துவின் மகன் கபிலனின்
திருமணத்தில் பேசும்போது
ரஜினி மிகவும் வெள்ளந்தியாக –
“என் மனைவியிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத
பல விஷயங்களை வைரமுத்துவிடம் பகிர்ந்து
கொள்வேன். அரசியல், குடும்பம், வங்கி கணக்கு
வரை அவரிடம் பேசிக் கொள்வேன். ஏனென்றால் எதை
வெளியில் சொல்லலாம், எதை வெளியில்
சொல்லக்கூடாது என்பது அவருக்கு தெரியும். அந்த
அளவிற்கு நம்பிக்கைக்குரியவர்” என்று
கூறி இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து பேசிய கலைஞர்,
“இங்கு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,
வைரமுத்து எதையும் வெளியே சொல்ல மாட்டார்
என்று குறிப்பிட்டார்.
சூப்பர் ஸ்டாரிடம் ஒன்றை சொல்லி கொள்வேன்.
உங்களை பற்றி வைரமுத்து எதுவும் சொல்லி
இருக்க மாட்டார் என்று நினைத்துக்
கொள்ள வேண்டாம். சொல்லி
இருக்கிறார். இருந்தாலும் அது என்ன விஷயம்
என்று இப்போது நான் சொல்ல விரும்பவில்லை
என்று பேசி இருக்கிறார்.
வைரமுத்து பர்சனல் விஷயங்களை வெளியில்
சொல்ல மாட்டார் என்று ரஜினி கூறும்போது,
உங்களைப்பற்றியே என்னிடம் நிறைய
ரகசியங்களை வைரமுத்து கூறி இருக்கிறார்
என்று கலைஞர் பொது விழாவில் கூறுவது
என்ன நாகரிகம் ?
87 வயதான முதியவருக்கு உள்ள முதிர்ச்சி
இதில் இருக்கிறதா ? அல்லது எனக்கு உன்னைப்பற்றி
எல்லா விஷயங்களும் தெரியும் – ஜாக்கிரதை
என்கிற பயமுறுத்தும் தொனி தெரிகிறதா ?
ரஜினிக்கு தமிழில் உள்ள ஒரு பழமொழியை
நினைவுபடுத்த விரும்புகிறேன் –
“துஷ்டரைக் கண்டால் தூர விலகு “
ரஜினி –அசிங்கப்பட வேண்டிய அவசியம்
உங்களுக்கு இல்லை – இவர்களை விட்டு
விலகிப் போங்கள் .



நிஜமான சாமியாரா இல்லை ….