உடையாரும் நானும் …!!!

………………………………….

…………………………………….

( இது என் அந்த நாள் அனுபவம் – என் 25-30 வயதுகளில், நான் முதல் ரவுண்டு திருச்சியில் பணிபுரிந்து வந்தபோது,

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பவுர்ணமி நாட்களில் மாலையில் திருவெறும்பூரிலிருது பஸ் பிடித்து, தஞ்சாவூர் சென்று – பவுர்ணமி நிலவு உதிக்கும் நேர்த்தில்,

பெரியகோவில் புல்வெளியில் தலைக்கு கீழே கைகளை வைத்து, படுத்துக்கொண்டு – கோவிலையும், உயர்ந்த அந்த கோபுரத்தையும், அதன் பின்னால் தெரியும் முழு நிலவையும் பார்த்துக்கொணடு, நேரம் போவதே தெரியாமல், பாலகுமாரன் சொல்வது போல் பல நினைவுகளில் மூழ்கியிருப்பேன்…

அற்புதமான சரித்திரப் பின்னணி நம்முடையது ….. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எப்படி எல்லாம் இருந்திருக்கிறோம்….. !!!

ஆனால் இன்று …… ??? தமிழர்களை, தமிழர்களின் பண்பாடு, வீரம், கலைத்திறன், அற்புதமான குணங்கள் – அத்தனையையும், சாராயக்கடையில் அடமானம் வைத்து விட்டு,

சுயநினைவேயின்றி, வேட்டி அவிழ்ந்து கிடப்பது கூடத் தெரியாதபடி, தெருவில் வீழ்ந்து கிடக்கும் தமிழர்களைக் காணும்போது, இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது ….. என்ன செய்ய …..??? – காவிரிமைந்தன் ) சரி, இதை இங்கேயே விடுவோம் …..

கீழே – பாலகுமாரனின் உடையார் அனுபவங்கள் –

……………………………………………………………………………………

ஆதித்த கரிகாலனை யார் கொன்றார்கள் என்று சரித்திரப் பேராசிரியர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. அதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. சான்று இல்லாமல் அவர்கள் எந்த முடிவுக்கும் லருவதில்லை.

அந்த இடத்தை எடுத்துக்கொண்டு யாரால், எப்படி, இந்தக் கொலை நிகழ்ந்திருக்கக்கூடும் அதற்கு அந்த சூழ்நிலை என்னலாக அமைந்திருக்கும் என்று கற்பனை செய்வது எழுத்தாளர்களாகிய எங்களுடைய உரிமை.

ஆதித்தகரிகாலன் கொலையில் உத்தமசோழருக்கு பங்கு உண்டு என்றும் சொல்லலாம். இல்லை என்றும் சொல்லலாம். கண்டராதித்தன் மனைவி செம்பியன்மாதேவிக்கு பங்கு உண்டு என்றும் சொல்லலாம். இல்லை என்றும் சொல்லலாம்.

வெறுமே சரித்திர நிகழ்வுகளை கல்லெட்டில் கிடைத்தது மட்டும் சொன்னால் சுவாரசியமாக இராது என்று, ஒரு நிலைப்பாடு எடுத்துக்கொண்டு அந்த அரசியல் சூழ்நிலையை திரும்பத்திரும்ப யோசித்து விவாதித்து இந்த உடையார் நாவல் படைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு உள்ளுணர்வாக நான் வாழ்ந்த பூமி என்கிற பிரமை உதவி செய்திருக்கிறது. இதை பிரமை என்றுதான் சொல்ல லேண்டும். ஏனெனில், நான் வாழ்ந்ததற்கான சரித்திரச் சான்றுகள் கல்வெட்டுகள் எதுவும் இல்லை. ஆனால், மிக பலமாக, கனவிலும் நனவிலும் இந்த எண்ணம் என்னை துரத்துவதை நான் உணர்ந்திருக்கிறேன்.

அறியாத பருலத்தில் மட்டுமல்ல, அறிந்து தெளிந்து – மாமன்னர் ஸ்ரீ ராஜராஜ தேவரை நன்கு தெரிந்தபிறகு கூட இந்த பிரகதீஸ்லர கோயில் வெட்டவெளிக்குள் நுழைகிறபோது மிகப்பெரிய சிலிர்ப்பு ஏற்படும். கனமான மன அழுத்தம் உள்ளே நடக்கும். சோகம் கவ்விக் கொள்ளும்.

இது எல்லா சரித்திர இடத்திலும் நிகழ வேண்டுமல்லலா….???

இல்லை. மதுரை கோவிலிலோ, நாயக்கர் மஹாலிலோ, செஞ்சியிலோ, செயின்ட்-ஜார்ஜ் கோட்டையிலோ திருச்சியிலோ, ராமேஸ்வரத்திலோ ஏற்பட்டதேயில்லை. இங்கு மட்டும் ஏன் ஏற்படுகிறது என்ற காரணத்தை என்னால் சரிவர விளக்கமுடியவில்லை. ஒரு ஊகமாகத்தான் இந்த மண்ணில் நான் பிறந்திருக்கக்கூடும் என்று சொல்கிறேன்.

மாமன்னர் உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவரை எரியூட்டிய மண்டபம் நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்பட்டு பிறகு இயற்கை சீற்றத்தால் இடிந்து விழுந்தபோது பல நாட்கள் உபவாசமிருந்து இராசேந்திர சோழனின் தளபதி ஒருவன் அதை மறுபடியும். நிர்மாணித்திருக்கிறான்.

அந்தத் தூண் ஒன்றை பார்க்க நேர்ந்தது. அதைத் தழுவிக்கொள்ளத்தான் ஆசை ஏற்பட்டது. என் ஐயனே நீ இத்தூண் அருகேதான் சிதையில் அடுக்கப் பட்டாயா என்று துக்கம் பொங்கியது.

பலமுறை பலமணிநேரம் அந்தத் தூணை தடவித்தடவி நானும் நண்பர்களும் இருந்தோம். அந்த ஊருக்கு உடையாளூர் என்று பெயர். இன்னமும் ஸ்ரீ ராஜராஜசோழன் நினைவாக இருக்கின்ற சிவலிங்கம் ஒன்று வாழைத்தோப்பில் சாய்ந்து கிடக்கிறது. இவையிரண்டும் பால்குளத்தம்மன் கோயில் (அமண்குடி) அருகில் உள்ளன.

ஸ்ரீ ராஜராஜத்தேவரின் இரண்டாவது மகள் மாதேவடிகள் பற்றிய கவ்வெட்டுள்ள கோவிலும் சிதைந்து போயிருக்கிறது. உள்ளே புகமுடியாதபடி சுற்றி புதர்கள் மண்டி யிருக்கின்றன.

ஸ்ரீ ராஜராஜத் தேவருக்காக அவரது மகன் ஸ்ரீ ராஜேந்திரத்தேவர் திலதர்ப்பணம் செய்த இடத்தில், திருவலஞ்சுழி கோயிலில் நாங்கள் வெகுநேரம் அமைதியாக அமர்ந்திருப்போம்.

தன் சிற்றன்னை பஞ்சவன்மாதேவிக்கு மட்டும் ஏன் பள்ளிப்படை எழுப்பினார் ஸ்ரீ ராஜேந்திர தேவர் என்கிற கேள்வி இன்னொரு புதினம் தரும்.

எனக்குத் தெரிந்தவரை உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் எங்கெல்லாம் நின்றாரோ, அங்கெல்லாம் நானும் நின்றிருக் கிறேன். எப்பொழுதும் நின்றிருக்கிறேன். இப்பொழுதும் போய் பார்த்து வந்துவிட்டேன் என்று ஒரு எண்ணம் தோன்றுவதுண்டு.

மற்ற கதைகள் எழுதுவதைவிட, இந்த நாவல் எழுதுகிற பொழுது மிகப்பெரிய குதூகலத்தை நான் அடைந்தேன்.

கதை எழுதத் துவங்கிய காலத்திலேயே இப்படியொரு ஒரு நாவல் எழுத வேண்டுமென்ற ஒரு எண்ணம் எனக்குள் தோன்றி விட்டது.

நல்லதற்கு, கெட்டதற்கெல்லாம் தஞ்சைத் தரணி போகையில் நான் இந்த இடங்களுக்கு சென்றிருக்கிறேன். இதுபற்றியே அதிகம் சிந்தித்திருக்கிறேன். கிட்டத்தட்ட என் இருபத்தைந்து வயதில் ஆரம்பித்து இந்த ஐம்பத்தாறு வயதுவரை முப்பத்தியோரு வருடங்கள் இதற்காக உழைத்திருக்கிறேன்.

– பாலகுமாரன்

……………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக