3262 நாட்கள் ( 9 ஆண்டுகள் )ஜெயிலிலேயே …. !!!

……………………………….

……………………………….

நேருவுக்கு ‘கிரிமினல்’ பட்டம் கொடுக்கிறார் ஓரு மத்திய அமைச்சர்.

’நேரு இந்தியாவை அவமதித்தவர்’ என்று தூற்றுகிறார் ஒரு பெண் எம்.பி.

‘ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற வேண்டும்’ என்கிறார் இன்னொரு அரசியல்வாதி …

இன்னும் சிலர் -நேரு நினைவு அருங்காட்சியகத்தையே அடையாளம் மாற்ற ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர் ….

நாடாளுமன்றத்திலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நேருவை குறைகூறிப் பேசுவது ஒரு சிலருக்கு வாடிக்கையாகிப்போனது.

மகாத்மா காந்தியையே மதிக்காதவர்கள், நேருவை கொஞ்சுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.

ஆனால், நேருவை ‘கிரிமினல்’ என்று முத்திரை குத்துவதை சகிக்க முடியவில்லை.

நேரு ‘இந்தியாவை அவமதித்தவர்’ என்று தூற்றுவதை எளிதாய் கடக்க முடியவில்லை.

1949ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணமாக நேரு சென்றபோது அவருக்கு 60-வது பிறந்தநாள் வந்தது.

அப்போதுதான் ‘ஆர்கனைசர்’ இதழில் நேருவைப் பாராட்டி நாலு பக்கத்துக்கு கட்டுரை எழுதியது RSS.

அதில் – ‘நேரு இந்தியாவைச் சிறப்பாக வழி நடத்துகிறார். இந்தியமக்கள் அவரை வெகுவாக விரும்புகிறார்கள்’ என்று வரிக்குவரி புகழ்ச்சி செய்தார்கள்.

அதற்குப் பின்னாலிருந்த காரணத்தை ராமச்சந்திர குஹா ஒரு கட்டுரையில் விளக்கினார். ‘காங்கிரஸ் அவர்களுக்கு இனித்த காலம் அது. அவர்கள் காங்கிரஸில் ஐக்கியமாக துடித்துக் கொண்டிருந்தார்கள். நேருவின் ராஜகுருவாக மாற கோல்வால்கர் மிகவும் விரும்பினார்’ என்று சொல்லியிருக்கிறார் அவர்.

நேரு இளவரசனாகப் பிறந்தவர்.

இளவரசனாகவே வளர்ந்தவர்….

ஆனால் – சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் இணைந்ததால், ஆண்டியாக வாழ்ந்தவர்…!!!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இணைந்துகொண்ட பிறகு, அவர் பெரும்பாலும் பணக் கஷ்டத்தில்தான் வாழ்ந்தார். ‘அவரது புத்தகங்களின் பதிப்புரிமைத் தொகை மட்டும்தான், அவருக்கு ஒரே வருமானமாக இருந்தது’ என்று எழுதுகிறார் அவரிடம் உதவியாளராக இருந்த மத்தாய்.

ஆனந்தபவன் அரண்மனையும், அலகாபாத் சிறைச்சாலையும் அவருக்கு ஒன்றாகவே தெரிந்திருக்கிறது.

‘வீட்டின் வேலையாள்களுக்கும் சேர்த்து சொத்தைப் பங்கிட்டுக் கொடுத்த தயாளன், அந்தக் காலத்தில் அவர் மட்டுமே’ என்று மனம் நெகிழ்கிறார் மத்தாய்.

நேரு எனும் ஆளுமை, சிறையன்னையால் சீராட்டி வளர்க்கப்பட்டவர்.

சிரமங்களையும் சித்ரவதைகளையும் கடந்து செல்லும் நெஞ்சுரத்தை அவர் காந்தியிடம் இருந்து பெற்றிருந்தார்.

‘சிறையைப் போல ஒரு தவச்சாலை இல்லை. தண்டனையைப் போல ஒரு தவமில்லை’ என்றே, சிறை அதிகாரிகளிடம் சொல்கிறார் அவர்.

ஒரு கணக்கின்படி, நேரு சிறையில் இருந்த நாள்கள் மொத்தம், 3262..

கிட்டத்தட்ட 9 வருடங்கள் அவர் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் சிறைவதையை அனுபவித்திருக்கிறார்.

சிறையில் கழிந்தது அவரின் இளமை…. காசநோயால் அவதிப்பட்டு வந்த மனைவியை அருகிருந்து கவனிக்க முடியவில்லை.

அந்தத் தியாகத்துக்குதான் இப்போது கிரிமினல் பட்டம்.

தனது 90 % சொத்துக்களை இந்த பாரத நாட்டிற்கு, தானமாக தந்திட்டவர் நேரு.

1946 ல் அதன் மொத்த மதிப்பு சுமார் 196 கோடி. அவர் வசித்த இல்லமும், ஆனந்த பவனமும் இதில் சேராது.

அவற்றின் இன்றைய மதிப்பு ₹ 12000 கோடி முதல் ₹ 49000 கோடி வரை என்று -கணிக்கப்படுகிறது.

இந்த தேசத்தை கட்டமைக்க, தனது ஆஸ்திகளை அள்ளித் தந்தவருக்கு இன்று கிரிமனல் பட்டம்….!!!

இந்தியா வித்தியாசமான நாடு.

இங்கே ஏகப்பட்ட மொழிகள்.

இருநூறு இனங்கள்.

இரண்டாயிரம் ஜாதிகள்.

இதை ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று நாம் வெளியே வேண்டுமானால் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால், உள்ளுக்குள் அது ஆண்டாண்டு காலமாக சமத்துவத்தை சூழ்ந்து சுட்டெரிக்கும் கொடு நெருப்பாகவே இருந்து கொண்டிருக்கிறது……..

அந்தக் காலங்களில், அந்த நெருப்பு இன்னும் உக்கிரமாக எரிந்து கொண்டிருந்தது.

அப்போது மட்டும், ‘அனைவரும் பங்களிப்பதே உண்மையான ஜனநாயகம்’ என்ற எண்ணத்தை உள்ளத்தில் சூடிய நேரு எனும் தலைவன் நம்மிடையே வந்திருக்காவிட்டால், இந்தியா உள்நாட்டுப் போர்களால் உருக்குலையும் இன்னொரு ஆப்பிரிக்க நாடாக மாறியிருக்கும்.

அத்தகைய மாமனிதனுக்கு இன்று கிரிமினல் பட்டம்..!

நேருவைப் பொறுத்தவரை, அவரது கொள்கை முடிவுகள் இன்று விவாதிக்கப்படலாம். ஆனால் நவீன இந்தியாவின் அடித்தளத்தை அமைத்ததில் அவரது பங்கு என்றும் வரலாற்றில் அழியாதது.

இந்த நாட்டின் விடுதலைக்கு, சுதந்திரத்திற்கு பிறகான வளர்ச்சிக்கு – ஜவஹர்லால் நேருவின் உழைப்பிற்கு, பங்களிப்பிற்கு – அங்கீகாரம் கொடுக்காதவர்களை மனசாட்சி உள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள்…..

……………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக