.
இந்த மண்ணில் வாழ்ந்த மூன்று ஹீரோக்கள் –
இரண்டாயிரம் வருட உலக சரித்திரத்தில் இடம்பெற்ற
வேறு எவரையும் விட அதிகமாக
நமது மனதில் இடம் பிடித்தவர்கள் –
சமகால நாயகன் – ஈழவிடுதலைப்படை தலைவர் – பிரபாகரன்…
அவருக்கு சற்று முன்னதாக –
இந்திய தேச விடுதலைப்படையின் நாயகன் –
நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்.
இவர்கள் இருவரையும் நான் விவரமாக அறியும் முன்னரே
என் மனதில் இடம் பிடித்த சரித்திர நாயகன்,
மராட்டிய வீரன் சத்ரபதி சிவாஜி….
இந்த மூவருக்கும் பல விதங்களில் ஒற்றுமைகள் உண்டு..
இவர்கள் ஒவ்வொருவரும் தமக்கு பின் வந்தவருக்கு –
வழிகாட்டியாக, உதாரணமாக இருந்திருக்கின்றனர்…
தன்னைச் சார்ந்த மக்களின் மீது பேரன்பு, கருணை, பாசம் –
அவர்களின் நல்வாழ்வு,
அவர்களின் விடுதலை,
அவர்களின் பாதுகாப்பு – இவற்றின் மீது அக்கரை.
தன் மக்களுக்காக எதையும் செய்யத்துணிந்த சுயநலமற்ற போக்கு.
நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு துணிச்சல், மனோதிடம்,
கொண்ட லட்சியத்தில் தளராத உறுதி,
அற்புதமான செயலாற்றல், போர்த்திறன் –
எதிரிகளை பல களங்களில், பலமுறை –
புறமுதுகு காட்டி ஓடச்செய்த சாகசம் –
தனி வாழ்வில் மிகச்சிறந்த ஒழுக்கம்….
என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
இதில் சத்ரபதி சிவாஜி மட்டுமே தன் காலத்தை முழுமையாக தன் மக்களுக்காக செலவிட முடிந்தது. மற்ற இரண்டு பேரும் – தம் தாய் நாட்டுக்காக, தம் மக்களுக்காக போராடும்போதே மறைந்தவர்கள். இவர்கள் எங்கே, எப்போது, எப்படி மறைந்தனர் என்பதை இன்று வரை விடைகாண முடியாத
கேள்விக்குறியாகவே விட்டுச் சென்றவர்கள்…. !
சுதந்திர போராட்ட வீரர்களைப்பற்றி நான் அவ்வப்போது இங்கு
எழுதி வருகிறேன். நேதாஜி அவர்களைப் பற்றியும்
இந்த விமரிசனம் வலைத்தளத்தில்,
விவரமாக எழுத வேண்டுமென்பது என் நீண்ட நாள் அவா.
எனவே, நேதாஜி பற்றி முதல் பகுதியில் சொல்ல ஆரம்பித்த விஷயத்தை மேற்கொண்டு எடுத்துச் செல்லும் முன்னர் –
சிறிது பின்னோக்கிச் சென்று, அவரது இளமைக்காலத்தில்
துவங்கி பயணிக்க விரும்புகிறேன். நேதாஜியின் பெரும்பாலான சாகசங்களைப் பற்றி பலரும் படித்திருப்பீர்கள்.
ஆனாலும், நமக்குப் பிடித்த நாயகர்களின் சாகசங்களை
எத்தனை முறை படித்தாலும், கேட்டாலும் அலுப்பதில்லை.
அதனால் தான் இந்த சரித்திர நாயகர்களின் சாகசங்களை
மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.
இதில் எழுதப்படும் விஷயங்களில் சில ஏற்கெனவே
கேள்விப்பட்டதாகவும் – சில புதிதாகவும் இருக்கும்.
எப்படி இருந்தாலும், இது ஒரு புதிய கோணத்திலிருந்து
பார்த்த அனுபவத்தை ஏற்படுத்தும்….!
நேதாஜியின் முழு வரலாற்றையும் அல்ல – சில முக்கியமான சம்பவங்களையும், அனுபவங்களையும் மட்டும் இங்கு சுருக்கமாக நினைவுகூற விரும்புகிறேன்….
இந்த விஷயங்களை எல்லாம் படிக்கும்போது – நமது நிகழ்கால
அரசியல் தலைகள்-முகங்கள் ( முக்கியமாக தற்கால தமிழ்நாட்டு
தலைவர்கள் ) ஒவ்வொன்றையும் கொஞ்சம் நினைவில்
கொண்டு வந்து அவசியம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
இப்போதைய தலைவர்களில் – யாராவது,
ஒரே ஒருவராவது –
இத்தகைய குணநலன்கள் உடையவராக இருக்கிறார்களா
என்று யோசித்துப் பார்த்தால் – ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது…!!
——————–
(மேல் வரிசையில், வலது கடைசியில் – சிறுபையனாக சுபாஸ்..)
கட்டாக்கில் ஓரளவு வசதியான குடும்பம் – வழக்குரைஞரான தந்தை. 14 பிள்ளைகளிடையே ஒன்பதாவதாகப் பிறந்தவர் –
சுபாஸ் சந்திர போஸ், இளம் வயதில், கல்கத்தாவில் பிரசிடென்சி கல்லூரியில் படிக்கும்போது,
இந்தியாவையும், இந்தியர்களையும்
பழித்துப் பேசினார் என்பதற்காக, வெள்ளைக்கார ஆசிரியர்
ஒருவரைத் தாக்கி, அதன் விளைவாக கல்லூரியிலிருந்து
வெளியேற்றப்பட்டது அவரது நாட்டுப்பற்றுக்கும்,
கோபத்துடிப்புக்கும் துவக்க கால அத்தாட்சி.
கல்கத்தா பல்கலையில் 1918-ல் பி.ஏ. படிப்பை முடித்து விட்டு,
நிச்சயமாக ஐசிஎஸ் (Indian Civil Service) படித்துத் தேர்ச்சி பெற்று திரும்புவேன் என்று தந்தைக்கு உறுதி கொடுத்து விட்டு, 1919-ல் லண்டனுக்கு கப்பலேறிய சுபாஸ், தந்தைக்கு தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினார். ஐசிஎஸ் தேர்வில், நான்காவது ரேங்க் பெற்று, பணிப்பொறுப்பேற்க இந்தியா திரும்பினார்.
இரண்டு வருடங்கள் லண்டனில் தங்கியிருந்து படித்தாலும்,
சுபாசின் கவனம், ஈர்ப்பு எல்லாம் இந்திய சுதந்திர போராட்டத்தில்
தான் இருந்தது.
அப்போது வங்காளத்தில் விவேகாநந்தர், அரவிந்தர்,
ஆகியோர் மூலம் கிளம்பிய லட்சியப் பொறிகள் –
சித்தரஞ்சன் தாஸின் சுதந்திர வேட்கையைத் தூண்டும் பேச்சும்,
செயலும் – சுபாஸ் சந்திர போஸ் மனதை முழுவதுமாக
சுதந்திர போராட்ட திசையில் திருப்பின. பிரிட்டிஷ் அரசின் கீழ்
பணி புரிய விருப்பமின்றி, ஐசிஎஸ் பதவியை துறந்து
முழுவதுமாக போராட்டப்பணியில் இறங்கினார்.
சித்தரஞ்சன் தாஸின் வழிகாட்டுதலில், 1923-ல் அகில இந்திய இளைஞர் காங்கிரசின் தலைவராக, வங்காள மாநில காங்கிரசின் செயலாளராக –
தீவிரமாக போராட்ட களத்தில் இறங்கினார்.
பிரிட்டிஷ் அரசு அவரைக் கைது செய்து மாண்டலே சிறையில் அடைத்தது. சிறைவாசத்திற்கு அடையாளமாக டிபி நோய் அவரை தொற்றிக் கொண்டது.
விடுதலை பெற்று வெளிவந்தவுடன் 1929-ல் கல்கத்தாவில்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாடு… நடைபெறுகிறது.
சுபாஸ் பொறுப்பேற்று, மிகப்பெரிய தொண்டர் படையை
உருவாக்குகிறார். ராணுவம் போன்ற மிடுக்கான உடை, தொப்பி,
பெல்ட், ஷூ என்று படை வீரர்கள் போல், காங்கிரஸ் தொண்டர்கள்
மிடுக்கு நடை போட்டு வந்ததை மக்கள் ரசித்தாலும் –
காந்திஜி ரசிக்கவில்லை. இதென்ன சர்க்கஸ் கோமாளிகள் போல் இருக்கிறார்களே என்று விமரிசனம் செய்தார்.
முதன் முறையாக மிகுந்த ஆர்வத்துடன் அற்புதமாக செயல்பட்டு, தொண்டர் படையை திரட்டிய சுபாஸ் சந்திர போசுக்கு கிடைத்த காந்திஜியின் இந்த வரவேற்பு தான் – கடைசி வரை காங்கிரஸ் கட்சியில் நேதாஜிக்கு உரிய வரவேற்பும், தகுந்த இடமும் கிடைக்காமல் போனதற்கு காரணமாக அமைந்தது என்று கூட சொல்லலாமோ… ?
(தொடர்கிறது – பகுதி-3-ல் )
…………………………………………………………..
நேதாஜி பற்றிய தொடரில் இரண்டாவது பகுதி இந்த இடுகை.
முதல் பகுதியை பார்க்க –







[…] […]