…………………………………………….

………………………………………………………………………………………………………………………………………..
மோரீஸ் ஃப்ரீட்மன் ஒரு மேதாவி. போலந்தில் ஏழ்மையான யூதர்கள் வசிக்கும் பகுதியில் பிறந்தார். பதிமூன்று வயதுவரை ரொட்டித் துண்டைத் தவிர்த்து வேறெதையும் ருசித்து அறியாதபடி ஒரு பரம ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவர். பத்து பிராயம் இருக்கும் போதே ருஷ்ய, ஹீப்ரூ மற்றும் சிரிலிக் ஆகிய மொழிகளை எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தார். ருஷ்ய, போலீஷ், ஃப்ரென்ச் ஹுப்ரூ ஆங்கில மொழிகளை சரளமாகப் பேசும் திறன் படைத்திருந்தார்.
பள்ளியிலிருந்தே மின்சாரவியல் பொறியாளர் ஆகும்வரை வகுப்பில் முதன் மாணவனாக தேர்ச்சிபெற்றிருந்தார். இந்த ஒப்புயர்வற்ற மேதாவி, அகவை இருபதை அடையும் போதே அவரது பொறியியல் கண்டுபிடிப்புகளுக்கு நூற்றுக்கணக்கில் காப்புரிமை பெற்றிருந்தார்.
இருபத்தைந்தாம் வயதில் மோரீஸுக்கு கடவுளை தேடுவதில் உள்ளத்தில் உந்துதல் ஏற்பட்டது. அந்த தேடுதலில் யூத மதத்தை விடுத்து ரஷ்ய மரபுவழியைத் தேர்ந்தெடுத்தார். துறவியாகி பற்றற்ற வாழ்க்கையை தனிமையில் இருக்கும் ஒரு மடாலயத்தில் மேற்கொண்டார்.
அவரது துணிகரமான பயணங்களில் ஒரு அரிய நிகழ்வாக பெரும் நீர்வீழ்ச்சி ஒன்றின் உச்சிக்குச் சென்றுவிட்டார். அவ்விடத்தில் “இயேசு கிறிஸ்துவின் மீது உனக்கு நம்பிக்கை இருக்குமேயானால் சர்ச்சுகளை நீ விரும்புவதாக இருந்தால் இந்த நீர்வீழ்ச்சியினுள் குதி” என்று ஒரு சாத்தான் அவர் காதுகளில் சொன்னது. மோரீஸ் உடனே துறவியின் ஆடையோடு ஒரு பெரும் பள்ளத்தில் குதித்துவிட்டார்.
அருணாசலம் அவருக்கு ஏதாவது நடப்பதற்கு விடுவாரா? அவரது அந்த துறவி அங்கியானது மரங்களில் மாட்டிக்கொண்டு அவரைக் காப்பாற்றிவிட்டது. உள்ளுக்குள்ளே ஆர்வம் பீறிட்டால், உண்மையை அறியும் தாகம் இருந்தால் அந்த உண்மையே நமக்கு வழிகாட்டும் என்பதற்கான ஆதாரம் இது.
அவர் பயிற்சி செய்த எல்லா மரபுவழி சமயங்களும் அவரை உண்மைக்கு இட்டுச்செல்லவில்லை என்பதால் வெறுத்துப்போனார். அவரது ஒவ்வொரு அடிமைத்தளத்திலிருந்தும் சுதந்திரமடைய விரும்பினார். இந்த தேடுதல் அவரை தியோசாஃபிகல் சொசைட்டிக்கும் அன்னி பெஸண்ட் அம்மையாரிடமும் இட்டுச் சென்றது.
ஜெ.கிருஷ்ணமூர்த்தியுடனான சந்திப்பு அவரை மிகவும் ஈர்த்தது. இந்த சந்திப்புகள் எல்லாம் 1926ல் நிகழ்ந்தன. “உண்மை என்பது பாதையில்லாத நிலம்” என்று கிருஷ்ணமூர்த்தி பிரகடப்படுத்தினார். எந்தவிதமான புறவுலக அதிகாரங்களுக்கு ஆட்படாமல் விடாமுயற்சியுடன் இருப்பவர்கள் இவ்வுண்மையை அடையலாம்.
இந்த அணுகுமுறை மோரீஸுக்கு ரொம்பவும் பிடித்துப்போய் இந்த விஷயத்தைப் பற்றி மணிக்கணக்கில் கிருஷ்ணமூர்த்தியுடன் உரையாடினார். மோரீஸ் அவரிடம் பேச வேண்டும் போதெல்லம் கிருஷ்ணமூர்த்தி அதற்கு செவிசாய்த்தார் என்று பதியப்பட்டிருக்கிறது.
மோரீஸுக்குக் கடவுளைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் உண்மையை அறிந்துகொள்வதிலும் கட்டுக்கடங்காத ஆர்வம் இருந்தது.
இருந்தாலும் 1928லிருந்து 1934 வரை மின்சார தொழிலில் ஈடுபட்டுவந்தார். பிரான்ஸில் ஒரு புகழ்பெற்ற மின்சார பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றினார். இருந்தாலும் உண்மையை அறியும் பாதையிலிருந்து அவர் விலகாமல் ப்ரென்ச் மற்றும் ஜெர்மன் மொழியில் வேதாந்த சாரங்களாகிய உபநிஷதங்கள் மற்றும் பகவக் கீதை ஆகியவற்றைப் படித்தார்.
இந்த நேரத்தில்தான் அவர் பால் பிரண்டனின் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தார். “நான் யார்?” என்ற போதனை வியக்கத்தக்க வகையில் அறிவூட்டுவதாக இருந்தது. மெய்யானது ஒருவரின் உள்ளுக்குள்ளேயே இருப்பதேயன்றி வெளியில் இல்லை என்று அகமுகமாகத் திரும்ப வேண்டும் என்ற போதனை.
பால் பிரண்டனின் புத்தகங்கள் அவருக்குள்ளே கனலாய் இருந்த ஆசையை கொழுந்துவிட்டெரியச் செய்து இந்தியாவுற்கு சென்று வாழும் முனி, பகவான் ஸ்ரீரமண மஹரிஷியைச் சந்திக்கத் தூண்டியது. இதற்கு கடவுள் ஒரு வழி காட்டினார்.
மைசூர் திவான் தனது மாநிலத்தை நவீனமயமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து ஆகிய தேசங்களுக்குச் சென்று அறிந்துகொள்வதற்காக விஜயம் செய்தார். ஒரு நாள் மோரீஸ் ஃப்ரீட்மன் நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் தொழிற்சாலைக்குச் சென்றிருந்தார்.
மோரீஸின் நேர்மை உத்தியாகப் பிரயோகங்கள் மற்றும் கடின உழைப்பு இவைகளைக் கண்டு பிடித்துப்போன அவர் “நீங்கள் எங்கள் மாநிலத்துக்கு வந்து அதை எவ்விதம் மேம்படுத்தலாம் என்று எங்களுக்கு ஆலோசனை வழங்கமுடியுமா?” என்று வேண்டி கேட்டுக்கொண்டார். 1930களில் இந்தியா மிகவும் பின் தங்கி இருந்தது. தொழில்நுட்பம் என்பதையே கண்டறியாத தேசமாக இருந்தது. மோரீஸ் தனக்கே உரிய பாணியில் பதில் சொன்னார்.
“சார்! நான் பெட்டி கட்டியாயிற்று. உங்களுடன் இந்தியா வரத் தயாராகிவிட்டேன்”
தனது கனவுகளின் தேசமான இந்தியாவிற்கு மோரீஸ் 1935-ல் வந்திறங்கினார். அவரை ஒரு மிகப்பெரிய மின்சார சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நிர்மானிப்பதற்கு பொறுப்பாக பணியமர்த்தப்பட்டார். பகவானை தரிசிப்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. அட்டவணைப்படி வேலைப்பளு நிரம்பிய நேரத்திலும் பகவானைச் சென்று சந்தித்தார்.
முதல் தடவையே தன்னை முழுவதுமாக பகவானிடம் சரணாகதியடைய தயாராகிவிட்டார். தொழிற்சாலையில் இரவுபகல் பாராமல் உழைத்தார். ஆகையால் மிகவும் குறுகிய காலத்தில் பெரும் சாதனை படைத்தார். வார இறுதிகளில் அவர் அருணாசலம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். “இதோ மோரீஸ் வந்தாச்சு” என்பார்கள் அருணாசலத்தில் இருந்தவர்கள்.
அங்கிருக்கும் சொற்பகாலத்தில் தனது நண்பர்களிடமும் பகவானிடமும் பேசுவார். பகவானை அடிக்கடி கேள்விகள் கேட்பார். இருந்தாலும் பகவான் அவரை பொறுத்துக்கொண்டார். பகவான் மிகவும் சரளமாகவும் பிரக்ருதியாகவும் ஒரு கண்ணாடி உங்களை பிரதிபலிப்பதைப் போல இருந்தார். ஆன்மிகத்தில் மூழ்கித் திளைத்திருந்தாலும் அவரும் அதுபோலவே இருப்பார். அவரது அடிக்கடி விஜயத்தைப் பார்த்து ரமணாஸ்ரம பக்தர்கள் கேட்பார்கள்…
“மோரீஸ், நீங்கள் ஏன் ஒரு மாசத்துக்கு ஒரு தடவை இல்லையென்றால் இரண்டு மாசத்துக்கு ஒரு தடவை வரக்கூடாது? இப்படி அடிக்கடி இங்கே வருவதற்கு நீங்கள் நிறைய செலவழிக்கவேண்டுமே?”
அதற்கு மோரீஸின் பதில் அபாரமானது.
“நான் என்ன செய்வது? என்னுடைய பேட்டரி இவ்வளவுதான் தாங்குகிறது. ஒரு வாரத்துக்குள் வற்றிப்போய் விடுகிறது. ஒவ்வொரு வாரமும் பகவானின் முன்னால் இருந்தால்தான் பேட்டரி மறு ஊட்டம் பெறுகிறது”
……………………..
கீழே இருப்பது மோரீஸ் ஃப்ரீட்மன் அவர்களே சொன்னது –
நான் இந்தியாவிற்கு வந்த ஆறு மாதத்திற்குப் பின்னர் நண்பர்கள் யாருமின்றி தனித்திருந்தேன். நான் நேசித்த நபர் இறந்த பின்பு வாழ்வில் எனக்கு எதன் மீது ஈர்ப்பில்லை. எதேச்சையாக காரணம் எதுவுமின்றி திருவண்ணாமலைக்கு விஜயம் செய்தேன்.
நேராக ஸ்வாமியிடம் சென்றேன். இரண்டு மணி நேரம் அங்கேயே அமர்ந்திருந்தேன். இவரைப் போல ஒருவரை இதுவரை நான் சந்தித்ததில்லை என்பதை உணர்ந்தேன். எனக்கு அப்போது மஹரிஷி பகவான் போன்ற வார்த்தைகளின் அர்த்தம் தெரியாது. எனக்கு எதுவும் அவரைப்பற்றி முன்பே தெரியாத போலும் ஏதோ ஒரு அசாதாரண சக்தி அவரிடம் இருப்பதைப் புரிந்துகொண்டேன். அவரது உபதேசங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.
அவைகள் என்னுடைய நிலைக்கு மிகவும் உசரத்தில் இருந்தன. அந்த உபதேசங்களின் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் ஒரு நாய் தனது எஜமானனுக்குக் காட்டும் அன்பைப் போன்ற ஒரு உறுதியான நேசம் அவர் மீது எனக்கிருப்பது மனதில் தோன்றியது.
அதன் பின்னர் எனக்கு எப்போதெல்லாம் மனதில் வருத்தமோ சோகமோ எழுகிறதோ அப்போதெல்லாம் ஆஸ்ரமத்திற்குச் சென்று அவர் முன்னால் உட்கார்ந்து கொள்வேன். ஆரம்ப நாள்களில் நான் அவரிடம் நிறையக் கேள்விகள் கேட்பேன். நாளாக நாளாக அடிக்கடி ஆஸ்ரமம் செல்ல ஆரம்பித்தவுடன் என்னுடைய பேச்சுப் படிப்படியாக குறைந்துவிட்டது.
கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் ஆஸ்ரமம் செல்ல ஆரம்பித்துவிட்டேன். எனக்கு எந்தவிதமான சாதனாவோ தியானமோ தெரியாது. நான் வெறுமனே அவர் முன்னால் உட்கார்ந்திருப்பேன். என்னுடைய கேள்விகளுக்கு “நீ யார் என்று கண்டுபிடி” என்று விடையளிப்பார் மஹரிஷி.
அது என்னவென்று அப்போது எனக்குத் தெரியாத போதும் மனசுக்குள் ஒரு சந்தோஷம் ஏற்படும். மெதுவாக என்னுள் ஏதோ ஒரு மாற்றம் உண்டானது.
அம்மாவின் மென்சூட்டினால் முட்டையானது வளர்ந்து குஞ்சு பொறிப்பது போல அவர் முன்னிலையில் நான் மெதுவாகவும் சீராகவும் ஒரு நிலைக்கு வந்து கொண்டிருந்தேன்.
என்னுடைய மனது முன்னைவிட அமைதியானது. இதற்கு முன்னால் சஞ்சலமாகவும் சந்தோஷமில்லாமலும் இருந்த மனது இப்போது பாதுகாப்பாகவும் நிறைந்த அமைதியோடும் எப்போதும் விளங்கியது. காலம் செல்லச் செல்ல மஹரிஷி என்னருகே இன்னும் வந்தது போல உணர்ந்தேன்.
இதற்கப்பால் எனக்கு எப்போதெல்லாம் சோகமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் மஹரிஷியைப் பற்றி நினைக்கத் துவங்கினேன். அவரது வாத்சல்யம் எனக்கு எப்போதும் கிடைத்தது. அக்னியானது பனிக்கட்டியை உருகச் செய்வது போல என்னுடைய வேதனைகள் கரைந்து போராட்டமான எனது வாழ்க்கை ஆனந்தமயமான வாழ்வுக்கு மாற்றம் கண்டது.
ஜாம்பவான்களான பல ஆன்மிகவாதிகளை நான் சந்திக்க நேர்ந்திருந்த போதும் ரமண மஹரிஷியைப் போல என்னுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவருமில்லை. அவருள்ளே மிக உயர்ந்த கம்பீரமான தெய்வ வாழ்வு நிமிர்ந்து நின்று எளிமையாக நகர்ந்தது.
ஒப்புயர்வற்ற பரம்பொருள் தன்னை உடனடியாகத் தெரியப்படுத்திக்கொண்டு கனவில் கூட காணமுடியாததை நிஜமாக்கியது.
என்னிடம் மிகவும் வருத்தமாக சிலர் பகிர்ந்துகொள்வது என்னவென்றால் அவர் நம்மோடு சாப்பிட்டுப் பேசிச் சிரித்து நம்மையெல்லாம் வரவேற்று நம்மிடம் சகஜமாக ஸ்தூல சரீரத்தோடு இருந்த அந்த மகிழ்ச்சியான பொன்னாட்களில் அதன் முழுப்பயனை அடையமுடியவில்லையே என்பதுதான்.
அங்கே மெய்ப்பொருளானது நாம் எடுத்துக்கொள்வதற்கு தாராளமாக இருந்தது. ஆனால் நாம்தான் பொய்யான வணக்கத்தோடு, பயத்தோடு, சாக்குபோக்கு சொல்லிக்கொண்டு நெருங்காமல் இருந்தோம். நம் காலடியில் சமுத்திரமே இருந்தபோதும் ஒரு கிண்ணம் மட்டுமே எடுத்துக்கொண்டோம்.
என் பிரியமானவரே…!!! உங்களைக் கண்டுகொண்டேன், அதிலிருந்து நாமிருவரும் பிரியவேயில்லை,
என்னுடைய இருத்தலின் ஒவ்வொரு துளியும் நீர்தான், நீரே என் ஓட்டத்தின் இயக்கமும்,
நாம் இதுவரை தூரத்திலில்லை – இருந்தாலும் நான் உங்கள் பின்னால் துரத்துகிறேன், சிருஷ்டியின் ஓட்டம் என்னுடனோ நான் இல்லாமலோ தொடரும்,
இதில் நான் ஒன்றுமில்லை என்பதையும், மேலும்,
நீயே நிலைத்திருந்து எப்போதும் மாறாத ஓட்டத்தை சிருஷ்டிக்கிறாய் என்பதையும் – என்னை மறந்துவிடாமல் இருக்கச் செய்….!!!
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



[…] […]