சாது யோகி ராம் சூரத் குமார் …. ஒரு அனுபவம் … !!!

…………………………………………………………………….

………………………………………..

யோகி ராம்சுரத்குமார் சந்நியாசியைப் போல் உடுத்தியதில்லை….

அவர் பலவிதமான துணிகளை தனது உடலில் சுற்றியிருப்ப்பார்….

தலையில் ‘டர்பன்’ எனும் தலைப்பாகை, சட்டை, வேட்டி மற்றும் சால்வை உடுத்தியிருப்பார்….

அந்த சால்வை முறையாக துவைக்கப்பட்டதில்லை….

அவர் வழக்கமாக குளித்ததில்லை,

நித்ய கர்மா எனும் எந்த சடங்கையும்

பின் தொடர்ந்ததில்லை….

ஆனால் அவர் அகமானது தூய்மையாக இருந்தது….

கைகளில் பனையோலை விசிறி, மயிலிறகுகள், வைத்திருந்ததோடு

தேங்காய் சிரட்டையில் தனது உணவை பிச்சையேற்று பெற்றார்….

அவர் பல அழுக்கு மூட்டைகளையும், குப்பைகளையும் சுமந்து இருந்தார்.

ஆனால் பக்தர்களின் பாவங்களை கழுவி, துவைக்கும் வண்ணானாக இருந்தார்…

சில நேரங்களில் அவர் ஒரு குடிகாரனைப்போலவோ, பைத்தியக்காரனைப் போலவோ சத்தமிட்டு உரக்க சிரிப்பார்….

சில சமயம் அவரது விழிகள் பக்தர்களின் இதயங்களை அமைதியாக ஊடுருவும்..

அவரது உறைய வைக்கும், ஊடுருவும் பார்வை பலமணி நேரமும் சிலரிடம் தொடரும்….

ராமநாமத்தை உச்சரித்து அவர் குழந்தையைப் போல் ஆடவும், பாடவும் செய்வார்….

சிலநேரம் அவர் தனியே ஏதேனும் ஒரு மூலையில் அமர்ந்து தனக்குள் அழுது விசும்புவார்….

அறியாமை, வலி, வேதனைகள் என பலவற்றில் மூழ்கியிருக்கும் மக்கள் குறித்தே அத்தகைய விசும்பலான அழுகை இருக்கும்….

அவர் தனது தந்தையின் விருப்பத்திற்கு ஏற்பவே செயல்களை புரிவார், அடுத்து என்ன செய்வார் என எவராலும் கணிக்கவே இயலாது….

எவ்வளவு முக்கியமான நபராக இருந்தாலும் அந்த சந்திப்பினை அவர் ஏற்பாரா? மறுப்பாரா? எவரும் அறிய இயலாது….

ஆனால் பல நூற்றுக்கணக்கான பக்தர்களின் வாழ்வில் ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்தி இருக்கிறார்….

அந்தந்த கணங்களுக்கேற்பவே அவர் செயல் பட்டார். பலரை ஆன்மீக பாதைக்கு திருப்பி விட்டிருக்கிறார்….

வழமையான சாதுக்களைப்போன்றோ, துறவிகளைப் போன்றோ இல்லாமல் அவர் தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவராக இருந்தார்….

ஆனால் அவர் பல பக்தர்களை இறுக்கமாக பிணைத்திருந்த கர்மாக்களை சாம்பலாக்கியவர்….

அபூர்வமான ஒரு பிறப்பு …!!! இறைவன் நமக்கு தந்த கொடை…!!! காட்டிய அதிசயம் … !!!

…………………………………………..

கீழே – யோகி அவர்கள் தன்னை எப்போதும் ” பிச்சைக்காரன் ” என்று தான் அழைத்துக் கொள்வார்….ஒரு முறை அவர், தன் பக்தர்களுடன் சேர்ந்து ஒரு பொது தங்குமிடத்தில் இருந்தபோது சொன்ன அனுபவம் –

……………………………………

“அந்த நண்பன் ஒரு டெய்லர். ஹிந்தி நன்கு பேசக் கூடியவன். இந்தப் பிச்சைக்காரன் அந்த நண்பன் கடை வழியாக எப்போ தெல்லாம் போவானோ, அப்போ தெல்லாம் அந்த டெய்லர் அழைத்து மிகவும் பிரியமாக டீ கொடுத்து உபசரிப்பான்.

ஒரு நாள் இந்தப் பிச்சைக்காரன் அவ்வழியே செல்லும்போது ஒரு முரட்டுக் கும்பல் அந்த டெய்லரின் கடைவாயிலில் நின்று கொண்டிருந்தது. இந்தப் பிச்சைக்காரன் அந்தக் கடையருகே சென்றான். டெய்லர் நண்பனோ எதுவும் பேசவில்லை. அந்த முரட்டுக் கும்பலைச் சேர்ந்த ஒருவன் மிகவும் இளக்காரமாக இந்தப் பிச்சைக்காரனைக் கேலி செய்து நகைத்தான்.

இந்தப் பிச்சைக்காரன் அமைதியாக அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

இவனிடமிருந்து எந்த எதிர்ப்பும், தற்காப்பும் இல்லாததைக் கண்டு வெகுண்ட அந்தக் கும்பல், மேலும் நெருங்கி இந்தப் பிச்சைக்காரனின் உடைமை களைப் பறிக்கத் தொடங்கியது. ஒரு துணிப்பையும், அதனுள் இருந்த ஒரு சில துணிகளும், புஸ்தகங்களும் தூக்கி எறியப் பட்டன. இந்தப் பிச்சைக்காரன் அமைதியாக இருந்தான். அந்த அமைதியைத் தாங்க இயலாத அவர்கள் அவனைத் தாக்கினார்கள். ரத்தக்காயம் ஏற்படும் அளவுக்குத் தாக்கினார்கள். “இனி ஹிந்தியில் பேசினால் உன் உயிரையே எடுத்துவிடுவோம் என்று மிரட்டினார்கள். இரத்தம் சொட்டச் சொட்ட இந்தப் பிச்சைக்காரன் அமைதியாக அங்கேயே நின்றுகொண்டி ருந்தான்.

டெய்லர் நண்பனோ அந்த முரட்டுக் கும்பலுக்குப் பயந்து எதுவுமே பேசவில்லை. உதவிக்கும் வரவில்லை. அடித்தும் திட்டியும் மிரட்டியும் சோர்ந்துபோன அக்கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. இந்தப் பிச்சைக்காரனும் அங்கிருந்து சென்றுவிட்டான்.”

அவருடன் இருந்த பக்தர் ஒருவர் சொன்னது –

இது இதைக் கேட்டதும் எங்கள் மனத்தில் சொல்லொணா வேதனையும் கோபமும் பொங்கின. அப்போது நாங்கள் எங்கள் குடும்பத்தாரோடு சிவகாசி நாடார் சத்திரத்தில் மாடி ரூம்களில் தங்கியிருந்தோம். யோகியாரும் எங்களுடன் சிவகாசி நாடார் சத்திரத்திலேயே தங்கியிருந்தார்.

யோகி தன்னுடைய துயர அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்ட போது எங்கள் வீட்டுப் பெண்கள் அனைவரும் வேறு வேறு ரூம்களில் தங்களின் குழந்தைகளோடு இருந்தனர். இங்கு யோகி பேசியது எதுவுமே அவர்களுக்குத் தெரியாது.

யோகி அமைதியாக அமர்ந்திருந்தார். அந்த அறையில் ஒரு வலி மிகுந்த கனத்த அமைதி நிலவியது. குழந்தைகள் உறங்கியதும் எங்கள் வீட்டுப் பெண்கள் அங்கு வந்து யோகியை நமஸ்கரித்துவிட்டு அமர்ந்தனர்.

“ராஜகுமாரி, ஒரு பாட்டு பாடலாம் அம்மா.”

ராஜகுமாரி பாட ஆரம்பித்தார். யோகி அங்கிருந்த கட்டிலில் படுத்துவிட்டார். சிறிது நேரத்தில் நன்கு உறங்கிவிட்டதை அவரின் மெல்லிய குறட்டை ஒலி தெரியப்படுத்தியது.

ராஜகுமாரி வரிசையாகப் பல பாடல்களைப் பாடிக்கொண்டே இருந்தார்.

திடீரென ராஜகுமாரி, ‘தந்தை தாயிருந்தால் உலகத்தில் உமக்கிந்தத் தாழ்வெல்லாம் வருமோ ஐயா’ என்ற கீர்த்தனையைப் பாட ஆரம்பித்தார்.

அந்தப் பாடலில் சிவபெருமான் வாங்கிய அடிகளையும் வசைகளையும் பற்றி கவிஞர் எழுதியிருந்தார். பாடல் முடிந்ததும், யோகி மெதுவாகக் கண்விழித்து எழுந்தார்.

“முருகேசா, இந்தப் பாடலின் அர்த்தம் என்ன?”

“இது உங்கள் கதைதான் ஸ்வாமி.”

முருகேசன் தழுதழுத்த குரலில் சொன்னார்.

“ஓஹோ” என்றவாறே யோகி மீண்டும் படுத்துக்கொண்டார்…..

……………………………………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சாது யோகி ராம் சூரத் குமார் …. ஒரு அனுபவம் … !!!

  1. agni's avatar agni சொல்கிறார்:

    நிஜமான சாமியாரா இல்லை ….

agni -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி