“ஹிப்னாடிஸம் ” ……. !!!

………………………………………….

……………………………………………..

………………………………………….

ஹிப்னாடிஸம் என்றால் என்ன:

இது ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்தி, சுற்றியுள்ள மற்ற விஷயங்களைப் புறக்கணிக்க வைக்கும் ஒரு நிலை.
இதனை “அறிதுயில் நிலை” என்றும் அழைப்பர்.

மன அழுத்தத்தில் இருப்பவர்களின் மனதை ஆசுவாசப்படுத்தி, ஓய்வு நிலைக்கு கொண்டு வர உதவும்.

ஹிப்னாடிஸம் எவ்வாறு செயல்படுகிறது:
ஹிப்னாடிஸத்தின் போது, ​​ஒரு நபர் ஹிப்னாட்டிஸ்ட் சொல்வதைக் கட்டளையாக ஏற்று, அதன்படி செயல்படும் தன்மை உடையவராக ஆகிவிடுவார்.

ஹிப்னாடிஸம் பலன்கள்:
மன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
சில உளவியல் சிக்கல்களுக்குத் தீர்வு காண உதவுகிறது.

இதனைப் பாசிட்டிவ் போஸ்ட் ஹிப்னாடிக் சஜஷன் (Positive Post Hypnotic Suggestions) என்று கூறுவார்கள். ஆழ்துயில் நிலையில் தேவையற்ற அச்சங்களைப் போக்கி நேர்மறையான எண்ணங்களை விதைக்கும் பிரிந்துரைகளை அளிப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது.

நமது மனதை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று வெளிமனம் (Conscious Mind) மற்றொன்று உள்மனம் (Subconscious Mind). இந்த உள்மனதில் நமது சிறுவயதில் இருந்து நடந்த, உணர்வுகள் அடிப்படையிலான எல்லாமும் சேமிக்கப்பட்டிருக்கும்.

உதாரணமாக, ஒருவரை அவரது 4 வயதில் ஒரு நாய் கடித்திருந்தால், அவருக்கு நாய்கள் தொடர்பான அச்சம் அவரது வாழ்நாள் முழுவதிலும் தொடரும் வாய்ப்புண்டு.

ஹிப்னோதெரபியைப் பயன்படுத்தி அவரது உணர்வுகளை, மனநிலையை, நம்மால் மாற்றி அமைக்க முடியும். ஹிப்னாடிஸத்தில் துயில் நிலை வழியாக அவரை அவரது குழந்தைப் பருவத்துக்குக் கொண்டு சென்று, நான்கு வயதில் அவருக்கு நடந்த அந்த நிகழ்ச்சியை மீட்டெடுத்து, நாய்கள் குறித்த அச்சத்தை மாற்றி அமைக்க முடியும்.

இந்த சிகிச்சைக்குப்பிறகு அவர் நாய்களைக் கண்டு அஞ்ச மாட்டார்…

………………………………….

ஹிப்னாடிசம் தோன்றிய வரலாறு –

……………………..

நவம்பர் 13-1841

நவீன ஹிப்னாட்டிசத்தின் தந்தை என்று குறிப்பிடப்படும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ‘ஜெண்ட்ல்மேன் சயின்ட்டிஸ்ட்’ ஜேம்ஸ் ப்ரெய்ட், ‘அனிமல் மேக்னெட்டிசம்’ என்பதன் செயல்முறை விளக்கத்தை தன்முறையாகக் கண்ட நாள்

பல்கலைக்கழகங்கள், அரசுத் துறை அல்லது நிறுவனங்கள் அல்லது கார்ப்பரேட் நிதியுதவி போன்றவையின்றி, யாரையும் சாராமல் ஆய்வுகள் மேற்கொண்ட சுதந்திரமான ஆய்வாளர்கள், ஜெண்ட்ல்மேன் சயிண்ட்டிஸ்ட் என்றழைக்கப்பட்டனர்.

எல்லா உயிரினங்களிலும் உணர முடியாத ஓர் நேர்மறை சக்தி இருப்பதாகவும், அதை சிகிச்சை உள்ளிட்டவற்றிற்குப் பயன்படுத்தலாம் என்றும் நம்பிய ஜெர்மானிய மருத்துவர் ஃப்ரேன்ஸ் மெஸ்மெர், அதற்கு ‘அனிமல் மேக்னெட்டிசம்’ என்று பெயரிட்டார்.

இவர், 1774இல் ஒரு பெண் ஹிஸ்டீரியா நோயாளியை இரும்பு கலந்த கலவையொன்றைக் குடிக்கச்செய்து, அவரது உடலில் பல காந்தங்களை வைத்து ஒரு செயற்கை அலையை உருவாக்கினார். உடலில் இனம்புரியாத ஏதோ பாய்ந்ததாகவும், பல மணி நேரத்துக்கு அவரது நோயிலிருந்து விடுவித்ததாகவும் அந்த நோயாளி குறிப்பிட்டாலும், காந்தங்களால் அது நிகழ்ந்ததாக மெஸ்மெர் நம்பவில்லை.

விரைவிலேயே இந்தச் சிகிச்சையில் காந்தங்களைப் பயன்படுத்துவதை அவர் நிறுத்திவிட்டாலும், அனிமல் மேக்னெட்டிசம் என்றே அவர் அழைத்த பண்புதான் அவர் பெயராலேயே மெஸ்மெரிசம்(மெஸ்மெர்+இசம்) என்றழைக்கப்படுகிறது.

இதைக்கொண்டு சிசிச்சையளிப்பவர்கள் மேக்னெட்டைசர் என்றும், இதைப்பற்றிய ஆய்வு மேற்கொள்பவர்கள் மேக்னெட்டிஸ்ட் என்றும் அழைக்கப்பட்டனர்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஃப்ரெஞ்ச் மேக்னெட்டைசர் சார்லஸ் லாஃபோன்ட்டைனின் செயல்முறை விளக்கத்தைக்காண அழைக்கப்பட்ட போதுதான் ப்ரெய்ட் இதைக் கண்டார். லாஃபோன்ட்டைனின் மேலும் இரு செயல்முறை விளக்கங்களின்போது மேக்னெட்டைஸ் செய்யப்பட்டவர்களின் கண், கண்ணிமை ஆகியவற்றைச் சோதித்த ப்ரெய்ட், அவர்கள் வேறொரு நிலையிலிருப்பதை உணர்ந்தார்.

தன்னையே செல்ஃப் அல்லது ஆட்டோ-ஹிப்னாட்டைஸ் செய்து மேலும் ஆய்வுகளை மேற்கொண்ட ப்ரெய்ட், அந்த விளைவுகளுக்கும் காந்தத்திற்கும் தொடர்பில்லை என்றும், அது உளம் சார்ந்த உடலியல் என்பதையும் கண்டறிந்தார்.

ஹிப்னாட்டிசம், ஹிப்னோசிஸ் ஆகிய சொற்கள் ஃப்ரெஞ்ச் மேக்னெட்டைசரான கியூவில்லர்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டிருந்தாலும், ப்ரெய்டாலேயே அவை புழக்கத்துக்கு வந்தன.

தூக்கம் என்ற பொருளுடைய பண்டைய கிரேக்க மொழிச்சொல்லான ஹிப்னோஸ் என்பது, ஓசிஸ் சேர்க்கப்பட்டு ஹிப்னோசிஸ் என்றாகும்போது தூங்கச்செய்தல் என்ற பொருளைத்தருவதால் அதிலிருந்தே இச்சொற்கள் உருவாயின.

சிகிச்சைக்காக ஹிப்னாட்டிசத்தைப் பயன்படுத்தும் ஹிப்னோதெரபி என்பதை முதன்முதலில் செய்தவரும் ப்ரெய்ட்தான்…!!!

………………………………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக