‎ லா.ச.ரா.’வின் கடைசி நாட்கள் ….

……………………………………………………………..

………………………………………………………………..

……………………………………………………………..

………………………………………………………………..‎

‎திருமதி லா.ச.ராவின் நினைவுக்குறிப்பு……..

( இலக்கியப்பீடத்தில் தொடராகவும் விஜயாபதிப்பகத்தின் புத்தகமாகவும்

வந்ததிலிருந்து அம்மாவின் நினைவு ….)

……………………………………………..

‎‎அக்டோபர் 25 , 2007,

‎நான் குளித்து உடைமாற்றி டி.விக்கு எதிரே சோபாவில் அமர்ந்திருக்க, அவர் வாக்கரைப் பிடித்திருந்த கை நடுங்கிற்று.

‎”சந்தோஷமாயிருக்கையா?”

‎”ஏன்? என் சந்தோஷத்துக்கென்ன குறைச்சல்?”

‎அடுத்த அரைமணி நேரம் இருவரிடையே‎யும் பேச்சு இல்லை, மூச்சு இருந்தது….

‎அவர் நுட்பமான விஷயங்களை பேசுமுன் மனதில் ரிகர்சல் ஓடும்.( என்று நினைக்கிறேன்).

காயத்ரியும் ஸ்ரீகாந்தும் அருணாச்சலமும் உட்கார்ந்ததும் அதற்கு ‎காத்திருந்ததைப் போல ஆரம்பித்தார்.

‎”குறிப்பிட்ட ஒத்தருக்காகவோ, குறிப்பிட்ட விஷயத்துக்காகவோ சொல்லலை பொதுவா சொல்றேன். நான் இந்த வாரம் ‎தாண்டினால் ஜாஸ்த்தி. ஆட்டம் க்ளோஸ்ன்னு சொல்லவந்தேன்”‎

கல்லு மாதிரி இருந்துண்டு பேச்சைப் பாரு. மனசைத் தாண்டி நெத்தியில குங்குமத்துக்கு அடியில விர்ர்ர்ர்.

‎……………

‎அக்டோபர் 26 வெள்ளி.

நேத்து நைட்டு ரொம்ப முடியலைன்னு ஆஸ்பத்திரியில சேத்ததுக்கும் இவர் பேசினதுக்கும் ஏதோ கனெக்‌ஷன் இருந்தது. சாயங்காலம் கண்ணா, சேகர் வந்தாச்சு .ஐசியூல படுத்துண்டு “பயந்துட்டேளா” ன்னு கேட்டார்.

‎………………………..

அக்டோபர் 27 சனி.

‎இன்றும் ஐசியூ வாசம். நார்மலாகத்தான் பேசிண்டிருந்தார். இன்னிக்கு நான் அவரைப்பாக்க போகலை. அவரை ஆஸ்பத்ரியில் பாத்ததே இல்லை. ஒண்ணு புரிஞ்சது…. ‎ஆத்துக் கட்டிலும் ஆஸ்பத்ரி கட்டிலும் ஒண்ணு இல்லை.

‎……………..

‎அக்டோபர் 28 ஞாயிறு.

‎இன்று பார்க்க தெளிவாயும் சுத்தமாயுமிருந்தார். நுழைந்ததுமே ஒரு நர்ஸ் “, தாத்தா சூப்பராய்ப் பேசறாரும்மா. வீட்லயும் இப்படித்தான் தமாஷாயிருப்பாரா?”

‎” நான் ஆஸ்பத்ரிக்கு வாழ்நாளுல 3 ஆபரேஷனுக்கு அப்பறமா இப்பத்தான் வந்திருக்கேன். சௌகரியமாத்தான் இருக்குங்கறதால இங்கே தங்கிட முடியாது. ‎நான் பயப்படலே .‌ ஆனா ரொம்ப பயமுறுத்திட்டேன் போல இருக்கு.‌ ‎அருணாச்சலத்தை திட்டாதீங்கோ ,அடிக்காதீங்கோ. அவன் பண்றது அக்ரமம்தான். ஆனா பெரிய ஆளா வருவாண்டா. சரி இன்னிக்கு என்ன தேதி?”

‎”இருபத்தி எட்டு”

‎”பலே ரெண்டு நாள் இருக்கா?”

(எதுக்கு…?! பொறக்கறதுக்கா? போகறதுக்கா….?)

‎……………………………..

அக்டோபர் 29 திங்கள்.

‎ராத்திரி பதினொண்ணரை.பசங்க அதிரடியாய் கூப்பிட்டார்கள்

“அம்மா வாம்மா அப்பாவை ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாம்”

‎” எதுக்குடா இப்ப நடு ராத்திரியில?”

“‎கேள்வி கேட்டு கடுப்பேத்தாதேம்மா ‎கூப்ட்டா வா. அவ்ளோதான்”

‎கிளம்பிப் போனேன். பார்த்தேன்.

‎அவரிடம் எந்த சலனமுமில்லை …. விழி‎திறக்கவில்லை….. வாய் திறக்கவில்லை. ‎மனம் திறக்கவில்லை.

‎ஸ்டூலின் மேல் கொடுத்தனுப்பின கஞ்சி அப்படியே இருந்தது.

‎என் மனசு ஒரே தீர்மானத்துக்கு வர முயல்வதைப்போல இருந்தது.

‎அரை மணிக்கு ஒருதடவை பகலும் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை இரவு வருவதைப்போல ஏதோ குழப்பமான விழிப்பும் தூக்கமுமாய் இருந்தது.

‎பசங்க ராத்திரி முழுக்க வீட்டிற்கு வராதது ‎எக்ஸ்ட்ராவா சங்கடப்படுத்திற்று.

‎………………………………….

அக்டோபர் 30 செவ்வாய்.

‎அதிகாலை ஐந்து இருக்கலாம். மசூதி கூப்பிட்டாச்சு .

தொடர்ச்சியாய் கூடத்திலிருந்த டேபிள் சோபா நாற்காலி எல்லாம் சத்தமில்லாமல் நகர்த்தும் சத்தம். நான் படுத்திருந்த அறையில் கேட்டது.பசங்களுடைய ரஹஸ்யக் குரல்கள் காயத்ரியின் அமுக்கமான விசும்பத்திமிறல். இவைகளை அதிகாலை அமைதியில் உணரவே வயிறு கலங்கி இம்சை படுத்திற்று.

‎சேகர் ரூமுக்குள் வந்து லைட்டைப் போட்டான்.

‎அது இருட்டைச் சொல்லவந்த வெளிச்சமாயிருந்தது. அவன் எதுவும் சொல்லவில்லை.

‎அதுவே சொன்னாற் போலிருந்தது.‎

‎ நாளை….

(நன்றி – சப்தரிஷி லாசரா ….)

…………………………………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.