………………………………………

……………………………………….
பிரகாஷ் ராஜை, அவரது கொள்கைகளுக்காக – சிலருக்கு பிடிக்கும்; சிலருக்கு பிடிக்காது.
ஆனால், மனதில் பட்டதை, வெட்ட வெளிச்சமாக பளிச்சென்று சொல்லி விடுகிறார் என்கிற அவரது குணம் ஒன்றே அவரை எனக்குப் பிடிக்க போதுமானது…..!!!
‘சொல்லாததும் உண்மை’ என்கிற தனது நூலில், பிரகாஷ்ராஜ் தனது வாழ்க்கையில் நடந்த பலவற்றை சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்…
அதிலிருந்து சாம்பிளுக்கு – ஒரு சில சுவாரஸ்யங்கள் மட்டும் கீழே –
…………………………………..
தன் அப்பாவை பற்றி பிரகாஷ்ராஜ் –
வாழ்நாள் முழுக்கத் தப்புப் பண்ணிட்டு கடைசி அஞ்சு நிமிஷம் நல்லவனா இருந்து செத்துப் போனவன் என் அப்பன். எப்ப வீட்டுக்கு வருவான், எப்பக் காணாமா போவான்னு யாருக்கும் தெரியாது. ராத்திரி பத்து மணிக்கு மேலே, ஏதோ ஒரு சாராயக்கடை வாசல்ல சரிஞ்சு கிடக்கிறதா அம்மாவுக்குத் தகவல் வரும். தம்பியும், தங்கச்சியும் சின்னப் பசங்க.
அசிங்கத்தைப் புரிஞ்சுக்கிற வயசு அவங்களுக்கு இல்லைன்னு என்னைத்தான் துணைக்குக் கூப்பிடுவா அம்மா. ராத்திரி ஆட்டோவுல என் அப்பனை ஏத்தி வீட்டுக்குக் கூட்டிட்டு வருவோம். அழகா இருக்கிற என் அம்மா மேல ஆட்டோக்காரனோட தப்பான பார்வை படிஞ்சது இப்போ எனக்குப் புரியுது. ஆனா, எதுவுமே தெரியாம மயங்கிக் கிடந்து, மறுநாள் ஒண்ணுமே தெரியாத மாதிரி உட்கார்ந்திருப்பான் அப்பன்.
‘உனக்கு தினம் ஒரு குவார்ட்டர், ஒரு கட்டுப் பீடி வாங்கித் தர்றேன்….நீ எங்கேயும் வேலைக்குப் போக வேண்டாம். எனக்குப் புருஷனாகக்கூட இருக்க வேண்டாம். என் புள்ளைங்களுக்கு அப்பனா வீட்லேயே இரு’னு கெஞ்சுவா அம்மா.
அவன் பிரமாதமான நடிகன். அன்பாப் பேசியே யோக்கியன்னு நம்ப வெச்சுடுவான். திடீர்னு ஒருநாள் காணாம போயிடுவான். ரெண்டுநாள் கழிச்சு, ‘உன் புருஷன் 2,000 கடன் வாங்கிட்டு ஓடிட்டான்’னு எவனாவது வந்து வீட்டு வாசல்ல நிப்பான். திட்டிக்கிட்டே அவனுக்குக் காசு கொடுத்து அனுப்பிட்டு, ஆத்திரத்திலே என் அப்பனோட பனியனைக் கிழிப்பா அம்மா.
மூணுமாசம் கழிச்சு திடுதிப்னு வந்து நிப்பான் அப்பன். அப்ப புது பனியனோட அவனை வரவேற்பாள் அம்மா. அவளோட காதலை அவன் வாழ்க்கையிலே ஒரு முறைகூடப் புரிஞ்சுக்கவே இல்லைங்கிறதாலதான் எனக்கு அவன் மேலே மரியாதை இல்லாம போச்சு.
………………..
தன் தங்கை, தம்பி, தான் – பற்றி பிரகாஷ் ராஜ்
இப்பவும் என் குடும்பத்தில் சாதி, மதம், மொழின்னு கடந்து நிக்கிறோம். என் தங்கச்சி நேசித்தது ஒரு தமிழ் கிறிஸ்டியன் பையனை! எனக்கு நண்பனா வந்தவன் வீட்டு மாப்பிள்ளை ஆகி விட்டான்.
என் தம்பி மலையாளம் பேசுகிற கிறிஸ்டியனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். தம்பியும், தங்கையும் காதல் கல்யாணம் பண்ணினது அம்மாவுக்கு அதிர்ச்சி. தன் வாழ்க்கையும் காதலில் மலர்ந்ததால், எதுவும் சொல்ல முடியாம அவங்க காதல்களை மௌனமா ஏத்துக்கிட்டா.
என் விஷயத்தில் நானும் நிச்சயம் ஷாக் தருவேன்னு நிச்சயமா அவளுக்குத் தெளிவா தெரியும். அவங்க எதிர்பார்த்த மாதிரியே என் காதல் கல்யாணம் பல ஷாக் திருப்பங்களோடு வடபழனி முருகன் கோயிலில் நடந்தது. பத்து நண்பர்கள் மட்டுமே கலந்துகிட்டாங்க. ஒரு ஓட்ல்ல லன்ச் சாப்பிட்டு வாழ்க்கையைத் தொடங்கி விட்டோம்.
என் பிள்ளைகளையும் எந்தச் சாதியும், மதமும் இல்லாத மனிதர்களாக வளர்த்துட்டு இருக்கேன்.
ரோகிணி தந்த ஷாக் –
“140 ரூபாயை எடுத்துக்கிட்டு நடிகனாகனும்னு சென்னைக்கு ஓடி வந்ததா கம்பீரமா நீங்க பேட்டி தர்றீங்க. எனக்கு உங்களைவிட நடிக்கிற கனவு அதிகமாக இருந்தது.
என்கிட்டே ஒரு லட்ச ரூபா இருந்தாலும் என்னால் தனியா அப்படிக் கிளம்பி வர முடியாது.
ஏன்னா, ஆம்பளைங்க எங்கே தூங்குறாங்க, எங்கே சாப்பிடறாங்க, என்னல்லாம் பண்றாங்கன்னு யாருக்கும் கவலை இல்லை.
ஆனா, பெண்கள் சிரிச்சாக்கூட, இந்த சமூகம் அதிகமா கவலைப்படும்.
நாங்க எப்படி சினிமாவில் ஆண்கள் மாதிரி எல்லா இடங்களையும் ஈஸியா பெற முடியும்?”னு ரோகிணி கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது…..
(எனக்கு இந்த அதிர்ச்சி இல்லவே இல்லை….. ஏனென்றால் – இதை நானே ஏற்கெனவே, சிறு வயதிலிருந்தே உணர்ந்திருக்கிறேன்…அனுபவித்திருக்கிறேன் ….)
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….