…………………………………….

…………………………………………

……………………………………….

……………………………………………….
“நிஜமான ‘நாடோடி மன்னன்’ நீ தான்…”! – கவிஞர் வாலி
மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை செவ்வனே நடத்தியதற்காகத் திருச்சியில் பெரியவர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களைத் தலைவராகக் கொண்ட புலவர் குழு திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
திருச்சி தியாகராஜ பாகவதர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டார்.
சிலம்புச் செல்வர் திரு.ம.பொ.சி அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார்கள்.
……………………………
சிலம்புச் செல்வரைக் குறித்துப் பாடிவிட்டு அண்ணன் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றிப் பாடும்போது
“செங்கோட்டை சாய்ந்தாலும்
உன் கோட்டை சாயாது” என்று பாடினேன்.
இதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்டு புலவர் பெருமக்கள் சிரக்கம்பம் செய்தார்கள்.
இதே விழாவில் திரு.எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றிப் பாராட்ட அருள்மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளும் வந்திருந்தார்கள்.
………………..
நான் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றிப் பாடும்போது –
“நீ
இந்தியாவில் பிறந்து
இலங்கைக்குச் சென்ற
இராமச்சந்திரனல்ல;
இலங்கையில் பிறந்து
இந்தியாவிற்கு வந்த
இராமச்சந்திரன் !
இருப்பினும்
என்னளவில்
இருவரும் ஒன்றே !
அந்த ராமச்சந்திரன்
சூரிய குலத்தில் வந்தவன்;
நீயும்
உதயசூரியனின்
வழித்தோன்றல் தான்.
அவனும்
ஜானகி மணாளன்;
நீயும்
ஜானகி மணாளன்.
அவனும்
பதவியாசை
பிடித்தவர்களால்
வெளியேற்றப்பட்டான்;
நீயும் அப்படியே.
அவனும்
நாடோடியாகத் திரிந்து
மன்னன் ஆனான்.
நீயும்
நாடோடி மன்னன் தான்.
அவனிடத்தில்
இருந்தது போலவே-
உன்னிடத்திலும்
‘வில் பவர்’ இருந்தது.
அவனும்
குகன் என்னும்
படகோட்டியை
குவலயம் அறியச் செய்தான்;
நீயும்
படகோட்டியின்
பெருமையைப்
பாரறியச் செய்தாய்.
நீயும்
அவனைப் போல்
மீனவ நண்பன்.
அன்று
அவன் வாக்கு
அரச கட்டளை.
இன்று
உன் வாக்கு
அரச கட்டளை.
அந்த ராமசந்திரன்
தெய்வமாக இருந்து
மனிதனாக மாறியவன்
நீ
மனிதனாக இருந்து
தெய்வமாக
மாறியவன்;
அதனால் தான்
உன்னை
இதய தெய்வம் என்கிறோம்.
ஆனால் ஒன்று
அவன்
வாலியை
அம்பு கொண்டு வீழ்த்தியவன்.
நீயோ
வாலியை
அன்பு கொண்டு வாழ்த்தியவன்… !!!
நீயே
எனக்கு
நிஜமான கருணாநிதி”
…………………………..
இப்படி நான் பாடியதும் தொந்தி குலுங்கச் சிரித்தார்கள் வாரியார் ஸ்வாமிகள்.
பிறகு வாரியார் பேசும்போது சொன்னார்கள்….
……………
“பொன்மனச் செம்மலைப் பாராட்டி ‘வாலியார்’ சொன்னதை இந்த ‘வாரியார்’ அப்படியே வழிமொழிகிறேன்”.
வாரியார் ஸ்வாமிகள் இப்படிச் சொன்னதும், அண்ணன் எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.
“இந்தப் புன்னகை என்ன விலை?” என்று ஒரு காலத்தில் நான் பாடியது என் நினைவுக்கு வந்தது.
‘( புதிய பார்வை’ இதழில் வெளிவந்த கவிஞர் வாலியின் ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்கிற தொடரிலிருந்து ஒரு பகுதி…)
…………………………………………………………………………………………………………………………………………………………………..



ARUMAI