‘ அண்ணாமலை அன்பு கூட்டம்…!!! ’ – தனிக்கட்சி தொடங்கத் தயார் ஆகிறாரா … அண்ணாமலை…..?

…………………………………………….

……………………………………………

‘அண்ணாமலை அன்பு கூட்டம்’ என்ற புதிய அமைப்பு, பா.ஜ.க கொடி வண்ணத்திலேயே உருவாக்கப் பட்டிருப்பதோடு, அதில் அமைப்பாளர்கள் நியமனம், மாநிலம் முழுக்கத் தீவிரமாக நடந்துவருவது,
தமிழக பா.ஜ.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது….!

இது ஜூனியர் விகடன் தரும் ஸ்கூப் –

………………………….

பதவிப் பறிப்பும் அதிருப்தியும்!

12.4.2025 அன்று, அண்ணாமலையிட மிருந்த தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் பதவி பறிக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள
அண்ணாமலை பல முயற்சிகளை மேற்கொண்டபோதும், அது கைகூடவில்லை.

அதன் பின்னர், மத்திய இணை அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆந்திராவில் காலியாக இருந்த மாநிலங்களவை எம்.பி இடத்தைப் பிடிக்க, சந்திரபாபு நாயுடுவின் மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ் மூலம் காய்களை நகர்த்தினார். ஆனால், அதற்கும் கட்சித் தலைமை முட்டுக்கட்டை போட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் கடும் அதிருப்தியடைந்த அண்ணாமலை, கட்சி நிகழ்வுகளைப் புறக்கணிப்பது, தன்னிச்சையாக ஆர்ப்பாட்டங்களை நடத்துவது எனத்
தனி ரூட்டில் பயணிக்கத் தொடங்கினார். அண்ணாமலை ஆதரவு ஐடி விங் மூலம் நயினாருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுவருகிறது. அவ்வப்போதுஅ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்கு எதிராகவும் அண்ணாமலை கருத்துகளைத் தெரிவித்துவருகிறார். இது கட்சிக்குள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில்தான் டெல்லியைத் தலைமையிடமாகக்கொண்டு, ‘அண்ணாமலை அன்பு கூட்டம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த அமைப்புக்கு மாநிலம், தொகுதி, மாவட்டம், தாலுகா-வாரியாக அமைப்பாளர்களை நியமனம் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன. அதற்கான விண்ணப்பப் படிவம், வாட்ஸ்அப் குழுக்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டுவருகிறது. இந்த விண்ணப்பப் படிவம், பா.ஜ.க-வின் கட்சி வண்ணத்திலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, ‘கடும் அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலை, தனிக்கட்சி தொடங்கப்போகிறார்’ என்ற பேச்சு எழுந்திருந்த நிலையில்,
அதற்கு வலு சேர்க்கும்விதமாக ‘அண்ணாமலை அன்பு கூட்ட’ செயல்பாடுகள் இருப்பதாகக் கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

‘இந்த அமைப்பில் யாரும் சேர வேண்டாம்’ என அண்ணாமலை
இதுவரை அறிக்கை வெளியிடவில்லை. எனவே, அவருக்கும் இதில்
தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது. சமீபத்தில் ஒரு பெரிய ஜோதிடரை அண்ணாமலை சந்தித்திருக்கிறார். அவர், ‘நீங்கள் தனிக்கட்சி தொடங்கினால், பெரிய எழுச்சி ஏற்படும். அதற்கான ராஜயோகம் இருக்கிறது, அடுத்த பிரதமரே நீங்கள்தான்’ எனச் சொன்னதாகத்
தகவல் வெளியாகியிருக்கிறது. எனவேதான் அண்ணாமலை இப்படியெல்லாம் செய்துவருகிறார். ஆனால், தனியாகப் போட்டியிட்டால், அண்ணாமலையால் கவுன்சிலராகக்கூட ஆக முடியாது என்பதுதான் எதார்த்த உண்மை” என்கிறார் -மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

“இது அண்ணாமலை சாருக்குத் தெரியும்..!”

இது குறித்து ‘அண்ணாமலை அன்பு கூட்டம்’ அமைப்பின் துணைத் தலைவர் ஷாஜனிடம் கேட்டபோது, “நாங்கள் 2020-ம் ஆண்டு முதல் இயங்கிவருகிறோம். இது ஒரு சமூக சேவை அமைப்பு. அன்னதானம், ரத்ததானம் எனச் செய்துவருகிறோம். தற்போது இந்த அமைப்பை என்.ஜி.ஓ-வாக மாற்றியிருக்கிறோம். இதற்குத் தமிழகத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவர்தான் தலைவராக இருக்கிறார். தமிழ்நாட்டிலுள்ள
234 சட்டமன்றத் தொகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் எங்கள்
அமைப்பில் இணைந்திருக்கிறார்கள்.

தேசியக்கொடியில் இருக்கும் வண்ணத்தைத்தான் நாங்கள் பயன் படுத்தியிருக்கிறோம். பா.ஜ.க-வுக்குப் போட்டியாக நாங்கள் செயல்பட வில்லை. இதில் அண்ணாமலை சாருக்கு எந்தத் தொடர்பும் இல்லை.
அவர் சொல்லி நாங்கள் ஆரம்பிக்கவில்லை.

ஆனால், இது அண்ணாமலை சாருக்கும் தெரியும். தமிழகத்தை
அவர் ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருக்கிறது.
நல்ல தலைவரைத் தேர்வுசெய்ய, தமிழக மக்களுக்குச் சொல்லிக்
கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் அண்ணாமலை பற்றியும், மற்ற வேட்பாளர்கள் பற்றியும்
வாக்காளர்களிடம் தெரியப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டாலும் ஈடுபடுவோம். ஆனால், அதற்கான முடிவுகளை இன்னும்
எடுக்கவில்லை” என்றார்.

…………………………………………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.