லட்சுமண ஐயர் தெரியுமா …???

…………………………

………………………….

லட்சுமண ஐயரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவர் 2011-ல் மறைந்தார். அவர் மறைவுக்கு 20 பேர் வந்திருந்தனர்.

380 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர். அனாதை போல் இறந்தது அதிர்ச்சி அளிக்கலாம். கொஞ்சம் அதிர்ச்சியை இன்னும் பாக்கி வையுங்கள்.

அப்பா ஶ்ரீனிவாச ஐயர் கோபிச்செட்டிப் பாளையத்தின் சட்டமன்ற உறுப்பினர். மகனும் கோபிச் செட்டிப் பாளைய மன்றத் தலைவராகப் பணியாற்றியவர் தான்.

இருந்தாலும் வெறும் 20 பேர் தான் அவர் மரணத்துக்கு வந்தார்கள் என்றால் ….. !!! ???

லட்சுமண ஐயர், அவர்தம் மனைவி என்று குடும்பமாக சிறையில் இருந்த நேரம் உண்டு. இப்போது போல் ஊழல் வழக்கெல்லாம் இல்லை. விடுதலைப் போராட்டத்துக்காகச் சிறை சென்றார். மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம். கோவை, பவானி, அலிப்பூர், பெல்லாரி என்று சிறை.

1931ல் காந்தியடிகள் சொன்னபடி,தன் வீட்டில் ஹரிஜனங்களைச்சேர்த்தார் லட்சுமண ஐயர். ஜாதிப்பிரஷ்டம் செய்தார்கள்.

ராஜாஜி சொன்னதற்காக நரிக்குறவர் இனச் சிறுவன் ஒருவனைச் சேர்த்துக்கொண்டு ஒரு மாணவர் விடுதி துவங்கினார். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி அது.

1944-ல் வார்தா செல்கிறார் லட்சுமண ஐயர். ‘நீ பிராமணனா?’ என்று கேட்கிறார் காந்தி. ‘விடுதலைப் போருக்குப் பலர் இருக்கிறார்கள். நீ உன் ஊருக்குப் போய் ஹரிஜன சேவை செய்’ என்று ஆணை இடுகிறார். காந்தியடிகள் சொல்படி லட்சுமண ஐயர் கோபியில் ஹரிஜனங்களுக்கான குடியிருப்புகள் கட்டுகிறார்.

1952, 56 ஆண்டுகளில் கோபி குடிநீர் திட்டம் கொண்டுவருகிறார்.

1986-ல் கோபி நகரமன்றத் தலைவராகிறார் ஐயர். மனிதக் கழிவுகளை மனிதன் அகற்றுவதைத் தடை செய்ய வழிவகுக்கிறார். உலர் கழிவறைகள் இல்லாமல், நீர் உள்ள கழிவறைளைக் கட்ட உதவுகிறார்.

கோபியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஐயர் தானமாகக் கொடுத்த இடத்தில் கட்டப்பட்டவை.

2011-ல் ஐயர் மறைந்தார். அவர் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்படவில்லை.

ஐயர் மறைந்த அன்று ஒரு தலித் பெண் மட்டும் பெரும் குரலுடன் ஒப்பாரி வைக்கிறாள். ஐயர் உதவியில் பட்டதாரியான பெண் அவள் என்று கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தன் நூலில் எழுதுகிறார்.

ஒரு மந்திரி வரவில்லை. ஒரு எம்.எல்.ஏ.வரவில்லை. ஒரு கவுன்சிலர் வரவில்லை.

ஐயர் மறைந்த அன்று மாவட்ட கலெக்டர் அந்த ஊர் வழியாகச் செல்கிறார். ஆனால் அஞ்சலி செலுத்த அவருக்கு நேரமில்லை.

ஆனால் தாசில்தார் வருகிறார். எதற்கு …,,?

தியாகிகள் மறைவு என்றால் ரூ 2000 கொடுக்குமாம் அரசு. அதைக் கொடுக்க வந்தார். அவரது குடும்பத்தினர் அதையும் ஹரிஜன சேவைக்கு வழங்கிவிட்டனர்.

380 ஏக்கருக்குச் சொந்தக்காரரான ஐயரின் மகன்களுக்கு என்று விட்டுச்சென்றது அவர் வாழ்ந்த அவரது வீடு மட்டுமே.

ஐயர் இறந்த போதுதான் யாரும் வரவில்லை. ஆனால் அவர் இருந்த போது, ராஜாஜி, பெரியார் ஈவேரா, காமராஜர் போன்றவர்கள் அவர் வீட்டிற்கு வந்து தங்கியிருக்கிறார்கள். நண்பரின் வீட்டிற்கு வராமல் இருப்பார்களா என்ன ?

உயிருடன் இருக்கும்போது, தனது 380 ஏக்கர் நிலத்தையும் ஊருக்காக தானம் கொடுத்த லட்சுமண அய்யர் –

இறந்த பின் தனது 2 கண்களையும் தானமாகக் கொடுத்துவிட்டார்.. !!!

ஒரு பரிதாபம் என்னவென்றால், தன் வாழ்நாள் முழுவதும் ஜாதி வித்தியாசம் பார்க்ககூடாது என்று சொல்லி வாழ்ந்த ஒரு பெரியவர் தன் ஜாதியின் பெயராலேயே நினைவு கூரப்படுவது தான்.

பல பத்தாண்டுகளுக்கு பாரதியையே மறந்து விட்டவர்கள் -இந்த அய்யரைப்பற்றி யெல்லாம் எங்கே நினைவில் வைத்திருக்கப்போகிறார்கள்…??? இப்படி வலைத்தளங்களின் மூலம் சொன்னால் தான் தெரியவரும் ….. ( வலைத்தளம் …)

……………………………………………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to லட்சுமண ஐயர் தெரியுமா …???

  1. Arul's avatar Arul சொல்கிறார்:

    Thank you KM sir for sharing about this great person!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.