
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் ப.ஜீவானந்தம் மீது
மிகுந்த மரியாதை வைத்திருந்தார் காமராஜர். காங்கிரஸ் கட்சியை
எதிர்த்து ஜீவா போராடிய நேரத்திலும், அவர் மீது காமராஜருடைய
அன்பு மாறவில்லை.
அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப் பள்ளியைத் திறந்து வைக்கச்
சென்றார் காமராஜர். போகும் வழியில் ஜீவாவின் வீடு இருந்தது.
அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும்
அழைத்துச் செல்வதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்து,
காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார்.
ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா.
திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக் கண்டு
ஆச்சர்யப்பட்டு
”என்ன காமராஜ்” என்று கேட்டார்.
”என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க?”
என்று ஆதங்கப்பட்டார் காமராஜர்.
உடனே ஜீவா, “”நான் மட்டுமா?
இங்கே இருக்கிற எல்லோரையும் போலத் தான் நானும் இருக்கேன்”
என்று சர்வ சாதாரணமாக சொன்னார். காமராஜரை உட்கார வைக்க ஒரு
நாற்காலி கூட இல்லாததால் இருவரும் நின்றுகொண்டே பேசினார்கள்.
”நீ அடிக்கல் வைச்ச பள்ளிக்கூடத்தைத் திறக்கணும். அதான் உன்னையும்
கூப்பிட்டுப் போக வந்தேன் என்றார் காமராஜர்.”
”காமராஜ், நீ முதலமைச்சர். நீ திறந்தா போதும்” என்று ஜீவா மறுக்க,
“அட… ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம்”
என்று அழைத்தார்.
”அப்படின்னா நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் “
என்று அனுப்பி வைத்தார்.
“கண்டிப்பாக வரணும்” என்றார் காமராஜர். விழாவுக்கு அரை மணிக்குமேல்
தாமதமாகவே வந்தார் ஜீவா.
“”என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே ” என்று காமராஜர்
உரிமையுடன் கடிந்து கொண்டார்.
உடனே ஜீவா, “நல்ல வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே
துவைச்சு காய வைச்சுக் கட்டிட்டு வர்றேன். அதான் லேட். தப்பா
நினைச்சுக்காதே… என்றார். உடனே கண்கலங்கி விட்டார் காமராஜர்.
இரு தலைவர்களையும் ஒன்றாகப் பார்த்த மக்கள் சந்தோஷமானார்கள்.
விழா நல்லபடியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை காமராஜரை
மிகவும் வாட்டியது. அதனால் ஜீவாவுக்கு தெரியாமல்,
அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.
“”ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போகமாட்டான்.
காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா, அவனைப் போல
தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன செய்யலாம்”
என்றார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர், “ஜீவாவின் மனைவி படித்தவர்.
அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா
அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும் ” என்றார்.
உடனே காமராஜர், “ரொம்ப நல்ல யோசனை. ஆனா. நான் கொடுத்தா
அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விடமாட்டான். அதனால
நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி, “வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல
ஒரு வேலை காலியாக இருக்கு’ ன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க.
உடனே நான் வேலை போட்டுத் தர்றேன். ஆனா, இந்த விஷயம்
வேறு யாருக்கும் தெரியக்கூடாது. முரடன், உடனே வேலையைவிட
வைச்சுடுவான் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அதன்படியே
ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு வேலை கொடுத்தார்
காமராஜர். அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.
காமராஜர் ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது.
நோய்வாய்ப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா.
தனக்கு முடிவு வந்துவிட்டதைத் தெரிந்து கொண்டவர், கடைசியாக
உதிர்த்த வார்த்தைகள்…”காமராஜருக்கு போன் பண்ணுங்கள் “
என்பதுதான்…. ! “
……………………..
தோழர் ஜீவா அவர்களைப்பற்றி கொஞ்சம் –
இன்றைய கம்யூனிஸ்ட்கள் கூட்டணியில் தொடர 25 கோடி வரை
ஆளும் கட்சியிலிருந்து பெறுகிறார்கள்.
இஎம்ஸ் .நம்பூதிரிபாட் அவர்களோ, தன் சொத்து முழுவதையும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எழுதி வைத்தார். நல்ல கம்யூனிஸ்ட் தலைவர்களில் திரு. நல்லகண்ணு ஐயா அவர்களை தவிர இப்போது வேறு யாரும் கண்ணில்
பட வில்லை.
தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் இன்றைய கம்யூனிஸ்டுகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவர்…. அவரது காலம், கொள்கையில் உறுதி
மிக்க காலம். அந்தக் காலத்திலும், மற்ற கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து வேறுபட்டிருந்தார் அவர்.
கம்யூனிசத்துக்கு அப்பாற்பட்ட பல நியாயமான கொள்கைகளையும் அவர் ஏற்றுக்கொண்டார். ஒடுக்குமுறைக்கு எதிரான, மக்கள் அரசியல் சார்ந்த கருத்துகளை – அவர் பலரிடமிருந்தும் பெற்றிருக்கிறார். காந்தியடிகள், பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரிடமிருந்து கூடுதலாகவே பெற்றிருந்தார்.
`தீண்டாமை’ எனும் கொடிய ஏற்றத்தாழ்வு, அவரைச் சிறு வயதில்
பெரிதும் பாதித்திருந்த்து . காந்திஜியின் ஆலயப் பிரவேசத்தில்
ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.
வ.வே.சு.ஐயரால் நிர்வாகம் செய்யப்பட்ட, சேரன்மகாதேவி குருகுலத்தில் சாதிய வேறுபாடுகளை எதிர்த்து பெரியார் போராட்டம் நடத்தினார்.
அங்கு ஆசிரியராகச் சென்ற ஜீவா, அங்கு சாதி வேற்றுமை நிலவுவதைப் பார்த்து, அங்கிருந்து வெளியேறி, பின்னர் பட்டியலின மாணவர்களுக்கான கல்விக்காக, சிராவயல் ஆசிரமம் அமைத்தார் ….. இதையறிந்து காந்திஜி அங்கு வந்தார்……
அப்போது துவங்கி – காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம் என்று பயணித்து,
பின்னர் புகழ் மிக்க கம்யூனிஸ்ட் தலைவராக வளர்ச்சி பெற்றார்.
ஒரு முறை காமராஜரை சிலர் மிகவும் எளிமையானவர் என்று புகழ்ந்த போது, ‘என்னிடம் நான்கு வேட்டிகளும், நான்கு சட்டைகளும் இருக்கின்றன. ஆனால், ஜீவாவிடம் ஒரு வேட்டியும் சட்டையும்தானே இருக்கிறது. எங்கள் இருவரில் யார் எளிமையானவர்……?’ என்று கேட்டார் காமராஜர்.
தாம்பரத்தில் ஏழை எளியவர்களுடன் புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டு வாழ்ந்து வாழ்ந்தார் ஜீவா. அப்போது, அவர் சென்னையில் வண்ணாரப்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். (எம்.எல்.ஏ.)
அவருடைய வீட்டுக்குப் பட்டா தருகிறோம் என்று அதிகாரிகள் சொன்னபோது, முடியாது என்று மறுத்துவிடுகிறார். ‘நான் மட்டும்
பட்டா பெற மாட்டேன். அந்தப் பகுதியிலுள்ள மக்கள் அனைவருக்கும்
பட்டா கிடைத்தால், நானும் பெற்றுக்கொள்கிறேன்’ என்று
அனைவருக்கும் பட்டா வாங்கிக்கொடுத்த பின்பே, அவர் பட்டாவைப் பெற்றார். அந்த இடத்திலும், ‘ஔவை பாடசாலை’ என்ற ஏழை மக்களுக்கான பள்ளி ஒன்றையும் தொடங்கினார்.
………………………………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….