…………………………..

…………………………..
மத்திய, மாநில – அரசுகளின், மக்கள் தொடர்புடைய நிறுவனங்களில், முக்கிய பொறுப்புகளில் – உதவி செய்யும் குணமுள்ள அதிகாரிகள் இருந்தால், அது சாதாரண மக்களுக்கு எந்த அளவுக்கெல்லாம் உதவியாக இருக்கும் என்பதை விளக்கும் ஒரு செய்தித் தொகுப்பு – (உதவிக்கு நன்றி …. விகடன் தளம் ….)
………………………………………………………………………..
கோயம்பேடு மார்க்கெட்டில் – தர்ப்பூசணி மொத்த வணிகம் செய்கிற முரளி சொல்கிறார்…..
”முப்பது வருஷமா கோயம்பேடு மார்க்கெட்ல பழக்கடை நடத்துறேன். நாம் சம்பாதிச்ச காசெல்லாம் வட்டி, வட்டின்னே அழிஞ்சுபோச்சு. இத்தனை வயசுல சொந்தமா ஒரு வீடு கட்டமுடியல. கடன் வாங்குறதும், வட்டி கட்டுறதுமே வாழ்க்கையாப் போச்சு.
கந்துவட்டி, வாரவட்டி, நாள் வட்டி, மீட்டர் வட்டின்னு ஏகப்பட்ட வட்டி இங்கே இருக்கு. ஒருமுறை வட்டிக்கு வாங்கிட்டா அதுல இருந்து எழுந்திருக்கவே முடியாது… இந்த ரெண்டு வருஷமாதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன்…’’
பழ வியாபாரம் செய்யும் சங்கர் –
‘‘5 லட்ச ரூபாய் கடன் வாங்கினா, 50,000 வட்டி பிடிச்சுக்கிட்டு நாலரை லட்சம்தான் தருவாங்க. தினமும் 5,000 வீதம் 100 நாளுக்குள்ள கட்டி முடிக்கணும்.
இன்னொரு டைப், ஒரு லட்சம் வாங்கினா தினமும் 800 ரூபா வட்டி கட்டணும். அசல் அப்படியே இருக்கும். ஒரு தடவை கந்துவட்டிக்குக் கடன் வாங்கிட்டா அந்தக் குழியில இருந்து மீளவே முடியாது. பலபேரு சொந்தமா வச்சிருந்த கடையவே கடனுக்கு ஈடா விட்டுட்டுப் போயிருக்காங்க. இப்போதான் வட்டிப் பிரச்னையில இருந்து தப்பிச்சிருக்கேன்…’’ என்கிறார்….
பூ மார்க்கெட் பவானி –
‘‘வாங்குன கடனைவிட அதிக வட்டி கட்டியும் இன்னும் அசல் வரலேன்னு வந்து நிப்பாங்க. எம் பையன் அப்படி கடன்ல சிக்கி கழுத்துக்கு மேல பிரச்னை வந்திடுச்சு. அதுல இருந்து மீண்டு இப்போதான் நிம்மதியா நாலு வாய் கஞ்சி குடிக்கிறோம்…’’ என்கிறார் .
பெரும்பாலும் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள், கடன் வாங்கியே பற்று-வரவு வியாபாரம் செய்கிறார்கள். யாரும் கையில் காசு வைத்துக்கொண்டு செய்வதில்லை. எல்லாம் சீசன் வியாபாரம். இரவு முதலீடு போட்டால் மறுநாள் காலை காசாகிவிடும்.
வங்கியில் கடன் வாங்கும் அளவுக்கு அவகாசமோ, ஆவணங்களோ கிடையாது. அதுதான் கந்துவட்டிக்காரர்களுக்கு வாய்ப்பு. கோயம்பேடு வியாபாரிகளுக்கு வட்டிக்குப் பணம் தரமட்டுமே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சுற்றுவார்கள். அவசரத்துக்கும் தேவைக்கும் ஏற்ப வட்டி மாறும்.
வட்டிச்சுழலில் சிக்கித் தவித்த தருணத்தில்தான், தாட்கோ நிறுவனம் ஆதி திராவிட வியாபாரிகளுக்குக் கைகொடுக்க கோயம்பேடு வந்தது.
மத்திய ஆதி திராவிடர் நிதி மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து, மிகக்குறைந்த வட்டியில் ஒரு மூலதன நிதியை மானியத்தோடு பெற்றுத் தந்து ஒரு சொசைட்டியை உருவாக்கியது.
அதில் அவர்களையே நிர்வாகிகளாக்கி 188 வியாபாரிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. இப்போது இந்தத் திட்டத்தை இந்தியா முழுமையும் செயல்படுத்தும் முனைப்பில் இறங்கியிருக்கிறது, மத்திய அரசு.
வீடில்லாத ஆதி திராவிட மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தித் தருவதோடு, வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டது தாட்கோ நிறுவனம்.
மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி மூலம் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்துகிறது இந்த நிறுவனம்.
‘‘வழக்கமா வாழ்வாதார மேம்பாட்டுக்காக தாட்கோ குறைந்த வட்டிக்குக் கடன் வழங்குறதுண்டு. ஆனா அதைத் திரும்ப வசூலிக்கிறதுல சிரமம் இருக்கும். அதுமட்டுமல்லாம, கடன் வாங்குறவங்க அதைவச்சு தங்கள் தொழிலை மேம்படுத்துறாங்களா அப்படிங்கிறதும் சந்தேகம்தான். உபயோகமா இதை மாத்தணும்னு திட்டமிட்டோம்.

கோயம்பேடுதான் முதல்ல நாங்க களமா தேர்வு செய்த இடம்.
கோயம்பேடு மார்க்கெட்ல இருக்கிற சிறு வியாபாரிகள் பெரும்பாலும் கந்து வட்டிக்குக் கடன் வாங்கித்தான் தொழில் செய்றாங்க. அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு திட்டமிட்டோம்.
தாட்கோ மேலாண் இயக்குநர் கந்தசாமி சார் நேரா மார்க்கெட் வந்து வியாபாரிகளைச் சந்திச்சுப் பேசி ஆய்வு செஞ்சார். முதற்கட்டமா, பழம், பூ, காய்கறி வியாபாரிகள் 46 பேரைத் தேர்வு பண்ணி ‘ஜெய்பீம் உழைப்பாளர் மற்றும் சிறுவியாபாரிகள் பொதுநலச் சங்கம்’னு ஒரு சொசைட்டியைப் பதிவு பண்ணினோம். ஒரு புரபோசல் தயாரிச்சு மத்திய அரசோட ஆதிதிராவிடர் நிதி மேம்பாட்டுக் கழகத்துக்கு (NSFDC) அனுப்பினோம்.
அவங்க எங்க புரபோசலைப் பார்த்துப் பாராட்டினதோட, ஒவ்வொரு வியாபாரி பேர்லயும் 1.25 லட்சம் வீதம் 57.5 லட்ச ரூபாய் கடன் தந்தாங்க. சொசைட்டி உறுப்பினர்கள் 46 பேருக்கும் அந்தத் தொகையைப் பிரிச்சுத் தந்தோம்.

பி.எம்.அஜய்னு ஒரு திட்டம் இருக்கு. ஆதிதிராவிடர்கள் வாங்குற கடன்ல 50% அல்லது 50,000 எது குறைவா இருக்கோ அந்தத் தொகையை மானியமாத் தர்றாங்க. அந்தவகையில் 50,000 ரூபாயும் மானியமா வாங்கித்தந்தோம். அதனால ஒவ்வொருத்தருக்கும் 1.75 லட்சம் கிடைச்சுச்சு.
ஆதிதிராவிடர் நிதி மேம்பாட்டுக் கழகம் கடன் தொகைக்கு 3% வட்டி வசூலிக்கிறாங்க. தாட்கோ அதை அப்படியே சொசைட்டிக்குத் தந்திடும்.
சொசைட்டி, உறுப்பினர்கள்கிட்ட இருந்து 6% வட்டி வாங்கும். கூடுதல் 3% வட்டி சொசைட்டிக்கான செலவினம் மற்றும் லாபம். அதுவும் உறுப்பினர்களா இருக்கிற வியாபாரி களுக்குத்தான் கிடைக்கும்.
வாங்கின 1.25 லட்சம் கடனை 36 தவணைகள்ல கட்டினாப் போதும். அதுவும் மாசம் 3,500 ரூபாய்தான். முதல்முறை வாங்கினவங்க இப்போ கடனைக் கட்டி முடிக்கப்போறாங்க. இவங்க வாழ்க்கையில ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பார்க்கவே சந்தோஷமா இருக்கு’’ என்கிறார் தாட்கோவின் கூடுதல் இயக்குநர் என்.சீனிவாசன்.

46 பேர் கந்துவட்டியிலிருந்து மீண்டதைப் பார்த்த மேலும் பலர், சொசைட்டியை அணுகினார்கள். அடுத்தகட்டமாக 73 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கும் 1.25 லட்சம் கடன், மானியம் 50,000 வழங்கப்பட்டது. அடுத்து, 69 பேர் தேர்வு செய்யப்பட்டு 4.5 லட்சம் கடன், 50,000 மானியம் வழங்கப்பட்டது.
‘‘இதுவரை ரூ. 5.8 கோடி கடன் வாங்கியிருக்கோம். 96 லட்சம் மானியம் மட்டுமே கிடைச்சிருக்கு.
இதுமாதிரி ஒரு வாய்ப்பு எல்லா வியாபாரிகளுக்கும் கிடைச்சா, கோயம்பேடு மார்க்கெட்டை நம்பியிருக்கிற எல்லாரோட வாழ்க்கையும் மாறிடும். வட்டி கட்டியே பலபேரு கடையை விட்டுட்டுப் போயிட்டாங்க. தாட்கோ வந்து எங்க வாழ்க்கையை மாத்தியிருக்கு…’’ என்கிறார் ஜெய்பீம் சொசைட்டியின் தலைவர் செல்வகுமார்.
இந்த சொசைட்டி ஆரம்பித்து மூன்றாண்டுகள் ஆகிறது. ஒரே ஒருவர் தவிர மற்றவர்கள் ஒரு தவணைகூட விடாமல் கட்டி முடித்திருக்கிறார்கள்.
முதுகலைப் பட்டதாரியான ஏழுமலை 25 ஆண்டுகளாக கோயம்பேட்டில் வாழைப்பழக் கடை நடத்துகிறார்.

‘‘இத்தனை வருஷத்துல இப்பத்தான் நான் நிம்மதியா இருக்கேன். எவ்வளவு வருமானம் வந்தாலும் பத்துப்பைசா சேர்த்து வைக்கமுடியாது. வட்டியாலயே அழிஞ்சிருக்கேன். கந்துவட்டியில 5 லட்சம் கடன் வாங்கி தினமும் 5,000 கட்டிக்கிட்டிருந்தேன். சொசைட்டியில இப்போ தினமும் 520 ரூபாய் கட்டினாப் போதும். மெல்ல மெல்ல அசலும் வட்டியும் சேர்ந்தே அடைஞ்சிடும்’’ என்கிறார் ஏழுமலை.
கோயம்பேட்டில் இத்திட்டம் கொடுத்த வெற்றியால் தற்போது மதுரை பரவை பூமார்க்கெட், பழவேற்காடு மீன்பிடிதளம், கண்ணகி நகர் சிறுதொழில் செய்வோர், தேனாம்பேட்டை குடிசைமாற்று வாரியக் குடியிருப்பு சிறுவணிகர்கள் வரைக்கும் இதை விரிவுபடுத்தியிருக்கிறது தாட்கோ.
இருளர்கள், பாசிமணி விற்கும் பழங்குடிகளை இணைத்து சொசைட்டி அமைத்து தேசிய பட்டியல் பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் பெற்று மானியத்தோடு வழங்கியுள்ளார்கள். இதன்மூலம் நூற்றுக்கணக்கான பழங்குடிகள் ஒருங்கிணைந்து தொழில் செய்கிறார்கள்.
எளிய மக்களுக்காக அரசு எத்தனையோ திட்டங்களை வகுக்கிறது. காலத்துக்கேற்ப கொஞ்சம் மாற்றி யோசித்தால் ஒரு திட்டம் எத்தனை மனிதர்களின் வாழ்க்கையை மாற்றி நம்பிக்கையளிக்கும் என்பதற்கு தாட்கோவின் இந்தச் சிறுவணிகக் கடன் திட்டம் சான்று….!!!
………………………………………………………………………………………………………………………………………………………………………



[…] […]