…………………………………..

……………………………………….
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் எல்லாக் கட்சிகளும் பரபரப்பாகிவிட்டன. ஆனால், பா.ம.கவோ `அப்பாவா, மகனா?’ என்ற போட்டிக்குள் சிக்கித் தவிக்கிறது. `நானே நிறுவனர், நானே தலைவர்’ என்று ராமதாஸ் விடாப்பிடியாக நிற்க,
`பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்தான் தலைவர், எனக்கே எல்லா அதிகாரமும் இருக்கிறது’ என்று அன்புமணியும் முழங்கிவருகிறார்.
யார் பக்கம் நிற்பது, யாரைப் பற்றி விமர்சிப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள் பாட்டாளி சொந்தங்கள். இந்நிலையில், பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸை அவரது தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்… (நன்றி -விகடன் தளம் …)
…………………………………………………
‘`சமீபத்தில் 60-வது திருமண விழாவைக் கொண்டாடியிருக்கிறீர்கள். உங்கள் வாழ்வின் மிக முக்கியமான விழா அது. அதில்கூட உங்கள் மகன் அன்புமணி கலந்துகொள்ளவில்லையே?’’
“இது என்னிடம் கேட்க வேண்டிய கேள்வி இல்லை. அவரைக் கேட்க வேண்டிய கேள்வி!’’
“பல ஆயிரம் கிராமங்களுக்குப் பயணித்து பா.ம.க-வை வளர்த்தீர்கள். இன்றைய நிலையைப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?”
“நீ தொடங்கிய கட்சி, நீயே தலைவராக இரு என்று மனசாட்சி சொல்லியது. கட்சியின் நிலவரமும் அதையே உணர்த்தியது. அதனால், நானே நிறுவனர், நானே தலைவர் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.’’
‘`அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. முதலில் ‘தேர்தல் வரைக்கும் நானே தலைவர்’ என்றீர்கள். பிறகு, ‘என் கடைசி மூச்சிருக்கும் வரை நான்தான் தலைவர்’ என்கிறீர்கள்… ஏன் இந்த மாற்றம்?’’
“மாற்றங்கள் வருவது இயற்கை. ‘தேர்தல் வரையும்தான் நான் தலைவர்’ என்று சொல்லும்போது, கட்சிப் பொறுப்புகளில் இருக்கிறவர்களுக்கு தேர்தல் வரைக்கும்தான் நமக்கு பொறுப்பு இருக்குமோ என்ற சந்தேகம் வந்துவிடும். அதன் பிறகு நம் நிலை என்ன என்று சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். ‘நான் இருக்கும் வரைக்கும் நீதான் மாவட்டம், நீதான் ஒன்றியம், நீதான் நகரம்’ என்று அவர்களுக்குப் புரிய வைப்பதற்காக அந்த முடிவை மாற்றிச் சொன்னேன்.’’
‘`நீங்கள் ஒருவரை நியமித்தால் அன்புமணி அவரை நீக்குகிறார். அவர் நியமித்தால் நீங்கள் நீக்குகிறீர்கள். பா.ம.கவில் இரு அணிகள் வேகமாக உருவாகி வருகின்றன. இணைப்புக்கான சாத்தியம் குறைவதாக நினைக்கிறீர்களா?’’
“மக்களுக்குச் செய்ய வேண்டிய என் கடமைகள் இன்னும் பாக்கி இருக்கிறது. அதை என் போக்கில் நான் செய்துகொண்டிருக்கிறேன்.’’
‘`நீங்கள் இருவரும் இணைய வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கும் சூழலில், நீங்கள் இருவரும் இப்படி உங்களுடைய அதிகாரத்தைக் காட்ட வேண்டிய தேவை இருக்கிறதா?’’
“அதிகாரம் என்பதும், சட்ட திட்டம் என்பதும் நாம் உருவாக்குவதுதான். வானத்திலிருந்து யாரோ உருவாக்குவதில்லை. அதனால, இப்போ எனக்கு எது பிடிக்குதோ அதைச் செய்வேன். ராமதாஸ்னா என்ன அர்த்தம்னா, ‘வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு’ என்று சொல்றவரு, செய்றவரு.’’
‘`எத்தனையோ அரசியல்வாதிகளை எதிர்த்து நீங்கள் அரசியல் செய்திருக்கிறீர்கள். இப்போது உங்கள் மகனை எதிர்த்து அரசியல் செய்யவேண்டிய சூழல் உருவாகியிருப்பதாக நினைக்கிறீர்களா?’’
(சிரிக்கிறார்) ‘‘உங்க கேள்வியே சரியில்லை. அரசியல்ல மகன், மகள், பேரன், பேத்தியெல்லாம் இருக்கக் கூடாது என்று நினைப்பவன் நான்.
என் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அரசியலுக்கு வரக் கூடாது என்று நான் செய்த சத்தியங்களை நானே மீறி என் மகனைக் கொண்டுவந்து விட்டேன். அதுதான் நான் செய்த தவறு. வி.பி.சிங்கிலிருந்து வாஜ்பாய் வரை பல பிரதமர்கள் எனக்கு நெருக்கம். நான் நினைத்திருந்தால் டெல்லியில் பெரிய பெரிய பதவிகளெல்லாம் எனக்குக் கிடைச்சிருக்கும். ஆனால், நான் அதை விரும்பவில்லை.’’
‘`அப்படி இருந்த நீங்கள் இப்போது, நானே தலைவர் என்று விடாப்பிடியாக இருக்கிறீர்களே… என்ன காரணம்?’’
“தலைவர் பதவியை நான் யார்கிட்ட போய்க் கேட்டேன்? உங்ககிட்ட கேட்டேனா… இல்லை, அவர்கிட்ட போய்க் கேட்டேனா… கட்சி மேலும் வலுப்பெறணும், தேர்தலை வலுவோட சந்திக்கணும்ங்கும்போது அது தேவைப்படுது. ‘ராமதாஸ், தலைவர் பதவியை நீ எடுத்துக்கிட்டாதான் அது சிறப்பா இருக்கும்’னு என்னுடைய மனசாட்சி சொல்லுது. அந்த மனசாட்சிக்கு மட்டும்தான் நான் பயப்படுவேன்… வேற யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்.’’
‘`எனக்குக் கட்டளையிடுங்கள் நீங்கள் சொல்வதை நான் நிறைவேற்றுகிறேன் என்கிறார் அன்புமணி. அதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?’’
‘‘இல்லவே இல்லை.’’ (வேகமாகத் தலையை ஆட்டுகிறார்!)
‘`அன்புமணி போல ஒரு தலைவர் கிடையாது என எத்தனையோ மேடைகளில் பேசிய நீங்கள், இப்போது ‘அவருக்குத் தலைமைப் பண்பே கிடையாது’ என்று சொல்வது உச்சபட்ச குற்றச்சாட்டாகத் தெரியவில்லையா?’’
“நான் அப்படிப் பேசியது கிடையாது. ‘நிறைய நல்லது செய்திருக்கிறார், விருதுகள் வாங்கியிருக்கிறார், 108 ஆம்புலன்ஸ் கொண்டு வந்தார்’னு சொல்லியிருக்கேன். ‘
இவர் மாதிரி ஒரு தலைவர் கிடையாது’ன்னு பேசியதில்லை. நீங்க தப்பா சொல்றீங்க.’’
‘`உங்களுக்குள் என்னதான் பிரச்னை?’’
‘‘என் வீட்டில் உள்ளவர்கள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று நான் செய்த சத்தியத்தை மீறி அன்புமணியை அரசியலுக்குக் கொண்டு வந்தேன். வீட்டில் உள்ள பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொன்னேன். ஆனால், அதை மீறி அவர் செளமியாவைக் கொண்டு வந்துவிட்டார். அதுமட்டுமல்ல,
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரியில் அன்புமணி போட்டியிடுவதாகச் சொன்னார். வேட்பாளர் பட்டியலைப் பார்த்தால் செளமியா பெயர் இருக்கிறது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னிடம் உண்மையைச் சொல்லியிருக்கலாம். பதினைந்து நாள்களுக்கு முன்பாவது சொல்லியிருக்கலாம். ஏன் பொய் சொல்லணும்.
பிறகு இளைஞரணி பொறுப்புக்குத் தமிழ்க்குமரனைக் கொண்டு வரலாம் என்று நினைத்தேன், அதையும் அவர் ஏத்துக்கல. சரி, முகுந்தனைக் கொண்டுவந்தால் அவருக்கு உதவியாக இருக்கும் என நினைத்தேன், அதையும் அவர் ஏத்துக்கலை. அந்த அறிவிப்பு வெளியிட்டபோது அவர் எப்படி நடந்துகொண்டார்னு நீங்க எல்லோரும் பார்த்திருப்பீங்களே…”
‘`உங்கள் இருவருக்கும் இடையில் நடக்கிற இந்த மோதலில் பா.ம.க-வை நம்பி வந்த தொண்டர்கள் பலர் கையறு நிலையில் இருக்கிறார்களே… அவர்களைப் பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா?’’
“அவர் பக்கம் இருப்பவர்கள் இப்போ என்ன நினைக்கிறார்கள் என்றால், ‘ஐயா பின்னாலேயே போயிருக்கலாம் போலேயே… ரெண்டும் கெட்டான் நிலையில் இருக்கிறோமே’ என்று நினைக்கிறார்கள். சிலபேர் திரும்பி என்னிடமே வருகிறார்கள்.’’
‘`உங்கள் பக்கம் இருப்பவர்களுக்குத்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்பதன் மூலம் அன்புமணிக்கு நெருக்கடியை உருவாக்குகிறீர்களா?’’
“நெருக்கடி கொடுக்கணும்னு அவசியம் கிடையாது. என்னை நம்பி வந்தவங்க, ஆரம்பத்திலிருந்து இந்தக் கட்சிக்காக உழைச்சவங்க. கிளைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர்னு வளர்ந்து வந்த அவங்களுக்கு வர்ற சட்டமன்றத் தேர்தல்ல எம்.எல்.ஏ சீட் கொடுக்கலாம்னு நினைக்கிறேன். கூட்டணி ஆட்சி அமைந்தால் அவர்கள் அமைச்சராவதற்கும் வாய்ப்பு இருக்கு.’’

‘`கூட்டணி ஆட்சி பற்றிதான் தமிழக அரசியலில் பேசுபொருளாக இருக்கிறது. அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?’’
“கூட்டணி ஆட்சி என்பதை நிபந்தனையாக வைத்துத் தேர்தலை சந்திக்கலாம், சந்திக்காமலும் போகலாம். ஆனால், அதை யெல்லாம் பொதுக்குழுவில்தான் முடிவு செய்யணும்.’’
‘`தமிழகத்தின் நலனுக்கும், பா.ம.க-வின் நலனுக்கும் 2026-ல் பா.ம.க எந்தக் கட்சியோடு கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?’’
“நீங்க சொல்லுங்களேன்… உங்க யோசனையா நான் எடுத்துக்கிறேன். என் காதுல ரகசியமா சொல்லுங்க! (சிரிக்கிறார்). கூட்டணி பற்றியெல்லாம் இப்போது சொல்ல முடியாது.’’
‘`உங்கள் இருவரின் அடுத்தடுத்த செயல்பாடுகளைப் பார்த்தால் இருவரும் தனி அணியாகப் பிரிந்து தேர்தலைச் சந்திப்பதற்குக்கூட வாய்ப்பிருப்பதாகத் தோன்றுகிறது. ஒருவேளை அப்படி நடந்தால் உங்களுடைய தேர்தல் உத்தி என்னவாக இருக்கும்?’’
‘‘தேர்தல் வரும், ஓட்டு போடுவேன்.’’ (சிரிக்கிறார்!)
‘`அப்படி தனி அணியாக இருப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா?’’
“தனி அணி, ரெண்டாவது அணி என்பதெல்லாம் கிடையாது. அங்கேயிருப்பவர்கள் எல்லாம் நான் வளர்த்த பிள்ளைகள்தான். எல்லோரும் என்னிடம் வந்துவிடுவார்கள்.’’
‘`அன்புமணியுடன் இருப்பவர்கள் உங்களிடம் திரும்பி வந்தால், அவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவீர்களா?’’
“அதற்கான வாய்ப்பு குறைவு. கட்சியில சேர்த்துக்குவேன். ஏன்னா, அவர்கள் தெரியாமல் அங்கே போனவங்க. ‘ஐயா எப்படி நம்மை வளர்த்தாரு, பொறுப்பு கொடுத்தாரு, பாராட்டினாரு… ஆனா, அதையெல்லாம் மறந்துட்டு ஐயாவுக்கு துரோகம் செஞ்சுட்டோமே’ன்னு இங்க வரும்போது மன்னிச்சு அவங்களைச் சேர்த்துக்குவேன்.’’
‘`அவர்களை மன்னிக்கத் தயாராக இருக்கிறீர்கள். ஆனால், அன்புமணி உங்களிடம் பொதுமேடையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறார். அதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?’’
“மன்னிப்பு கேட்டுட்டு கடைசியில ‘தலைவர் பதவி எனக்கு வேணும்’னு சொல்றாரே… அங்கதான சிக்கல் வருது.
‘தலைவர் பதவி இல்லைன்னாலும் சாதாரண உறுப்பினரா இருந்துகூட நான் பணியாற்றத் தயார்’னு சொல்லியிருந்தா பரவாயில்லை. ஆனா, அவர் அப்படிச் சொல்லலையே…
இத்தனைக்கும் அவருக்கு சாதாரண பொறுப்பு கொடுக்கலை. செயல் தலைவர்ங்கிற பொறுப்பு கொடுத்திருக்கேன். மு.க.ஸ்டாலின் செயல் தலைவரா இருந்து, தலைவராகி, இன்னைக்கு முதலமைச்சர் ஆகியிருக்கிறார். அவர் எப்படி கலைஞர் சொல்படி நடந்தாரோ, அதேபோல என் கட்டளையை மதித்து அன்புமணியை நடக்கச் சொல்கிறேன். இதில் என்ன தப்பு?’’
“ஸ்டாலின் செயல் தலைவராக இருந்து தலைவரானவர். ஆனால், நீங்கள் அன்புமணியைத் தலைவராக்கிவிட்டு, இப்போது செயல் தலைவர் என்றால், அதை அவர் பதவி இறக்கமாகப் பார்க்க மாட்டாரா… எப்படி ஏற்றுக்கொள்வார்?’’
“யாரையும் டவுன் செய்வது என்னுடைய நோக்கமல்ல, அப்படிச் செய்தால் கட்சிக்குக் கெட்டதுதானே… நான் அதை அப்படி நினைக்கவில்லை. கட்சிக்காரர் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் திட்டுவேன். ஆனால், அவர் கொஞ்ச தூரம் சென்றதும் போன் செய்து, `சீட் பெல்ட் போட்டியா’ன்னு கேட்பேன் என்னுடைய கோபம் அவ்வளவுதான்!’’
‘‘உங்களை பல வருடங்களாகப் பின் தொடர்கிற சீனியர்களுக்கு உங்களைப் பற்றித் தெரியும். இப்போது உள்ள வன்னியர் சமுதாயத்து இளைஞர்கள் உங்களுக்கு இடையில் நடக்கும் பிரச்னையை எப்படிப் பார்ப்பார்கள்?”
“இன்று இரவு ஓர் ஆயிரம் இளைஞர்கள் வரணும்னு சொன்னா போதும், இங்கே ஆயிரம் பேர் கூடுவார்கள். நீங்கள் எண்ணிக்கொள்ளலாம்.’’
“ராம் விலாஸ் பஸ்வான் கட்சி, சிவசேனா என்று பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்த பல கட்சிகளில் பிளவு ஏற்பட்டுள்ளது. இப்போது பா.ம.க-வையும் அதனுடன் ஒப்பிட்டு ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
‘‘ஊடகங்கள் என்ன விமர்சனம் வேண்டுமானாலும் வைப்பார்கள், எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். அதேபோல நல்லது சொல்கிறவர்களும் நிறையபேர் இருக்கிறார்கள்!’’
‘`அரசியலில் அடுத்த தலைமுறையினர் வரும்போது செயல்பாடுகள், கொள்கைகளில் மாற்றம் ஏற்படும். உங்களுக்கும் அன்புமணிக்குமான இந்த விரிசலுக்கு அப்படிப்பட்ட தலைமுறை இடைவெளியும் காரணம் என நினைக்கிறீர்களா?’’
“அதெல்லாம் ஒன்றுமில்லை. மாற்றங்கள் நிகழ்வது இயற்கை. முன்பு ரேடியோவில் எல்லாத்தையும் கேட்டுக்கொண்டிருந்தோம், இன்று செல்போனில் உலகம் அடங்கியிருக்கிறது. அதை ஒரு காரணமாகப் பார்க்கவில்லை.”
“விஜய்யின் அரசியல் வருகை வன்னியர்கள் மத்தியில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்?”
“அது எனக்குத் தெரியலையே… ஓட்டு போட்டால்தான் தெரியும்.”
‘`உங்கள் தரப்பில் உள்ளவர்கள் ‘அன்புமணி அருகில் சில சதிகாரர்கள் இருக்கிறார்கள்’ என்று சொல்வதும், அன்புமணி தரப்பில் உள்ளவர்கள் ‘உங்களை ஒரு சிலர் இயக்குகிறார்கள்’ என்று சொல்வதும் அதிகரித்திருக்கிறதே..?’’
“பதவிக்காக அலையும் சில பேர் அப்படிக் கிளப்பிவிடுகிறார்கள்.’’
“அன்புமணி தி.மு.க ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கிறார். உங்களுடைய கருத்து என்ன? தி.மு.க ஆட்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
“என்னைப் பொறுத்தவரையில் எந்தக் கட்சியையும், எந்த ஆட்சியையும் நான் குறை சொல்ல மாட்டேன். நான் குறை சொன்னால் அவங்க என்னைத் திட்டுவார்கள். எதுக்கு குறைசொல்லி, திட்டு வாங்கிக்கொள்ள வேண்டும்?’’
‘`பா.ம.க இன்னமும் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா?’’
(சிரிக்கிறார் ) “நேற்று ஆயிரம் பேர் வந்தாங்க, இன்னைக்கு ஆயிரம் பேர் வர்றாங்க… இதையெல்லாம் பார்த்துவிட்டும் யார் கட்டுப்பாட்டில் பா.ம.க இருக்கிறது என்று கேட்டால் என்ன சொல்வது?’’
“அன்புமணிக்கும் நிறைய கூட்டம் கூடுகிறதே…’’
“அப்படியா… ஐயய்யோ… எனக்குத் தெரியலையே!”
‘`அன்புமணியைக் கட்சியை விட்டு நீக்கும் எண்ணம் இருக்கிறதா?’’
“எந்தப் பைத்தியக்காரன் அப்படிச் செய்வான்? எந்த முரடனாவது, முட்டாளாவது இந்த வேலையைச் செய்வானா? அப்படிச் செய்தால் இந்த உலகம் என்னை எப்படிப் பழிக்கும்! இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டதே தவறு.’’
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….