70 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு அற்புதமான, இமயம், கங்கைக்கரை யாத்ரிகனின் கதை …..

…………………………………………..

…………………………………………….

……………………………………………………………


மலையேற்ற தருணங்களில் நான் கவனித்தது ஒன்று உண்டு. (2000 கு பிறகான உலகை சேர்ந்த பெண்கள் இதில் சேத்தி இல்லை)  கும்பல் கும்பலாக மணிக்கணக்காக மலையேறும் குடும்பங்களில், சில குறிப்பிட்ட செங்குத்து மலை ஏற்றம் வருகையில், குறிப்பிட்ட சில இல்லத்து சூழலில் வளர்ந்த பெண்கள், அப்படியே துவண்டு அமர்ந்து சூழல் குறித்த பிரக்ஞயே இன்றி உடைந்து அழுவார்கள். நிச்சயம் உடல் வலி காரணம் அல்ல. சுற்றி எவர் இருந்தாலும், எவராலும் ஆறுதல் கூற முடியாத, மானுடம் எவ்வகையிலும் அணுக இயலாத, புலன்கள் அறியா, கடக்க இயலா அகழி ஒன்றுக்கு அப்பால் இருந்து அழுவார்கள். தன்னைப் படைத்த முகமறியா ஆற்றல் வசம் ஏன் ஏன் என்று விடைகள் அற்ற கேள்விகளை மனதுக்குள் கேட்டு, வாய்விட்டு அரற்றுவார்கள். பலரைக் கண்டிக்கிறேன். தாய், சகோதரி, தோழி, விதிவிலக்கே இல்லை. தகிக்கும் அவர்களை தணிக்க, அவர்களுக்கென அந்த மலை மேல் இருந்து இறங்கி வர எந்த தெய்வமும்  இல்லை என்பதை அதிர்ச்சியோடு பார்த்து நின்றிருக்கிறேன்.

தனது மலையேற்ற தருணம் ஒன்றில், இப்படி ஒரு பெண்ணைத்தான் சந்திக்கிறார் பிரபோத் குமார் சன்யால். “இதுக்குத்தானே இங்க வந்த, கிடந்து சாவு”  என்று மனதுக்குள் சொல்லியபடி அலட்சியமாக அவளைக் கடந்து நடக்கிறார் சன்யால். (சில சமயம்) இப்படிப்பட்ட குணநலம் கொண்ட சந்யால் அவர்களின், கேதார்நாத் பயண அனுபவங்கள் குறித்த நூலே, யாத்திரிகன் எனும் தலைப்பில் த.நா.குமாரசுவாமி அவர்களின் தமிழ் மொழி பெயர்ப்பில்,  அகரம் வெளியீடான, (வங்க மொழியில் மகா பிரஸ்தான் பாதே என்ற பெயரில் வெளியான) பயண அனுபவ நூல்.

இது நுட்பமும் விரிவும் கொண்ட சித்தரிப்புகளை உடைய நூல் இல்லை என்றாலும், மினிமலிஸ அழகியல் போல எளிய கோட்டு சித்திரமாக இந்த நூல் தீட்டிக்காட்டும் சித்திரங்களில் முதன்மையானது இந்த நூல் கொண்ட காலம். கிட்டத்தட்ட நூற்றாண்டுக்கு முன்பான பயண நூல்.

1935  ஆம் ஆண்டின் வைகாசி மாதத்தில் சன்யால், பிரிட்டிஷ் இந்தியாவில் ஹரிதுவார் துவங்கி ரிஷிகேஷ் வழியே கேதார்நாத் வரை  சென்று, மீண்டும் உக்கி மடம் வந்து, அங்கிருந்து பத்ரிநாத் வரை நடை பயணமாகவே யாத்திரை போய்விட்டு, ரயில் வழியே காசி  திரும்பும் ஒரு மாத காலம் மீது அமைந்த இந்த நூலில், பத்து அணாவுக்கு பேருந்தில் ஹரித்வாரிலிருந்து ரிஷிகேஷ் போக முடிகிறது.

எட்டு அனாவுக்கு கௌரி குண்டுல் இருந்து டவாலி கிடைக்கிறது. எல்லா சிறிய மலை நகரங்களிலும் தபாலாபீஸ், ஆஸ்பத்திரி இருக்கிறது. படிக்க தினசரிகள் கிடைக்கிறது. ஆசிரியர் வாங்கி வாசிக்கும் லாகூர் ட்ரிப்யுன் செய்தித்தாளில், பிரிட்டன் ஆட்சி செய்யும் எல்லா இடத்திலும் தேனாறும் பாலாறும் ஓடுகிறது.

இந்தியாவில் மட்டும் இந்த நல்லாட்சியை ஒப்புக் கொள்ளாத காந்தி எதன் பொருட்டோ சிறையில் இருக்கிறார். மலை கிராமங்கள் தோறும் அந்த கிராமத்தின் குழந்தைகள் விளையாட்டாகவும் தொழிலாகவும் பிச்சை எடுக்கிறார்கள். முக்கியமான சில இடங்களில், வழியும் அருவியை இடை மறித்து, அந்த ஆற்றல் வழியே சுழலும் மரச்சக்கரத்தின் அச்சு உருவாக்கும் சுழற்சிகள் கொண்டு, கோதுமை மாவு அரைக்கிறார்கள். இப்போது இருப்பதைவிட எண்ணிறந்த சத்திரங்கள் தன்னார்வலர்களால் நடத்தப்படுகிறது.

எளிய கல் கட்டுமானத்தாலும் அங்கே கிடைக்கும் மரங்களாலும் அமைந்த அந்த சத்திரங்களில், எப்போதும் பயணிகளுக்கு குறைந்த விலையில் சப்பாத்தியும் கிழங்கும், இரவு தங்கினால் போர்த்திக் கொள்ள வாடகைக்கு கம்பளியும் கிடைக்கிறது. அப்படிப்பட்ட சத்திரங்கள் ஒன்றின் பெயர் காந்தி சத்திரம்.

ஹரித்வாரில் இருந்து காசிக்கு இரண்டு  ரயில்கள் மாறி பயணிக்க வேண்டி இருக்கிறது. ரயில்கள் குட்டியாக இருக்கிறது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் கிட்டத்தட்ட ஒரு நாள் காத்திருக்க வேண்டி இருக்கிறது. அப்போதும் காசிக்கான ரயில் மக்களால் பிதுங்கி வழிகிறது.

இப்படி சின்ன சின்ன செய்திகள் வழியே அந்த காலத்தின் உத்தரகாண்டின் புற சூழல் எவ்வாறு இருந்திருக்கும் என்று இந்த நூல் வழியே ஊகிப்பது ஒரு சுவாரசியமான அனுபவம்.

இரண்டாவது இந்த நூல் சித்தரித்துக் காட்டும் பருவ சூழலும் நிலமும் அதில் வாழும் மக்கள் சமூகமும், பொருளாதார அடுக்குகள் எப்படி கட்டமைக்கப்படுகிறது, இந்த மலை நிலத்தின் ஒவ்வொரு சமூகமும் என்னென்ன தொழில் செய்து, ஒன்றுக்குள் ஒன்றென கையில் பிடித்திருக்கும் சீட்டு கட்டு போல எவ்விதம் அமைகிறது, விவசாயம் துவங்கி விறகு கட்டு விற்பது வரை, மளிகை பொருட்கள் துவங்கி மருந்து வரை, அந்த மலையில் மட்டுமே கிடைக்கும் தாதுபுஷ்டி பிசின் துவங்கி கஞ்சா பாங்கு உள்ளிட்டு, பூஜை அறையில் சாமரமாக வைக்கப்படும்   பிடி போட்டு அலங்கரித்த அந்த நிலத்தை சேர்ந்த மாட்டு வால் வரை அந்த மலை நிலமெங்கும் என்னென்ன விற்கப்படுகிறது,

ஒவ்வொரு பருவ சூழலிலும் அங்குள்ள மக்கள் எங்கே இடம் பெயர்வார்கள் அப்போது எவ்விதம் வாழ்வார்கள், என்றெல்லாம் இந்த நூல் அங்கங்கே சிற்சில குறிப்புகளை தந்து செல்கிறது. அந்த குறிப்புகளின் உச்சம் இந்த கேதார்நாத் கோயிலிலோ பத்ரிநாத் கோயிலிலோ அதை மையமாகக் கொண்ட சுற்றுப்புறத்தில் எங்கும் தீண்டாமை என்ற நிலை இல்லை என்பதை ஆசிரியர் சுட்டும் இடம்.

மூன்றாவது அம்சம் இந்த நூலில் திரண்டு வரும் ஆசிரியரின் குணநலமும் கேரக்டர் ஆர்க்கும். கிட்டத்தட்ட அந்நியன் நாவலில் வரும் கதாநாயகன் கொண்ட அதே மனநிலையும் அந்த நாவலாசிரியர் கொண்ட அதே இருத்தலியல் துயர் பார்வையும்தான் நூலாசிரியரின் குணமாக இருக்கிறது.

உயிர் பயம் சார்ந்த பதட்டங்களோடு தான் ஆசிரியர் பயணத்தையே துவங்குகிறார். எந்த வினாடியும் ஊருக்கு திரும்பி விட வேண்டும் என்ற மனநிலையில் தான் யாத்திரையின் இறுதி வரை இருக்கிறார். முதல் சத்திரத்தில் தான் கொண்டு வந்த காவி உடையை எலலாம் காட்டி
தான் ஒரு சாமியார் தான் என்று நிரூபித்து இலவச சாப்பாட்டுக்கும் இலவச தங்குமிடத்துக்கும் இடம் பிடிக்கிறார். எதற்குதான் இங்கே வந்தோமோ என்ற மனநிலையிதான் ஒவ்வொரு வினாடியையும் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறார்.

துணை இன்றி இந்த யாத்திரையை நிறைவு செய்ய முடியாது என்று பயந்து, சன்னியாசி போல தோற்றமளிக்கும் ஒருவரை அவர் இவரை மதிக்காவிட்டாலும் இவர் வம்படியாக அவரது நட்பை பெற்று அவருடன் இணைந்து கொண்டு பயணிக்கிறார். எங்கும் பிறருக்கு என காசு செலவு செய்வதில் மிக மிக கணக்காக இருக்கிறார். ஒரு இடத்தில் பணப்பையை தொலைத்து விட்டு, முற்றிலும் பீதி அடைந்து செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.

தான் எந்த சன்னியாசியை நம்பி பயணத்தை தொடர்ந்தாரோ அவரேயே சந்தேகிக்கிறார். அவரைச் சுற்றியுள்ள எல்லோரும் அவருக்கு திருடர்களாக தெரிகிறார்கள். அவரது பணப்பை மீண்டும் கிடைத்ததும் அவர் நம்பாத கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு பிறரைக் குறித்து என்னென்ன நினைத்தாரோ அதைக் குறித்து கொஞ்சமும் குற்ற உணர்வு இன்றி அடுத்த வேலையை பார்க்க போய்விடுகிறார்.

வழியில் நிகழும் எந்தச் சடங்குகள் மீதும் அவருக்கு எந்த ஈடுபாடும் இல்லை. இன்னும் கூடுதலாக ஏளனம் கூட எழுகிறது. ருத்ரப்பிரயாகையில் பெரிய அளவில் பித்ரு தர்ப்பணம் நிகழ்ந்து கொண்டிருக்கும் இடத்தை வேடிக்கை பார்த்தபடி, மேலே பித்ருலோகத்திலும் இப்போது கடுமையான பஞ்சம் போல என்று உள்ளுக்குள் நினைத்து கொள்கிறார். சுற்றி நிகழும் ஒவ்வொன்றையும் ஒரு அபத்த நிகழ்வு போலவே காண்கிறார். தான் உடல் வலியோடு ஒவ்வொரு எட்டு எடுத்து வைக்கும் போதும் இந்த வாழ்க்கையையே சபிக்கிறார்.

இப்படிப் பிணியோடு சென்று பார்க்க அங்கே என்ன இருக்கிறது என்று இத்தனை பேர் இந்தப் பாதையில் கிடந்து சாகிறார்கள் என்றே சிந்திக்கிறார். ஒரு பிராமணன் இப்படி நாஸ்திகனாக இருக்கிறாயே என்று அவருடன் கோபித்துக் கொண்டு உடன் வரும் பயணிகள் விலகிச் செல்கிறார்கள். வழியில் அடிபட்டுக் கிடக்கும் தாழ்ந்த சாதி கிழவி ஒருவளை, கிட்டத்தட்ட தெருவில் கிடந்து பிச்சை எடுத்து பணம் சேர்த்து மருத்துவமனையில் சேர்க்கிறார்.

பின்னர் இவற்றை எழுத நேர்கையில் தனது பரோபகாரம் வெளிப்படக்கூடிய இப்படிப்பட்ட ஒரு தருணத்தை தவிர்க்க முடியுமா என்ன என்று வாசகரை அப்போது கேட்கிறார். பல இடங்களில் திமிரோடு நடந்து கொள்கிறார். ஒரு இரவில் பாதை தவறி தொலைந்து போய் தனியாக நின்று பயந்து போய் சிறுவனைப் போல அழுகிறார். அனைத்துக்கும் மேலே இந்த நூலுக்குள் சப் டெக்ஸ்ட் ஆக உருவாகி வரும் நூலாசிரியர் பிரபோத் குமாரின் கேரக்டர் ஆர்க். பயணத்தில் பாதியில் ஆசிரியர் தொற்றிக்கொண்டு செல்லும் சன்யாசி, ஆசிரியர் பதற பதற அவரை விட்டுவிட்டு முன்னால் சென்று விடுகிறார்.

சரி உண்மையான சன்யாசிகள் அப்படித்தான் இருப்பார்கள் என்று ஆசிரியரும் சமாதானம் கொண்டு அடுத்த வழிகளை தேடுகிறார். பயணத்தின் முடிவில் அதே சன்யாசியை ஆசிரியர் சந்திக்க நேர்கிறது. இப்போது அந்த சன்னியாசி வேறு வழி இன்றி ஆசிரியரிடம் ஒரு உதவி கேட்கிறார், இந்தப் பயணத்தின் துவக்கத்தில் தான் ஆசிரியரின் தயக்கமெல்லாம், பயணத்தின் நிறைவில் எது எது எவ்வாறு என்று இப்போது ஆசிரியருக்கு தெரியும், எனவே சர்வ அலட்சியமாக அந்த சன்யாசியை உதறி தள்ளிவிட்டு, தனது பயணத்தை தொடர்கிறார். எவர் மீதும் எந்த பெரிய ஈடுபாடும்  அவருக்கு இருப்பதைப் போல தெரியவில்லை.

உடன் வரும் கிழவிகள் கூட்டத்தை, குளிரில் நாய்கள் போல நடுங்கிக் கொண்டிருந்தன கிழவிகள் என்று விவரிக்கிறார். அதில் ஒரு கிழவி குளிரில் நடுங்கி உறைந்து கிடக்கும் இவருக்கு தனது போர்வையை போர்த்தி விடுகிறாள். அதை அவர் ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகும் வகையில் நூல் நெடுக அவரது குண நலன் கலைடாஸ்கோப் குலுக்கியதைப் போல விதவிதமான அவரது இறுக்கமான குணநலங்களை காட்டிக் கொண்டே செல்கிறது.

நான்காவதாக ஒரு குறுநாவலை போல வடிவத்தால் கூர்மையாக அமைந்த இந்தப் பயண நூலில் வந்து கொண்டே இருக்கும் விதவிதமான குண நலன்கள் கொண்ட பெண்களின் சித்திரங்கள். உயிரைக் கையில் பிடித்தபடி கிழவிகள் பலர் மலையேறிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்குள் உறவு முறைகள் உருவாகி அந்தப் பயணத்துக்கு உள்ளேயே அவர்களுக்குள் ஒரு தனி குடும்பத்தை உருவாக்கிக் கொண்டு, பிற பெண்கள் குறித்து புரளி பேசிக் கண்டு திரிகிறார்கள்.

ஒரு தாழ்ந்த சாதி பெண் நீ பிராமணன் தானே நிச்சயமாக நீ இந்த உதவியை செய்து தருவாய் எனக்கு இந்த உதவியை செய்து கொடு என்று கேட்டு அந்த உதவியை பெற்றுக் கொள்பவரக இருக்கிறாள்.


பயணத்தில் உடன் வரும் அகோர பாபு என்பவரின் மனைவியும் மாமியாரும் கிட்டத்தட்ட ஆசிரியரின் தங்கையும் தாயும் போலவே மாறிவிடுகிறார்கள். பிரியும் சூழல் வரும்போது ஆசிரியர் முகவரி கேட்கும் போதுதான் தெரிய வருகிறது தமக்கை போல பழகிய அந்தப் பெண் ஒரு வேசி என்பது.

ஆசிரியர் கொந்தளித்து அந்த இடத்தை விட்டு விலகி ஓடுகிறார். அவரால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. அருவருப்பு தாழாமல் வாந்தியே எடுத்து விடுகிறார். இவர் உடல்நிலை சரியில்லாமல் கிடக்கும் போது அன்னையைப் போல அவருக்கான அனைத்து பண்டுவத்தையும் ஒரு பெண் பார்த்து விட்டு செல்கிறாள். அது குறித்தும் அவருக்கு எந்த அக்கறையும் இல்லை. வழியை தொலைத்து அழுது கொண்டிருக்கும் போது சைவத்தின் பைரவி துறவி பெண்களில் ஒருத்தி அவருக்கு வழிகாட்டி கரையேற்றுகிறாள். அவளுக்கு மட்டும் சற்றே நன்றியோடு இருக்கிறார்.

குளிர் இரவில்  கங்கை கரையோர குடிசை ஒன்றில் இளம் பைரவி பெண்களும், முதிய பைரவியும் கஞ்சா குடித்த படி, தாளம் இசைத்து சிவனை பாடும் நிகழ்வில் ஆசிரியர் கலந்து கொள்ளும் சித்திரம் இந்த நூலில் வரும் பெண்கள் குறித்த சித்தரிப்பில் உச்சம் என்று சொல்வேன்.

இவற்றையெல்லாம் கடந்து யாத்திரை முடிந்து திரும்பி வருகையில் ராணி என்ற வங்க நிலத்தை சேர்ந்த இளம் விதவைப் பெண்ணை சந்திக்கிறார். பரஸ்பரம் இருவருக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. கொஞ்சமேனும் ஆசாமி எதார்த்த மனிதன்தான் என்று வாசகனை நம்பச் செய்வது அந்தப் பெண்ணோடு ஆசிரியர் கொள்ளும் தொடர்பு சார்ந்த நிகழ்வுகள்தான்.

ஐந்தாவது கூறுதான் இன்னும் முக்கியமானது. இந்தப் பயண நூலின் உணர்வு நிலை மொத்தத்தையும் கட்டமைப்பது அதுதான். இந்தப் பயணத்தில் தான் கொண்ட அனுபவம் குறித்த ஆசிரியரின் சித்தரிப்பு தான் அது. கீழே சமநிலத்தில் வெயில் பாலைவனம் போல் காய்கிறது. புழுதி வீசுகிறது. இன்று கூட அந்தப் பாதையில் மிருகங்களின் நடமாட்டமும் பாறை சரிவுகளும் மிகச் சாதாரணம் என்ற நிலையில் பாதையே சரிவர இல்லாத 90 வருடங்களுக்கு முன்பான அந்தப் பாதை எப்படி இருக்கும் என்பதை, விஷ நீலம்  தோய்ந்த வானின் கீழ் கிட்டத்தட்ட ஒரு நரகத்துக்குள் நடைபயணம் செல்வதைப் போலத்தான் இந்தப் பயணத்தை ஆசிரியர் சித்தரித்துக் காட்டுகிறார்.

கரடு முரடான பாதை, வீங்கிய கால்கள், தாள இயலாத கொசுக்கடி, உடல் முழுக்க வேதனை, கண்ணில் படும் அனைத்தின் மீதும் வெறுப்பு, மரணத்தின் மலை என்றே அவர் இந்த மலையை இதன் மீதான பயணத்தை சித்தரிக்கிறார். உபரியாக பாண்டவர்கள் சொர்க்கம் போகும் வழியில் இந்த பாதையில்தான் ஒருவர் பின் ஒருவராக ஏறி விழுந்து செத்தார்கள் என்ற பாரத கதையை நினைவு கொள்கிறார். சித்தரிப்புகளில் உச்சமான ஒரு இடம் உண்டு. பயணம் போகையில் குறிப்பிட்ட சில நாட்களில் குளிர் அதிகரிக்க அதிகரிக்க பிரபோத் குளிக்காமலே நடக்கிறார். நோய் வந்து வாட்டுகிறது. ஒரு சத்திரத்தில் அவர் அருகே மருந்துகளை வைத்து விட்டு, குளிரில் நடுங்கியபடி காய்ச்சலில் புலம்பியபடி கிடக்கும் அவரை விட்டு விட்டு பிறர் பயணத்தை தொடர்கிறார்கள்.

முற்றிலும் ஓய்ந்து போன கடுமையான ஒரு நிலை, திடீரென ஒரு கணத்தில் பிரபோத் வீறு கொண்டு எழுகிறார். போர்வையை உதறி விடு விடு என்று வெளியேறி அருகே ஓடும் கங்கையில் பாய்ந்து உறை குளிரில் திளைத்து குளித்து விட்டு கரையேறி அதே வெறியோடு பயணத்தை தொடர்கிறார். இப்படிபட்ட பயணத்தில் மேலே கேதார்நாத் செல்லச் செல்ல, கீழே வெயிலில் மெழுகு போல உருகிய நிலைக்கு நேர் எதிராக, மேலே கடும் குளிரில் எல்லோரும் உறைந்து, பணியால் வெடித்து ரத்தம் வரும் உதடுகள்,

பனியால் காயம் பட்டு ரத்தம் கசியும் கால்கள் இவற்றோடு ஜோம்பிகள் போல நடை  பிணம்போல் எல்லோரும் ஆகிவிடுகிறார்கள். கேதார் நாத் கோயில் முன்னே முழுக்க முழுக்க பனி.  பாழாய் போன அந்த வெண்மையில் கண் தெரியாமல் ஸ்தம்பித்து, இறுதி கணத்தின் புலி வாய் மான் போல திகைத்து நின்று விடுகிறார் பிரபோத். முகமறியா சன்யாசி ஒருவர் இன்னும் ஒரு நிமிடம் நீ இங்கே இப்படி நின்றால் குளிர் மூச்சில் ஏறி செத்து போவாய்… வா என்று சொல்லி இழுத்து செல்கிறார்.

அவர் கை பிடித்து தடவி தடவி கோயிலுக்குள் நுழைகிறார் பிரபோத். கேதார்நாத் கோயிலுக்குள் லிங்கத்தை சுற்றி நிகழும் அனைத்தையும், கிட்டத்தட்ட கல்லறைக்குள் இருந்து பிணங்கள் எழுந்து சடங்குகள் செய்வதை போலவே சித்தரிக்கிறார். ஒரு நரகக் குழியில் இருந்து வெளியேறுவதைப் போலவே கேதார்நாத் விட்டு வெளியேறுகிறார் பிரபோத்.

இதே நிலைதான் பத்ரிநாத் வரையிலும். பத்ரிநாத் கோயிலில் இறைவனைக் கண்டு இத்தகு ஆத்மீக விஷயங்கள் மீது எந்த நம்பிக்கையும் அற்ற நூல் ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை, (கடவுளை நோக்கிய ஒரு நாத்திகனின் பிரார்த்தனை) இந்த நூலின் உணர்வு நிலையை கட்டமைக்கும் மைய முடிச்சு என்று சொல்வேன்.

கேதார்நாத் பயணம், பத்ரிநாத் பயணம், காசியை நோக்கிய ஊர் திரும்பல், என்ற மூன்று நிலைகளாக பயண அனுபவம் அமைந்த இந்த நூலில், மூன்றாவது பகுதி முதல் இரண்டு பகுதியில் உணர்வு நிலையை உதறி வேறொரு வண்ணம் கொள்கிறது. இந்த மூன்றாம் பகுதியில், திரும்பும் வழியில், ராணி என்ற இளம் பெண்ணை ஆசிரியர் சந்திக்கிறார்.  (அந்தப் பெண்ணின் விருப்பப்படியே அவளது பெயர் ஊர் எல்லாம் மாற்றப்பட்டு இருக்கிறது என்று ஆசிரியர் தெரிவிக்கிறார்) ஒரே பொருளை இருவரும் விரும்புவது வழியே அவர்களுக்கு இடையேயான தொடர்பு துவங்குகிறது. அது செல்லச் சண்டையாக மாறுகிறது. அது உண்மையான சண்டையாக மாறுகிறது. அங்கிருந்து பரஸ்பர ஈர்ப்பாக மாறுகிறது.

அவள் விதவை, படித்த பெண், அறிவார்ந்த பெண், பயணங்கள் மீது ஈடுபாடு கொண்டவள், சுதந்திர சிந்தனை கொண்ட பெண், இவருக்கு நேர் எதிரான குணங்கள் கொண்ட பெண். இவர் ஒரு எழுத்தாளர் இருவருக்கும் இடையே பரஸ்பர ஈர்ப்பு. மெல்ல மெல்ல ஒருவர் மீதான ஒருவர் கொள்ளும் அக்கறையாக அது மாறுகிறது. சம ரசனை மீது நிறைய பேசிக் கொள்கிறார்கள்.

அஜிதனின் மைத்திரி நாவலில் ஹரனும் மைத்ரியும் மட்டக் குதிரையில் பேசியபடியே பயணித்து பரஸ்பரம் அக்கறை வளர்த்துக் கொள்வது போல, இவர்களும் அதே போல குதிரைகளில் இணையாக பேசியபடி பயணித்து நேசத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். தாகூரின் காதல் கவிதைகளை இணைந்து பாடியபடி பயணிக்கிறார்கள். ஊருக்குள் வர வர நிலவரம் மாறுகிறது. எதையும் அதற்கு மேலே வளர்த்துச் செல்ல முடியாது. காசி ரயில் நிலையத்தில் சொல்லாத சொற்களை தொண்டை குழியில் தேக்கியபடி ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருவரும் எதிரெதிர் திசையில் பிரிந்து செல்கிறார்கள்.

இந்த மூன்றாவது பகுதியை படிக்கும் எவரும் அந்தக்கால சரத் சந்திரரின் வங்காள நாவலில் வருவதைப் போல நிகழும் நிகழ்ச்சிகளை கண்டு, இவை எல்லாம் இந்த நூலாசிரியரின் விருப்ப கற்பனை என்று இந்த நூல் எழுதப்பட்ட காலத்தின் வாசகன் நினைக்க ஒரு இடம் இருந்தாலும், இன்று இதை வாசிக்கையில் ஒரு புன்னகையே எழுகிறது.

அன்றைய வங்கத்தின் எல்லா எழுத்தாளரும் கொண்ட ஆசைதானே அது. இந்த நூல் வழியே வாசகன் அறியவரும் பிரபோத் குமாருக்கு, மலை மேல் நிகழும் யதார்த்த வாழ்வுக்கு அப்பாலான ஒரு வாழ்க்கை மீது அவர்  எந்த அக்கறையும் கொண்டவர் இல்லை, மாறாக சமதளத்தில் இங்கே இந்த சமூகத்தில் நிகழும் வாழ்வில், ஒருவருக்கொருவர் கொள்ளும் உறவில் தான் ஆசிரியரின் அக்கறை முழுக்க மையம் கொள்கிறது.

இந்த நூலுக்குள் பிரபோத் குமார் சன்யால் குறித்து ஒரு குறிப்பும் இல்லாததால், இணையத்தில் தேடினேன். தமிழ் நிலத்துக்கு தமிழ் விக்கி இருப்பதை போல, வங்க நிலத்துக்கு பெங்கால்பீடியா என்ற ஒன்று இருப்பதை இவரை தேடுகையில் அறிந்தேன்.

ஆசிரியர் 1905 இல் கல்கத்தாவில் பிறந்து, 1983 வரை  நிறை வாழ்வு வாழ்ந்திருக்கிறார். விவேகானந்தர் தாகூர் போல இளமையிலேயே உலகை வெல்ல புறப்பட்டிருக்கிறார். உலகமெங்கும் சுற்றி இருக்கிறார். நாவலாசிரியர். தேச விரோத வழக்கை சுமந்த பத்திரிக்கையாளர். உலகம் சுற்றிய வகையில் வங்கத்தின் பயண  இலக்கிய வகைமைக்கு வளம் சேர்த்திருக்கிறார்.

இமயத்தின் மூலை முடுக்கு கூட விடாமல் சுற்றி இரண்டு தொகுதிகள் கொண்ட நூல்கள் எழுதி இருக்கிறார். இமயத்தின் இயற்கை எழில் சார்ந்து அதை பராமரிக்க ஏதோ இயக்கம் எல்லாம் துவங்கி அதை தொடர்ந்து நிர்வகித்து வந்திருக்கிறார். வங்கத்தின் உயரிய விருதுகள் சில வென்று இருக்கிறார்.

அவர் எழுதிய இந்த மகா பிரஸ்தான் பாதே அவரது முதல் பயண நூல். இதுவரை எழுதப்பட்ட பயண நூல்களை கடந்து,  வேறொரு கோணத்தில் இமயத்தை அதில் மனிதர்களை அவர்கள் கொண்ட குணாதிசயங்களை அன்றைய சமூகத்தை அதன் பெண்களை அறிமுகம் செய்கிறது என்ற வகையில் இந்த நூல் ஒரு முக்கியமான பயண நூலே. ( நன்றி -கடலூர் சீனு )

………………………………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.