விபா – சுஜாதா ….

…………………………………

……………………………………

கன்கார்டியாவில் ராஜசேகரனைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது கண்ணாடிக் கதவு அருகில் பெட்டி மேல் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள்.

“ஹாய், ஆர் யூ ஷங்கர்?”

நான் வியப்புடன் அவளைப் பார்த்தேன். கனடாவில் இருந்தாலும், ஒரு பெண், அதுவும் இந்தியப் பெண் அத்தனைக் கிட்டத்தில் என்னைத் தேடி வந்ததில்லை.

“நான் சூர்ய பிரகாஷின் தங்கை மிஸ் விபா நாராயண்.”

“ஹாய்” என்றேன்.

பிரமிப்பாகத்தான் இருந்தது. சூர்ய பிரகாஷுக்கு இப்படி ஒரு தங்கை இருக்கிறதாக எனக்குத் தெரியவே தெரியாது.

“என்ன விஷயம்” என்றேன்.

“அண்ணா போன் பண்ணவில்லை?”

“இல்லையே என்ன விஷயம்?”

“டிக்கெட் ரிஸர்வேஷன் செய்யவேண்டும் என்று போன் பண்ணவில்லை? என்ன ஒரு அண்ணன்…! நான் புறப்பட்டதுமே என்னை மறந்துவிட்டானா….?”

“போன் பண்ணியிருப்பான். நான் வீட்டிலும் இல்லை, யூனிவர்ஸிட்டியிலும் இல்லை. காம்பஸ் போயிருந்தேன்.”

“என்னை இப்படி வாசலியே வைத்துக் கேள்விகள் கேட்பதாக உத்தேசமா?”

“ஸாரி ஸாரி” என்று செக்யூரிட்டிற்கு இண்டர்காமில் தெரிவிக்கக் கதவு திறந்து கொள்ள லிஃப்ட்டில் ஒரு சீனக் குழந்தையைப் பார்த்துக் கன்னத்தில் தடவினாள்.

“ஷங்கர் நான் கட்டாயம் இந்தியா போயாக வேண்டும். என் சினேகிதி நான் போகவில்லையெனில் கல்யாணமே பண்ணிக் கொள்ள மறுத்துவிடுவாள். அழுதே தீர்த்துவிடுவாள். நீங்கள் என் பேச்சைவிட என்னைத்தான் கவனிக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.”

நான் திடுக்கிட்டு கொஞ்சம் அசடுவழிந்தேன். எட்டாவது மாடியில் சீனக்குழந்தை விடைபெற்றுக் கொள்வதைக் கவனிக்காமல் அவளை மறுபடி பார்த்தேன்.

சூரியபிரகாஷின் காட்டுத்தனமான கரடுமுரடான முகத்துக்குச் சம்பந்தமே சொல்ல முடியாமல் ஒரு ஜெனட்டிக் ஆச்சரியம். மென்மையாக, பளபளப்பாக விளம்பரப் பெண் போல இருந்தாள்.

ஃபூ என்று ஊதினால் வலிக்கும். வெயில் ஒரு சில பகுதிகளில்தான் பட்டிருக்கும்போலத் தோன்றியது. ஒளிரும் பச்சை கலந்த நீலத்தில் டிரெஸ் அணிந்திருந்தாள். அது அவள் மென்மையான மார்பைக் காட்டவில்லை. இறுக்கி யிருந்த நாடாவால் இடுப்பு கைக்குள் அகப்பட்டுவிடும். அழகான முகம் என்று சொல்ல முடியாது. இருந்தும் பொருத்தமான உடையும் அளவான ஒப்பனையும் இளமையும். உயரமும், பேசுகிற பாணியும் ஒரு நிமிஷத்தில் அவளைக் காதலிக்கத் தூண்டின.

“பிளேன் பிடிக்கும்வரை உங்களுடன்தான் தங்க வேண்டும். நன்றாக சமைப்பீர்களாம். சூர்யா சொன்னான்.”

நான் என் அறையில் இருக்கும் களேபரத்தை மனதில் கொண்டு சற்று முன்னமேயே தாவி ஓட எண்ணி அவள் கைப் பெட்டியை எடுக்கப் போக, அவளும் அதை எடுக்க முயற்சிக்க, இரண்டு பேரும் முட்டிக்கொண்டோம்.

தலையைத் தடவிக்கொண்டே சிரித்தாள்.

நான் பார்த்த பெண்கள் அதிகமில்லை. யூனிவர்ஸிட்டியிலும் லைப்ரரியிலும் ஃப்ரொபஸர்கள் வீட்டிலும் சந்திக்கும் கனடிய இங்கிலீஷ் பெண்கள் எல்லாம் வாட்ட சாட்டமானவர்கள். ஃபிரெஞ்சுப் பெண்கள் நாசூக்கானவர்கள். கச்சிதமாக அழகாக இருப்பார்கள். பேச்சுத்தான் எனக்குச் சத்தியமாகப் புரியாது.

மாண்ட்ரியாலுக்கு வந்தும் என் ஃபிரெஞ்சு முன்னேறாததற்குக் காரணம் பல்கலைக்கழகத்தில் எல்லோரும் இங்கிலீஷ் பேசுகிறார்கள். பொதுவாகப் பெண்களின் குறுக்கீடே கம்மி. நான் ஏதோ படிக்க வந்திருக்கிறேன். ஒழுங்காகப் படித்துவிட்டு ஊர் போவதைவிட்டு. காதல் கீதல் என்பதில் எல்லாம் அவ்வளவாக அக்கறை ஏற்படவில்லை. ஆனால் இந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் பூச்சி பறக்கிறாற்போல உணர்ச்சி ஏற்பட்டுவிட்டது. நெர்வஸாக,பசியில்லாததுபோல, காற்றுபோல உணர்ந்தேன். என் அறையில் அவள் நுழைந்தபோதுதான். என் அறை எத்தனை குப்பை என்று புலப்பட்டது.

“ஸாரி” என்றேன் பொதுப்படையாக.

“பிரம்மசாரியின் அறை!” ஆணியில் மாட்டியிருந்த கம்பி போன கித்தாரையும், படுக்கை மேல் கிடந்த சட்டை பைஜாமாவையும், மேசைமேல் கிடந்த தலையணையையும், சகலமான இடங்களில் கிடந்த புத்தகங்களையும், சுவாரஸ்யமாகப் பார்த்தாள். எனக்கு அவமானமாக இருந்தது. வேகமாக அறையைச் சுத்தம் பண்ண ஆரம்பிக்க அவள் ஒரு புத்தகத்தை அசுவாரஸ்யமாகப் புரட்டி; “எத்தனை மணிக்கு ஃப்ளைட்?” என்றாள்.

“விசாரிக்கிறேன்” என்றபோது போன் மணி அடித்தது.

“உன் அண்ணனாகத்தான் இருக்க வேண்டும்” என்று எடுத்தேன். அவன்தான்!

“ஏய், பழி! என் சிஸ்டர் வந்தாளா? பஸ்ஸில அனுப்பிச்சிருந்தேனே?”

“ஓ.எஸ் வந்தாச்சு.”

“த பாருப்பா. அவளை எப்படியாவது நியூயார்க் வழியாகவோ. டிம்பக்ட்டு வழியாகவோ இண்டியாவுக்கு அனுப்பிச்சுத்தர்ரது உன் வேலை. நீ அனுமார்ரா. உன் பலம் உனக்குத் தெரியாது. அதனால நீ என்ன பண்றே, எப்படியாவது பை ஹூக் ஆர் க்ரூக், அவளை அனுப்பிச்சுரு.”

“சூர்யா, சீஸன்ல ரொம்ப டிஃபிகல்ட்டுப்பா, நீ பாட்டுக்கு அனுப்பிச்சுட்டு…”

பாரு, நோ எக்ஸ்க்யூஸ்! டிபிகல்ட்டா இருக்கிறதாலதான் உங்கிட்ட அனுப்பிச்சிருக்கேன். உன்னால் முடியாததாடா பப்பு, கொஞ்சம் போனை என் தங்கையிடம் கொடு, வளவளன்னு பேசுவாளே?”

அந்த பெண் என்னிடம் வந்து டெலிபோனை வாங்கிக்கொண்டு அவள் உடலில் அணிந்திருந்த லேசான பர்ஃப்யூம் மணத்தை என்னிடம் தந்தாள்.

“ஏய் சூரண்ணா! வராம எங்க போறேன்….! என்னைப் பத்திக் கவலைப்பட்டியா பாவம்! ஆட்டுக்குட்டி நீ…! ஊருக்குப் போன உடனே ரஷிக்கலால் பாக்கு அனுப்பறேன்… என்னைப் பார்த்துதான் உங்க ப்ரெண்டு பயப்படறார்” என்று கண் சிமிட்டினாள்.

“சரிண்ணா சரிண்ணா லாங் டிஸ்டன்ஸ். சரி..! லண்டன்லருந்து ஒரு கால், பம்பாய்லருந்து ஒரு கால், சரி ஓ.கே!” அவன் டெலிபோனை வைத்ததும் அவள் என்னைக் கெஞ்சலாகப் பார்த்தாள்.

“ப்ளீஸ் புக் பண்ணிடுங்க!”

ஏர் இண்டியாவுக்குப் போன் பண்ணியோது, “ஸாரி ஸார்! ஆல் ஃப்ளைட்ஸ் ஆர் ஃபுல். டிரை நியூயார்க்.”

நியூயார்க்கில் பார்த்தசாரதிக்குப் போன் பண்ணியபோது அவன் ஃப்ளாரிடாவுக்குப் போயிருப்பதாகத் தகவல் தெரிந்தது. எங்கேயோ ஒரு ஹாலிடே இன்னில் கான்பரன்ஸ் மேஜைமேல் வைத்திருந்த டெலிபோன்வரை போய் சாரதியைப் பிடித்துவிட்டேன்.

எனக்கு அந்தப் பெண் விபாவுக்கு முன்னால் கொஞ்சம் பெருமையாகக் காட்டிக் கொள்கிறோம் என்பது உள் மனசில் தெரிந்தாலும் அவள் என்னை ஒருவிதமான பக்தியுடன் பார்த்துக்கொண்டிருந்தது ரொம்ப உற்சாகம் கொடுத்தது.

“சாரதி, ஷங்கர் பேசறேன்.”

“என்னடா! எங்கிருந்து பேசறே?’

“மாண்ட்ரியால்தாண்டா?”

“என்ன அவ்வளவு அவசரம்?”

“எனக்குப் பம்பாய்க்கு அல்லது டில்லிக்கு ஒரு சீட் புக் பண்ணணும். எந்தக் கழிசடை ஏர்லைனா இருந்தாலும் சரி.”

“எப்ப?”

நான் விபாவைப் பார்த்து “எப்ப?” என்றேன்.

இன்னிக்கு, நாளைக்கு. ஆஸ் எர்லி ஆஸ் பாஸிபிள்.”

அவள் சொன்னது போனில் கேட்டிருக்க வேண்டும். “குட்டி யாரு?” என்றான்.

“சூர்ய பிரகாஷ் சிஸ்டர்.”

“ஜஸ்ட் டெல் ஹர் டு ஃபர்கெட் இட். பிராமிஸ் பண்ணவே பண்ணாத.

ஜனங்கள்ளாம் வெறி புடிச்சாப்பல இண்டியா போயிண்டிருக்கு. ஃப்ரெய்ட் ப்ளேன்லல்லாம் இண்டியா போறாங்க. இருக்கற ப்ளைட்டெல்லாம் கழுத்து வரைக்கும் புக் ஆயிருக்கு. ஒரு மாசத்துக்குப் பாம்பே, டில்லி ஃப்ளைட் எதிலயும் ஒரு சீட்டுன்னா ஒரு சீட்டு கிடையாது.

உனக்கு மாண்ட்ரியால்ல சான்ஸ் அதிகம். அங்கிருந்து டைரக்ட் ஃப்ளைட் இருக்கே?”

“அது நிச்சயம் கிடைக்காதப்பா. டிரை பண்ணப் போறேன். ஆனா சாரதி நியூயார்க்கில் கிடைக்கலன்னா வேற எங்க கிடைக்கப்போறது? ஏர் இண்டியா, ஏர் ஃபிரான்ஸ். லுஃப்தான்ஸா எத்தனை இருக்கு?”

“ஒரு இன்ச்சு கூட கிடைக்காது. இம்பாஸிபிள்.”

“உனக்கு ஏரியா மேனேஜரையோ, ரீஜினல் மானேஜரையோ தெரியுமாப்பா.”

“அந்தாள் இப்ப தலைமறைவா இருக்கான். டிரேஸ் பண்ணவே முடியாது.”

“நான் பின்ன என்ன பதில் சொல்றது?”

“டெல் ஹர் ‘நோ…!’ மாண்ட்ரியால் சுத்திக் காட்டு. சூர்யாகிட்ட திருப்பி அனுப்பிச்சுரு. எங்க இருக்கான் அலாஸ்காலயா …? ஊசி மலைக்காட்டில், எங்கேயோ இருக்கான் இல்லை…?”

“கிளியர் வாட்டர்னு ஓர் இடத்திலே.”

“சான்ஸே இல்லை. ஆறு மாசம் முன்னாலே புக் பண்ணவன் எல்லாம் சிங்கியடிச்சிண்டிருக்கான்!”

டெலிபோனை வைத்தபோது “கிடைக்குமா?” அவள் ஆர்வத்துடன் என்னைப் பார்த்தாள்.

அவளிடம் உண்மையைச் சொல்லி வருந்தவைக்க விருப்பமில்லாமல். “ட்ரை பண்றேன்னிருக்கான். திரும்பிப் போன் பண்றேன்னு சொல்லியிருக்கான். எதுக்கும் நான் என் இன்னொரு ஃப்ரெண்டுகிட்டயும் சொல்லி வெக்கறேன்.”

“கிடைச்சுருமில்லை?”

“ஐ திங் ஸோ!”

“ஷங்கர்! டோண்ட் டிஸ்ஸப்பாயிண்ட் மீ. நீங்க மட்டும் இந்த டிக்கெட் வாங்கிக் கொடுத்தா…!”

“என்ன பண்ணுவே?” என்றேன் அவளை நேராகப் பார்த்து.

-ஐல் கிவ் எ கிஸ்” என்றாள் இயல்பாக. “டிக்கெட் ஊர்ஜிதமாகி விடுமல்லவா? அண்ணாவுக்குப் போன் பண்ணிடலாமா?”

“நான் போன் பண்ணுகிறேன்.”

“எப்படியாவது என்னை அனுப்பியே ஆக வேண்டும்; உங்களைத் தூங்கவிடமாட்டேன்.”

இன்னைக்குக் கஷ்டம்னு நினைக்கிறேன். நாளை-நாளைன்னைக்குப் பார்க்கலாம்.”

“எப்படியும் அனுப்பிவிடுங்கள்.”

எனக்குக் கோபம் வந்து, ‘நான் என்ன, ஏர்லைன்ஸா நடத்துகிறேன்?’ என்று சாதாரண சமயங்களில் கேட்டிருப்பேன். ஆனால் அவளை நேராகப் பார்த்தபோது கோபமெல்லாம் நிமிஷத்தில் ஆவியாகப் போயிற்று.

“ப்ளைட்டில் போகும்வரை நான் உங்களை விடப் போவதில்லை. சூர்யா சொல்லியிருக்கிறான், அட்டை மாதிரிப் பிடித்துக்கொள் என்று.”

“விபா, கவலைப்படாதே உன்னை அனுப்ப வேண்டியது என் பொறுப்பு.

முழுசாக ஒரு பெண்ணை அறையில் வைத்துக்கொண்டு என்ன செய்வது…? அதுவும் புக்கிங் இல்லாமல், பொய் சத்தியத்தில் வைத்துக் கொண்டு என்ன பண்ணுவது…? நான் என்ன மாயாஜாலக்காரனா…? ஒரு மணி நேரத்தில் இடம் பிடித்துக் கொடுக்க…? ஆனானப்பட்ட எம்பஸிகாரர்களே தொங்குகிறார்கள்.

எம்பஸி? ஓ எஸ். ஹைகமிஷனில் வெங்கட் இருக்கிறான். ஆட்டாவாவுக்குப் போன் பண்ணி வெங்கட் இல்லையென்று தெரிந்து, பெயர் சொல்லி, வந்தவுடன் கூப்பிடும்படி சொன்னேன்.

தனியாக நீங்கள் ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்களோ எனக்கு எதும் யோக்கியமான எண்ணங்கள் இல்லாவிட்டாலும், கெட்ட காரியங்கள் ஏதும் செய்யத் தோன்றவில்லை.

சில சாமர்த்தியமான ஆண்கள் சிற்சில மணி நேரங்களுக்குள் பெண்ணைக் கைக்குள் போட்டுக்கொண்டு, கழுத்தில் கை போட்டுக் கொண்டு இருவரும் ஒரே கேனிலிருந்து ‘கோகோ கோலா’ உறிஞ்சும் அளவுக்கு முன்னேறிவிடுவார்களாம்! அவர்கள் எல்லாம் வாழ்க்கையில் பெரிய எழுத்தில் வெற்றி காண்கிறவர்கள். நான் ஏதும் செய்யாமல் அறையைத் துப்புரவாக்கிக் கொண்டிருந்தேன். அவளுடன் கீழே டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் போய் யோகர்ட் வாங்கி வந்தேன். ரெடி மிக்ஸ் பொட்டலங்களை உடைத்து ரவா இட்லி பண்ணிக்கொண்டேன்.

“டெலீஷஸ்” என்றாள். “அண்ணா சொன்னது சரிதான்.”

“இதையே நான் செய்தால் சரியாக வருவதில்லையே?”

டெலிவிஷனைத் திருகினாள்.

“உங்களுக்குப் ஃபிரெஞ்சு தெரியுமா?”

“தெரியாது. யூனிவர்ஸிட்டியில் எல்லோரும் இங்லீஷ் பேசுகிறார்கள், உனக்கு?”

“நான் இங்கே வந்து இரண்டு மாசம்தான் ஆகிறது. சூர்யா இருக்கும் இடம் படு கிராமம். ஒரு வாரத்தில் போர் அடித்துவிட்டது. குளிர். டி. வியும் நன்றாக இல்லை.”

“என்ன படிக்கிறாய்?”

“ஸ்டெல்லா மாரிஸ்ஸில் எம்.எஸ்ஸி.. எலக்ட்ரானிக்ஸ்.”

-இங்கு வந்து கம்ப்யூட்டர் சைன்ஸ் ஏதாவது படிக்க உத்தேசமா?”

“அதற்குள் அம்மா கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிடுவாள். வி ஆர் வெரி கன்ஸர்வேட்டிவ்; இந்த மாதிரி ஸ்கர்ட் போட்டுக் கொண்டிருப்பதை அம்மா பார்த்தால் கொன்று போட்டுவிடுவாள்.

“இந்த ஸ்கர்ட் உனக்கு நன்றாக இருக்கிறது.”

“தாங்க்ஸ்.”

இந்த ஒன்றுதான் சற்றே காதல் கலந்து, நான் சொன்ன வாக்கியம். இதற்கே ஒரு மாதிரி வேர்த்து விட்டது, காதுகள் சிவந்துவிட்டன.

“நான் மாண்ட்ரியால் சுற்றிப் பார்க்க வேண்டாமா?”

“ஓ எஸ், போகலாம்.”

“அதற்குள் டெலிபோன் வந்துவிட்டால்?”

“ஆன்ஸர் மிஷின் இருக்கிறது” என்றேன்.

அந்தப் பெண்ணை ஒரு டூரிஸ்டு கைடுபோல மாண்ட்ரியால் சுற்றிக் காட்டினேன். தரையடி ரயில் வழியாக ஒலிம்பிக் ஸ்டேடியம் வரை கொண்டு காட்டினேன்.

சின்னப் பையன்களும் பெண்களும் ஸ்கேட் போர்டிங் சாகசங்கள் செய்வதும், வேலோட்ரோமில் ஒரே ஒரு மின்னல்போல விஷ்விஷ் என்று அபார சரிவில் ஒரு சைக்கிள்காரன் வேகக் கவிதை எழுதுவதும், நடு மைய ஸ்டேடியத்தில் பேஸ்பால் விளையாட்டும். ஸ்லைடு ஷோவும் எத்தனை தடவை பார்த்திருக்கிறேன். ஒன்று விட்ட மாமா. பெரியப்பா பிள்ளை என்று எத்தனை பேருக்குச் சுற்றிக் காட்டியிருக்கிறேன்.

இருந்தும் இந்தப் பெண்ணின் அருகாமையில் புதுசாகவே இருந்தது.

பாட்டிகளையும் தாத்தாக்களையும் அழைத்துச் சென்றவனுக்குக் கணிசமான மாறுதல். என்னமோ எஸ்ட்ரோஜன் ஆண்ட்ரோஜென் தரப்புகள் என்றெல்லாம் சொல்வார்கள். கம்ப்யூட்டர் சைன்ஸ் படிக்கும் எனக்குப் புரியவே இல்லை. இன்றைக்குப் புரிந்தது. ஒரு ஆண் அருகே ஒரு பெண் என்றாலே ரசாயனம் மாறுகிறது. அந்தப் பெண் மேல் எப்போதாவது படும்போது ஏன் இப்படிச் சுகமாக இருக்கிறது….? போன்ஸாய் தோட்டத்தின் குட்டை மரங்களைப் பார்க்கையில் இரண்டு பேரும் கை கோத்துக்கொண்டோம்.

இயல்பாக இருந்தாலும் எனக்குள் நரம்புகள் ரகளை பண்ண ஆரம்பித்தன.

“எனக்கு மட்டும் ரிஸர்வேஷன் வாங்கிக் கொடுத்துருங்க பிரமாதமாப் பரிசு கொடுப்பேன்.”

“என்ன பரிசு?”

“சொல்ல மாட்டேன்; ஆனா பிடித்தமான பரிசு.’

“வாங்கிக் கொடுக்கப் போறியா?”

“இல்லை, அது என்கிட்டயே இருக்கு!”

“இங்கயா, வீட்டிலயா?”

அதற்குமேல் கேட்க முடியாமல் ரத்தமெல்லாம் விண்டர்போல உறைந்துகொண்டது. வானம் நிர்மலமாக வரவேற்க, ஆரட்டரியின் சங்கீத மணிகள் நகரத்தையே இன்ப நாதத்தில் நனைத்துக்கொண்டிருக்க செமின்ட் லாரன்ஸ் நதியில் ஒரு கப்பல் மெல்ல மெல்லத் தோரணம் கோத்ததுபோல, கார் வரிசைகள் சளைக்காமல் நேர்த்திசையிலும் எதிர்த் திசையிலும் சென்றுகொண்டே, சென்று கொண்டே இருக்க, பசுமை மடுக்களின் ஊடே அவ்வப்போது தோன்றிய மர வீடுகளும், பிரெஞ்சு மொழியில் அறிக்கைகளும் –

அந்தப் பெண் மறுபடி என் கையைப் பற்றிக்கொண்டாள்.

அவ்வப்போது இதெல்லாம் நிசமா என்று ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள வேண்டியதாக இருந்தன.

“டிக்கெட் கிடைச்சுடுந்தானே ஷங்கர்.”

“ஓ எஸ்” என்றேன் தயக்கத்துக்குப்பின்.

“சும்மா. ஃப்ளஃப் பண்ணி அனாவசியமா ஹோப் கொடுக்காதீங்க. டிக்கெட் இல்லைன்னா, இல்லைன்னு சொல்லிடுங்க.”

“ஸாரி, விபா! என்னாலான முயற்சியெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கேன். எம்பஸியில் சொல்லி வெச்சிருக்கேன். இன்னும் ஏதும் கன்ஃபர்ம் ஆகலை. உனக்கு அதிருஷ்டம் இருந்தா கன்ஃபர்ம் ஆகலாம். நிச்சயம் சொல்ல முடியாது.”

“அய்யோ, அப்ப நான் தாரிணி கல்யாணத்துக்குப் போக முடியாதா?”

“என்னால முடிஞ்சவரைக்கும் ட்ரை பண்றேன்னு சொன்னனில்லை?”

“ஒரு நாளைக்கு ‘ஜே.எஃப்.கே’யிலிருந்து இண்டியாவுக்கு இருபத்து நாலு ஃப்ளைட் போறது… அதுல ஒரு ஸீட்டு இல்லையா எனக்கு? என்ன கொடுமை, அய்யோ நாளைக்குள் கிளம்பியாக வேண்டும்” என்று கையை உதறிக்கொண்டு பதறினாள்.

நான் அவள் கையை மறுபடி எடுத்துப் பத்திரப்படுத்தி, ”அனுப்பிவிடுகிறேன். கவலைப்படாதே ராத்திரி படுத்துக்கொள்ள டார்மிட்டரியில ஏற்பாடு…பண்ணட்டுமா?”

“டோன்ட் பி ஸில்லி. நான் உங்ககூட உங்க ரூம்ல படுத்துக்கறேன். உங்ககிட்ட எனக்கு எந்தப் பயமும் இல்லை.”

“தாங்க்ஸ்” என்றேன். அவள் சொன்னதைப் பாராட்டாக எடுத்துக்கொள்வதா என்று சந்தேகமாக இருந்தது.

வீட்டுக்கு வந்ததும் நான் சரம் சரமாக அவள் ரிஸிரவேஷனுக்காக போன் செய்து பார்த்தேன். வெங்கட் கூப்பிட்டதாக ஆன்ஸரிங் மிஷினிலிருந்து தெரிந்தது. உடனே போன் செய்தேன்.

“எங்க போயிட்ட சாயங்காலம், போன் பண்ணியிருந்தேனே?”

“வெங்கட், உன்னைத்தாம்பா நம்பிண்டிருக்கேன் மலைபோல!”

“என்ன விஷயம்… டிக்கெட்தானே?”

“ஆமடா.”

“கிடைக்கவே, கிடைக்காது. யாருக்கு?”

“என் ப்ரெண்டு தங்கைக்கு. அவசியமாப் போயே ஆகணும்.”

“ரொம்ப ரொம்பக் கஷ்டம். எதற்கும் ஒரு ஆள்கிட்ட சொல்லி வைக்கிறேன். லாஸ்ட் மினிட் கான்ஸலேஷன் ஏதாவது ஆச்சுன்னா உடனே சொல்வான். அரைமணி நோட்டீஸ்ல புறப்படும்படியா இருக்கும். தயாரா? பேர் என்ன சொன்ன?”

“விபா! விபா நாராயண்.”

“வீட்டைவிட்டு எங்கயும் போகாம இரு. எப்ப வேணா கால் வரும்.” ஒரு முறை இந்த மாதிரி அவன் ஒத்தாசை பண்ணியிருக்கான்.

“அப்றம் என்னோட பி ஸியை ரிப்பேர் பண்ணியாச்சா?”

“ஓ எஸ் ஓடிண்டிருக்கு,”

“உன்னை ஆளைப் பிடிக்கறதுதான் கஷ்டமா இருக்கே.”

விபா என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் போனை வைத்ததும் “கிடைச்சுருச்சா” என்றாள்.

“இல்லை, இவன் டிரை பண்றதா சொல்லியிருக்கான். வீட்டை விட்டு நகராதே. எப்ப வேணா போன் வரும்னான். யாராவது கான்சல் ஆனா உடனே புறப்படும்படியா இருக்கும்னான்.”

“ஷங்கர் உங்களுக்கு ரொம்ப டிரபிள் கொடுக்கறேன் இல்லை?”

“சேச்சே, இதெல்லாம் என்ன!”

“இந்தக் கல்யாணத்துக்கு நான் போயே ஆகணும். தாரிணி என் சிஸ்டருக்கும் மேலே. நான்… ஸாரி திருப்பித் திருப்பி அதையே சொல்லிப் போர் அடிக்கிறேன் இல்லை?”

“சே. நீ பேசறது எதுவுமே போர் இல்லை. நீ வந்து நீ வந்து இங்க…”

அவள் என் வாக்கியம் முடியக் காத்திருந்தாள். அதை முடிப்பதற்கு உரிய பரிச்சயம் ஏற்பட்டுவிட்டதா?

“ஃபர்கெட் இட்” என்றேன்.

அவள் தன் பெட்டியிலிருந்து மாற்று உடையை எடுத்துக் கொண்டு, கிச்சனில் போய் எனக்கும் தனக்கும் காப்பி போட்டுக் கொண்டு. ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு. என் முன் விடுமுறை உபதேவதைபோல உட்கார்ந்துகொண்டு படிக்க ஆரம்பித்தாள்.

சன்னல் வழியாக மெல்லிய வெளிச்சத்தின் உபயத்தில் அவள் கூந்தலின் விளிம்புகள் தங்கம் காட்ட, இளமை, படிப்பு, நாகரிகம் எல்லாம் சேர்ந்துச் சதி செய்து, அவளை அந்தக் கணத்தின் ராணியாகக் காட்டின.

விகற்பமான எண்ணங்கள் இல்லாமல் அவளை முறைப்படி காதலித்து, படிப்படியாக பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து. அவ்வப்போது மெலிசாக விரல்களையும் கரங்களையும் தொட்டு. கடிதங்கள் எழுதிக்கொண்டு பழகிப் பழகி, ஒரு நாள் மூத்தவர் சம்மதங்கள் பெற்றபின் நிச்சயம் பண்ணி, எனக்கு வேலை கிடைத்து, க்ரீன் கார்டு கிடைத்து அவள் பெற்றோருக்கு லீவும் கிடைத்து எல்லாமே சம்பிரதாயப்படி தான் கல்யாணம் செய்துகொள்ள விரும்பினேன்.

இருந்தும் இந்தக் கணத்தில் ‘பொறுப்பற்று நடந்துகொள்’ என்று அத்தனை எண்ணங்களும் வற்புறுத்தின.

நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.

“நீ கல்யாணத்துக்குப் போய்விட்டுத் திரும்பி வருவியா?”

“இல்லையே, இப்ப இல்லை. அடுத்த சம்மருக்கு வந்தாலும் வருவேன். இட்ஸ் எக்ஸ்பென்ஸிவ்!”

“உனக்கு அட்மிஷன் வாங்கிக் கொடுத்தா, கனடா வந்துப் படிக்கச் சம்மதமா?”

“ஷங்கர்!” அவள் கண்கள் ஒளிர்ந்தன. “இந்த டிக்கெட்டை வாங்கிக் கொடுங்க முதல்ல. அப்புறம்!”

“அப்புறம்?”

*உங்களுக்காகவே திரும்பி வந்து கம்ப்யூட்டர் சைன்ஸ் படிச்சு ரெண்டு பேரும் ரிஸரச் பண்ணி, தக்க சமயத்தில் கல்யாணம் கூடப் பண்ணிக்கலாம்.”

என்னைச் சற்றே பின்வாங்கிப் பார்த்து, “தலைவாரிட்டா, கொஞ்சம் சுமாரா இருப்பீங்க போலிருக்கு. உங்களைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னுதான் தோணுது.”

வெங்கட் மறுபடி டெலிபோன் பண்ணி டிக்கெட் இல்லை என்று சொல்லிவிட்டான்.

பூனைக்குட்டி போலத் தூங்கிக்கொண்டிருந்த அவளிடம் நான் சொல்லவில்லை. காலை எழுந்தவுடன், “இன்னிக்கு நிச்சயம் அனுப்பிச்சு வப்பிங்களா ஷங்கர்?”

“விபா ஐம் வெரி ஸாரி.”

*சொல்லாதிங்க! சொல்லாதிங்க! .. டிக்கெட் கிடைக்கலைன்னு சொல்லவே சொல்லாதீங்க”

“ஸாரி விபா, அதான் உண்மை! என்னால் முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணியாச்சு,”

*ஓ மை காட்! என்ன ஸார் உங்களை மலைபோல நம்பிண்டிருந்தேனே! உங்களை லவ் பண்ணலாம்னுகூட உத்தேசித்திருந்தேன்… இப்படிக் காலை வாரி விட்டிங்களே!”

“இப்பகூட லேட்டில்லையே?”

“டிக்கெட் கிடைக்குமா?”

“இல்லே லவ் பண்றதுக்கு!”

“நாசமாப் போச்சு. தாரிணி தாரிணி! ஸாரியம்மா! இப்ப என்ன செய்யணும் நான்?”

“சூர்யாவுக்கு டெலிபோன் பண்ணிட்டேன். உன்னை மத்யானம் பஸ் மார்க்கமா திருப்பி அனுப்பிச்சுடச் சொன்னான்.”

ஓ மை காட்! திரும்பி கிளியர் வாட்டர் கிராமத்துக்கா! என்ன ஒரு கொடுமை! அழுவேன்.”

பஸ் நிலையத்துக்குப் போன் பண்ணி டிக்கெட்டுக்குச் சொல்லிவிட்டு, அவளுடைய ஏமாற்றம் நிறைந்த முகத்தைப் பார்க்க விருப்பமில்லாமல், தலை குனிந்தபடி, “ஸாரி” என்றேன். விசும்பல் சப்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். நிஜமாக அழுதுகொண்டிருந்தாள்.

“என்ன விபா?’

“உங்களுக்குத் தெரியாது நான் எத்தனை தூரம் தாரிணியின் கல்யாணத்துக்குப் போக விரும்பினேன்னு. இங்கே வந்து இப்படி மாட்டிப்பேன்னு தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன். ஷங்கர் ஷங்கர் ப்ளீஸ். ஐ வாண்ட் டு கோ ஷங்கர்! என்னை எப்படியாவது அனுப்பிச்சுருங்க!”

“விபா நான் என்ன பண்ணுவேன்? முடிஞ்ச வரைக்கும் டிரை பண்ணிப் பார்த்தேன், விபா! நீதான் பாத்துக்கிட்டு இருந்தியே?”

“அப்படின்னா அப்படின்னா…”

“ஆமாம். விபா நீ திரும்ப கிளியர் வாட்டர் போயிரு, உங்க அண்ணன்கிட்ட.”

அவள் என்மேல் புத்தகத்தை எறிந்தாள்.

அதற்குப் பின் என்னுடன் பேசவில்லை. தன் பெட்டிகளுக்குள் வெளியே இருக்கிற டிரஸ்ஸையெல்லாம் அவசரமாக அடைத்துக் கொண்டு நான் கொடுத்த காப்பியை அவசரமாக உறிஞ்சிவிட்டு, நான் அவளை அழைத்துக் செல்லக் காத்திருந்தாள். ஃப்ரொபஸரிடமிருந்து கார் கடன் வாங்கியிருந்தேன்.

அறையை விட்டு மௌனமாகப் புறப்பட்டோம். கதவை மூடியதும் உள்ளே டெலிபோன் மணியடித்தது. மறுபடி திறந்து வேகமாக டெலிபோன் மேல் பாய்ந்து எடுத்ததில், “

ஷங்கர்! வெங்கட் பேசறேன். இன்னிக்கு ஃப்ளைட்டில் ஒரு லாஸ்ட் மினிட் கான்ஸலேஷன் கிடைக்கும் போல இருக்கு. உடனே ஏர்போர்ட் போயிரு. பொட்டிப் படுக்கையோடவே போயிரு. புக்கிங் கௌண்டர்லே போய் டூட்டியிலே யார் இருந்தாலும் வெங்கட் அனுப்பிச்சார்ன்னு சொல்லு, வேற யார்கிட்டயும் இது பத்தி மூச்சு காட்டாதே, அந்தப் பொண்ணு ரெடியா?”

“ரெடி, தாங்க்ஸ். வெங்கட் இந்த உதவியை மறக்க மாட்டேன்!”

“முதல்ல ஓடு. அங்கே அது போயிடும் இல்லாட்டா!”

விபா கண் கொட்டாமல் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தவள், கண்ணீர் கோடிட “என்ன?” என்றாள்.

“விபா, யூ ஆர் லக்கி. கிடைச்சுருச்சு. லாஸ்ட் மினிட் கான்ஸலேஷன். நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரிதான்.”

சந்தோஷத்தில் காலைப் பறவைபோலக் கிறீச்சிட்டு என்னருகில் வந்து என்னை முழுசாகக் கட்டிக்கொண்டு உதட்டில் பச்சக் என்று முத்தமிட்டாள். நான் சந்தர்ப்பத்தை இழக்காமல் அவளை முழுவதும் கட்டி அணைத்துக்கொண்டு அவசரமாக அவள் உடம்பில் பல பாகங்களைத் தடவிப் பார்க்கத் துவங்கிவிட, விபாவும் அதற்கு ஈடாக எம்பி என் கன்னத்தையும் காதையும் கடிக்க, ஒரு கணத்தில் நாங்கள் இருவரும் உணர்ச்சிவசப்பட்டு என் குறுகிய கட்டிலில் சாய்ந்தோம்.

அவள் உடையின் பொத்தான்களை நான் சோதிக்கும்போதுதான் சட்டென்று விழிப்படைந்தவளாக, விபா என் கையைத் தடுத்து, “வேண்டாம் ஷங்கர்! அப்புறம் நான் இண்டியா போயிட்டு அடுத்த சம்மருக்கு வந்துர்றேன் ஷங்கர்! இங்கே மாண்ட்ரியல்லேயே ஒரு வாரம் தங்கறேன். அப்ப வச்சுக்கலாம்” என்றாள்.

சட்டென்று எழுந்து உடைகளைச் சரிசெய்துகொள்ள, நான் “ஸாரி!” என்றேன்.

“இல்லை ஷங்கர், ரெண்டு பேருமே காரணம்” என்றாள்.

“ஓ! ஐயம் ஸோ ஹாப்பி!”

அம்புபோல, கிலோ மீட்டர் கணக்க்கில் நீண்ட ஏர்போர்ட் ரஸ்தாவில் விபா என்னருகில் ஒட்டிக்கொண்டுதான் வந்தாள்.

“டிக்கெட் வாங்கிக் கொடுத்ததுக்காக இந்த சலுகைன்னுதானே நினைக்கிறீங்க.”

“இல்லை விபா. டிக்கெட்டோ, டிக்கெட்டில்லையோ அந்தச் சம்பவம் நடந்திருக்கும்னுதான் தோணுது. விபா ஒரே நாள் பழக்கத்தில் ஒரு பெண் மேல் காதல் கொண்டதா கின்னஸ்ஸில இருக்குமா?”

“ஒரு கணத்திலே கூட நிகழலாம்.”

“லெட்டர் எழுதுவியா, விபா?’

“நிச்சயம், நீ?”

“ஒரு மணிக்கொருதரம்!”

விமான நிலையத்தில் கவுண்டரில் கொஞ்சம் பலவீனமாகத்தான் சொன்னேன்.

“விபா நாராயண்… வெங்கட் சொல்லியிருந்தாரே!”

“ஓ, எஸ்! யூ ஆர் லக்கி விபா!” அவளைப் பார்த்துக் கண்ணடித்தார் சிப்பந்தி. “ஒரு ஸீட் இருக்கு”

எனக்கு அழுகை வந்தது.

“என்ன ஷங்கர்?”

“மறுபடி சந்திச்சே ஆகணும் விபா!’

“எம்.எஸ்ஸி முடிக்கறேன். கம்ப்யூட்டர் சைன்ஸ் படிக்க நிச்சயம் வருவேன். ஷங்க் நாம் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்.ஆழமா..”

‘நெக்ஸ்ட் ஸம்மர்’ என்று இரண்டு கண்களையும் சிமிட்டினாள்.

“வரேன் ஷங்கர் பை. சமத்தா இரு!’

“பை விபா.”

ஏர்இண்டியாவின் பிரம்மாண்டமான கனிஷ்கா விமானத்தில் விபா ஏறிச் சென்றாள்…..!

………………………………………………………………………………………………………………………………………………………………………………….

பின் குறிப்பு –

இந்தக் கதையை சுஜாதா அவர்கள் 1985-ல் எழுதினார். இதோடு நின்று விட்டால், அது சுஜாதாவின் – இளமை துள்ளும் ரசனையான ஒரு சிறுகதையை படித்தோம் என்கிற மகிழ்ச்சியுடன் நாம் நின்று விடுவோம்…..

ஆனால், இந்தக் கதையை சுஜாதா எத்தகைய பின்னணியில் எழுதினாரென்று தெரிந்து விட்டால், நம் மகிழ்ச்சி அனைத்தும் காணாமல் போய் விடும்…. மனதை உடைக்கும் சோகம் அப்பிக் கொள்ளும்….

சுஜாதா இந்தக் கதையை எழுதியது –

கனடாவில் இருந்த காலிஸ்தான் இயக்கத் தீவிரவாதிகள், வைத்த வெடிகுண்டு வெடித்து, 1985 ஜூன் 23 அன்று மாண்ட்ரீல் நகரிலிருந்து புது தில்லி சென்ற –

ஏர் இந்தியாவின் கனிஷ்கா (போயிங் 747) விமானம் 31000 அடி உயரத்தில் நடுவானில் சிதறியது. இதில் இருந்த மொத்த பயணிகளும் – 329 பேர் – கடலில் விழுந்து மாண்டு போனார்கள் என்கிற செய்தியை பின்னணியாகக் கொண்டு தான்.

…………………………………………………

” ஏர்இண்டியாவின் பிரம்மாண்டமான கனிஷ்கா விமானத்தில் விபா ஏறிச் சென்றாள்…..!

………………………………………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.