………………………………

………………………………….
அண்மையில் வெளியான, மிகவும் பேசப்பட்ட ஒரு படம் …நான் இன்னும் பார்க்கவில்லை என்பதால் என்னால் விமரிசனம் செய்ய முடியாது…..அதனாலென்ன ….
வலையில் பார்த்த ஒரு சூப்பர் விமரிசனத்தை
பகிர்ந்து கொள்ளலாமே என்று நினைத்து கீழே
பதிகிறேன். நல்ல காமெடி ஸென்ஸொடு எழுதப்பட்ட விமரிசனம் …
எழுதியவர் யாரென்று கேட்கிறீர்களா …???
இந்த வலைத்தளத்திற்கும் அவருக்கும் ஏதோ
பூர்வ ஜன்ம தொடர்பு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது…
அதுவும் திமுக பிரமுகர் ….சரியாக நினவுக்கு வர மாட்டேனென்கிறது ….
அதனாலென்ன – நம்மைப் பொருத்த வரை
“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” தானே – !!! கீழே –
………………………………………………….
தக் லைஃப் மீதான தாக்குதல்கள் அநியாயமானவை. படம் நிஜமாகவே நன்றாக இருந்தது.
ஒரு கதை. அதற்கு எந்த அளவு நன்றாக திரைக்கதை அமைக்க முடியுமோ, எந்த அளவுக்கு நன்றாக வசனம் எழுத முடியுமோ அதைச் செய்திருந்தார்கள். இசையும் அப்படியே.
சிம்பு அறிமுகம் ஆகும் காட்சியில் இருந்தே படம் வேகமெடுக்கிறது. சிம்பு மாஸ் ஆக எண்ட்ரி கொடுத்து அட்டாக் செய்யும் கேங்ஸ்டர் யார் தெரியுமா? சின்னி ஜெயந்த்…!
சிம்பு போன்ற நடிகருக்கு இவ்வளவு பெரிய வில்லன் தேவை இல்லை. இன்னொரு பக்கம், நடூல கொஞ்சம் பக்கத்த காணோம் பக்ஸ்.
அவரும் கேங்க்ஸ்டர். அவர் கமலுக்கு வில்லன். கத்தி எடுத்து சுடுகிறார். துப்பாக்கி எடுத்து சொருகுகிறார். வையாபுரியை அடுத்து காட்டினார்கள். நல்லவேளை அவர் டிரைவர்.
டெல்லி கல்லூரியில் படிக்கும் நாசரின் மகள் காதலில் ஏமாற்றப்பட்டு கர்ப்பமாகிறார். அவர் கருக்கலைப்புக்கு எதிரான டிரம்ப் கட்சி என்பதாலோ என்னவோ, கருக்கலைப்பு செய்யவில்லை. டைரக்டாக தற்கொலை செய்து தன்னையே கலைத்துக் கொள்கிறார்.
அது, இதுவரை தமிழ் சினிமாவில் வராத புதுமையான காட்சியாக இருந்தது.
ஏமாற்றியவனை ரங்கராய சக்திவேல் சுட்டுக் கொல்கிறார். ஜெயிலுக்கு போகிறார். போகும்போது, “8வயசு குழந்தைல இருந்து 80வயசு கிழவி வரைக்கும் பொம்பளையாளுக வெளிய போகக்கூடாது பாத்துக்கிடுங்க” என பாபநாசம் சுயம்புலிங்கமாக மாறி உத்தரவு போடுகிறார்.
“அப்ப ஏழு வயசு குழந்தையும் 81 வயசு கிழவியும் போலாமா தாத்தா” என கும்பலில் இருந்து ஒரு கிழவி கேட்டது சிந்தனையைத் தூண்டியது.
ஜெயிலில் கமல், ஜெயிலர் அறையில் – இந்திராணியுடன் ஜாலியாக இருக்கிறார்…..!!!
வெளியில் வந்தவுடன் தன்னைக் கொலை செய்ய சிம்பு பிளான் போடுகிறாரோ என கமல் சந்தேகப்படுகிறார். ஆனால் சிம்பு நியாயவான் போல் முதலில் கோபப்படுகிறார். ஆனால், “உன் நிஜ அப்பாவ கொன்னது சக்திவேல்தான்” என நாசர் சொன்னவுடன், “அப்டியா அங்கிள். ஓகே அங்கிள்,” என உடனே நம்புகிறார் குழந்தை மனம் படைத்த சிம்பு.
பிறகு உண்மையிலேயே துரோகம் செய்கிறார்.
கமலை நேபால் கூட்டிப்போய் சுட்டுக்கொல்கிறார்கள். விவேகம் அஜித் ‘தலை விடுதலை’ பாடலில் விழுவாரே. அதே இடம். அதே வைப்.
இதற்கிடையே, “இனிமே நான் தான் ரங்கராய சக்திவேல்” என சிம்பு கர்ஜிக்கிறார்.
இதையே திரிஷாவிடமும் போய் அவர் சொல்லிவிட்டு அவர் கையைப் புடிச்சு இழுக்கும்போதுதான் பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன.
கமலுக்கு சிம்பு தம்பி மாதிரியா, மகன் மாதிரியா என முதலில் இருந்தே தெளிவாக சொல்ல மாட்டார்கள். குழப்புவார்கள்.
ஆனால், திரிஷா மீது சிம்புவிற்கு கண் என்பது நமக்கு தெரியும்போதுதான், கமலுக்கு சிம்பு, ஜெயமோகனின் ‘சிந்து சமவெளி அப்பா’ மாதிரி எனப் புரிகிறது.
கேங், கேங்க்ஸ்டர் என படம் முழுசும் பேசிவார்கள். ஆனால் கேங்க்ஸ்டர் ஆக்விடீஸ் எதுவுமே இருக்காது.
தேமே என விருதுநகர் சைவ கேட்டரிங் சமையல் மாஸ்டர் போல கமல் சுத்துவார்.
ஆனால், கேங், கேங்க்ஸ்டர் என்பது கேங்பேங் சமாச்சாரங்கள்தான் என்பது படத்தின் இண்டர்வலில் புரிந்தது.
அதே நேரம் கமலை புத்த சரணாலய பிச்சுக்கள் காப்பாற்றுகிறார்கள். அவர்கள் எல்லாம் 300,400 வருசம் வாழ்பவர்கள் என்பதால் 65வயது சக்திவேல் அவர்களுக்கு குட்டிப் பையனாக தெரிகிறார். ,,!!!
சண்டை எல்லாம் கத்துக்கொடுத்து “டெல்லில பத்திரமா இருந்துக்கடி செல்லக்குட்டி” என அனுப்பி வைக்கிறார்கள்.
அதாவது கேங்க்ஸ்டர் தலைவன் எல்லாம் ஆகி பல ஜென்மத்துக்குப் பிறகுதான் சக்திவேலுக்கு சண்டை போடவே தெரிகிறது.
டெல்லி திரும்பி வரும் சக்திவேல் உடையைப் பார்த்தாலே நாலு மாடு, நாலு எருமை, நாற்பது மனிதர்கள் செத்துவிடுவார்கள்.
அப்படி ஒரு உடையில், அப்படி ஒரு ஹேர் ஸ்டைலில் தானே ஒரு நடமாடும் ஆயுதமாக மாறி வருகிறார். வருகிறவர், தன் மனைவி அபிராமியைத் தேடிப் போகும்போது, அபிராமி இவனை கழட்டிவிட இதான் சாக்கு என “உன்ன எனக்கு யாருனே தெரில…” என மூன்றாம் பிறை ஸ்ரீதேவி போல பொய் சொல்லி விரட்டிவிடுகிறார்.
உடனே கமல், பக்ஸ் போன்ற பெரும் வில்லன்களை எல்லாம் கொடூரமாகக் கொன்றுவிட்டு சிம்புவை முடிக்கப் போகிறார் எனப் பார்த்தால்,
“சரி ஜீவா (அபிராமி) தான் இல்ல, இந்திராணிட்டயாச்சும் போவோம்” என திரிஷாவைக் கூப்பிட்டு வர தன் ‘சிந்து சமவெளி அப்பா’ சிம்பு வீட்டுக்குப் போகிறார்.
அங்கே வில்லன் பாம் வைத்து திரிஷாவைக் கொன்று விடுகிறார்கள்.
இதுக்கு நடுவே சிம்பு தங்கச்சியான காணாமல் போன சந்திரா.
பாத்ரோஸ் என்ற பாவப்பட்ட வேடத்தில் ஜோஜு ஜார்ஜ். படத்தை மூனு கூராக வெட்டி, சரியான இடைவெளியில் மூன்று முறை வந்துபோகும் போலீஸ் அசோக் செல்வன்.
கொரியர் டெலிவரி செய்துவிட்டு OTP கேட்கும் ப்ளூடார்ட் டெலிவரி பையன் போல “சார் டாகுமெண்ட் வேணும். சார் எவிடென்ஸ் வேணும்,” என கமல், சிம்பு மற்றும் போவோர் வருவோர் எல்லோரிடமும் கேட்கிறார்.
“அவனுக்கு கொடுத்துதான் தொலைங்களேன்டா” என நம்மையே கத்த வைக்கிறார்கள்.
இப்படியாக ஒருவழியாக கிளைமாக்ஸ் வருகிறது. சிம்புவும் கமலும் சண்டை போடுகிறார்கள்.
கமல் ஜெயிக்க வேண்டுமே என நான் நகத்தைக் கடித்து ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது,
“ரெண்டு பேருமே சீக்கிரம் செத்துத்தொலைங்கடா வீட்டுக்குப் போறோம்,” என பொறுமை இழந்த, உலக சினிமா அறியாத ஆடியன்ஸ் கத்தினார்கள்.
மணி சார் ஃபேன் ஆன நமக்கோ நரம்பு முறுக்கு ஏறியது.
அமரன் என்கிற பொறுக்கிப்பயல் செத்தவுடன் சந்திரா வந்து மடியில் சாய்த்துக்கொண்டு அழுகிறார். பக்கத்து rowவில் உட்கார்ந்திருந்த, சீரியல் பார்த்தே அழும் மாமி கூட இதைப் பார்த்து பாவப்படாமல், கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டிருந்தார்.
ஒகே திரிஷாவும் இல்ல, சிம்புவும் இல்ல, அப்ப நமக்கு டெல்லில வேலை இல்ல என அபிராமியிடமே மீண்டும் போய் செட்டில் ஆகிறார் கமல்.
மிகவும் பொயட்டிக்கான கிளைமாக்ஸ். மணி சார் டச் இருந்தது.
வயல்வெளியில் கமல் பேரன் ஓடி வருகிறான். ஒரு ஓரமாக வயக்காட்டில் குத்த வைத்து தன் இயற்கை உபாதையைக் கழித்துவிட்டு ஸ்டைலாக எழுகிறார் கமல்.
ஏதோ சாதித்ததைப் போல ரேபான் கண்ணாடியை மாட்டிவிட்டு வானத்தைப் பார்க்கிறார்.
அந்த நொடியில், “விண்வெளி நாயகா” என BGM போட்டு கமல்-மணி மீதான தன் மொத்த வன்மத்தையும் இறக்குகிறார் A.R.ரஹ்மான்.
A film by Maniratnam என படம் முடிகிறது.
மொத்தத்தில், யார் பாடுனது நன்னாருக்கு?
“தீ பாடுனதா? நம்மாத்து பொண்ணு சின்மயி பாடுனதா?” என மாமா மாமிகள் சண்டை போட்டுக்கொண்டிருக்க,
படத்தைப் பார்த்தவர்கள், “தீ பாட்டப் போடுவேளோ, சின்மயி பாட்ட போடுவேளோ, மணியும் கமலும் சேர்ந்து ஒரு விட்டயப் போட்டு வச்சிருக்கா.. அத யார் அள்றதுனு முடிவு பண்ணிக்கங்கோ….” என சொல்லிக்கொண்டே தியேட்டரைவிட்டு ஓடுகிறார்கள்.
கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய ஒரு படம்…… Dont miss it….!!!
………………………………………………………………………………………………………………………………………………………………….



இதற்கிடையில் கமலஹாசனின் கர்நாடக மக்கள் மீதான அபிமானம் காரணமாக, கர்நாடகாவில் இந்தப் படம் வெளியாகவில்லை. சில படங்களை ஓடிடியிலும் பார்க்கச் சகிக்காது (வெற்றிப்படமாக அமைந்த போதிலும். மார்க் அண்டனி மாதிரி). நிறைய விமர்சனங்களைப் பார்த்து இந்தப் படத்தின் ஓடிடியை வாங்கின Netflix பாவம்தான். கிடக்கட்டும். மாதம் சுளையா 200 ரூபாய் வாங்கறாங்க இல்ல. அனுபவிக்கட்டும்.