அதிர்ஷ்டத்தை ஈர்க்க என்ன செய்யலாம் …?

………………………………………………….

………………………………………………………

இரண்டு நண்பர்கள் வழிதெரியாத காட்டில் மாட்டிக்கொண்டனர்.
பசியும் இரவு குறித்த அச்சமும் அவர்களை வதைத்தது. ‘இந்த இரவு தங்குவதற்கு இடமும் உணவும் கிடைத்தால் நல்லது’ என்று அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

சில நிமிடங்களில் ஒரு முதியவர் வந்தார். இருவரையும் காட்டுக்குள் ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இருவரையும் தனித்தனியாக இரண்டு அறைகளில் தங்க வைத்தவர், ‘‘காலையில் பார்க்கலாம்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

மறுநாள் காலையில் முதல் அறையின் கதவை முதியவர் திறந்தால்,
உள்ளே இருந்தவன் பித்துப் பிடித்தவன் போல் தவித்தபடி இருந்தான். விசாரித்தபோது, ‘‘இங்கு உணவே இல்லை; பசியில் உறக்கம்
வரவில்லை’’ என்றான்.

அவனை அழைத்துக்கொண்டு இன்னொரு அறைக்குச் சென்றார் முதியவர். அங்கிருந்த அவன் நண்பன் உற்சாகமாக இருந்தான். விசாரித்தபோது, ‘‘நல்ல உணவு, நல்ல உறக்கம். அதனால் உற்சாகமாக இருக்கிறேன்’’ என்றான்.

முதல் நண்பனுக்குக் கோபம் வந்தது. ‘‘உன் அறையில் மட்டும் உணவு இருந்ததா, நீ அதிர்ஷ்டசாலிதான்’’ என்று பொறாமையுடன் சொன்னான்.

அதற்கு இரண்டாமவன், ‘‘உணவாக எதுவும் இல்லை. ஆனால் உணவு சமைக்கத் தேவையான பொருள்கள் இருந்தன. நானே சமைத்துச் சாப்பிட்டேன்’’ என்றான். அப்போதுதான் முதல் நண்பனுக்குத்
தன் அறையிலும் சமைக்கத் தேவையான அனைத்தும் இருந்தது
நினைவுக்கு வந்தது.

பலரும் இப்படித்தான்… தங்களுக்கு அதிர்ஷ்டமே இல்லை என்று புலம்புவார்கள். அதிர்ஷ்டத்தை ஈர்க்க ஏதேதோ செய்வார்கள்.
கருங்காலி மாலை போட்டுக்கொள்வார்கள், யந்திரங்களை வாங்கிப்
பூஜை செய்வார்கள். ஆனால் இவை அதிர்ஷ்டத்தை ஈர்க்குமா?

உண்மையில் அதிர்ஷ்டம் என்பது திடீரென்று செல்வம் கிடைப்பதோ,
உயர் பதவிகள் பெறுவதோ அல்ல…

அதிர்ஷ்டம் என்பது வாய்ப்புதான் …. !!!

அனைவரையும் சுற்றி வாய்ப்புகள் குவிந்துகிடக்கின்றன. எவர்
கண்ணுக்கு அந்த வாய்ப்புகள் தெரிகிறதோ, அவரே அதிர்ஷ்டசாலி.
சரி, யாருக்கு வாய்ப்புகள் கண்ணுக்குத் தெரியும்?

யாரெல்லாம் தேடுகிறார்களோ அவர்களுக்குத் தெரியும்… !!!

ஒரு சின்ன உதாரணம். இன்று உலகில் மிகச்சிறந்த ஸ்மார்ட் போன் நிறுவனமாகத் திகழ்வது ஆப்பிள். ஸ்டீவ் ஜாப்ஸ் முதன்முதலில்
ஆப்பிள் போன் உருவாவதற்கு முன்பாக ஸ்மார்ட் போன்களுக்கான வாய்ப்புகள் குவிந்து கிடப்பதைக் கண்டுபிடித்தார். ஏற்கெனவே
இருக்கும் மொபைல் போன்களில் இருந்து தம் நிறுவன போன்கள் மாறுபட்டிருக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக
வல்லுநர்களுடன் கலந்து பேசினார்.

உள்ளங்கையில் அடங்கும் ஒரு போனுக்குள் ஒரு பெரிய கம்ப்யூட்டரின் அனைத்துத் திறன்களையும் அவர் புகுத்த ஆசைப்பட்டார். அதில்
டயல் செய்வதற்கு ஒரே ஒரு பட்டன் மட்டுமே இருக்க வேண்டும்,
அதுதான் அவர் தனது வடிவமைப்புக் குழுவிடம் விதித்த நிபந்தனை.

‘‘அதற்கான புதிய டிசைனைத் தயார் செய்யுங்கள்’’ என்று
சொன்னார். ‘‘அது எப்படி சாத்தியம்?’’ என்று பலரும் வாதிட்டனர். ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸ் அதில் உறுதியாக இருந்தார்.

அப்படித்தான் ஐபோன் உருவாக்கப்பட்டது, அது ஒரு பெரிய புரட்சியாக மாறியது. மற்ற எல்லாத் தொலைபேசி நிறுவனங்களும் இந்த
வடிவமைப்பை நகலெடுத்தன என்றாலும், ஆப்பிள் நிறுவனமே இன்றும் முதலிடத்தில் இருக்கிறது. இதுதான் அதிர்ஷ்டம்.

காலம்காலமாக கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குகிறோம். அதில் எவ்வளவோ சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது, ‘வீட்டுக்கே பொருள்களை டெலிவரி செய்வது’ என்கிற வணிக வாய்ப்பை ஜெப் பெஜோஸ் என்ற ஒருவர் கண்டுகொண்டதால் அமேசான் நிறுவனம் உருவானது. அதுவே இன்றைக்கு மாபெரும் வணிக சாம்ராஜ்ஜியமாக வளர்ந்திருக்கிறது. இதுதான் உண்மையான அதிர்ஷ்டம்.

யாரேனும் இப்படிப்பட்ட வளர்ச்சியை அடையும்போது, ‘அவருக்கு
யோகம் அடித்துவிட்டது. அதிர்ஷ்டம் கதவைத் தட்டிவிட்டது’ என்று
பலரும் சொல்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. அவர்களுக்கு
வாய்ப்புகள் கண்களுக்குத் தெரிந்தன. அதைத் தொடர்ந்தபோது
வெற்றிகள் குவிந்தன.

சமீபகால உதாரணம் ஸ்விக்கி. ஒருவருக்குப் பசிக்கிறது. சாப்பிட உணவகத்துக்குச் செல்ல வேண்டும். உணவகத்தில் கூட்டம்,
போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டும்.
இவற்றை எல்லாம் தவிர்த்தால் எவ்வளவு நேரம் மிச்சமாகும் …!
உணவை வீட்டுக்கே கொண்டுவந்து டெலிவரி செய்தால் என்ன
என்று ஒரு நிறுவனம் நினைத்தது.

யோசித்துப் பாருங்கள்… யாரோ ஒருவர் உணவை சமைக்கிறார்,
யாரோ இன்னொருவர் சாப்பிடுகிறார். அதைக் கொண்டுவந்து கொடுக்கலாம் என்று இடையில் ஒருவருக்குத் தோன்றியது
அல்லவா… ??? அதுதான் வாய்ப்பு… !!!

இப்படி இன்றைக்கும் ஆயிரக்கணக்கான வாய்ப்புகள் கண் முன்னே இருக்கின்றன. ஆனால் அதைக் காண்பதற்குத்தான் பலருக்கும் தெரியவில்லை. காரணம், தேடல் இல்லை. ‘யாரோ ஒருவர் புதையலைக் கொண்டுவந்து கையில் கொடுக்க வேண்டும். அதுதான் அதிர்ஷ்டம்’
என்று காத்திருக்கிறோம்.

கருங்காலி மாலை போட்டுக்கொண்டால் அதிர்ஷ்டம் சேரும் என்று நம்புகிறார்கள். குபேர யந்திரம் வீட்டில் வைத்தால் பணமழை கொட்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவற்றை வாங்கி வைத்துவிட்டுச்
சும்மா இருந்தாலே நமக்கு அனைத்தும் கிடைத்துவிடாது. அது ஒரு
பலத்தைக் கொடுக்கும், அவ்வளவுதான். இமயமலையில் ஏறுபவருக்கு எப்படிக் குளிரைத் தாங்கும் உடைகள், பாத அணிகள் எல்லாம் உதவுமோ, அதுபோல உழைப்பவருக்கு அதிர்ஷ்ட மாலைகள், யந்திரங்கள் ஒரு சக்தியைக் கொடுத்து உதவும். அவ்வளவுதான்.

மற்றபடி தேடல் இருந்தால் வாய்ப்புகள் கிடைக்கும். வாய்ப்புகள் தெரிந்துவிட்டால் அதிர்ஷ்டம் தானாகத் தேடிவரும்… !!! (நன்றி -குரு மித்ரெஷிவா… )

…………………………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.