இதில் யார் ஐயோ பாவம் ….. அண்ணாமலையா அல்லது நயினார் நாகேந்திரனா … ??? !!!

………………………………………………………..

……………………………………………………..

” புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், அதிருப்தி பேட்டி…
‘தனி ரூட்’ அண்ணாமலை… ” என்கிற தலைப்பில்,

லேடஸ்ட் ஜுனியர் விகடன் இதழில் வெளியாகியிருக்கும் ஒரு
அரசியல் கட்டுரை (கீழே) – வியப்பைத் தருகிறது…. என்ன ஆயிற்று
அண்ணாமலை அவர்களுக்கு ..???

பாஜக தலைமையுடன் மோதுவது, கருங்கல் சுவரில் போய்
மண்டையை முட்டிக்கொள்ளும் அளவிற்கு மோசமாக முடியும் என்பதை அறியாதவரா, விவரம் புரியாதவரா அண்ணாமலை ..???
பின் ஏன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார் … ???

…………….

பா.ஜ.க மையக்குழுக் கூட்டம் புறக்கணிப்பு, தன்னிச்சையாக
ஆர்ப்பாட்டம், கூட்டணி குறித்து அதிருப்தி பேட்டி எனத் தமிழக
பா.ஜ.க-வில் அண்ணாமலை தனி ரூட்டில் ஆடிவருவது… தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது!

கடந்த மாதம் தமிழக பா.ஜ.க தலைவர் பொறுப்பிலிருந்து
அண்ணாமலை விடுவிக்கப்பட்டு, புதிதாக நயினார் நாகேந்திரன்
தலைவர் பொறுப்பேற்றார். அப்போது, “இவ்வளவு நாள் எனக்குப்
பொறுப்பு இருந்தது. இனி நான் சுதந்திரமாகப் பேசலாம்; செயல்படலாம். இனி அரசியலில் சிக்ஸ் அடிப்பதுதான் என் வேலை. டிஃபென்ஸ்
ஆட்டத்தை நயினார் பார்த்துக்கொள்வார்” எனப் பேட்டி கொடுத்த அண்ணாமலை, சொன்னதுபோலவே கட்சித் தலைமையை மதிக்காமல், இஷ்டத்துக்குப் பேசவும் நடந்துகொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்.
அதுவும் முழுக்க முழுக்கக் கட்சிக்குப் பாதகமாக இருப்பதால், கொதித்துப்போயிருக்கிறார்கள் தமிழக பா.ஜ.க-வினர்.

3.5.2025 அன்று காட்டாங்குளத்தூரில் இருக்கும் தனியார் ஹோட்டலில் தேசியத் தலைவர் நட்டா நடத்திய மையக்குழுக் கூட்டத்தைப்
புறக்கணித்த அண்ணாமலை, பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைக் கண்டித்து தமிழக பா.ஜ.க நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை.
மேலும், ‘அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி குறித்து யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம்’ என இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டணியைக் காப்பாற்றப் போராடிவரும் சூழலில் அண்ணாமலையோ, கூட்டணி குறித்த தனது தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள்,
“மாநிலத் தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள அண்ணாமலை பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டார். அதில் ஒன்றுகூடக் கைகூட
வில்லை. இதையடுத்து, தனக்கு மத்திய இணை அமைச்சர் பதவி
கிடைக்கும் என எதிர்பார்த்தார். அதற்காக ஆந்திராவில் காலியாக
இருக்கும் மாநிலங்களவை எம்.பி சீட்டையும் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தார்.

அதற்கு, சந்திரபாபு நாயுடுவின் மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ் மூலமாகவும் காய்நகர்த்தி வந்தார். ஆனால், அந்த இடத்தை பவன் கல்யாணின் அண்ணனும், பிரபல நடிகருமான சிரஞ்சீவி அல்லது
முன்னாள் முதல்வர் நல்லாரி கிரண் குமார் ரெட்டி ஆகியோரில்
ஒருவருக்குக் கொடுக்க ஆலோசித்து வருகிறது அகில இந்தியத்
தலைமை.

அதனால் அப்செட்டின் உச்சத்துக்கே சென்றுவிட்டார் அண்ணாமலை. அதனால்தான், மையக்குழுக் கூட்டத்திலும், பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கான கண்டன ஆர்ப்பாட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
அன்றைய தினம், கொங்கு மண்டலத் தொடர் கொலைகளைக் கண்டித்து ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதோடு, கூட்டணி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். தன்னை லைம்லைட்டில் வைத்துக்கொள்ள அண்ணாமலை இஷ்டத்துக்குச் செயல்படுவது, நயினார் நாகேந்திரனையும் கொதிப்படையச் செய்திருக்கிறது” என்றனர் விரிவாக.

தனி ரூட்டில் பயணிக்கும் அண்ணாமலையின் அரசியல் குறித்துப்
பேசுகிற மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “அண்ணாமலை
கடும் மன உளைச்சலில் இருக்கிறார். சமீபத்திய அவர் பேட்டியில் –

” தி.மு.க-வை வீழ்த்துவதற்கான வலிமையான கூட்டணியாக
அ.தி.மு.க., பா.ஜ.க கூட்ட ணியைப் பார்க்கவில்லை. ஏனெனில்,
எண்ணிக்கை மட்டும் போதாது. அப்படியே தி.மு.க-வை வீழ்த்தினாலும் அதன் பிறகு என்ன செய்யப்போகிறீர்கள் என மக்கள் கேட்கிறார்கள்…” -என்கிறார். இதன் மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணியை
உடைப்பதற்கான வேலையை அவர் தொடங்கிவிட்டார்.

‘எடப்பாடி தலைமையில்தான் ஆட்சி’ என ஏற்கெனவே அமித் ஷா தெரிவித்திருக்கிறார். ஆனால், ‘அமித் ஷா கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுவிட்டது. பா.ஜ.க தலைமையில் ஆட்சி’ என அண்ணாமலை பேட்டி கொடுக்கிறார்.

அதாவது, இந்தக் கூட்டணி இருக்கக் கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். நட்டா சென்னைக்கு வந்த நாளில், அமெரிக்காவிலிருந்து அதிகாலையிலேயே பெங்களூருக்கு வந்துவிட்டார் அண்ணாமலை. நினைத்திருந்தால், உடனே சென்னைக்கு வந்து கூட்டத்தில் பங்கேற்றிருக்கலாம். ஆனால், அதைத் தவிர்த்துவிட்டார். பஹல்காம் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.

ஆனால், ‘சிவகிரி இரட்டைக் கொலைக்குத் தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்’ எனப் பேட்டி கொடுக்கிறார்.
போராட்டத்தை அறிவிக்க வேண்டிய மாநிலத் தலைவர் நயினாரை மீறி, அண்ணாமலை பேசுகிறார்.

அவர் மாநிலத் தலைவராக இருந்தபோது, இப்படிப் பேட்டி கொடுத்த தமிழிசைக்குப் பல நெருக்கடிகளைக் கொடுத்தவர்தான் அண்ணாமலை. ஆனால், இப்போது தனியாகப் பத்திரிகையாளர் சந்திப்புகளை
நடத்துகிறார். ஒட்டுமொத்த பா.ஜ.க-வும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என நினைக்கிறார் அண்ணாமலை. அந்த வகையில்,
நயினார் நாகேந்திரனை டார்கெட் செய்ய ஆரம்பித்துவிட்டார் அண்ணாமலை” என்றார் விரிவாக.

இந்த விவகாரம் குறித்துக் கேட்பதற்காக, தமிழக பா.ஜ.க தலைவர்
நயினார் நாகேந்திரனைத் தொடர்புகொண்டோம். அவர் நமது
அழைப்பை ஏற்கவில்லை. எனவே, பா.ஜ.க துணைத் தலைவர்
நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “நட்டா வந்தபோது, அண்ணாமலை இந்தியாவிலேயே இல்லை. ‘கொங்கு மண்டலக் கொலைகளைக் கண்டித்து போராட்டம் நடத்துவது’ குறித்து முன்பே மாநிலத் தலைவர் நயினார் அனுமதி கொடுத்துவிட்டார். ஆனாலும்,
தவறான கருத்துகளைச் சிலர் பரப்பிவருகிறார்கள்” என்றார்
சுருக்கமாக.

பாவம் நயினார்தான்!…!!!

( ஆனால், நம்முடைய சந்தேகம் – இதில் யார் ஐயோ பாவம் ….. அண்ணாமலையா அல்லது நயினார் நாகேந்திரனா … ??? !!! )

……………………………………………………………………………………………………………………………………………….…

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.