“ஜெயலலிதாவின் புன்னகையும், கருணாநிதியின் பொய்க்கோபமும்… !!!”- பத்திரிகையாளரின் அனுபவங்கள் …..

…………………………………………..

…………………………………………….

பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அவர்களை அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களில் வாசக நண்பர்கள் பார்த்திருக்கலாம். ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிற்கு பொதுவாக அவர் திமுகவையே ஆதரித்துப் பேசுகிறார் என்பது என் கருத்து. ஆனால், அவரென்னவோ நடுநிலை என்று தான் சொல்லிக்கொள்கிறார். விகடன் தளத்திற்கு அவர் கொடுத்த பேட்டி ஒன்று கீழே…. இந்தப்பேட்டியில் பேசப்படும் தலைவர்கள் காரணமாக இந்தப்பேட்டி, சுவாரஸ்யம் பெறுகிறது.

…………………………………………………..

தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்த செய்திகளை ‘தி ஹிண்டு’வில் எழுதிவந்தவர் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன். அவர், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரிடம் பழகிய அனுபவங்களையும், சுவாரஸ்யமான தருணங்களையும் பகிர்ந்துகொள்கிறார். 

“அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலும், தி.மு.க ஆட்சிக்காலத்திலும், சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து ‘தி ஹிண்டு’வில் ஏராளமான செய்திகளைப் பதிவுசெய்திருக்கிறீர்கள். முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகிய இருவருடனும் உங்களுக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. அரசியலில் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் இருவருடனும் ஒரே நேரத்தில் பழகிய அனுபவம் எப்படி இருந்தது?”

“கலைஞர் கருணாநிதியை எளிதாகச் சந்திக்க முடியும். ஜெயலலிதா அவர்களை எளிதில் சந்திக்க முடியாது. ஆனாலும், சட்டமன்றத்தில் அவைத்தலைவருக்கு வலதுபுறம் அதிகாரிகள் அமர்ந்திருப்பார்கள். இடதுபுறத்தில் பத்திரிகையாளர்கள் அமந்திருப்பார்கள். அதில், வரிசைப்படிப் பார்த்தால் முதலில் தி ஹிண்டு, இரண்டாவது இந்தியன் எக்ஸ்பிரஸ், மூன்றாவது தினத்தந்தி என்று இருக்கைகள் அமைந்திருக்கும்.

நான் முதல் நாற்காலியில் அமர்ந்திருப்பேன். அந்த இடம் சற்று உயரமாக இருக்கும். அதனால், நான் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு கீழே எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கை இருக்கும். ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அந்த இருக்கையில் அமர்ந்திருப்பார். அவருக்கு அருகில் தங்கமணி, வேலுமணி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அமர்ந்திருப்பார்கள்.

பத்திரிகையாளர் பகுதியில் அமர்ந்திருக்கும் செய்தியாளர்கள் யார், யார் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஜெயலலிதா விரும்புவார். அதற்காக, கைக்குட்டையை எடுத்து முகத்தை ஒற்றிக்கொண்டு, மேலோட்டமாகப் பார்ப்பார். என்னைப் பார்த்தவுடன் லேசாகப் புன்னகைப்பார். உடனே, தி.மு.க அமைச்சர்கள் என்னை நோக்கி உர்ரென்று பார்ப்பார்கள். சில நேரம், ஆர்.கே-வைப் பார்த்து ஜெயலலிதா சிரித்தார் தலைவரே என்று கலைஞரிடம் சொல்லிவிடுவார்கள்.

அதனாலேயே, அவை நடவடிக்கைகள் முடிந்தவுடன் வசந்த மண்டபத்துக்கு கலைஞர் செல்லும்போது, நானே வலியப்போய், ‘சார், ஜெயலலிதா என்னைப் பார்த்து இரண்டு முறை சிரித்தார் என்று அவரிடம் சொல்வேன். அதற்கு, ‘ஆமாய்யா… அந்தம்மா சிரிச்சா என்கிட்ட வந்து சொல்வியா… நான் கூடத்தான் உன்னைப் பார்த்து ரெண்டு முறை சிரிச்சேன்…’ என்று பொய்க்கோபம் கொள்வார். உடனே நான் சிரித்துக்கொண்டே, ‘சார், நீங்கள் சிரித்ததை யாரிடம் போய் சொல்வது…’ என்று கிண்டலாகக் கேட்பேன்.

என்னைப் பொறுத்தவரையில், நான் ஒரு பத்திரிகையாளன். தி.மு.க., அ.தி.மு,க என எந்தக் கட்சியாக இருந்தாலும் எனக்கு ஒன்றுதான்.

ஜெயலலிதாவுக்கு சில பத்திரிகையாளர்களைப் பிடிக்கும், சில பத்திரிகையாளர்களைப் பிடிக்காது. அவர் முதல்வராக இருந்தபோது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சட்டமன்றத்தில் பார்வையாளர்கள் மாடத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் ஜெயலலிதாவுக்கு கோபம் வந்துவிட்டது. அவரை அங்கிருந்து வெளியேற்றும்படி சொல்லிவிட்டார். இத்தனைக்கும் அந்த பத்திரிகையாளர் ‘ஜெயா தொலைக்காட்சி’யில் பணியாற்றியவர். ஏதோ பிரச்னையால் ஜெயலலிதாவுக்கு அவரைப் பிடிக்கவில்லையாம்.

ஜெயலலிதாவைப் பொறுத்தளவில், என்னிடம் அவர் நன்றாகத்தான் பழகுவார். அவர் ஒரு முறை சட்டமன்றத்தில் பேசிவிட்டு, அவையிலிருந்து வெளியே வந்தபோது எதிர்பாராத விதமாக நான் எதிரே சென்றுவிட்டேன். அப்போது, அந்த இடத்தில் நின்றுகொண்டே எனக்கு அவர் பேட்டியளித்தார்.

நீண்ட நேரம் குறிப்பெடுத்துக்கொண்டிருந்ததால் எனக்கு பேப்பரே தீர்ந்துவிட்டது. அதைப் பார்த்துவிட்டு, அவரே அங்கிருந்த ஓர் ஊழியரிடம் பேப்பர் எடுத்துவரச் சொன்னார். 25 நிமிடங்களுக்கு அந்தப் பேட்டி நீண்டது. அது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

அவை நடவடிக்கைகள் முடிந்த பிறகு, வசந்த மண்டபத்துக்கு கலைஞர் சென்றுவிடுவார். அங்கு, அவரிடம் தாராளமாகப் பேசலாம். எந்த சந்தேகமானாலும் பதில் சொல்வார். என்னைப் பொறுத்தளவில், நான் கேரளாவிலிருந்து வந்து இங்கு ஹிண்டுவில் வேலை செய்கிறேன். எனக்குப் பெரிய அரசியல் ஈடுபாடும் கிடையாது. எந்தக் கட்சிக்கும் நான் சார்பு கிடையாது. இது கலைஞர் கருணாநிதிக்கு நன்றாகத் தெரியும்.“

“இலங்கையில் தி ஹிண்டு செய்தியாளராக பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?”

“இலங்கை, கிட்டத்தட்ட கேரளா மாதிரி இருக்கும். அது இயற்கை எழில் கொண்ட ஒரு நாடு. கேரளாவைப் போலவே புட்டு, ஆப்பம் எல்லாம் கிடைக்கும். அசைவ உணவுகளுக்கு பஞ்சமே இருக்காது. வாகனங்கள் ஓட்டுவதற்கும் நம் ஊர் மாதிரியே இருக்கும். அந்த மக்கள் அனைவரும் நன்றாகப் பழகுவார்கள். எனவே, இலங்கை எனக்கு அந்நியமாகத் தெரியவில்லை. அதே நேரம், இலங்கையில் பெரும்பாலும் அனைத்துக் குடும்பங்களும், எல்.டி.டி.இ தாக்குதலிலும், ராணுவத் தாக்குதலிலும் ஒரு நபரையாவது இழந்திருப்பார்கள். அது ஒரு மிகப்பெரிய துயரம்.”

“ஒரு பத்திரிகையாளராக அனைத்துத் தரப்பு அரசியல்வாதிகளையும் நீங்கள் சந்தித்திருப்பீர்களே. அவர்களின் அணுகுமுறை எப்படி இருந்தது?” 

“எல்லா அரசியல்வாதிகளும் மிக இயல்பாகப் பழகுவார்கள். குறிப்பாக, சிங்கள அரசியல் தலைவர்கள் சகஜமாகப் பழகுவார்கள். ஆனால், ஈழம் சார்ந்த பேச்சுகளை மட்டும் அவர்கள் விரும்ப மாட்டார்கள். அங்கு நான் பணியாற்றியபோது, மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக இருந்தார். அவரை வாரம் ஒரு முறை சந்திக்கும் நிலை இருந்தது. அவரை, இந்திய அரசியலைக் கரைத்துக் குடித்த ஓர் அரசியல்வாதி என்றே சொல்லாம்.

அதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். 2011, 2012 காலகட்டத்தில் பா.ஜ.க-வின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரான சுஷ்மா சுவராஜ் இருந்தார். அந்த நேரத்தில், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியைப் பதிவுசெய்ய வேண்டுமென்று மகிந்த ராஜபக்சே என்னிடம் சொன்னார். அவரிடம், ‘என்னுடைய தலைமை அலுவலகத்துக்கு செய்தியை அனுப்பிவைக்கிறேன். ஆனால், அது வெளிவருமா, வராதா என்பதற்கு நான் உத்தரவாதம் தர முடியாது’ என்று அவரிடம் சொன்னேன். அந்த செய்தி பத்திரிகையில் வெளியாகிவிட்டது.

சுஷ்மா ஸ்வராஜுக்கு அவர் வாழ்த்து அனுப்பியதற்கு ஒரு முக்கியக் காரணம் இருந்தது. அதாவது, 2011-2012 காலகட்டத்தில், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகிய இருவரும் பா.ஜ.க-வின் முன்னணித் தலைவர்களாக இருந்தார்கள். அந்த இருவரில் ஒருவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார்கள் என்று ராஜபக்சே கணித்தார். அத்வானி மூத்த தலைவராக இருந்தாலும், அவருக்கு பிரதமராகும் வாய்ப்பு இல்லை என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. நான் அங்கு பணியாற்றிய காலத்தில் மகிந்த ராஜபக்சே, அத்வானிக்கு ஒரு வாழ்த்துச் செய்தியைகூட அனுப்பியதே இல்லை.

ஒரு முறை சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு வந்திருந்தார். ஒரு பிரதமருக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை அவருக்குக் கொடுத்தார்கள். அங்கு 180 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ரயில் பாதையை அவர் திறந்துவைத்தார். இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவைப் பற்றி நன்கு அறிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால், அந்தளவுக்கு இலங்கையைப் பற்றி இந்திய அரசியல்வாதிகள் அறிந்திருக்கவில்லை.

இலங்கையில் வெளியாகும் செய்தித்தாள்களில் நான் கண்ட பெரும் வித்தியாசம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் நாளேடுகள் வெளிவரும். அவற்றில் செய்திகள் வெவ்வேறாக இருக்கும். தமிழ்ப் பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக வெளிவந்திருக்கும் செய்தி, சிங்களப் பத்திரிகைகளில் ஒரு சிறிய செய்தியாகக்கூட வந்திருக்காது. சிங்களப் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்ற செய்தி, ஆங்கிலப் பத்திரிகைகளில் இருக்கவே இருக்காது.”

“உங்களுக்கு தாய்மொழி மலையாளம், பயிற்றுமொழி ஆங்கிலம். 1991-ம் ஆண்டு, சென்னையில் தி ஹிண்டுவில் சேர்ந்தபோது உங்களுக்கு அவ்வளவாக தமிழ் பேசத் தெரியாது. எப்படித் தமிழ் கற்றுக்கொண்டீர்கள்?“ 

“நான் சி.பி.எஸ்.சி பள்ளியில் படித்தேன். அப்போது, மூன்றாவது மொழியாக தமிழ் இருந்தது. ஆனால், நான் படித்த பள்ளியில் மாணவர்கள் தமிழில் பேசக்கூடாது. தமிழில் பேசினால் அபராதம் விதிப்பார்கள். எனவே, தமிழில் பேசுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. வீட்டில் மலையாளம்தான் பேசுவோம். தமிழ்நாட்டிற்கு வந்தவுடன், தமிழ் பேசத் தெரியாதது எனக்கு கஷ்டமாக இருந்தது. இங்கு வந்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்ப் பேசுவதற்குக் கற்றுக்கொண்டேன்.

சம்பந்தம், ஆர்.கே.ராதாகிருஷ்ணன்
(தமிழர் தலைவர் சம்பந்தம், ஆர்.கே.ராதாகிருஷ்ணன் )

2014-ம் ஆண்டு, இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு திரும்பிய போது, ‘தந்தி டி.வி’யில் ஒரு நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர் கார்த்திகை செல்வன் நெறியாளராக இருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு என்னை அவர் அழைத்தார். எனக்கு தமிழ் பேச வராது என்று சொன்னேன். ‘பரவாயில்லை, ஆங்கிலத்தில் பேசுங்கள்… சில வார்த்தைகள் தமிழில் பேசுங்கள். நாளடைவில் நன்றாக தமிழ் பேசுவதற்கு பழகி விடுவீர்கள்’ என்று சொன்னார். நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

அதேபோல, தந்தி டி.வி-யின் ஆசிரியராக ரங்கராஜ் பாண்டே இருந்தபோது, விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள என்னை அழைத்தார். அதன் பிறகு, புதிய தலைமுறையில் நேர்படப் பேசு நிகழ்ச்சிக்கு குணசேகரன் அழைத்தார். இப்படியாக, என்னுடைய சக பத்திரிகையாளர்கள் எல்லாம் சேர்ந்துதான் என்னை தமிழ் பேச வைத்தார்கள். இப்போது, ஓரளவுக்கு நான் தமிழில் பேசுவதற்கு அவர்கள்தான் முக்கியக் காரணம்.

ஒரு முறை, ஒரு டி.வி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக முன்னாள் டி.ஜி.பி நட்ராஜ் இருந்தார். அ.தி.மு.க விவகாரங்கள் குறித்து அவரிடம் கருத்து கேட்பதற்காக தொலைபேசியில் அவரை அழைத்தார்கள். அது ஒரு லைவ் நிகழ்ச்சி. நட்ராஜ் புகைப்படம் திரையில் காண்பிக்கப்பட்டது. நாங்கள் சரமாரியாக கேள்விகள் கேட்டோம். அதற்கு அவர் அ.தி.மு.க-வுக்கு எதிரான பதில்களை அளித்தார்.

நட்ராஜ்
அய்யோ பாவம் (அதிமுக ) நட்ராஜ்

அதனால் எங்களுக்கு சந்தேகம் வந்தது. சந்தேகப்பட்டது நிஜமாகிவிட்டது. அவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் டி.ஜி.பி நட்ராஜ் அல்ல. வேறொரு நடராஜனுக்கு தொலைபேசியை கனெக்ட் செய்துவிட்டார்கள்.

என்ன கொடுமை என்றால், ‘அ.தி.மு.க-வுக்கு எதிராகப் பேசினார்’ என்று சொல்லி முன்னாள் டி.ஜி.பி நட்ராஜை கட்சியிலிருந்து ஜெயலலிதா அதிரடியாக நீக்கினார்.

பிறகு, நட்ராஜ்ஜிடம் பேசி எங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்தோம்….!” ( நன்றி – விகடன் தளம்….)

……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.